ஸ்பெக்ட்ரம் போர் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சுதந்திர போராட்ட காலகட்டத்திலேயே இந்த ஸ்பெக்ட்ரத்தினில் அரசியல் புகுந்துவிட்டது. யாரும் நினைத்த மாத்திரத்தில் இந்த ஸ்பெக்ட்ரம் எனும் அலைக்கற்றையை அன்றும் பயன்படுத்திவிட முடியாது.
வானொலியில் எத்தனையெத்தனை அதியங்கள் தான் நடந்துள்ளன. இந்தியா சுதந்திரம் பெற வேண்டி ஒரு வானொலி பிரத்தியேகமாக இரகசியமாக செயல்பட்டதை நாம் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அந்த வானொலியை நடத்தியது ஒரு பெண். அந்த பெண்ணின் பெயர் உஷா மேத்தா. சமீபத்தில் பிபிசி குஜராத்தி செய்திப்பிரிவின் பாண்டியா மற்றும் ரவி ஆகியோர் விரிவான ஒரு நிகழ்ச்சியை இது தொடர்பாக பிபிசியில் ஒலிபரப்பினர்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான இந்தியாவின் போராட்டத்தின் போது ஒரு ரகசிய வானொலி நிலையத்தை நடத்துவதற்காக சென்றபோது உஷா மேத்தாவுக்கு வெறும் 22 வயது தான்.
உஷா மேத்தா வானொலி நிலையத்தைத் தொடங்கும்போது அவருக்கு 22 வயது
பட பதிப்புரிமை: மணி பவன் காந்தி சங்கராலயா
செய் அல்லது செத்து மடி
ஆங்கிலத்தில் Do or Die என்று கூறுவர், “செய் அல்லது செத்து மடிவோம், நாங்கள் இந்தியாவை சுதந்தர நாடாக விடுவிப்போம் அல்லது அந்த முயற்சிக்காக உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம்” என்று இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி ஆகஸ்ட் 8, 1942 அன்று சக தலைவர்களிடம் கூறினார். அதனை ஏற்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெவ்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டனர்.
அந்த சமயத்தில் தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியா முழுவதும் சூடுபிடித்தது. அந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது காந்தி ஒரு நீண்ட உரையினை ஆற்றினார். அந்த கூட்டத்தில் இருந்த இளம் பெண்ணான 22 வயதான உஷா மேத்தாவை, வரலாற்று புத்தகங்களில் இணைத்தது அவர் செய்த பணி.
இரகசிய வானொலி
பைரேட் வானொலி (Pirate Radio) அல்லது ஒரு இரகசிய வானொலி நிலையம் என்பது முறையான வானொலி நிலையமாக இல்லாமல் உரிமம் இல்லாமல் ஒலிபரப்பப்படுவதாகும்.
மகாத்மா காந்தியின் உரைகளை கேட்கபவர்கள் மறுக்காமல் கூறுவது, அவரது எளிமையான பேச்சு, அனைத்து மக்களையும் சென்றடையும் தன்மை கொண்டது. காந்தியின் வார்த்தைகளால் தூண்டப்பட்ட மேத்தா – பிற இளம் சுதந்திர ஆர்வலர்களின் உதவியுடன் – ஒரு வாரத்திற்குள் ஒரு இரகசிய வானொலி நிலையத்தைத் தொடங்கினார். இன்றைய காலம் போன்றதல்ல அந்த காலம். நினைத்தவுடன் இன்றும் கூட நாம் வானொலியை தொடங்கிவிட முடியாது. ஆனால், சுதந்திர போராட்ட காலத்தில் இது போன்ற ஒரு இரகசிய வானொலியைத் தொடங்குவது என்பது, நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.
Picture: https://notsocommon.in
“பத்திரிகைகள் மக்களை சென்றடையாத போதும், அனைத்து செய்திகளும் தடைசெய்யப்படும்போதும், ஒரு வானொலி ஒலிபரப்பு நிச்சயமாக ஒரு நல்ல செயலை செய்ய முடியும். நாட்டின் தொலைதூரத்தில் உள்ள, மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கு சுதந்திரத் தேவைக்கான செய்தியை பரப்புகிறது” என்று அவர் 1969இல் ஒரு நேர்காணலில் கூறினார்.
அடுத்த சில மாதங்களில் அவர்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் குறித்த செய்திகளை அந்த இரகசிய வானொலி ஊடாக ஒலிபரப்பினார். அன்றைய காலகட்டத்தில் அந்த வானொலியை ‘காங்கிரஸ் வானொலி’ என்றும் கூறினர். மக்களை ஆங்கிலேயர்களை எதிர்க்கும் குழுவில் சேர வலியுறுத்தினர். ஒலிவாங்கிக்குப் பின்னால் அவர் இருந்த இடம் குறுகியதாக இருந்திருக்கலாம், ஆனால் அந்த ஒலிபரப்பின் தாக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தது. இந்தியாவின் பல பகுதிகளுக்கு அந்த ஒலிபரப்பானது சென்றடைந்தது.
அந்த காலகட்டத்தில், காந்தி மற்றும் பல தலைவர்கள் பேசிய சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டனர், இது இயக்கத்தை பெரிதும் பாதித்தது. இந்த செய்தியை அந்த வானொலி உடனே நாட்டு மக்களுக்கு ஒலிபரப்பியது. அதே சமயத்தில் இரகசிய பத்திரிகைகளும் நாடு முழுவதும் மக்களுக்கு கொண்டு செல்வதில் உதவின. ஆனால் படிப்பறிவு இல்லாத மக்கள், அந்த நாளிதழ்களை படிக்க முடியாததாக இருந்தது. அந்த இடத்தினை இந்த வானொலி நிறப்பியது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம், இவரின் வானொலியின் ஒலிபரப்பின் ஊடாக விரைவாக மக்கள் மத்தியில் பரவியது, பாரிய எதிர்ப்புகளையும், இரண்டு ஆண்டுகளாக நீடித்த ஒத்துழையாமை அலைகளையும் அந்த ஒலிபரப்பு தூண்டியது, என்றால் அது மிகையல்ல. இவற்றையெல்லாம் செய்தது, ஒரு துணிகர பெண்ணின் தலைமையிலான ஒரு இளைஞர் குழு.
யார் இந்த உஷா மேத்தா?
உஷா மேத்தாவுக்கு எதிர்ப்பு புதியதல்ல. அவர் இன்றைய குஜராத்தின் மேற்கு பகுதியில் உள்ள சரஸ் என்ற கிராமத்தில் பிறந்தார். இது காந்தியின் சொந்த மாநிலமாக மட்டுமல்லாமல், 1930ஆம் ஆண்டில் உப்பு சத்தியாகிரகத்தின் தளமாகவும் இருந்தது.
Picture: https://www.thebetterindia.com/
உஷா மேத்தா முதல் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றபோது, அவருக்கு வெறும் எட்டு வயது தான். சர் ஜான் சைமன் தலைமையிலான ஆங்கிலேயர்களின் குழுவுக்கு எதிராகவே அந்த போரட்டம் நடைபெற்றது. இந்தியாவில் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பரிந்துரைக்கும் போராட்டம் அது.
“ஆங்கிலேயருக்கு எதிராக நான் கூச்சலிட்ட முதல் முழக்கம் ‘சைமன் கோ பேக்’ என்று அவர் நவீன் ஜோஷியின் புத்தகத்தில் அளித்த பேட்டியில் விரிவாக கூறியுள்ளார்.
காந்தியின் அழைப்பினை ஏற்று உப்பு சத்தியாகிரகத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கு கொண்டனர். அதில் இவரும் ஒருவர். இது தொடர்பாக அவர் கூறும் போது, “ஒரு சிறு குழந்தையாக இருந்தபோதும், ஆங்கிலேயர்களின் சட்டத்தை மீறி, தேசத்திற்காக அதைச் செய்ததில் எனக்கு திருப்தி இருந்தது,” என்று அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேர்காணலில் கூறினார்.
பிரிட்டிஷ் இறக்குமதி பொருட்களை நிராகரிப்பதற்கான மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முதல், கதர் ஆடை நெய்தல் வரை அனைத்து வகையான பிரச்சாரங்களிலும் அவர் பங்கேற்றார். 1933ஆம் ஆண்டில், அவரது தந்தை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.
இரகசிய காங்கிரஸ் வானொலி
“நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது காங்கிரஸ் வானொலி, இந்தியாவில் இருந்து 42.34 மீட்டரில் ஒலிபரப்பாகிறது.” காங்கிரஸ் வானொலியின் ஒலிபரப்புகள் எப்போதுமே இப்படித்தான் தொடங்கும் – அவை அனைத்தும் பம்பாயில் ஒலிப்பதிவு செய்யப்பட்டவை என்பதை மேத்தா பின்னர் கூறினார்.
Picture: https://twitter.com/gandhiinmumbai
சிகாகோ ரேடியோ என்ற தொலைபேசி நிறுவனத்தின் நங்கா மோட்வானேவுடன் சந்திரகாந்த் பாபுபாய் ஜாவேரி மற்றும் விதால்தாஸ் கே ஜாவேரி ஆகிய இரு ஆர்வலர்களின் உதவியுடன் உஷா அந்த வானொலி நிலையத்தினை தொடங்கி ஒலிரபரப்பினார். அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டரான நரிமன் பிரிண்டரும் அவர்களுக்கு உதவினார். இந்த காங்கிரஸ் வானொலியின் முதல் ஒலிபரப்பானது 14 ஆகஸ்ட் 1942 அன்று செய்யப்பட்டது.
தொடக்கத்தில், அந்த ஒலிபரப்பினை அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பினர். தொடர்ந்து இரண்டு முறை அவர்ளால் ஒலிபரப்ப முடியவில்லை. அதனால் அவர்கள் ஒலிபரப்பினை இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை மட்டுமே செய்தனர்.
தொடர்ந்து இந்த இரகசிய வானொலியை நடத்துவதில் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர். ஆங்கிலேயர்களும் நிற்காமல் அவர்களை துறத்தி வந்தனர். எனவே அந்த வானொலி நிலையத்தின் இடத்தினையும் தொடர்ந்து மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அவர்கள் ஒலிபரப்பிய மூன்று மாதங்களில் ஆறு முதல் ஏழு முறை இடங்களை நகர்தியிருப்பார்கள் என்று மேத்தா கூறினார்.
இந்த வானொலி நிலையம் அரிசியை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அனுப்ப மறுக்கும் வணிகர்கள் முதல் சுதந்திர போராட்டத்திற்காக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்படும் செய்திகள் வரை அனைத்து வகையான செய்திகளையும் மக்களுக்கு கொண்டு சென்றது.
“இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு செய்தியாளர்களால் எங்களுக்கு தொடர்ந்து செய்தி கிடைத்தது. மேலும், அப்போது மும்பாயில் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகம் எங்களுக்கு முக்கியமான செய்திகளை வழங்கி வந்தது.” இந்த தகவல்களையெல்லாம் உஷா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
“அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழ்நிலையில் செய்தித்தாள்கள் சுதந்திர போராட்ட விஷயங்களைத் தொடத் துணியவில்லை, காங்கிரஸ் வானொலியால் மட்டுமே உத்தரவுகளை மீறி, இரகசிய இடத்தில் இருந்து உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குச் சொல்ல முடிந்தது.”
அன்றைய காலகட்டத்தில் இருந்த பல முக்கிய சுதந்திர போராட்ட தலைவர்களும் இந்த ஒலிபரப்புகளில் தீவிரமான உரைகளை நிகழ்த்தினர், இது பிரிட்டிஷாரை பெரிதும் கோவம்கொள்ள செய்தது. “காவல்துறையினர் எங்களைத் தவறாமல் துரத்திவந்தனர். பெரும்பாலும் அந்த வானொலியை தொடர்ந்து நடத்துவது சிக்கலான ஒன்றாகவே இருந்தது” என்று மேத்தா கூறினார்.
நவம்பர் 1942இல், பம்பாயில் சிகாகோ வானொலிக்குச் சொந்தமான கடைகளை போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் நரிமன் பிரிண்டரை கைது செய்தனர், அவரிடம் வானொலி நிலையம் இருக்கும் இடத்தைப் பற்றித் போலீசார் மிரட்டிக் கேட்டதாக நம்பப்படுகிறது.
இறுதி ஒலிபரப்பு
நவம்பர் 12ம் தேதி, மேத்தா ஒரு நேர்காணலில் அந்த வானொலியின் இறுதி ஒலிபரப்பினைப் பற்றி நினைவு கூர்ந்தார், பாபுபாய் கக்கரின் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை செய்தனர். தன்னிடம் இருந்த ஒலிபரப்புப் கருவிகளை எடுத்துக்கொண்டு, வேறு இடத்தில் இருந்த ஒலிப்பதிவு கலையகத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார். அவருடைய இரண்டு நண்பர்கள் அன்று மாலை காங்கிரஸ் வானொலிக்காக ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.
பிரின்டரின் உதவியாளர்களில் ஒருவரின் உதவியுடன், இறுதி ஒலிபரப்பிற்கு புதிய டிரான்ஸ்மிட்டரை அமைத்ததாக மேத்தா கூறினார். “நாங்கள் இந்துஸ்தான் ஹமாராவைப் பற்றிய ஒரு நாடகத்தினை நடித்தோம், பின்னர் நாங்கள் சில செய்திகளையும் ஒரு உரையையும் ஒலிபரப்பினோம். நிகழ்ச்சியின் முடிவில், ‘வந்தே மாதரம்’ என்று கூறினோம், அப்பொழுது யாரோ கதவைத் தட்டுவதைக் கேட்டோம்.” போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைவதற்கான கதவைத் உடைத்தனர் என்று அவர் கூறினார்.
“வந்தே மாதரம்” ஒலிரப்புவதை நிறுத்துமாறு அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டனர், நாங்கள் அவர்கள் கூறியதைக் கேட்க மறுத்தோம்.”
https://en.wikipedia.org/wiki/Usha_Mehta
காங்கிரஸ் கட்சி கூட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் ஒலித் பேழைகள் அடங்கிய உபகரணங்கள் மற்றும் 22 பெட்டிகளை அவர்கள் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார். மேத்தாவும் மற்ற நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர், விசாரணை பல மாதங்கள் நீடித்தது.
போலீஸ் செய்தது “உண்மையான மன சித்திரவதை” என்று மேத்தா கூறினார். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இளைஞர்களைத் மாற்றினால், அவர்கள் உஷாவை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் முன்வந்ததாக நினைவு கூர்ந்தார், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
மேத்தா உட்பட ஐந்து பேரில் மூன்று பேர் குற்றவாளிகள் என ஆங்கிலேய அரசு அறிவித்தது. அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஏப்ரல் 1946இல் விடுவிக்கப்பட்டனர். “நான் சிறையிலிருந்து ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஒரு பெருமை வாய்ந்த நபராக திரும்பி வந்தேன்.” என்று நினைவு கூர்கிறார்.
விடுதலையான பிறகு, அவர் தனது முனைவர் பட்டத்தினை முடித்துவிட்டு, மும்பாய் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் வில்சன் கல்லூரியில் 30 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார்.
1998ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம விபூஷன் அவருக்கு வழங்கப்பட்டது. உஷா மேத்தா ஆகஸ்ட் 11, 2000 அன்று தனது 80வது வயதில் காலமானார்.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Usha_Mehta
http://www.rediff.com/news/jun/26radio.htm
https://www.mkgandhi.org/ushamehta.htm
https://www.bbc.com/news/world-asia-india-53775313
https://en.wikipedia.org/wiki/Congress_Radio
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க