சிற்றலை, (Shortwave) அமெச்சூர் வானொலி வானொலியினருக்கு என்றுமே மகிழ்ச்சியானதொரு அலைவரிசை. அதற்குக் காரணம், அதன் விஸ்தரிப்பு. இந்த சிற்றலை அலைவரிசை ஒரு பெரிய பிரபஞ்சம் போன்றது. அதில் தேடுவதற்கு அவ்வளவு உள்ளது. நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருக்கலாம். 2000 கி.ஹெ முதல் 30,000 கி.ஹெ வரையுள்ள இந்த அலைவரிசை அவ்வளவு வானொலி நிலையங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. சிற்றலை வானொலியில் ஆர்வம் கொண்ட ஒருவர், இந்த அலைவரிசைகளில் மூழ்கிப் பல முத்துக்களை எடுக்கவே விரும்புவர்.
Picture Credit: https://www.swpc.noaa.gov/phenomena/ionosphere
மீவளிமண்டிலம்
சிற்றலையின் தன்மையே வினோதமானது. இது குதித்துக் குதித்து ஓடக்கூடியது. குதித்து என்றால் உடனே நிலத்தில் என்று நினைத்துவிட வேண்டாம். பூமியிலிருந்து மீவளிமண்டிலத்தின் (Ionosphere) மீது மோதி மீண்டும் பூமிக்கு வருகிறது. அந்த சிற்றலை வரிசையின் தன்மையைப் பொருத்து அது மீண்டும், மீண்டும் மோதி இலக்கினை நோக்கிச் செல்கிறது. இதனால் தான் இந்த ஒலி அலைகள் எல்லைகளைத் தாண்டி பயணிக்கக் கூடியதாக உள்ளது. அதனால் தான், இன்றும் வளர்ந்த நாடுகள் பலவும் சிற்றலையை ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறது.
சிற்றலை வரிசையை அனைத்துலக வானொலிகள் மட்டும் பயன்படுத்தவில்லை, இதனை அமெச்சூர் வானொலி நிலையங்களும் பயன்படுத்துகின்றன. இதன் ஊடே தான் எல்லைகளைத் தாண்டி ஹாம் வானொலி நிலையங்கள் பயணிக்கின்றன. ஹாம் வானொலியின் அழைப்புக் குறியீடுகளை (Call Sign) வைத்திருப்பவர்கள், எளிதாக வெளிநாட்டு ஹாம்களோடு உரையாட இது உதவுகிறது.
வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெ.எஃப் அலைவரிசைகளில் ஒலிபரப்புவது போன்றதல்ல இந்த சிற்றலை ஒலிபரப்பு. இது கொஞ்சம் கடினமானது. கேட்பதுவும் சிரமமான ஒன்று. வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெ.எஃபில் பண்பலை ஒலிபரப்பின் தெளிவு இருக்கும். ஆனால், சிற்றலை அப்படியானது அல்ல. கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
பரப்புகை
சிற்றலை ஒலிபரப்புக்கு பரப்புகை (propagation) மிக முக்கியம். தெளிவான வானிலை இருக்கும் போது இந்த ஒலிபரப்பானது, எந்த வித இடையூறும் இன்றி பயணிக்கும். மின்னல், இயற்கை சீற்றங்கள், சூரிய ஒளி ஆகியவை இந்த ஒலி அலைகளைக் தடுக்கும் காரணிகள் ஆகும். பரப்புகை தெளிவாக இருந்தால், பல தொலைத்தூர வானொலி நிலையங்களைத் தொடர்பு கொள்ளவும், ஒலிபரப்பவும் முடியும். இதன் காரணமாகவே வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெ.எஃப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக சிற்றலைவரிசையுள்ளது.
Figure: HF frequencies may propagate via the ground wave, line-of-sight, or the sky wave.
Picture Credit: https://www.sws.bom.gov.au/Educational/5/2/2
பரப்புகையைப் பற்றி விரிவாக தெலைத்தூர வானொலி நிலையங்களைக் கேட்பவர்கள் அறிந்துவைத்துக்கொள்வது அவசியம். எந்த நேரத்தில், எந்த அலைவரிசை தெளிவாகக் கிடைக்கும் போன்ற விபரங்கள் மிக முக்கியம். இது போன்ற தொலைதூர வானொலிகளைக் கேட்பவர்கள், படிக்க வேண்டிய மிக முக்கிய புத்தகம் Bob Locher அவர்கள் எழுதிய The Complete Dxers. இணையத்திலும், இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன.
எண்ணியல் வானொலிப் பெட்டி
இது போன்ற தொலைத் தூர வானொலி நிலையங்களைக் கேட்க ஒரு நல்ல வானொலிப் பெட்டி அவசியம். இன்றைய காலகட்டத்தில் எண்ணியல் வானொலிப் பெட்டிகள் பலவும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் விலை தான் சற்று அதிகம். எண்ணியல் வானொலிப் பெட்டிகளில் சிற்றலை வானொலிகளை தெளிவாகக் கேட்க முடியும். இன்று ரூ.2000 முதல் இன்று ஒரு நல்ல எண்ணியல் வானொலிப் பெட்டிகள் கிடைக்கின்றன.
Picture Credit: https://www.universal-radio.com/catalog/portable/5902.html
தொலைதூரத்தில் இருந்து வரும் ஒலி அலைகளை அலைக்கொடி வான்கம்பி (antenna) துணை கொண்டே தெளிவாகப் பெற முடியும். அதனால் நல்ல அலைக்கொடி தேவையான ஒன்று. அயல்நாட்டு வானொலிகளை பல சவால்களைத் தாண்டித்தான் கேட்க வேண்டியுள்ளது. குறிப்பாக பல்வேறு மொழிகளைக் கேட்க வேண்டி இருப்பதால், அது எந்த மொழி என்று அறியும் அறிவு தேவை.
இதுபோன்ற அயல் நாட்டு ஒலிபரப்புகளைக் கேட்பவர்கள் ஏதேனும் ஒரு செய்தி இதழைப் பெற்றுக் கொள்வது அவசியம். இதில் மிக முக்கியமான இதழாக World of Radio உள்ளது. அதே போன்று அட்வண்டிஸ்ட் உலக வானொலியின் ‘வேவ்ஸ்கேன்’ போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பது மிகவும் அவசியம். ஆங்கிலத்தில் வெளிவரும் The Daily DX மற்றும் The QRZ DX Weekly Newsletter ஆகிய இதழ்களும் பயனுள்ளவையாக இருக்கும்.
சிற்றலை வரிசையை முதன் முதலாகக் கேட்பவர்களாக இருந்தால், நீங்கள் தொடக்கம் முதல் கடைசிவரை அனைத்து அலைவரிசைகளையும் கேட்பது அவசியம். காரணம், இதன் மூலம், பல்வேறு புதிய வானொலிகளை அப்பொழுது தான் பிடிக்க முடியும். இது போன்று கேட்கும் பொழுது, அவற்றைத் தனியாக ஒரு நோட்டில் நேரம், அலைவரிசை, ஒலிபரப்பின் தன்மை ஆகியவற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். இப்படித் தொடர்ந்து கேட்பதன் ஊடாக, எந்த அலைவரிசை, எந்த நேரத்தில் தெளிவாகக் கிடைக்கும் போன்ற விபரங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
இவை மட்டுமல்லாது, எது போன்ற கால நிலையில், எந்த வானொலி அலைவரிசைகள் தெளிவாக இருக்கும் என்பன போன்ற விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும். மேலும் எது போன்ற அலைவரிசைகள் தொலைதூர ஒலிபரப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது? குறைந்த சக்தியில் எந்த அலைவரிசை அதிக தொலைவிற்குப் பயணிக்கிறது, என்பன போன்ற விபரங்களையும் கற்றுக் கொள்ள முடிகிறது.
போட்டிகள்
இது போன்ற அனைத்துலக வானொலிகள் மற்றும் ஹாம் வானொலிகளைக் கேட்பதற்கும் உலக அளவில் பல அமைப்புகள் போட்டிகளை நடத்துகின்றன. இது போன்ற போட்டிகளில், யார் அதிக வானொலிகளை கேட்பது? யார் மிகத் தொலைவிலிருந்து வரும் வானொலிகளைக் கேட்பது? என்பன போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
Picture Credit: http://www.arrl.org/
இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு சில இணைய தளங்களைப் பார்க்க வேண்டியது அவசியம். அதில் மிக முக்கியமான இணைய தளம் ARRL DXCC List. அனைத்துலக வானொலிகளை கேட்பவர்களிடம் கண்டிப்பாக ஒரு நல்ல உலக வரைபடம் இருக்க வேண்டியது அவசியம். மேலும் உலக நாடுகளின் பட்டியலும் அவசியம். மேலும் எந்த நாடு, எங்கே உள்ளது என்பன போன்ற பொது அறிவும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
https://www.dummies.com/programming/ham-radio/predicting-propagation-in-ham-radio-with-voacap-online/
http://worldofradio.com/
http://www.arrl.org/country-lists-prefixes
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
தொடர் 11ஐ வாசிக்க