வணக்கம். நான் செல்லம்மாள் நரசிம்மன். வட அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கிறேன்.
பாரதி புத்தகாலயமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும், இயல் குரல் கொடை குழுவும் இணைந்து நடத்தும் மாபெரும் நிகழ்ச்சியான “பேசும் புத்தகம்” நிகழ்விற்கு இதோ என்னுடைய சிறு முயற்சி.
கதையின் பெயர் : “டேய்”
கதையை எழுதியவர் : திரு. விழியன் (எ) உமாநாத் செல்வன்
வாசிப்பவர் பெயர் : செல்லம்மாள் நரசிம்மன்
[poll id=”12″]
“டேய்” என்னும் நெகிழ்ச்சி நிரம்பிய சிறுகதையை ஆத்மார்த்தமாக உரக்க வாசித்து, அதனுடைய ஒலிப்பதிவினையும், அச்சிறுகதையையும்  தங்களது மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.
மிக்க நன்றி.
இக்கதையை ஆசிரியர் விழியன் அவர்கள் அன்னையர் தின சிறப்புக் கதையாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாளில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த “டேய்” சிறுகதை பின்வருமாறு:
*டேய் (சிறுகதை)*
– விழியன்
_(அன்னையர் தின சிறப்புக்கதை)_
“டேய், அம்மா தவறிட்டாங்க. பசங்களுக்கு சொல்லிடு” எனச் சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் டெலிபோனை துண்டித்தான்.. நேதாஜி. அழைப்பு வந்த நேரம் இரவு ஒன்பது மணி.  எந்த வித சலனமில்லாமல் திடமான குரலில் பேசி வைத்துவிட்டான். அவன் எப்போதுமே அப்படித்தான், உணர்ச்சிகளை உள்ளுக்குளே வைத்துக்கொள்பவன். கல்லூரித் தோழன். சகா. உயிர். நேதாஜியின் குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்டு கண்ணு வைக்காத நண்பர்களே இல்லை எனலாம். ஒரே கூரையின் கீழ் பதினெட்டு பேர் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்றால் சும்மாவா. வீட்டில் இருப்பது தான் அவனுக்கு சுகம். ஏரந்தாங்கல் அவனது ஊர். கல்லூரியில் வகுப்புகள் முடிந்ததும் பஸ் ஏறி விடுவான். கல்லூரி நாட்களின் பிற்பகுதியில் தான் நண்பர்களுடன் ஒட்டவே ஆரம்பித்தான். வீட்டை விட்டு வெளியே தங்குவது அரிது.
முகத்தில் அப்பியிருந்த அதிர்ச்சியைக் கண்ட ரமேஷ், என்னாச்சு என்றான் . நேதாஜி தாயாரின் மரண செய்தியை தெரிவித்தேன். அழத் துவங்கினான். ரமேஷும் எங்கள் வகுப்பு தோழன். அன்று எதேர்ச்சையாக எங்கள் வீட்டில் இருந்தான். அந்த சமயத்தில் அலைபேசிகள் மிகக்குறைவு. இன்கம்மிங் கால்களுக்கும் காசு. நாங்கள் கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்துகொண்டிருந்த நேரம். கம்பெனிகள் எங்களை நியமித்து இருந்தாலும் வேலையில் சேரும் நாளை அறிவிக்காமலே இருந்தார்கள்.
ஆட்டோகிராப் புத்தகத்தில் இருந்த நம்பர்களை தேடி நண்பர்களுக்கு செய்தியினைச் சொல்லிவிட்டு இரவே ஏரந்தாங்கல் கிளம்பினோம். அது சின்ன கிராமம். காட்பாடியில் இருந்து பதினைந்து கி.மீட்டர் தூரம் இருக்கும். பழமையான கிராமம். பகலிலேயே நான்கு ஐந்து முறை தான் பேருந்து செல்லும். திருவலத்தில் இருந்து ஆட்டோ கிடைப்பதும் அரிது. மணி பத்திற்கு மேல் இருக்கும். வேறு வழியே இல்லை அப்பாவின் சொத்தாய் எனக்கு கை மாறி இருந்த அந்த பழைய இந்து சுசுகியில் தான் சென்றாக வேண்டும். . எங்கள் வகுப்பில் அநேகம் பேர் ஓட்டிய / ஓட்ட கற்றுக்கொண்ட வண்டி இது தான். கல்லூரி காலங்களில் மாடு இழுப்பதை போல மூன்று நான்கு தடிமாடுகளை ஒரே நேரத்தில் இழுத்துள்ளது. மொடாகுடியனை போல பெட்ரோல் குடிக்கும். ஹெட்லைட் பரிதாபமாய் விழித்தது. காட்பாடி, பிரம்மபுரம், கார்ணாம்பட்டு, திருவலம், ஏரந்தாங்கல். சுமாரான வெளிச்சமற்ற சாலை. இருப்பினும் வேறு மார்க்கமில்லை .
வழக்கமாக மூச்சு விடாமல் பேசும் ரமேஷ் அன்று அமைதியாகவே வண்டியின் பின் அமர்ந்து வந்தான். வண்டியும் வழக்கத்தை விட மெதுவாகவே நகர்ந்தது. வழியில் கல்லூரியை கடந்து தான் போக வேண்டும். கல்லூரி முடித்து சில மாதங்களே ஆனதால் நினைவுகள் பசுமையாக இருந்தன . அதோ அந்த ஸ்டாப்பில் தான் நேதாஜியும் மற்ற நண்பர்களும் பஸ் பிடிப்பார்கள். இரண்டாம் ஆண்டின் இறுதியில் சுமார் பதினைந்து பேர் நேதாஜி வீட்டிற்கு சென்றிருந்தோம். சிக்கன் பிரியாணி தான் வேண்டும் என முன்னறே சொல்லிவிட்டோம். நேதாஜியின் வீடு இந்த தெருவில் ஆரம்பித்து அடுத்த தெருவில் முடியும். அசலான கிராமத்து வீடு. மாட்டு சாண நறுமணம் எங்கும் பரவி இருந்தது. வெளிச்சமே புக முடியாத பல முனைகள் உள்ளே இருந்தன. மக்கள் புழங்குவது பின்னால் இருக்கும் அறையிலும் சமையல்கட்டிலும் தான் என்றார்கள். பழைய டீ.வி. நிரந்தரமான ஒரு தூளி. சின்ன சின்ன அறைகள். அப்படியே சென்றால் தோட்டம். அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, பாட்டி என கூட்டுக்குடும்ப வாழ்க்கை. சொந்தத்திற்குள்ளேயே திருமணங்கள். சினிமா மற்றும் கதைகளில் கேட்ட பார்த்த குடும்பம். எங்கள் அனைவருக்குமே அது புது அனுபவம். பாசத்தை பொழிந்தனர் அசல் கிராமத்து மனம். கபடி விளையாடியபோது என் சட்டையில் ஒரு டாகா. கிழிந்துவிட்டது. மாற்று சட்டை கொடுக்க அந்த வீட்டில் யாரும் அவ்வளவு பெரிதாக இருக்கவில்லை, துண்டு போர்த்திக்கொண்டு அலைந்த நேரத்தில் நேதாஜியின் அம்மா சட்டையை தைத்து கொடுத்தார்கள். கிழிந்த இடத்தில் அழகிய டிசைன் வேறு. அம்மா கிராமத்தின் முக்கிய நபர். சாந்தி. நேதாஜியின் அம்மா. பெயருக்கு ஏற்றார் போல சாந்தமான முகம். அக்கா என்று தான் பல நண்பர்கள் அழைத்தார்கள். முகத்தில் இருந்த சின்ன பொட்டு இன்னும் இளமையாக காட்டியது. ஏதோ ஒரு கட்சியின் மூலம் கிராமத் தலைவராக கடந்த தேர்தலில் வென்றிருந்தார். வீட்டை நிர்வகிப்பது போலவே ஊரையும் நிர்வகித்திதார். நேதாஜியின் தம்பி பிறக்கும்போதே அம்மாவுக்கு உடல் உபாதைகள் துவங்கி இருந்தன. இதயத்தில் கோளாறு. நேதாஜியின் நிலத்திற்கும் பெட்டிக் கடைக்கும் சென்று செலவு வைத்தோம். மேனகா அக்கா எங்கள் கல்லூரியில் சீனியர். எங்களுக்கு ஊரை சுற்றி காண்பித்தார்கள். கிளம்பும்போது அம்மா என்னை மட்டும் தனியாக அழைத்து “அடிக்கடி வாங்க தம்பி, நேதாஜிய பாத்துக்கப்பா. அம்மாவை கேட்டதா சொல்லு அவங்களையும் அடுத்தவாட்டி கூட்டிட்டு வா ” எனச் சொல்லி அனுப்பிவைத்தார்கள்.
கார்ணாம்பட்டில் இருந்து ஏரந்தாங்கல் வரை மூன்று விளக்குகள் மட்டுமே இருந்தன. ஊர் எப்போதோ உறங்கி இருக்க வேண்டும். அன்றைக்கு என சுசுகி எந்த மக்கரும் செய்யவில்லை. தட்டுத்தடுமாறி நேதாஜி தெருவினை அடைந்தோம். ஊரே அங்கு இருந்தது. எப்படி ஆறுதல் சொல்லவேண்டும் என்ற முதிர்ச்சி அப்போதும் இல்லை. இப்போதும் இல்லை. நேதாஜியின் அப்பா திண்ணையில் அமர்ந்து இருந்தார். நீட்டு முகம். வாடி இருந்தது. கண்களின் வீக்கத்தில் இருந்தே அவரின் சோகம் தெரிந்தது. அரசு மில் ஒன்றி வேலை பார்த்துக்கொண்டிருந்தவர், மில்லை மூடியதால் நிலத்தில் வேலை செய்ய துவங்கிவிட்டார். வேட்டி, பனியனில் மெலிந்து காணப்பட்டார். இரண்டு வார தாடி. நேதாஜியை கண்கள் தேடியது. அப்பாவிடம் சென்று சில நொடிகள் கைகட்டி நின்றோம். இப்படியே ஒவ்வொருத்தரையாக கடந்து அம்மாவின் முன்னால் நின்றோம். நண்பர்களின் அம்மாக்களில் இளமையாக தெரிந்தவர். நரைமுடி ஒன்று கூட எட்டிப்பார்க்கவில்லை. “போற வயசா இது “ என்ற ஒப்பாரி கேட்டது. “சாந்தி…சாந்தி…மவராசி…” முகம் முழுக்க மஞ்சள். பெரிய குங்கும பொட்டு நெற்றியில். நேதாஜியுடன் அம்மா நடந்தால் அவனுடைய அக்கா என்றே சொல்லத் தோன்றும். மாலைகளால் நிரம்பி இருந்தது அவ்விடம். பன்னீர் + ஊதிபத்தி + பூக்கள் வாசம் கலந்து மனதை ஏதோ செய்தது.
நேதாஜி எங்கே என அவன் தம்பியிடம் விசாரித்து உள்ளறைக்கு செல்ல திரும்பினோம். மேனகா அக்கா எதிரே வந்து ஓவென கதறல். “உமா, அவன் அழவே இல்லைடா, நீங்க போய் அழ சொல்லுங்க, துக்கம் மனசிலயே இருக்க கூடாதுடா” என கூறி வேறு திசையில் நகர உள்ளே சென்றோம். விட்டத்தை வெறித்துபார்த்து அமர்ந்திருந்தான் நேதாஜி. மிகக் குறைச்சலான வெளிச்சம். புத்தகம் மக்கிய வாசம். மூத்திர வாசமும் அடித்தது. சின்ன குழந்தை யாரோ இங்கே இருந்திருக்க வேண்டும் நானும் ரமேஷும் அருகில் அமர்ந்தோம். அவன் கைகளை பற்றி அந்த இளஞ்சூட்டின் வழியாக ஆறுதலை அனுப்பினேன். எவ்வளவு நேரம் மெளனமாக இருந்தோம் என நினைவில் இல்லை. நானும் ரமேஷும் அழுதுகொண்டிருந்தோம் அவன் தோள்களில். “டேய், வாடா” என்ற வார்த்தை தவிர அதுவரை எதுவும் பேசவில்லை. வெளியே சென்றாலாவது ஏதாவது பேசுவான என அவனை கிளப்பினோம்.
ஹாலில் சில பெரியவர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். ஓரத்தில் அமர்ந்து சிலர் அம்மாவை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். வாசலில் கிடத்தி இருந்த அம்மாவின் அருகில் சென்று நின்றான். சலனமில்லா பார்வையினை அம்மாவின் மீது செலுத்திக்கொண்டிருந்தான். தெரு முனையில் நானும் ரமேஷும் நின்றிருந்தோம். அப்பாவின் கைபேசியினை கடன் வாங்கி வந்திருந்ததால் நண்பர்கள் சிலர் என்ன நடந்தது என விசாரித்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் கிளம்பி வருவதாகவும், பேருந்து நிலையத்தில் இருந்து அழைப்பதாகவும் தெரிவித்தனர். திருவலம் கூட்ரோட்டில் இருந்து தாராளமாக 2-3 கி.மீட்டர்கள் இருக்கலாம். “டேய், பசங்களுக்கு சொல்லிட்டியா?” என்று மட்டும் கேட்டான் நேதாஜி.
மூன்றாவது வீட்டின் வாசலில் உறங்கிக்கொண்டிருந்தோம். பொயிங் பொயிங் என்ற சத்தம் எழுப்பியது. பெரியவர் ஒருவர் இரண்டு டீக்களை நீட்டினார். அதன் பின்னரே எங்க இருவரையும் யாருடைய நண்பர்கள் என விசாரித்தார். ஓ நேதாஜி கூட்டாளிங்களா?. காலை மணி ஐந்து. நேதாஜியை தேடினோம். அம்மா அருகில் மெளனமாக அமர்ந்து இருந்தான். எங்களை பார்த்ததும் எழுந்து வந்து “டேய், டீ சாப்பிட்றீங்களா?” எனக் கேட்டான். ரோட்டோரத்திற்கு அவனைக் கடத்தி சென்றோம். பத்தரை பன்னெண்டு ராகுகாலம், அதனால் பன்னிரெண்டு மணிக்கு மேல எடுக்கலாம்னு சொல்றாங்க, மெட்ராஸில் இருந்து ரெண்டு சொந்தக்காரங்களும், அரக்கோணத்தில் இருந்து சிலரும் வரணும் என்றான்.
கிறுக்கன் என்பது அவனது ஒரு பட்டப்பெயர். மோக்லி என்பது மற்றொன்று. கைகள் வலுவாக இருக்கும். மட்டி பிடித்து நிலத்தில் வேலை செய்தவன் கைகள் அல்லவா. பெயர்க்காரணம் மறைந்தும் மறந்தும் விட்டது. நெஞ்சுவலிக்குதுன்னு சொன்னாங்கடா, திருவல ஆஸ்பத்திரிக்கு நான் வண்டி ஓட்ட, எனக்கும் அப்பாவுக்கும் நடுவுல அம்மா உட்கார்துகிட்டு போனோம். ஆஸ்பத்திரிக்குள்ள போகும் போதே நினைவில்லை. டாக்டர் உயிர் விட்டுட்டாங்கன்னு சொன்னார். முந்தைய நாள் நடந்ததை சிறுகுழந்தையை போல திக்கித் திணறி விவரித்தான். நல்லவேளை தம்பியும் பெங்களூரில் இருந்து லீவுக்கு வந்திருந்தான். சொல்லிமுடித்து அழுவான் என எதிர்பார்த்தோம். முந்தைய நாள் இரவே அவன் தம்பி இரண்டுமுறை சொல்லிவிட்டான்.
பசங்க ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். தோழிகள் யாரும் வரவில்லை. அம்மாவும் அப்பாவும் மாலையுடன் வந்திருந்தனர். அம்மா அழுவதை பார்த்தாவது அழுவான் என நினைத்தோம். என் அம்மா மீது அவனுக்குத் தனி ப்ரியம் இருந்தது. ஒரு நண்பன் இவனை அடித்து அழுடா என மிரட்டியும் பார்த்தான். பிரோயசனமில்லை. விட்டுவிட்டோம். தகன வேலைகள் ஒருபுறம் நடந்தன. தம்பியின் கல்லூரியில் இருந்து வந்தவர்கள் இடக்கைகளில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். நண்பர்கள் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பினர். நான் மட்டும் இரவு அவனோடு தங்குவதென முடிவு செய்யப்பட்டது. அம்மா ஒரு செட் ஆடைகள் எடுத்து வந்திருந்தார்கள். மாடி அறையில் நானும் நேதாஜியும் படுத்துக்கொள்வதென ஏற்பாடு. தன் அம்மாவின் மூக்கினை போல அழகான மூக்கு யாருக்கும் இல்லை என குறிப்பிட்டான். நான் போட்டிருந்த சட்டையினை காட்டி, அம்மா தெச்சு தந்த சட்டை தான என்றான். நானும் அப்போது தான் அந்த கிழிசல் தைக்கப்பட்ட இடத்தை பார்த்தேன். என்னை உறங்கச் சொல்லிவிட்டு மொட்டைமாடியில் உலவிக்கொண்டு இருந்தான்.
காலம் வேகமாக ஓடியது. அதன்பின்னர் பெங்களூரில் நாங்கள் இருவரும் ஒரே அறையில் சுமார் மூன்று வருடங்கள் கழித்தோம். இரவில் வெகுநேரம் தனியாக படம் பார்ப்பதில் அவனுக்கு அலாதி ப்ரியம். ராதா அவனுக்கு மிகவும் பிடித்த நடிகை. சனி இரவு முழுதும் விழித்திருந்து ஞாயிறு முழுக்க உறங்குவான். மூவர் சாப்பிடக்கூடிய ஆந்திரா மெஸ் புல் மீல்ஸை தனியாளாக சாப்பிடுவான். குலோப் ஜாமுன் பிடித்த இனிப்பு. அம்மா இல்லாத பையன் என அறையில் சமைக்க வரும் ஆயா இவனை தனியாக கவனிப்பார்கள். அறையில் எல்லோரும் ஊருக்கு சென்றாலும் இவன் அறையிலேயே இருப்பான். ஏனோ அந்த நாட்களில் ஊருக்கு செல்வது மிகவும் குறைவாக இருந்தது. கேட்டபோது எதுவும் குறிப்பிட்ட காரணம் இல்லை என தெரிவித்தான். நேதாஜியின் சித்தப்பா காட்பாடிக்கு குடிபெயர்ந்துவிட்டார், குழந்தைகள் படிப்பிற்காகவும், சித்தியின் வேலைக்காகவும். மேனகா அக்காவும் மாமாவின் மகனை திருமணம் செய்துகொண்டு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்கள். பெரியப்பா சில மாதங்களில் தவறிவிட்டார். வீட்டின் வெறுமை கூட அவனை வரவிடாமல் தடுத்ததோ என நினைத்தேன். எது அவனை உற்சாகப்படுத்தும், எது அவனை உணர்ச்சிவசப்படவைக்கும் என்றே எங்களுக்கு தெரியவில்லை. அவனிடம் இருந்து அழைப்புகள் இப்படித்தான் வரும்
“டேய், நைட் லேட்டாகும்”
“டேய், ப்ரைட் ரைஸ் வாங்கிட்டுவா”
“டேய், நாளை உன் வண்டி வேணும்”
“டேய், சட்டை வாங்கிட்டுவா”
“டேய், செம ப்ரியாணிடா “
“டேய், பேப்பர் போட்டுட்டேன்”
“டேய் பத்தாயிரம் அனுப்பு”
என் அண்ணன் சென்னையில் இருந்து சனி,ஞாயிறு வந்தால் அவன் முகத்தில் கொஞ்சம் சந்தோஷம் தெரியும். காரணம் இருவரும் ஜெயந்திபாரில் இரவினை கழிப்பார்கள். அது ஏண்டா அவன் கூட மட்டும் தண்ணியடிப்பது பிடிச்சிருக்கு என்ற கேள்விக்கு “போடா” என்ற பதில் மட்டும் கிடைக்கும். பண்டிகை சமயம் காட்பாடியில் இருந்த நாளொன்றில் அவனிடமிருந்து அழைப்பு “டேய், அவரசமா ஹைதராபாத் போறேன். தம்பி வருவான் பாத்துக்க” என சொல்லிவிட்டு கிளம்பினான். அதிகமாக அலைபேசியில் பேசியது அதுவாக தான் இருக்கு, அவன் திரும்பிவர நான்கு மாதங்கள் ஆனது. ஒழுங்காக போனும் செய்ய மாட்டான். நாம் அழைத்தாலும் எடுக்க மாட்டான். அவன் தம்பி ஆசிரியர் பயிற்சி முடித்து எங்களுடன் ஒரு மாதம் தங்கினான். இந்த ஊரு ஒத்துவராது அண்ணா நான் ஊர்பக்கமே போயிடறேன் எனக் கிளம்பிவிட்டான்.
கல்யாணமாகி சென்னைக்கு மாற்றலாகிவிட்டேன். சிலகாலம் பெங்களூரில் இருந்தான். “டேய், அமெரிக்கா போறேன்” எந்த ஊர், எப்ப திரும்புகிறான், எந்த தகவலும் இல்லை. திரும்பி வந்ததும் தில்லியில் சில மாதங்கள் இருந்தான். சொற்கள் அரிதாகியபடியே இருந்தது. கான்பிரன்ஸ் கால் வசதிகள் வந்தபிறகு நண்பர்கள் அளவாடும்போது அவன் அழைப்பில் இருப்பான், ஆனால் உலகின் எந்த இடத்தில் இருக்கிறான் எனத் தெரியாது.
“டேய், கல்யாணம் டா “
ரமேஷும் அந்த சமயம் வெளிநாட்டில் இருந்தான். நான் தான் அவன் சார்பில் கல்லூரி நண்பர்களுக்கு பத்திரிக்கை அனுப்பினேன். யார் முகவரியும், நம்பரும் அவனிடம் இருந்தது இல்லை. நிச்சயிக்கப்பட்ட சங்கீதாவிடம் வெகுநேரம் இவனை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். “பேசவே மாட்டேங்குறார் அண்ணா” என்றாள் பேசிமுடிக்கும் தருவாயில். ஆனாலும் அவனை வெகு சீக்கிரத்திலேயே புரிந்து கொண்டாள். நேரில் பார்த்த போது தான் ஏன் சங்கீதாவிற்கு சம்மதம் தெரிவித்தான் என தெரிந்த்து. ராதா போலவே இருந்ததால் தான். சங்கீதா அவனுக்கு ஏற்ற ஜோடியாகவே திகழ்ந்தாள். திருமணத்தின் போது “அண்ணி அண்ணி” என என் மனைவியை அழைத்ததால், என் மனைவிக்கும் அவளை ரொம்ப பிடித்துவிட்டது . போனில் இருவரும் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தனர். நண்பர்களின் இல்லத்தரசிகளை தோழிகளாகிவிட்டால் அதன் பிறகு சுகம் தான். தில்லியிருந்து ஏரந்தாங்கல் வரும் சமயம் சென்னை வழியாக தான் போக வேண்டும். தவறாமல் வீட்டில் தலை காட்டிவிட்டுச் செல்வான்.
இரவு இரண்டு இருக்கும். மனைவி போனை நீட்டி “நோதாஜி அண்ணன் கூப்பிடுகிறார்” என போனை நீட்டினாள். Kirukkan Calling என திரையில் ஓடிக்கொண்டு இருந்தது. பதட்டமாகவே போனை எடுத்தேன். “ஹலோ !” மறுமுனையில் “டேய் குண்டா, பொண்ணு பொறந்திருக்காடா. என் கலரு. குட்டி மூக்கு, குட்டி காலு. அம்மா மாதிரியே இருக்காடா, அம்மா மாதிரியே மூக்கு டா. அம்மா மாதிரியே முடி கருகருன்னு. பசங்க நம்பர் தாடா, நானே போன் பண்ணி சொல்றேன்.”
கேட்கக் கேட்க என் மகளின் தலையை கோதியபடி அழத்துவங்கி இருந்தேன். அங்கே அவன் அழுதானா – கேட்கவில்லை. இருபக்க அலைபேசியும் மெளனமாய் இருந்தது.
“டேய்..”
– விழியன்
அன்புடன்,
செல்லம்மாள் நரசிம்மன்.
மிச்சிகன், வட அமெரிக்கா.
8 thoughts on “பேசும் புத்தகம் | திரு. விழியனின் சிறுகதை “டேய்” | வாசித்தவர்: செல்லம்மாள் நரசிம்மன்”
  1. புத்தகத்தில் உள்ள எழுத்துகளுக்கு உயிர் கொடுத்துள்ளது உங்கள் குரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *