குமரன்விஜி சிறப்புக் கவிதைகள்
1.
என் ஆமை மெல்லச் செல்வதை
ஒரு வெயில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது
அதிவேக முயலை அதிவேக காட்டு நாய் துரத்திக்கொண்டு ஓடுகிறது
நான் ஏன் முயலை
இந்த நேரத்தில் போட்டிக்கு அழைக்கப் போகிறேன்.
என் நத்தை உறவைப் பார்க்கிறேன்
அது எவ்வளவு அழகான பயணி
அப்படியே மெல்ல உதித்து வானில் நகர்கிறது
உதய வட்டம்
நான் யோசிக்கவே இல்லை
சட்டென்று ஓர் இடர் தொடுகை நிகழ்ந்தது
தலையின் மொத்தத்தை உள்ளிழுத்துக்கொண்டேன்.
பிறகு எதிலோ தூக்கிப் போட்டார்கள்
ஒரே வாகனச் சத்தம்.
எதை முந்திப் பிடிக்க ஓடுகின்றன
நான்கு சக்கரக் கால்கள்.
என்ன போட்டியாக இருக்கும்
உண்மைதான்
வாழ்விற்கும் சாவிற்குமான போட்டி
எனக்கு மட்டுமில்லை
2.
மருந்துச் சீட்டில்
சாத்தானின் பெயர்
சுடலையப்பன்.
உடலுக்கு என்ன தொல்லை
கீழ் லோகமும்
மேல் லோகமும்
அடிக்கடி தெரிகிறது.
எல்லா நாளும் திங்கள் என்றே
போனவாரம் சொன்னார்
இன்றோ
இன்றைய
காலை ஆறு மணி
இந்த நள்ளிரவிலும்
அப்படியே இருப்பதாகச் சொல்லிவிட்டார்.
நான் தூக்கத்தைத் தொலைத்தேன்
திடீரென்று
கண்விழித்து
என் கூடவே இருந்த கடவுள்
எங்கே என கேட்கிறார்
கடவுளை
இப்போது மருத்துவமனையில்
சேர்த்திருக்கிறேன்
குணமானதும் வருவார்
என்றேன்
சாத்தான் சிரிக்கிறார்.
3.
பிதாவே
நானுன்னை மன்னிக்கிறேன்
இரண்டு குப்பி அளவு கூடினால்
உன் அட்டூழியம் தாங்க முடியவில்லை.
மேற்கிலிருந்து கிழக்கு வரை
டவுசர் அவிழ்வது அறியாது
ஓடத் தயாராகிறாய்
பிரபஞ்சத்தை சாப்பாட்டு மேசையில் வைத்து
நீ காட்டும் சர்க்கஸ் பிரசித்தம்.
அந்த விதத்தில் நீயொரு ஆப்பிளைப் பிடிக்கப்போய்
நீயூட்டன் விதியில் முட்டி
தக்காளிச் சட்டினி கொஞ்சம் ஜாம் ஜாம்மென்று
மேற்கிந்திய கம்பனியை இழுத்து வருகிறது.
தேவனே
உன்னை எத்தனை முறைதான்
இரட்சிப்பது.
சிலுவையே தேவையில்லை
உன்னை நீயே
அறைந்து கொண்ட மரத்தை
அல்லும் பகலும் நான் தூக்கித் திரிகிறேன்.
நல்ல பிதாவே
நீ கைதேர்ந்த வேடக்காரன்
போதை தெளிந்து
அப்பாவியென தலை சொறிந்தபடி
அடுத்த அதிகாலையிலும்
குழந்தையென என் முன் நிற்பாய்
மிட்டாய் தொலைந்து விட்டதாக
மீண்டும் மிட்டாய் கேட்கும்
குழந்தையைப் பெரிதாய் நான் என்ன செய்திட முடியும்.
4.
முகத்தில் உமிழ்ந்துவிட்டு
உன் அன்பு இவ்வளவுதானா?
என்று செல்லும்
உன் கால்களுக்கடியில் உயிருள்ள ஜீவனொன்று
நசுங்கும் தடயத்தைப் பார்த்தேன்.
நமக்குள் ஏன் ஒரு வெற்று காலம் உருவானது.
ஒரு செடி பூக்கவும்
ஒரு விதை மேலெழவும்
ஏதுமற்று அனைத்தையும்
நெருப்புக்குத் தந்து கொண்டிருக்கும் காட்டைப்போல
ஏன் இந்த மனதை வந்தடைந்தோம்.
உறவு என்பதே
நிரூபிக்க வேண்டிய நிபந்தனை
கொண்டது.
அவ்வளவு அழகாக தொங்கும் கூட்டைக் கட்டி
அதிலொரு மின்மினியை
வைக்காமல்
துணைக்கொரு குருவி வருவதில்லை.
அப்படி கட்டியும்
அந்த மனதின் கூட்டைத்தான்
அடையாளமற்று
பிய்த்துக்கொண்டிருக்கிறது
நம் போதாமை.
திரும்பவும்
நீ நேசித்துவிடாதே.. என்று
சொல்லத்தான் முடிகிறது.
எவரும் வாழ முடிகிறதா?
மழையை பழித்த நிலத்திற்கே
மீண்டும் மழையாய் வருவது
நமக்கொன்றும் புதிதில்லை.
நான் மழை.
5.
ஏன்
வானம் உண்டானது
பூமிக்கு ஏன்
நானூற்று ஐம்பது கோடி வயது
நீ
ஏன் மனிதனானாய்
பறவையை
ஏன்
கூண்டில் அடைத்தாய்
அந்த மனதிற்கு ஏன்
ஆயிரம் கொடுமைகள் நேர்ந்த பின்னும்
கருணை சுரக்கும்
மார்பு வரவில்லை
எப்போதும்
நல்லோர்க்கே ஏன் சோதனை
ஏன்
இன்றை தின்று
நாளையைக் காண்கிறாய்
இப்போது எதற்கு
அந்த மரத்தை கொத்தி பரிசோதிக்கிறது
மரங்கொத்தி
ஒரு கையிலிருந்த
தேநீரில் ஒரு கோடியாண்டு ஆறிக் கிடக்கிறது.
பெருவானில்
பறவைகள் எங்கோ போகின்றன
நான் நிற்கச் சொல்லவில்லை.
6.
எங்கு பழகினாய்
இந்த நல்லவனாகும் போதையை
சதா
நல்லவனாகும் போதையில்
நாள்கள் உன்னை உறுஞ்சுகின்றன.
மிக எளிதாக
உன்னை பகடியின்
கலைடாஸ்கோப்புக்குள்
வண்ண வளையல்களென உடைத்துப்போட்டு
நீ எவ்வளவு அதிசயமென
கொண்டாட முடியும்
நல்லநோய் மனிதனென்பது உன் புனைப்பெயர்
நீயெங்கும் ஏணியாய் இருப்பது உண்மை
அதைவிட ஏணிகள் வேறெங்கும்
ஏறிப்போக முடியாதென்பது
பேருண்மை
சரி இந்த நல்ல போதையாவது
ஏணியாய் இருந்தது
இந்த கெட்ட போதை என்ன செய்தது
ஏறுபவனோடு சேர்த்து
ஏணியையே தள்ளிவிட்டது.
எல்லாம் முறிந்தன.
7.
கூட்டமென்பது ஆரவாரம்.
பேய்கள் ஆடி முடித்த பின்
அதே ஆரவாரம்
ஆனந்தக் கூத்தென மாற்றி அழைக்கப்படும்.
அன்றாடம் கூத்துப் பார்க்க ஆட்கள் வருகிறார்கள்
போகிறார்கள்.
காலியான திரையரங்கைப்போல பலர் வாழ்வு
காட்சியின்றிப் போனதை
வருத்தத்துடன்
திரைச்சீலை சொல்லிப் புலம்புகிறது.
சந்தையில் ஏதோ விற்கிறார்கள்
கிடைத்தது என்றவனும்
கிடைக்கவில்லை என்றவனும்
ஓரூர் சாமிக்குப் பிறந்தவர்கள்.
இதுயென்ன மாயம்
ஒரு காட்சியில் குதித்து
ஒரு காட்சியில் தலைகுப்புற விழுந்து
மேலும்
101 வது புராணத்திற்கு ஆள் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் தோளில் கைபோட்டு
என் பிரபல சாமிக்கு பூஜை செய்ய முடியுமா
எனக் கேட்கிறார்கள்
அவர்களுக்குதான் சொன்னேன்
நான்
மணியாட்டுவதை கைவிட்டு நீண்டகாலம்
ஆகிறது.
8.
அதிமழை காலத்தில்
ரொட்டிக்கு பதிலாக
கவிதையைத் தந்தேன்
உன் கவிதையை பசி தீர்ந்தபின்
எடுத்துக்கொள்கிறேன்
என்றவன் மீது எந்தக் குற்றமுமில்லை
நான் பசிக்கிறது
என்கிறேன்
நீ கவிதையைக் கொண்டு வருகிறாய்
அதுவும் காதல் கவிதை
அதுவும் காமத்தை
அவற்றைக் கூட விடு
பசி
என்ற தலைப்பெழுதி
பசியிலிருப்பவனுக்கே தருகிறாய்.
உன்னை கொல்லாமல் விட்டதற்கு நன்றி சொல்
இனிமேலேனும் கையிலொரு தேநீர் குவளையைக் கொடு
நீ கொஞ்சம்
சமைக்கப் பழகியிருந்தால்
இன்னும் நல்லது.
9.
பூமியிலிருந்து
புறப்பட்டு நடுவானில் வெடித்த விமானத்தின் உதிரி பாகம்
எங்கு விழுந்ததென தெரியவில்லை
தேடியெடுத்து
மீண்டும் அதை விமானமாக பறக்கவிடும்
ஆசையில்
அல்லது
அதற்கொரு முதல் தகவல் அறிக்கை
எழுத
உதிரிப் பாகங்களைத் தேடுவதைப்போல
ஆனந்த நாளில் பறந்து
வெடித்த மகிழ்ச்சியின்
உதிரி உணர்வுத் துண்டுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.
இறக்கைகள் ஒரு நிலத்தில்
மேல்கூடு ஒரு கடலில்
மற்றவை கருகிவிட்டன
வெடித்த துயரத்திற்கு
உடைந்ததை வைத்து
விபத்தை ஆராயலாம்.
நான் மகிழ்ச்சியை ஆராய்கிறேன்.
கீழே விழும்வரை பாருங்கள்
அது நல்ல உயரம்.
10.
கையில் வைத்திருந்தேன்
கையில் வைத்தே
என்ன செய்வது
ஒரு
நானை கைவிட்டேன்
பட்டம் தொலைந்துபோனது
ஒரு நான்
ஆணவம் கொண்டது
அது எப்போதும்
எனக்கு உரிமையானதில்லை
விரலிடுக்கில் திரவமாய் நழுவி விழும்
ஒரு நான்
இரண்டும் கெட்டான்
அதை வீசிவிட குப்பைதொட்டியை
கைவசம் வீட்டில்
வைத்திருக்கிறாள் அம்மா
ஒரு நானைத்தான்
விடவே முடியவில்லை
போகிற வழியில் யாரேனும்
கீழே தவறி விழுந்தால்
தூக்கிவிடுகிறது
கைக்குள் இருந்த நானென்னும் நான்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.