ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்

வெளிநாட்டு வானொலிகளைக் கேட்க முடிவு செய்துவிட்டால், உங்களிடம் ஒரு சில புத்தகங்கள் இருக்க வேண்டியது அவசியம். வானொலிக்கும் புத்தகத்திற்கு என்ன தொடர்பு என்று கேட்கலாம்? புத்தகம் இல்லாமல் வானொலி இல்லை. வெளிநாட்டு வானொலிகள் அனைத்தினையும் ஒரே புத்தகத்தில் தொகுத்து வழங்கிய புத்தகம் ஒன்று உள்ளது. அதன் பெயர் ‘உலக வானொலித் தொலைக்காட்சிக் கையேடு’ (World Radio TV Handbook). இந்த புத்தகத்தின் துணை கொண்டு,  அமெரிக்கா முதல், வியட்னா வரையுள்ள அனைத்து நாடுகளின் வானொலிகளையும் கேட்டுவிட முடியும். இன்றைய சமூக ஊடக காலகட்டத்தில், பல செயலிகள் உலக வானொலிகளைக் கேட்பதற்குக் கிடைக்கின்றன. ஆனாலும் வானொலிப் பெட்டியில் கேட்ட நேயர்கள், இன்றும் வானொலிப் பெட்டியில் மட்டுமே கேட்க விரும்புகின்றனர்.

கையேடுகள்

வானொலி நேயர்களில் பல வகையினர் உள்ளனர். அதில் ஹாம் வானொலி நேயர்களும் ஒரு வகை. இன்று இணையம் சார்ந்து பல வகையான வானொலிகள் வந்துள்ளன. அவை அனைத்துக்கும் கையேடு என்று எதுவும் இல்லை. ஆனால் சிற்றலை வானொலிகளுக்கு ஏராளமான கையேடுகள் உள்ளன. தொடக்கக் காலத்தில் “Passport to World Band Radio” எனும் புத்தகம் சிற்றலை வானொலி நேயர்களுக்கு உண்மையிலேயே ஒரு கடவுச்சீட்டு தான்.

Picture Credit: https://www.universal-radio.com

ஹாம் வானொலியினருக்கும் ஒரு சில புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அதில் மிக முக்கியமான புத்தகத்தினை ‘அமெரிக்க ரேடியோ ரிலே லீக்’ வெளியிட்டுள்ளது. அதில் ARRL Handbook குறிப்பிடத்தக்கது. இது தவிர ஜெர்மன், ஜப்பானிய மொழியிலும் ஏராளமான கையேடுகள் வெளிவந்துள்ளன. இவையனைத்தும் வானொலி நேயர்களுக்கு ஒரு பெரிய விருந்து எனலாம்.

கையேடுகள் வருடம் ஒரு முறை வெளிவருபவை. இது போன்றே ஒரு சில மாத இதழ்களும்,  வானொலி கேட்கும் நேயர்களுக்காகவே வெளிவருகின்றன. அதில் முக்கிய இதழாக ‘கம்யூனிகேசன்’, ‘ரேடியோ யூசர்’, ‘பிராக்டிகல் வயர்லெஸ்’, மற்றும் ‘டிஎக்ஸ் நியூஸ்‘ ஆகிய இதழ்களைக் கூறலாம். இவை அனைத்தும் தொலைத்தூர வானொலிகளைக் கேட்க உதவும் புத்தகங்கள் ஆகும்.

வரைபடம்

வானொலியைக் கேட்கும் நேயர்கள் அனைவரும் உலக வரைபடம் ஒன்றைக் கண்டிப்பாக வைத்திருப்பது அவசியம். அதற்குக் காரணம், ஒலிபரப்பாகும் நிலையம் எங்கே இருந்து ஒலிபரப்பாகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, தெற்கு அட்லாண்டிக் கடலிலிருந்து ஒலிபரப்பாகும் ஒரு வானொலி ‘ரேடியோ செயிண்ட் ஹெலீனா’. இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சிற்றலையில் ஒலிபரப்பும். இந்த வானொலி அனுப்பும் வண்ண அட்டை அந்த அளவிற்கு மிக முக்கியமானது. இது போன்று சிறு நாடுகள் உள்ளன. அவற்றை ஒரு பெரிய வரைபடத்தின் துணைகொண்டு தெரிந்துகொள்ள முடியும். இது போன்ற ஒரு வரைபடத்தினை வானொலிப் பெட்டி இருக்கும் அறையில் தொங்க விட்டுக்கொள்வது, இன்னும் பொருத்தமாக இருக்கும்.

ஹாம் வானொலியினருக்கு என்று தனியான ஒரு வரைபடமும் உண்டு. அதில், அந்த நாட்டின் அடையாளக் குறியீடும் சேர்ந்தே அச்சிடப்பட்டிருக்கும். இதன் துணைக் கொண்டு, எளிதாக ஒலிபரப்பாகும் வானொலி நிலையத்தின் பெயரை வைத்தே, அந்த வானொலி எந்த நாட்டிலிருந்து ஒலிபரப்பாகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக, இந்தியாவின் அழைப்புக் குறியீடு ‘VU’, இது போன்று அனைத்து நாடுகளுக்குமான அழைப்புக்குறியீடுகளை அந்த வரைபடத்தில் அச்சிட்டிருப்பார்கள். இது போன்ற வரைபடங்களை யாசூ, மற்றும் கென்வுட் ஆகிய வானொலிப் பெட்டி தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

Picture Credit: http://www.mapability.com/ei8ic/

அடிவானத்திசை வரையம்

பன்னாட்டு வானொலிகளைக் கேட்க பல்வேறு வரைபடங்கள் அவசியம் இருக்க வேண்டும். அதில் ஒன்று தான் இந்த ‘அடிவானத்திசை-சமதூர வரையம்’ (Azhimuthal-Equidistant Map). சிற்றலை ஒலிபரப்புக்கு மிகப்பெரிய அலைக்கொடிகள் (Antenna) பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்து திசைகளிலும் பயணிக்கக் கூடியது. எனவே, நீங்கள் கேட்கும் நிலையத்திற்கும், நீங்கள் கேட்கவுள்ள இடத்திற்குமான தொலைவினை இந்த அடிவானத்திசை வரையம் ஊடாக அறிந்துகொள்ள முடியும். ஒரு சில வானொலிகள், அவர்களே இந்த விபரங்களைக் கொடுப்பார்கள். அதன் துணைகொண்டு நாம் எளிதாக அந்த ஒலிபரப்புகளைக் கேட்க முடியும். ஒரு சில இணையதளங்கள், உங்களின் இடத்தினை மையமாகக் கொண்டு இந்த வரைபடத்தினை அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றனர். இது தவிர ARRL Operating Manual பல்வேறு வரையங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதனைக் கொண்டும் தொலைவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

வரைபட மென்பொருள்கள்

வீட்டில் சுவரில் மாட்டும் வரைபடங்கள் அன்றி, பல மென்பொருட்களும் இதற்காக இணையத்தில் கிடைக்கின்றன. Alex Shovkoplyas (VE3NEA) அவர்களால் நடத்தப்படுகின்ற டி.எக்ஸ் (DX Atlas) இணைய தளம் அதில் மிக முக்கியமான ஒன்று. இதில் நமக்கு தேவையான நாடுகளின் வரைபடங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.  இந்த தளத்தில் ஹாம் ரேடியோவுக்கான வரைபடங்களையும் பதிவேற்றியுள்ளார். இவரைப் போன்றே Mapability எனும் ஒரு இணைய தளத்தினை Tim Makins (E18HC) நடத்துகிறார். இதுவும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை நேயர்களுக்கு வழங்குகிறது. உண்மையிலேயே இந்த இணைய தளங்கள் இரண்டும் வானொலி நேயர்களுக்கு மிகப் பெரிய ஒரு சொத்தாகும். எனவே, பன்னாட்டு வானொலி நிலையங்களைக் கேட்கும் நேயர்கள் அனைவரும், ஒரு முறையாவது இந்த இணைய தளங்களுக்குச் சென்று பார்ப்பது அவசியம் ஆகும்.

Picture Credit: http://www.dxatlas.com/DxAtlas/

வானொலியும் பகல் நேரமும் 

பொதுவாக வானொலி அலைகளுக்கும் சூரியனுக்கும் மிக முக்கிய ஒற்றுமையுண்டு. தொலைவில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளைப் பகல் நேரத்தில் அவ்வளவாகக் கேட்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் உயர் அதிர்வெண் (High Frequency) ஒலியலைகளைத் தெளிவாகக் கேட்கலாம். குறிப்பாக பகல் நேரத்தில் 20, 17, 15, 12 மற்றும் 10 மீட்டர் அலைவரிசைகள் தெளிவாக் கேட்கமுடியும். இதன் காரணமாகவே பன்னாட்டு வானொலிகள் இது போன்ற உயர் அதிர்வெண் கொண்ட அலைவரிசைகளை பயன்படுத்துகின்றன. இதனை ஆங்கிலத்தில் maximum usable frequency (MUF) என்கின்றனர். இது மீவளி மண்டிலத்திலிருந்து மிக அதிக தொலைவிற்குப் பிரதிபலிக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் hop என்பர்.

 பகல் நேர ஒலியலைகளுக்கும் மீவளி மண்டிலத்திற்கும் (Ionosphere) மிக முக்கியத் தொடர்புள்ளது. ஒரு சில நேரங்களில் இந்த மீவளி மண்டிலங்கள் ஒலி அலைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றன. இன்னும் ஒரு சில சமயங்களில் இவை ஒலியலைகளைப் பிரதிபலிக்கின்றன.

இரவு நேரமும் வானொலியும்

தொலைதூர வானொலி கேட்பவர்களுக்கும், டி.எக்ஸர்களுக்கும் இரவு நேர வானொலி கேட்டல் ஒரு விதத்தில் முக்கியமானது. அதற்குக் காரணம், இந்த நேரத்தில் பெரும்பாலான மின்னணு பொருட்கள் செயல்பாட்டில் இருக்காது. இதன் காரணமாக, அந்த பொருட்களிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகள், வானொலி அலைகளைப் பாதிக்காது. அதனால், தொலைதூரத்திலிருந்து, குறைந்த சக்தியில்  ஒலிபரப்பாகும் நிலையங்களையும் தெளிவாகக் கேட்க முடியும்.

30 மீட்டர்களுக்கு கீழேயுள்ள 40, 60, 80 மற்றும் 160 மீட்டர்களில் ஒலிபரப்பாகும் ஹாம் வானொலி நிலையங்களை இரவு நேரத்தில் தெளிவாகக் கேட்கலாம். இந்த அலைவரிசைகளை ஆங்கிலத்தில் low band  என்று கூறுவர். குறிப்பாக மதியத்திற்கு பிறகே 30, 60 மற்றும் 80 மீட்டர்கள் தெளிவாகக் கிடைக்கத் தொடங்கிவிடும். இரவுக்குப் பிறகு 80 மற்றும் 120 மீட்டர்களும் மிகத் தெளிவாகக் கிடைக்கத் தொடங்கும்.

டி.எக்ஸிங்கில் ஆர்வம் கொண்ட யாராக இருந்தாலும், தூக்கத்தினை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள். ஒரு சில வானொலிகள் நள்ளிரவு நேரத்தில் மட்டுமே இந்தியாவில் கிடைக்கக் கூடியதாக இருக்கும். அந்த வானொலிகளின் வண்ண அட்டைகள் தேவைப்படின், கண்டிப்பாக இரவு முழுவதும் முழித்திருந்து கேட்பது அவசியமாகும். எனவே டி.எக்ஸ் என்பது ஒரு தவம். காத்திருந்தால் மட்டுமே கிடைத்தற்கு அரிய வானொலிகளை நம் வானொலிப் பெட்டிகளில் கேட்க முடியும்.

(தொடரும்) ■

மேலதிக தகவல்களுக்கு:

https://www.wm7d.net/azproj.shtml

http://www.dxatlas.com/DxAtlas/

http://www.mapability.com/ei8ic/

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]

தொடர் 1ஐ வாசிக்க

http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-11/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *