அமெச்சூர் வானொலி என்பது ஒரு பொழுது போக்கு ஊடகம் மட்டுமல்ல. இதன் மூலம் பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். உலகையே சுற்றிவரவும் முடியும். உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் ஹாம்கள் உள்ளனர். அவர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் நம் நட்பு வட்டத்தினை பெருக்கிக் கொள்ளவும் முடியும். இந்த வகையான பொழுது போக்கிற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது தான் டிஎக்ஸிங்.
டிஎக்ஸிங்
டிஎக்ஸிங் (Dxing) என்பது தொலைதூர வானொலி அல்லது தொலைக்காட்சி சமிக்ஞைகளைப் பெறுவது மற்றும் அடையாளம் கண்டு, அதனைக் கேட்பதாகும். அதே போன்று அமெச்சூர் வானொலி, சிட்டிஜன் பேண்ட் வானொலி அல்லது பிற இருவழி வானொலி தகவல்தொடர்புகளில் தொலைதூர நிலையங்களுடன் இருவழி வானொலி தொடர்புகளை ஏற்படுத்துதலும் இந்த டிஎக்ஸிங்கில் வரும். இதில் ‘டி’ என்பது தொலைவினைக் (Distance) குறிக்கும். ‘எக்ஸ்’ என்பது ஏதேனும் ஒரு வானொலியைக் குறிக்கும்.
உலகெங்கும் உள்ள பல DXersகள் வெளிநாட்டு வானொலிகளைத் தொடர்புகொள்வதன் மூலம் அவர்களிடம் இருந்து எழுதப்பட்ட சரிபார்ப்புகளை பெற முயல்கின்றனர். இதற்கு “QSL” என்று பெயர். நமது மொழியில் ஒரு வானொலியினைக் கேட்டதற்கான சான்று எனக் கொள்ளலாம். அல்லது “verification card” எனவும் அதனைக் குறிப்பிடுகின்றன. இந்த மாதிரியான பொழுதுபோக்கின் பெயர் டி.எக்ஸிங், “தொலைவு” அல்லது “தொலைதூர” என்பதற்கான தந்தி சுருக்கெழுத்து தான் இந்த டிஎக்ஸிங்.
வானொலி ஒலிபரப்பின் தொடக்க நாட்களில் டிஎக்ஸிங் என்ற வார்த்தை புகழ்பெற்றதாக இருந்தது. இன்றைய சமூக வலைத்தள காலங்களில் காணாமல் போனாலும், இதற்கென ஆர்வத்துடன் இருப்பவர்கள் இன்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். தொலைதூரத்திலிருந்து ஒலிபரப்பாகும் நிலையத்தினைக் கேட்டுவிட்டு, அந்த வானொலி நிலையத்தினை கேட்டதாக அதிகாரப்பூர்வமாக எழுதும் கடிதத்திற்குப் பதில் அனுப்புகின்றனர். சரிபார்க்க எழுதப்பட்ட ஒப்புதல் அல்லது கியூஎஸ்எல் அட்டை அந்த வானொலிகளிலிருந்து கிடைக்கும். இந்த நம்பிக்கையில் கேட்போர் வானொலி நிலையங்களுக்கு “நிகழ்ச்சி தர அட்டவணை அறிக்கைகளை” அனுப்புவார்கள். இந்த அட்டைகளைச் சேகரிப்பது 1920கள் மற்றும் 1930களில் வானொலி கேட்பவர்களிடையே பிரபலமாக இருந்தது. இன்றும் இந்தியா உட்படப் பல நாடுகளில் உள்ள நேயர்களும் இது போன்ற வண்ண அட்டைகளைச் சேகரித்து வருகின்றனர். மேலும் இது போன்ற நிகழ்ச்சித்தர அறிக்கைகள் ஆரம்பக்கால ஒலிபரப்பாளர்களால் அவற்றின் ஒலிபரப்பின் செயல்திறனைக் கண்டறிய பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன.
சர்வதேச சிற்றலை ஒலிபரப்புகள் சமீபகாலமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும், அர்ப்பணிப்புடன் தீவிரமாக வானொலி கேட்போர் மத்தியில் டிஎக்ஸிங் பிரபலமாக உள்ளது. தொலைதூர அமெச்சூர் வானொலி இயக்குபவர்களிடையே இருவழித் தொடர்பைப் ஏற்படுத்தவும் இந்த சிற்றலையே பயன்படுகிறது.
AM ரேடியோ டி.எக்ஸ்
தொடக்கக் காலத்தில் தொலை தூர வானொலிகளைக் கேட்க கிரிஸ்டல் வானொலிப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த வானொலிகளைக் கேட்க நீண்ட கம்பியில் கட்டப்பட்ட ஆண்டனாக்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த காலகட்டத்தில் நிறைய வானொலி நிலையங்கள் ஒலிபரப்பில் இல்லை. அதனால், தொலைதூர நாடுகளிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளை மட்டுமே கேட்க முடியும். இதனால் தொலைதூர நாடுகளிலிருந்து குறைந்த சக்தியில் ஒலிபரப்பாகும் வானொலிகளைக் கூட கேட்கமுடியுமாக இருந்தது.
ஆரம்பக்கால வானொலி கேட்போர், பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கிரிஸ்டல் தொகுப்புகள் மற்றும் நீண்ட கம்பி ஆண்டெனாக்களைப் பயன்படுத்திக் கேட்டனர், அன்றைய வானொலி நிலையங்கள் குறைவாக இருந்தன என்பது இங்குக் கவனிக்கப்பட வேண்டியது. ஒலிபரப்பும் நிலையங்கள் நெரிசலில்லாமல், மிகச் சக்திவாய்ந்த ஒலிபரப்பிகளைக் கொண்டு ஒலிபரப்பின. அந்த அனைத்துலக வானொலி நிலையங்களின் ஒலி அலைகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு பயணித்தது. பலவீனமான சமிக்ஞைகளைக் கேட்பவர்களையும் ‘டிஎக்ஸர்கள்’ என்று கூறினர்.
1950-1970களின் நடுப்பகுதியில் தொடர்ந்து, சிற்றலை வரிசையில் அமெரிக்காவில் KDKA, WLW, CKLW, CHUM, WABC, WJR, WLS, WKBW, KFI, KAAY, KSL ஆகிய வானொலிகள் புகழ்பெற்று விளங்கின. சக்திவாய்ந்த வட அமெரிக்க நிலையங்கள் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவில் உள்ள நேயர்களுக்கு இவை ஒலிபரப்பின. அதனைக் கேட்கவும் ஏராளமான நேயர்கள் உலகம் முழுவதும் இருந்தனர். இந்திய நேயர்கள் அந்த ஒலிபரப்பினை கேட்க முடியவில்லை. ஆனால், இன்று அதே வானொலிகளை நாம் கைப்பேசி செயலிகள் மூலமும், இணைய வழியாகவும் அனைத்து வானொலிகளையும் கேட்க முடிகிறது. மிகச் சிறிய, உள்ளூர் AM வானொலி நிலையங்களை இரவு நேரங்களில் கேட்க முடிந்தது. பெரிய 50 கிலோவாட் சக்தி கொண்ட நிலையங்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள தனது விசுவாசமான நேயர்களைச் சென்றடைந்தன. அவை வண்ண அட்டைகளையும் தனது நேயர்களுக்கு அனுப்பின.
சிற்றலை டி.எக்ஸ்
குறிப்பாகப் போர்க்காலத்திலும், மோதல்களின் காலத்திலும், சர்வதேச ஒலிபரப்பாளர்கள் சிற்றலை ஒலிபரப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்குக் காரணம் இந்த அலை மட்டுமே எல்லைகளைத் தாண்டி பயணிப்பதாக உள்ளது. இன்றும் அந்த காரணத்திற்காகவே நமது அகில இந்திய வானொலி சிற்றலையில் தனது ஒலிபரப்பினை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியச் சீன எல்லையில் இந்த ஒலிபரப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த வானொலியின் சமிக்ஞைகள் உலகெங்கிலும் சிற்றலை வரிசைகளில் ஒலிபரப்பப்படுகிறது. இது போன்ற ஒலிபரப்புகள் டிஎக்ஸிங் செய்யும் ஆர்வலர்களிடையே பிரபலமாக உள்ளது.
இணையத்தில் ஸ்ட்ரீமிங் ஒலியின் புகழ் அதிகரித்துள்ள நிலையில், பல சர்வதேச ஒலிபரப்பாளர்கள் (பிபிசி மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா உட்பட) தங்கள் சிற்றலை ஒலிபரப்புகளை குறைத்துள்ளனர். மிஷனரி சமய ஒலிபரப்பாளர்கள் உலகெங்கிலும் உள்ள வளரும் நாடுகளுக்கு சிற்றலை வானொலி ஒலிபரப்பினை இன்றும் விரிவாக ஒலிபரப்புகின்றனர்.
சிற்றலை வரிசையானது, சர்வதேச ஒலிபரப்பாளர்களுக்கு மட்டுமல்லாது, இராணுவத் தொடர்புகள், ஆர்டிடிஒய், அமெச்சூர் வானொலி, பைரேட் வானொலி மற்றும் எண்கள் நிலையங்களின் மர்மமான ஒலிபரப்புகளுக்கும் பயன்படுகிறது. இந்த சமிக்ஞைகள் பல ஒற்றை சிங்கிள் சைட் அலைவரிசைகளுக்காகவும் பயப்படுத்தப்படுகிறது. இதனைச் சாதாரண வானொலிப் பெட்டிகளில் கேட்க முடியாது. அதற்கென உள்ள பிரத்தியேகமான வானொலிப் பெட்டிகளில் மட்டுமே டிஎக்ஸிங் செய்யமுடியும்.
VHF DXing
சிற்றலையைப் போன்றதல்ல இந்த வி.ஹெச். எஃப் ஒலிபரப்பு. இது பண்பலை வரிசையில் செய்யப்படும் ஒலிபரப்பு. இது போன்ற வி.ஹெச். எஃப் ஒலிபரப்பினையும் உலகம் முழுவதும் உள்ள நேயர்கள் டி.எக்ஸ் செய்கின்றனர். ஒரு சில வெளிநாட்டு நிலையங்கள் இந்த ஒலிபரப்பிற்கும் வண்ண அட்டைகளை அனுப்புகின்றன. இந்த நிலையங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறை, அதிக தொலைவிற்கு இந்த ஒலிபரப்பானது பயணிக்காது. பண்பலை போன்றே அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் பயணிக்கும். ரீப்பீட்டர்கள் இருக்கும் பட்சத்தில், இது தமிழகம் முழுவதும் போவதற்கு வாய்ப்பு உண்டு. மேற்கு ஐரோப்பாவில், வட அமெரிக்க எஃப்எம் நிலையங்களை டிஎக்ஸர்கள் கேட்டுள்ளனர். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில், ஐரோப்பிய வானொலிகளின் சமிக்ஞைகள் பெறப்பட்டுள்ளன.
VHF அலைவரிசையில் தான் காவல்துறை, தீயணைப்பு மற்றும் இராணுவ தகவல்தொடர்புகளும் செய்யப்படுகின்றன. அதனால், அவ்வப்போது டிஎக்ஸர்கள் வி.ஹெச். எஃப் வானொலிப் பெட்டிகளில் இந்த ஒலிபரப்புகளையும் கேட்பதற்கு வாய்ப்பு உண்டு. மல்டி-பேண்ட் வானொலி ஸ்கேனர்களில் ஓரளவிற்கு இந்த ஒலிபரப்புகளை கேட்க முடியும்.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
http://www.dxing.info/introduction.dx
https://books.google.co.in/books?id=ZjP978PYo0MC&pg=PA330&redir_esc=y#v=onepage&q&f=false
https://books.google.co.in/books?id=Zb-j6Pwcvq8C&pg=PA73&redir_esc=y#v=onepage&q&f=false
https://www.dxing.com/amband.htm
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
தொடர் 11ஐ வாசிக்க