ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 11 தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 11 தங்க.ஜெய்சக்திவேல்

ஒரு நாட்டின் வளர்ச்சியில் வானொலியின் பங்கு மிக முக்கியமானது. நாம் அனைவரும் தற்பொழுது சமூக ஊடகங்களின் காலத்திலிருந்தாலும், வானொலி என்பது தவிர்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் கலை, கலாச்சாரம், மொழி, கொள்கைகளை இதன் ஊடாகவே மற்ற நாட்டின் மக்களுக்கு தெரிவித்து வந்தன. தொழில்நுட்பங்கள் மாற்றம் அடைந்துவிட்டது, அதனால் நாம் வானொலியை மறந்துவிட்டோம். ஆனால் நாம் ஒன்றை  மறந்துவிட்டோம். அது எந்த காலத்திற்குமானது தான், இந்த வானொலி என்பதை. இதை சமீபத்திய எல்லைப் பிரச்சனையில் நாம் கண்கூடாக பார்க்க முடிந்தது.

ஒலி அலைகளின் சக்தி

இந்தியாவில் அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்த சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளைத் தடை செய்தோம். ஒரே நாளில் அவற்றைக் காணாமல் செய்ய முடிந்தது. ஆனால் நம்மால் ஒன்றை மட்டும் அப்படிச் செய்ய முடியவில்லை. அது தான் வானொலி. இணைய தளத்தில் எவற்றை மக்கள் பார்க்கவேண்டும், பார்க்கக் கூடாது என்பதை நம்மால் முடிவு செய்ய முடியும். ஆனால் அது வானொலியில் சாத்தியமில்லை. காரணம், ஒலி அலைகள் எல்லைகளைத் தாண்டி பயணிக்கக் கூடியது. அப்படியே அதனை நாம் தடுக்க நினைத்தாலும், அதற்கு நாம் மிக அதிக செலவினைச் செய்தாக வேண்டும்.

Picture: https://www.sentinelassam.com

நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளைக் கூட நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், இது வானொலியில் சாத்தியமே இல்லை. இன்று நம் அகில இந்திய வானொலி பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் ஒலிபரப்பி வருகிறது. இதனைத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலி செய்தாலும், நாட்டின் கொள்கைகளை நாம் இதில் ஒலிபரப்புவதால், இந்த ஒலிபரப்பிற்கான தேவை வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குத் தான் மிக அதிகம் உள்ளது. எனவே, இதற்கான செலவுகளையும் அவர்களே தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குக் கொடுப்பதாகத் தொடக்கத்தில் முடிவானது. ஆனால் சமீப காலமாக இதற்கான செலவு மிக அதிகமாவதாலும், அதற்கான தொகை வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வராததாலும், இந்த வெளிநாட்டுச் சேவைகளை நிறுத்தும் கட்டாயத்திற்கு அகில இந்திய வானொலி தள்ளப்பட்டது அதன் ஆண்டு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

சிற்றலையை மறந்தது ஏன்?

கொரோனா காலத்தில் இந்தியாவில் ஒரு சில இடங்களில் நமது அகில இந்திய வானொலி சொந்த தயாரிப்புகளை நிறுத்திவிட்டு, அஞ்சல் மட்டும் செய்தது. குறிப்பாகப் அதில் பல வெளிநாட்டுச் சேவைகள் நிறுத்தப்பட்டன. அவற்றிற்காகப் பயன்படுத்தப்பட்ட உயர் சக்தி வாய்ந்த டிரான்ஸ்மிட்டர்களும் தனது ஒலிபரப்பினை நிறுத்திக் கொண்டது.

Picture: https://www.hindustantimes.com

அதில் மிக முக்கியமான டிரான்ஸ்மிட்டராக கோவா தலைநகர் பனாஜியில் இருந்ததைக் கூறலாம். பெங்களூர் மற்றும் புது தில்லி உயர் சக்தி டிரான்ஸ்மிட்டர்களுக்கு அடுத்தபடியாக இந்த பனாஜி டிரான்ஸ்மிட்டர் தளத்தினைக் கூறலாம். இந்த தளத்திலிருந்து தான் நமது அகில இந்திய வானொலி பல்வேறு உலக மொழிகளில் ஒலிபரப்பியது. இதில் இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்காக ஒலிபரப்பப்பட்ட தமிழ் மொழியும் அடக்கம். இந்த ஒலிபரப்பினை தமிழகத்தில் சென்னை ஆவடி டிரான்ஸ்மிட்டர் (சிற்றலை) தளமும், தூத்துக்குடி (மத்தியலை) டிரான்ஸ்மிட்டர் தளமும் ஒலிபரப்பி வந்தது. ஆனால் தற்பொழுது பனாஜி தளம் மட்டுமல்லாது, தூத்துக்குடி தளமும் ஒலிபரப்பினை நிறுத்திவிட்டது. அவ்வப்போது தூத்துக்குடி உயர் சக்தி டிரான்ஸ்மிட்டர் ஒலிபரப்பினாலும் நிகழ்ச்சிகளை அஞ்சல் மட்டுமே செய்கிறது. அதுவும் அறிவித்துள்ள உயர் சக்தியில் அல்லாமல், குறைந்த சக்தியில் தான்.

இந்த சமயத்தில் இவற்றையெல்லாம் நாம் கூற காரணம், நம் அண்டை நாடுகள் வானொலியின் மீது செலுத்தும் கவனத்தினை நாம் செலுத்தாது தான். குறிப்பாகச் சீனா இன்றும் வானொலியின் மீது பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது. அதற்குச் சான்றாக இது, இந்தி, வாங்காளம், உருது மற்றும் தமிழ் ஆகிய நான்கு இந்திய மொழிகளில் சிற்றலை  ஒலிபரப்பினை செய்து வருகிறது. ஆனால், நாம் சீனாவிற்காக சீனம் மற்றும் திபெத் ஆகிய மொழிகளில் மட்டுமே ஒலிபரப்பி வருகிறோம். அதுவும் மிகக் குறைந்த நேரம் மட்டுமே. ஆனால் அந்த ஒலிபரப்பும் அந்த மக்களைச் சென்று சேர்வதில்லை என்பது தனிக் கதை.

வெளிநாட்டு சேவை

இந்தியா தற்பொழுது பெங்காலி, பலுச்சி, சீனம், தாரி, நேபாளி, புஷ்து, சிந்தி, தமிழ், திபெத்தியன் மற்றும் உருது ஆகிய பத்து மொழிகளில் மட்டுமே சிற்றலை மற்றும் மத்தியலையில் ஒலிபரப்பி வருகிறது. ஆனால் நமது அண்டை நாடான சீனா, 44 வெளிநாட்டு மொழிகளில் ஒலிபரப்பி வருகிறது. இதில் நான்கு இந்திய மொழிகளும் அடக்கம். இதிலிருந்தே அவர்கள் வெளியுறவுக் கொள்கைகளுக்கு வானொலியை எந்த அளவுக்குச் சார்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

அகில இந்திய வானொலி தினமும்  சீன மொழியில் 1.30 (1715-1845 UTC) மணி நேரம் மட்டுமே ஒலிபரப்பி வருகிறோம். ஆனால் சீனா தினமும் இந்தியில் காலை 0830-0930, மாலை 1830-1930, இரவு 1930-2030 மற்றும் 2030-2230 என மொத்தம் ஐந்து மணி நேரம் ஒலிபரப்புகிறது. இது தவிர பெங்காலியில் ஐந்து மணி நேரமும், தமிழில் நான்கு மணி நேரமும், உருது மொழியில் ஐந்து மணி நேரமும் சிற்றலையில் ஒலிபரப்பி வருகிறது. (ஒலிபரப்பின் நேரம் மற்றும் அலைவரிசை விபரங்கள் கட்டுரையின் கடைசியில் விரிவாக இணைக்கப்பட்டுள்ளது) 4ஜி யுகத்தில், நம் ஊரில் யார் இந்த சீன ஒலிபரப்புகளைக் கேட்கிறார்கள், அதுவும் சிற்றலையில் என்று கூறி அவர்கள் ஒலிபரப்பாமல் இல்லை. 5ஜிக்கு சென்றுவிட்ட சீனா, இன்றும் சிற்றலையில் ஒலிபரப்புகிறார்கள் எனில், அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

யார் சார் கேட்குறாங்க?

https://shortwavearchive.com

இந்தியாவில் வானொலித் துறையில் இருப்பவர்களே, “யார் சார் இன்னைக்குச் சிற்றலையில் வானொலியைக் கேட்குறாங்க? நீங்க தா வானொலி புடிச்சிட்டு அழுகுறீங்க” என்ற சொற்களைத் தொடர்ந்து கேளியும் கிண்டலுமாகத் கேட்டுக் கொண்டு வருகிறேன். நம் நாட்டின் நிலைப்பாட்டினை வானொலி தவிர வேறு எந்த ஊடகத்தின் ஊடாக நம் அண்டை நாட்டு மக்களுக்கு அனுப்பினாலும், அவை அவர்களைப் போய்ச் சேர்வதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. ஆனால், வானொலிக்கு அந்த கட்டுப்பாடு இல்லை. தடுக்கவும் முடியாது. அப்படியே அந்த ஒலி அலைகளைத் தடுக்க வேண்டும் எனில், நாம் 500 கிலோ வாட் சக்தியில் ஒலிபரப்பினால், அதற்கும் அதிகமான சக்தியில் அந்த நாடு டிரான்ஸ்மிட்டரை அமைத்து ஒலிபரப்ப வேண்டும். அதற்கு மிக அதிகமான மின்சார செலவு ஆகும்.

அப்படித் தான் நாம் சீன மொழியில் மாலை 05.15 முதல் 06.45 வரை (16 மீட்டர்), 17510 சிற்றலை வரிசையில் ஒலிபரப்பி வந்தோம். அண்டை நாட்டின் இடையூறு (ஜாமிங்) காரணமாக, ஜூலை 1, முதல் 16 மீட்டரிலேயே 17,595ற்கு மாற்றம் செய்தது அகில இந்திய வானொலி. மேலும் திபெத்திய மொழியில் மாலை 05.45 முதல் 07.00 மணி வரை (31 மீட்டர்) தற்பொழுது 9580 சிற்றலை வரிசையில் ஒலிபரப்பி வருகிறது. இந்த இரண்டு ஒலிபரப்புகளும் சீனாவுக்காக இந்தியா செய்பவை. வருத்தம் என்னவெனில் இந்த ஒலிபரப்புகள் சீன மக்களைச் சென்று சேரவில்லை. அதற்குக் காரணம், மிகச் சக்தி வாய்ந்த டிரான்ஸ்மிட்டர்களைக் கொண்டு சீனா இடையூறு செய்து வருவதே ஆகும்.

இப்படியான சூழ்நிலையில் நமது நாடு செய்ய வேண்டியது, மிக அதிக ஒலிபரப்புகளை பல்வேறு அலைவரிசைகளில் சீனாவினைப் போன்றே நாமும் செய்தாக வேண்டும். ஒரு காலத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன வானொலிகளின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. ஆனால், சரியான நேரத்தில் நமது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக இந்தியாவிலேயே மிக அதிக வானொலி நிலையங்களைக் கொண்ட மாநிலமாக தற்பொழுது அருணாச்சல பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு தற்பொழுது, 47 வானொலிகள் இந்த மாநிலத்தின் இந்தியச் சீன எல்லைப் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

நாம் செய்ய வேண்டியது

வானொலி என்பது ஒரு பொதுச் சேவை. அதில் லாபம் என்பதை மட்டும் பார்க்கக் கூடாது. ஆனால் இன்றைய ஒலிபரப்பாளர்கள் அதில் எப்படிப் பணம் பார்க்கலாம் என்று உள்ளனர். அதுவும் குறிப்பாக வானொலியை சமூக ஊடகத்தில் ஐக்கியமாக்கி வருகின்றனர். அது வேண்டாம் என்று கூறவில்லை, என்றைக்குமான வான் வழி ஒலிபரப்பினையும் செய்து கொண்டே, சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்தலாம்.

‘உலக வானொலித் தொலைக்காட்சி கையேடு 2020’ கணக்கின் படி, தற்பொழுது இந்தியாவில் அய்ஜ்வால், அலிகர், பெங்களூர், போபால், சென்னை, காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜெபூர் (ஒடிசா), லே, புது தில்லி, காம்பூர், கிங்ஸ்வே, பனாஜி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 14 சிற்றலை ஒலிபரப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஆறு நிலையங்கள் மட்டுமே வெளிநாட்டுச் சேவையைச் செய்துவருகிறது. மாநிலத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கைக் கூட இதில் இல்லை. ஆனால், அனைத்துலக ஒலிபரப்பு ஆணையத்தின் கணக்கின் படி சீனாவில் 20 சிற்றலை ஒலிபரப்பு நிலையங்கள் உள்ளன. அவை அனைத்தும் வெளிநாட்டுச் சேவையைச் செய்கின்றன. ஒவ்வொரு டிரான்ஸ்மிட்டர் தளத்திலும் குறைந்தபட்சம் ஐந்து உயர் சக்தி ஒலிபரப்பிகள் 500 கிலோ வாட் சக்தியில் செயல்பட்டு வருகின்றன. எனில் (20 x 5 =100) நூறு சிற்றலை ஒலிபரப்பிகள் காத்திரமாக அண்டை நாடுகளுக்கு தனது ஒலிபரப்பினை செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அந்த ஒலிபரப்புகளை பண்பலை தரத்தினில் தமிழகத்தில் கேட்க முடியும். நம் ஒலிபரப்பு அங்கு செல்வதே திக்கித்தினறி வருகிறது.

எனவே நாட்டின் நன்மை கருதி, இனி மேலாவது, நமது அண்டை நாடுகளைப் போன்று நாம் வானொலிக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்பு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கு உதாரணமாக, நாம் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா (வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா – VOA), ஜப்பான் (நிப்பான ஹோசோ கியோக்காய் – NHK), ஜெர்மனி (டொய்ச்சு வெள்ள – DW) ஆகியவற்றையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இன்றும் அந்த நாட்டின் அரசு பொதுத் துறை வானொலிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது.

(தொடரும்) ■

மேலதிக தகவல்களுக்கு:

சீன வானொலியிள் தமிழ் ஒலிபரப்பு

காலை 0730-0827 – 15260 (19 மீட்டர்), 13600 (22 மீட்டர்)

            0830-0927 – 13730 (22 மீட்டர்), 13600 (22 மீட்டர்)

இரவு 0730-0827 – 13600 (22 மீட்டர்), 11685  (25 மீட்டர்)

          0830-0927 – 11685 (25 மீட்டர்), 9690 (31 மீட்டர்)

இணையம் : http://tamil.cri.cn/

முகவரி: TAMIL SERVICE CRI-9, CHINA RADIO INTERNATIONAL, P.O.Box 4216,   BEIJING, P.R.CHINA 100040

மின் அஞ்சல்: [email protected]

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]

தொடர் 1ஐ வாசிக்க

http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-10/

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *