ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஊழல். அந்த ஸ்பேக்ட்ரம் இன்று எப்படி உள்ளது. இந்த ஸ்பெக்ட்ரத்தினில் எந்த நாடு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதோ, அந்த நாடே உலகத்தின் தலைவனாக இருந்து வந்துள்ளது. அப்படியான ஸ்பெக்ட்ரத்தினைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஊழலை மட்டுமே பார்த்த நமக்கு இதற்கு பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல் தெரியாது. அப்படியான ஸ்பெக்ட்ரத்தினை மையப்படுத்தியதே இந்தத் தொடர். கூடவே கொஞ்சம் அமெச்சூர் வானொலி!

ஒரு காலத்தில் (1910-40) இந்த ஸ்பெக்ட்ரமானது பிரிட்டிசாரின் ஆதிக்கத்திலிருந்து வந்தது. அவர்கள் தான் இந்த ஸ்பெக்ட்ரத்தினை பங்கிட்டு மற்ற நாடுகளுக்கு வழங்கினர். அடுத்து ரஷ்யர்களின் கைக்கு இது சென்றது. 1950-80களில் இது உச்சத்திலிருந்தது எனலாம். அந்த சமயங்களில் பெரும்பாலான வானொலி அலைவரிசைகளைத் ரஷ்யா தன்னகத்தே கொண்டு இருந்தது. 1981-2000 வரையிலுமே இந்த ஸ்பெக்ட்ரமானது அமெரிக்காவின் வசம் இருந்தது. இப்பொழுது இது யார் வசம் இருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

ஸ்பெக்ட்ரம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது. அதுவும் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே உள்ளது. உங்களிடம் சிற்றலை ஒலிபரப்புகளை எடுக்கக்கூடிய வானொலிப் பெட்டி இருந்தால், அதனை டியூன் செய்து பார்த்துக் கண்டுகொள்ளலாம். எந்த நாட்டின் வானொலி மிக அதிக அலைவரிசைகளைத் ஆதிக்கம் செய்துவருகிறதோ, அந்த வானொலியே இந்த ஸ்பெக்ட்ரத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இன்று சீன வானொலி நிலையங்களே பெரும்பான்மையான சிற்றலை வரிசைகளைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. இதற்கு நாம் சர்வதேச தொலைத் தொடர்பு குழுமம் (International Telecommunication Union) ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒரு முறை வெளியிட்டுவரும் அறிக்கையே சான்றாகக் கூறலாம்.

அது சரி, முதலில் இந்த ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? என்பதை நாம் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். நிறமாலை என்று கேள்விப்பட்டு இருப்போம். ஸ்பெட்ரம் ஊழல் தலையெடுத்த போது ‘அலைக்கற்றை’ என நாளிதழ்களில் படித்திருப்போம். இரண்டுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. வானவில்லின் நிறங்களைக் கண்களில் பார்க்கிறோம். ஆனால், இந்த ஸ்பெக்ட்ரத்தினை கண்களில் பார்க்க முடிவதில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்பம் ஸ்பெட்ரத்தினையும் பார்க்கும் வழிமுறையைக் கொடுத்துள்ளது. அவை பற்றிய விபரங்களை வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

File:EM Spectrum Properties ta.svg

புகைப்பட உதவி பாலாஜி ஜெகதீஸ் 

(Translation from English version, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=45455617)

வானொலி என்றாலே அது பழைய ஊடகம் என்று இன்றும் கூறுபவர்கள் உண்டு. ஆனால் இந்த வானொலி அலைகள் தான் நம் கைப்பேசியையும் இயங்க வைத்துக் கொண்டு இருக்கின்றன. இது பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. இன்றைய வானொலி பல்வேறு புது வடிவங்கள் எடுத்துள்ளது. நமது கைப்பேசியிலேயே பல நூறு வானொலிகள் இன்று நமக்குக் கேட்கக் கிடைக்கிறது.

நாம் கேட்கின்ற வானொலியைப் போல் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு வானொலியைத் தொடங்கினால் எப்படியிருக்கும். அதற்கு இந்த ஸ்பெக்ட்ரத்தில் அனுமதி உண்டா? என்றால், நிச்சயம் அனுமதி உண்டு. அதற்கு நீங்கள் பல கோடிகள் எல்லாம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு சில ஆயிரங்கள் போதும். அதன் பெயர் தான் அமெச்சூர் வானொலி. இந்த வார்த்தையைப் புதிதாகக் கேட்பவர்களுக்கு ஒரு அறிமுகம் தந்தாக வேண்டும். நம்மில் ஒரு சிலருக்கு ஹாம் வானொலியைப் பற்றி கேள்விப்பட்டு இருப்போம், அதற்கு இன்னொரு பெயர் தான் அமெச்சூர் வானொலி.

இந்தியாவில் எட்டாம் வகுப்புத் தேர்வு பெற்ற யார் வேண்டுமானாலும் அமெச்சூர் வானொலி எனப்படும் ஹாம் வானொலியைத் தொடங்கலாம். அமெச்சூர் வானொலியும் இந்த ஸ்பெக்ட்ரத்தினைப் பயன்படுத்தியே ஒலிபரப்பப்படுகிறது. எனவே தான் இன்றும் இந்த ஸ்பெக்ட்ரத்திற்கு அவ்வளவு மதிப்பு. அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகள், கைப்பேசிக்கான அலைவரிசைகள், விமானம், கப்பல் போக்குவரத்து, போலீஸ், இராணுவம் என அனைத்துத் துறைகளும் இந்த ஸ்பேக்ட்ரத்தினைப் பயன்படுத்தியே ஒலிபரப்புகளைச் செய்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், இந்த ஸ்பெக்ட்ரத்தின் துணை கொண்டு தான் நமது ஏடிஎம்கள் கூட செயல்படுகிறது. அப்படியானால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஸ்பெக்ட்ரம் இன்று நீக்கமற நிறைந்துவிட்டது. இப்படியான ஸ்பெட்ரத்தின் துணை கொண்டு அத்தனைப் பணிகளும் செவ்வனே செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிசயம் என்னவெனில், ஒவ்வொரு அலைவரிசையும் எந்த மற்றொரு அலைவரிசைக்கு இடையூறு செய்யாமல் ஒலிபரப்பப்படுவது தான். இந்த அதிசயத்தினை என்னவென்று சொல்வது.

அமெச்சூர் வானொலியைத் தொடங்க விரும்புபவர், அதற்கான தேர்வினை எழுத வேண்டும். இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 50 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். இதில் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சட்ட திட்டங்கள் தொடர்பான கேள்விகள் இருக்கும். தேர்வு என்றவுடன் பயந்துவிட வேண்டாம். நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு இருக்கும், அதில் சரியான பதிலைத் தேர்வு செய்து எழுதினால் போதுமானது. இதற்கான புத்தகங்களும், இணைய தளத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன.

2018 வரை அமெச்சூர் வானொலிப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்து வந்தன. இப்பொழுது தமிழில் நான்கு தலைப்பிலான புத்தகங்கள், அமெச்சூர் வானொலித் தேர்வுக்காக அமேசானில்  கிடைக்கின்றன. ஹாம் ரேடியோ ஒரு அறிமுகம், இளைஞர்களுக்கான ஹாம் ரேடியோ, பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, ஹாம் ரேடியோ இன்றும் என்றும் ஆகிய புத்தகங்கள் பல பயனுள்ள தகவல்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. அமெச்சூர் வானொலிக்குப் புதிதாக வருபவர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே இந்தத் துறையில் உள்ளவர்களும் விரும்பிப் படிக்கும் புத்தகமாக இவைத் திகழ்கின்றன.

பேரிடர்

அமெச்சூர் வானொலி என்றவுடன் பலர் கேட்கும் கேள்வி, அது எப்படி இந்த ஊடகம் மட்டும் எந்த மாதிரியான பேரிடர் ஏற்பட்டாலும் செயல்படுகிறது. இதற்கு விளக்கமாகப் பதில் கூற வேண்டும். மற்ற ஊடகங்கள் போல் அமெச்சூர் வானொலி கிடையாது. இதற்கு எந்த ஒரு துணையும் தேவையில்லை. நம் மொபைல் போனுக்கு நல்ல நெட்வொர்க் இருந்தால் மட்டுமே தெளிவாகக் கேட்கும். இன்று நம்மில் பலர் கொரோனா காரணமாகச் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். ஒரு வருத்தமான செய்தி என்னவெனில் அவர்களுக்குத் தெளிவான நெட்வோர்க் இல்லாததால் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல்வேறு போன் நெட்வொர்க்குகளையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டனர். 4ஜியில் செயல்பட்டவர்களுக்கு 2ஜியே கிடைப்பது சிரமமாக உள்ளது. அதன் காரணமாக எப்பொழுது இந்த கொரோனா முடியும், சென்னைக்குத் திரும்புவோம் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள் பலர். ஆனால் அமெச்சூர் வானொலிக்கு இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை.

பேரிடர் காலங்களில் அமெச்சூர் வானொலியினரின் பங்கு அளப்பரியது. எந்த சூழ்நிலையிலும் களத்தில் இறங்கி உதவி செய்ய காத்திருப்பவர்கள் தான் அமெச்சூர் வானொலி பயன்படுத்துவோர். இவர்களிடம் எப்பொழுதுமே தயாராக ஒரு எமெர்ஜென்சி அமெச்சூர் வானொலி கிட் இருக்கும், அதற்கு காரணம், எந்த சூழ்நிலையில் யாருக்கு உதவி தேவைப்படும் என்று தெரியாது. அவசர காலங்களில் யாருடன் இணைந்து செயல்பட வேண்டும், எமர்ஜென்சி கம்யூனிகேசனை எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்ய வேண்டும், எந்த விதமான முன்னேற்பாடு அதற்குத் தேவைப்படும், எப்படி உதவி தேவைப்படும் இடத்திற்குச் செல்ல வேண்டும் போன்றவற்றைக் கணப்பொழுதில் தீர்மானித்து களத்தில் இறங்கும் தன்மை கொண்டவர்கள்.

அமெச்சூர் வரம்புகள். திட்ட விளக்கம்

பேரிடர் காலங்களில் பல்வேறு ஸ்பெக்ட்ரம்கள் பயன்பாட்டில் இருக்கும். அதில் அமெச்சூர் வானொலிக்கு எந்த அலைவரிசையை ஒதுக்கியுள்ளார்கள். அந்த இடத்தில் எந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது போன்றவற்றை முதலில் அறிந்து செயல்படுவார்கள். குறிப்பாக, ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள அமெச்சூர் மன்றங்களோடு ஒரு நல்ல உறவில் இருப்பார்கள். அந்த குழுவிற்குத் தலைமை தாங்கி இருப்பவர் யார், அவருக்கு எந்த விதத்தில் உதவிசெய்யலாம் போன்றவற்றையும் அறிந்து கொண்டு சமயத்திற்குத் தகுந்தவாறு செயல்படுவார்கள்.

அமெச்சூர் வானொலி பயன்பாட்டாளர்களுக்கு மிக முக்கியமானது அழைப்புக் குறியீடு எனப்படும் கால்சைன் (Call Sign). ஒவ்வொரு அமெச்சூர் வானொலி நிலையத்திற்கும் பிரத்தியேகமான அழைப்புக் குறியீடு வழங்கப்பட்டு இருக்கும். எனது அழைப்புக் குறியீடு VU3UOM. இதில் வியூ என்பது இந்தியாவைக் குறிக்கும். 3 என்பது எனது கிரேடு மற்றும் யூஓஎம் என்பது எனது பெயராகும். அமெச்சூர் ஒலிபரப்பின் தொடக்கத்திலும் முடிவிலும் கண்டிப்பாக நான் இந்த அழைப்புக் குறியீட்டினை கூறவேண்டும்.

அமெச்சூர் வானொலி பற்றி இதற்கு முன் ஒன்று கூட அறிந்திடாதவர்கள், உங்கள் பகுதியில் உள்ள அமெச்சூர் வானொலி மன்றங்களோடு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான மன்றங்கள் தமிழகம் முழுவதும் உள்ளது. சென்னையில் வண்டு நெட், மெட்ராஸ் அமெச்சூர் ரேடியோ சொசைட்டி, சவுத் இந்தியன் அமெச்சூர் ரேடியோ சொசைட்டி போன்றவைகள் உள்ளன. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் இன்றும் பல்வேறுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

தினமும் இவர்கள் ஒலிபரப்பும் ஒலிபரப்புகளையும் கேட்க முயற்சிக்கலாம். அதன் மூலம் யாரெல்லாம் இந்த சமயத்தில் ஆக்டிவ்வாக உள்ளனர். அந்த அலைவரிசைகளில் எந்த மாதிரியான தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் போன்றவற்றைக் கேட்க ஒரு வாய்ப்பு. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகிவரும் பிசி டிஎக்ஸ் நெட் (BC DX NET) பல்வேறு பயனுள்ள தகவல்களை சிற்றலை வரிசையில் ஒலிபரப்பி வருகிறது. இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த வாரம் பார்க்கலாம் (தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:

Call Sign: https://web.archive.org/web/20170627235235/http://www.ac6v.com/prefixes.htm

ITU: https://www.itu.int/en/Pages/default.aspx

Spectrum: https://www.iaru-r1.org/spectrum

VANDUNET: http://www.vandunet.com

SIARS: http://www.siars.org.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *