அமெச்சூர் வானொலியில் டி.எக்ஸிங்கின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது. ஹாம் வானொலி நண்பர்களோடு மட்டுமே பேசிக்கொண்டு இருக்காமல், புதிய வானொலி நிலையங்களைத் தேடிப்பிடிப்பதுவும் ஒரு வகையில் இதில் சவால் நிறைந்ததே. ஸ்பெக்ட்ரம் போரில் இது போன்ற ஒலி அலைகளைத் தேடிப்பிடிப்பதே ஒரு த்ரில்லிங் தான். கடந்த ஒரு வாரமாக ஒரு குறிப்பிட்ட நாடு நம் நாட்டின் தலைவர்களை கண்காணிப்பதாக ஒரு செய்தி ஊடகங்களில் வந்தது. இது ஒரு வகையில் ஸ்பெக்ட்ரம் போருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

DXers Alfredo Locatelli and Horacio Nigro (R) on 1980s DXpedition in Uruguay

நாம் கண்காணிக்கப்படுகிறோமா?

நம் அனைவருக்கும் இந்த கேள்வி எப்பொழுதும் உண்டு. நாம் கண்காணிக்கப்படுகிறோமா என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். ஆம், கண்காணிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். சாதாரண குடிமகனான நம்மையே இந்த சமூக ஊடகங்கள் கண்காணிக்கும் போது,   நம் நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களை எப்படியெல்லாம் கண்காணிக்கப்படுவார்கள் என்பதை யோசிக்க தேவையில்லை.

ஏன் இந்த கண்காணிப்பு? இதற்குப் பல காரணங்களும், பல விடைகளும் உள்ளன. நம்மை நம் எதிரி நாடு மட்டுமா கண்காணிக்கிறது. இல்லை, அனைத்து நாடுகளுமே இதற்கென ஒரு தனி அமைப்பினையே வைத்துள்ளது. அனைத்து நாடுகளும் இந்த கண்காணிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நம் நாட்டின் குடிமக்களையே நம் அரசுகள் கண்காணித்துத்தான் வருகின்றன. இன்று யாரும், எந்த சூழ்நிலையிலும், எங்கும் தப்பிவிட முடியாது. அந்த அளவிற்கான கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிட்டோம். நம் சட்டைப்பையில் என்ன இருக்கிறது என்பதைக் கூட, வான்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள்கள் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் சக்தி கொண்டதாக இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

எதற்காக இந்த கண்காணிப்பு?

நம்மை ஏன் இவர்கள் கண்காணிக்க வேண்டும்? இதற்கான பதில், நாம் அனைவருமே அவர்களுக்கு பரிசோதனை மாதிரிகள். நம்முடைய ஒவ்வொரு இணைய செயல்பாடும் அவர்களுக்கு பெரிய தகவல் சுரங்கம். இதனை ‘பிக் டேட்டா’ என்கிறார்கள். நம் தகவல்களைக் கொண்டே இன்று பல நிறுவனங்கள் களத்தில் பல புதிய சந்தைகளைப் பிடித்துள்ளன.

நம் நாடும் பல வெளிநாட்டு விவகாரங்கள் மட்டுமல்லாது, அந்த நாட்டின் தலைவர்களையும் கண்காணிக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டில் உள்ள ஊடகங்கள், இந்த கண்காணிப்பு பணிக்குப் பெரிதும் உதவுகின்றன. காரணம், தினசரி நடவடிக்கைகள், இந்த ஊடகங்களில் ஆவணப்படுத்தப்படுவதால், அந்த தகவல்களைக் கொண்டே, பல புதியத் தகவல்களைப் பெற முடியும். இதில் வானொலியும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றால், அது ஒன்றும் அதிசயம் இல்லை. அனைத்து நாடுகளுமே இந்த பணியை தனித்துறையை அமைத்துச் செயல்படுகின்றன. இதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக இதற்காகவே சர்வதேச ஊடகங்கள் தனியான அமைப்பினை அமைத்துச் செயல்படுகின்றன. அதனை ஆங்கிலத்தில் Monitoring என்று கூறுவர். இந்த கண்காணிப்பு அமைப்பு ஒரு குறிப்பிட்ட நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களையும் கண்காணித்து அவற்றைப் பற்றிய தகவல்களைத் தேவையான நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

தேடல்

வானொலியில் தேடல் ஒரு சுகம். இதை ஒரு வகையில் கண்காணிப்பு என்றும் கூறலாம்.  உலகம் முழுவதும் இருந்து ஒலிபரப்பாகும் அனைத்து வானொலிகளையும் தேடிப்பிடித்துக் கேட்பது ஒரு கலை. ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள், இது போன்ற தொலைதூர வானொலிகளைக் கேட்டு அறிக்கை எழுதி அனுப்பி வண்ண அட்டைகளைப் பெருவர். இதுவும் ஒரு வகையான சேகரிப்பே. இது போன்ற தேடல்களின் போது பல புதிய ஒலி அலைகளையும் கேட்பதுண்டு. அவை ஒரு சில சமயங்களில் புரியாத மொழியில் இருக்கும். இன்னும் ஒரு சில ஒலிகள் குறியீடுகளாகவும் இருக்கும். இவை அனைத்தும் இந்த வானொலி கேட்டலில் கிடைக்கும் அற்புதங்கள்.

தொலைதூரங்களில் இருந்து வரும் ஒலி அலைகளைப் பிடிப்பதே ஒரு சவால் தான். இந்த சவாலில் வெற்றி அடைபவர்களுக்குப் பல புதிய வண்ண அட்டைகளும் கிடைக்கும். உலகின் பல இடங்களில் இருக்கும் ஹாம்களும் இது போன்ற கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு அமெச்சூர் வானொலி நிலையமும் ஒரு பதிவேடு வைத்திருக்கும். அதில், தான் கேட்கும் அல்லது தொடர்பு கொள்ளும் அனைத்து நிலையங்களின் விபரங்களையும் குறித்து வைப்பர். இதனை ஆங்கிலத்தில் Log Book என்று கூறுவர். ஒவ்வொரு ஹாமும், தான் கேட்க தொலைதூர நிலையங்களை அதில் குறித்துவைக்க ஆசைப்படுவர்.

என்ன பயன்?

இது போன்ற தொலைதூர நிலையங்களைப் பெறுவதால், எந்த வகையான பயன் நமக்குக் கிடைக்கு என நீங்கள் கேட்கலாம். முதலில் நமது பொது அறிவு விரிவடையும். ஒரு புதிய நாட்டினைக் கேட்கும் பொழுது நமக்கு, அந்த நாடு எங்குள்ளது, அந்த நாட்டில் எத்தனை ஹாம்கள் உள்ளனர், அந்த நாட்டின் முக்கியத்துவம் என்ன? போன்றவற்றை அறிந்துகொள்வதோடு, நமக்குத் தெரியாத இன்னும் பல தகவல்களையும் கற்றுக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாது உலக நாடுகளின் அடையாளக் குறியீடு எனப்படும் Call Signகளைத் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இது இருக்கும். மேலும், அந்த நாட்டின் அரசியல் வரலாறு, அந்த நாட்டில் உள்ள ஊடகங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அது இருக்கும்.

இது போன்ற, தொலைதூர வானொலிகளை நாம் எளிதாகக் கேட்டுவிட முடியாது. அதற்கு நிறைய பெரிய ஆண்டனாக்கள் தேவை, அதுமட்டுமல்லாது நல்ல வானொலிப் பெட்டிகள் அவசியம். அதன் துணைகொண்டு மட்டுமே தொலைதூரத்தில் இருந்து வரும் ஒலிபரப்புகளைக் கேட்க முடியும். இது போன்ற தொலைதூர வானொலிகளைக் கேட்கக் காலநிலையும் சாதகமாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் சிற்றலை ஒலிபரப்புகளை ஏன் கேட்க வேண்டும் எனப் பலர் கேட்பர். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சிற்றலை ஒலிபரப்பினை எந்த ஒரு காலகட்டத்திலும் தவிர்க்க முடியாது. அதனால் தான் இன்றும் அனைத்து நாடுகளின் இராணுவமும் இந்த சிற்றலை வரிசையைப் பயன்படுத்துகின்றன.

டிஎக்ஸ்பெடிசன்

இந்த வார்த்தை பலருக்கும் புதிதாகும். ஹாம் வானொலியினருக்கு அது பழக்கப்பட்ட வார்த்தை. மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, மின்சாரமே கிடைக்காத ஒரு இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்திற்கு வானொலிப் பெட்டிகளை கொண்டு சென்று தொலைத்தூர ஒலிபரப்புகளை கேட்பார்கள். அதற்கு பெயர் தான் டிஎக்ஸ்பெடிசன். உலகம் முழுவதும் இது போன்ற டிஎக்ஸ்பெடிசன் பல நடக்கின்றன. அதில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டினர் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

நம் நாட்டில் மேற்கு வங்காள நேயர்கள் இதில் பேரார்வம் காட்டுகின்றனர். இது போன்ற டிஎக்ஸ்பெடிசன்களில் நிறைய கிடைத்தற்கரிய வானொலிகள் எல்லாம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். கொல்கத்தாவை சேர்ந்த டிஎக்ஸர்கள் பலரும் ஒவ்வொரு ஆண்டும் மந்தார்மணி என்னும் இடத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டிஎக்ஸ்பெடிசனுக்காகவே செல்கின்றனர்.

தமிழகத்திலும் உள்ள ஒரு சில ஹாம்கள் ஏற்காடு, ஏலகிரி போன்ற மலை பிரதேசங்களுக்கு சென்று டிஎக்ஸ்பெடிசன் செய்கின்றனர். என்ன ஒன்று, இந்த பகுதிகளில் எல்லாம் மின்சாரம் இருக்கும். அதுவே தொலைதூர ஒலிகள் கிடைக்கவிடாமல் இடையூறு செய்யும். மின்சாரமே முற்றிலும் இல்லாத பகுதிகளில் சென்று வானொலி கேட்பது என்பது ஒரு வித த்ரில்லிங் நிறைந்தது. அதற்கு காரணம், நாம் நம் வாழ்நாளில் கேட்டிராத பல வானொலி நிலையங்களைக் கேட்பதற்கான ஒரு வாய்ப்பாக இது போன்ற டிஎக்ஸெபெடிசன்கள் இருக்கும்.

(தொடரும்) ■

மேலதிக தகவல்களுக்கு:

http://mandarmanidxped.blogspot.com/

http://idxcidxpedition.blogspot.com/2013/02/mandarmani-dxpedition-4.html

http://mmdxped2.blogspot.com/

https://www.radioworld.com/uncategorized/sirius-looks-for-cfo-328541

https://en.wikipedia.org/wiki/DX-pedition

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]

தொடர் 1ஐ வாசிக்க

http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-11/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *