சூரியனுக்கும் வானொலிக்கும் ஒரு மிக முக்கிய தொடர்பு இருக்கிறது. சூரியனில் உள்ள புள்ளிகள், வானொலி ஒலிபரப்பிற்கு மிக முக்கியமான ஒன்று. மின் காந்த அலைகளைச் சூரியன் கட்டுப்படுத்துகிறது. சூரியனைக் கண்காணிக்க வேண்டிப் பல நாடுகள், பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளன. அதில் ஒரு சில செயற்கைக்கோள்களை நாமும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சூரியனைக் கண்காணித்தல்
நாம் பகலில் இருக்கும் போது, உலகின் இன்னொரு பக்கத்தில் இரவில் இருப்பர். இரவு நேரங்களில் மின் காந்த அலைகள் எந்தவித இடையூறும் இன்றி பயணிக்கவல்லது. எனவே, தொலைதூர வானொலிகளை நீங்கள் கேட்க வேண்டுமாயின் இரவு முழுவதும் அமர்ந்திருந்து கேட்கலாம். உங்களுக்கே இது அதிசயமாக இருக்கும். அதற்குக் காரணம், பல்லாயிரம் மைல்கள் தாண்டி இந்த ஒலியலைகள் பயணிப்பது நமக்கும் அதிசயம் தானே.
சூரியனின் ஒளியைப் பொருத்து ஒவ்வொரு அலைவரிசையும் குறிப்பிட்ட நேரத்தில் தெளிவாகவோ அல்லது தெளிவற்றோ கேட்கும். சூரியனைத் தொடர்ந்து கண்காணிக்க பல்வேறு இணைய தளங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றில் முதன்மையானது http://dx.qsl.net/propagation/greyline.html என்ற இந்த இணைய தளம். இதில் சூரியனின் நகர்வு ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் கண்காணிக்கப்படுகிறது. இந்த வரைபடத்தின் துணைகொண்டு, எந்த நாட்டில் சூரியன் மிக அதிக வெப்பத்தினை செலுத்திக் கொண்டுள்ளது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
Picture credit: Radio Vatican
160 மீட்டர் என்பது சிற்றலையில் கடைசியில் உள்ள ஒரு அலைவரிசையாகும். இந்த அலைவரிசையில் ஒலிபரப்பாகும் வானொலிகளைப் பகல் நேரங்களில் கேட்பது மிகவும் சிரமம். அப்படியே நீங்கள் பகல் நேரத்தில் கேட்டே ஆக வேண்டும் எனில், அதற்குப் பெரிய அலைக்கொடிகளை (antenna) அமைக்கவேண்டியது அவசியம். அதனால் தான், அனுபவம் மிக்க அமெச்சூர் வானொலி ஒலிபரப்பாளர்கள் இந்த அலைவரிசையைப் பயன்படுத்தி ஒலிபரப்ப முயற்சி செய்வர். இதில் கேட்பது மட்டும் சிரமம் இல்லை, ஒலிபரப்புவதும் சிரமமே. அப்படியிருக்கும் போது, எதற்காக இவர்கள் இந்த அலைவரிசையை விரும்புகிறார்கள் என்பதற்குக் காரணம் இருக்கிறது. இது போன்ற அலைவரிசைகளில் செயல்படும்போது தான் நமது வானொலி பெட்டியின் தன்மை மற்றும் அலைக்கொடியின் தன்மைகளை அறிந்து கொள்ள முடியும். மேலும், எந்த நேரத்தில், எந்த அலைவரிசை தெளிவாக இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இந்த அலைவரிசையில் ஒரு கிலோ வாட் சக்தியில் உலகையே சுற்றிவரும் ஹாம் வானொலிகள் பல உள்ளன.
தொலைதூர டி.எக்ஸிங்
நம் அருகில் இருக்கும் வானொலிகளைக் கேட்பது பெரிய விடயம் இல்லை. தொலைதூரத்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளைக் கேட்பது ஒரு சவால் நிறைந்த விடயம். இது போன்ற ஒலிபரப்புகளை செய்வதும் சவால் நிறைந்ததே. இந்த அலைவரிசைகளில் ஒலிபரப்பும் போது மிகவும் தெளிவாகப் பேசவேண்டியது அவசியம். காரணம் உங்களின் குரல் புல்லாங்குழலில் ஒலிப்பது போன்று ஒலிக்கும். ஆகவே, நிறுத்தி, நிதானமாகப் பேசவேண்டியது அவசியம்.
எழுத்துக்களை ஒலிப்பு முறையில் ஒரு முறைக்கு இரண்டு முறை ஒலிபரப்புவது முக்கியம். அழைப்புக் குறியீடுகளையும் (call sign) தெளிவாக உச்சரிப்பது அவசியம். மோர்ஸ் குறியீட்டில் ஒலிபரப்பும் போதும், மெதுவாக அனுப்ப வேண்டியது முக்கியம். உங்களால் மிக வேகமாக மோர்ஸ் குறியீடுகளை அனுப்ப முடியும் என்பதற்காக, நீங்கள் உங்கள் திறமையை இதில் காட்டுவது கூடாது. தொலைதூர நிலையங்கள் தெளிவாகக் கிடைக்கும் போது, நீண்ட உரையாடல்களை வைத்துக்கொள்ளலாம், மற்ற நேரங்களில் எல்லாம், முடிந்தவரை அதைக் குறைவாகவும், தெளிவாகவும் வைத்துக்கொள்வது முக்கியமான ஒன்றாகும்.
Picture Credit: http://www.ontheshortwaves.com
தொடர்பு கொள்வதற்குச் சாட்சியமே வண்ண அட்டைகள் (QSL Cards) தான். எந்த ஒரு வானொலி நிலையத்தினை கேட்டாலும், அந்த வானொலி நிலையத்திடம் இருந்து இது போன்ற ஒரு வண்ண அட்டையினை பெறுவது மிகவும் முக்கியம். ஒவ்வொரு அமெச்சூர் வானொலி நிலையமும் இது போன்ற வண்ண அட்டை ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கும், இதனை சக ஒலிபரப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கும். இது போன்றே, பன்னாட்டு வானொலி நிலையங்களும் தனது நேயர்களுக்கு அனுப்பி வைக்கின்றன.
ஹாம் வானொலி நிலையங்கள் பதிவு புத்தகங்களை (log book) வைத்திருக்க வேண்டியது அவசியம். இதில் தான் கேட்கும் அனைத்து வானொலி நிலையங்களின் விபரங்களையும் பதிவேற்றி வைத்திருப்பர். குறிப்பிட்ட வானொலியைக் கேட்ட நாள், நேரம், அலைவரிசை, வானொலி நிலையத்தின் பெயர், ஒலிபரப்பின் தெளிவு, ஒலிபரப்பின் சக்தி போன்றவற்றையும் அதில் குறித்து வைத்துக்கொள்வது அவசியம். சந்தையிலும் இது போன்ற பதிவு புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ARRL வெளியிட்ட Logbook of the World பதிவு புத்தகம் மிக முக்கியமானது.
அஞ்சல் அட்டைகள்
Picture Credit: www.postcardsmarket.com
வண்ண அட்டைகளுக்கும் QSL Cardக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தினையோ, நாட்டினையோ அல்லது அந்த நாட்டின் கலாச்சாரத்தினையோ மையப்படுத்தியதாக இந்த வண்ண அட்டைகள் இருக்கும். Map of the World (MOTW) எனும் வண்ண அட்டை ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரைபடத்தினை அஞ்சல் அட்டையின் ஒரு பக்கத்தில் கொண்டிருக்கும். அந்த அஞ்சல் அட்டையின் அளவு பொதுவாக 6’’ x 4’’ அங்குலத்தில் இருக்கும். இந்த வண்ண அட்டையில் அந்த நாட்டின் மரபுச்சின்னமும் இடம்பெற்றிருக்கும்.
இது போன்றே Flag of the World (FOTW) வண்ண அட்டையில், அந்த நாட்டின் தேசியக் கொடி மற்றும் அந்த குறிப்பிட்ட நாட்டின் முக்கிய விபரங்கள். அந்த நாடு எங்கு அமைந்துள்ளது போன்ற விபரங்கள் இருக்கும். World Travel (WT) என்ற தலைப்பில் ஒரு வண்ண அட்டை. இதில் அந்த நாட்டின் நாணயம், கொடி, முத்திரை, முக்கிய இடங்கள், மொழி, மக்கள் தொகை எனச் சுற்றுலா செல்பவருக்குத் தேவையான முக்கியத் தகவல்கள் அனைத்தினையும் கொண்டிருக்கும்.
Picture Credit: https://www.debutpex.com
Map card அதாவது ஒரு குறிப்பிட்ட நாடு மட்டுமல்லாது, சிறு தீவுகள், நாட்டில் உள்ள மாநிலங்கள், குறிப்பிட்ட இடங்களை மையப்படுத்திய வண்ண அட்டைகளும் சேகரிப்பாளர்கள் விரும்பி சேகரிப்பர். Maxi Card எனும் அட்டையை ஒரு சில வானொலி நிலையங்கள் அனுப்பியுள்ளன. முதலில் மேக்ஸி அட்டை என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட வண்ண அட்டையில் அந்த அட்டையின் உருவத்திலேயே அதில் ஒட்டப்பட்ட தபால் தலையும், அதில் உள்ள முத்திரையும் ஒரே மாதிரி இருக்கும்.
ஒரு சில நாடுகள், ஒவ்வொரு ஆண்டினையும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கொண்டாடும். அந்த வகையில் இந்த ஆண்டானது சீனாவில் எலியின் ஆண்டாகும் (Year of Rat card). இந்த ஆண்டினை மையப்படுத்தி வண்ண அட்டைகள், முதல் நாள் கடித உரைகள் மற்றும் அஞ்சல் தலைகளையும் வெளியிட்டுள்ளனர். ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரு சில வண்ண அட்டைகள் முக்கியமானதாகக் அறியப்படுகிறது. Japan Gotochi / mailbox / postmark / Ukiyo-e 浮世絵 ஆகிய வண்ண அட்டைகள் ஜப்பானில் மட்டுமே கிடைக்கக்கூடியது ஆகும். கோடோச்சி வண்ண அட்டை அதில் உள்ள உருவத்தினை போலவே வெட்டப்பட்டிருக்கும். உதாரணமாக அஞ்சல் பெட்டி படத்துடன் உள்ள வண்ண அட்டை, அந்த அஞ்சல் பெட்டியைப் போலவே வெட்டப்பட்டு இருக்கும்.
அஞ்சல் அட்டைகளில் இத்தனை வகைகளா? என்று ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு கீழ்க்கண்ட தலைப்புகளில் எல்லாம் விற்பனைக்குக் கிடைக்கின்றன. சேகரிப்பாளர்களும் இப்படியான அஞ்சல் அட்டைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். Inge löök / Pettson and Findus / Alena Ladova, Moomins / Miffy / Krtek, Little Mole / Cartoon Pippi, Lali Riddle (Lali Cards), Blue Cats, TAUSENDSCHÖN-Card, UNESCO, Northern Lights, Royal Family, Atelier Nouvelles Images, Greetings from, Icons of countries series, Wow card, US Vintage large letter state name, Lantern Press, LouPaper போன்ற தலைப்புகளை இணையத்தில் தேடிப்பாருங்கள், சுவாரஸ்யமாக இருக்கும்.
அஞ்சல் அட்டை கண்காட்சி
இந்தியாவின் முதல் இணைய வழி அஞ்சல் அட்டைக் கண்காட்சி தற்பொழுது ‘இந்திய போஸ்ட்கிராசிங் சங்கம்’ நடத்திவருகிறது. அஞ்சல் அட்டை சேகரிப்பாளர்களை ஆங்கிலத்தில் deltiologist என்கிறோம். சமூக வலைத்தளக் காலத்தில் இன்றும் அஞ்சல் அட்டைகளைச் சேகரித்து வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த அஞ்சல் அட்டைக் கண்காட்சியை Debutepex நடத்துகிறது. இதனைக் காண விரும்புவர்கள் https://www.debutpex.com என்ற இணைய தளத்திற்குச் சென்று காணலாம்.
இந்த கண்காட்சியில் அலைக்கொடிகளைப் (antenna) பற்றிய அஞ்சல் அட்டைகளும் இடம்பெற்றுள்ளது. https://www.debutpex.com/research-story/jaisakthivel-radiocards என்ற இணைய தளத்தில் அந்த அஞ்சல் அட்டைகளைக் காணலாம். இவை அனைத்தும் சிற்றலை, மத்தியலை மற்றும் பண்பலை வானொலிகளின் அலைக்கொடிகளை ஒரே இடத்தில் காண ஒரு வாய்ப்பு. இதில் மகிழ்ச்சியான செய்தி, இந்த அலைக்கொடிகளின் கண்காட்டியை எமக்கு வந்த அஞ்சல் அட்டைகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
http://dx.qsl.net/propagation/greyline.html
http://www.arrl.org/logbook-of-the-world
https://www.debutpex.com
https://www.facebook.com/PCSOI
https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
https://www.postcardsville.com
http://gandhifoundation.net/
https://collectorbazar.com/
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: ardicdxclub@yahoo.co.in
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
தொடர் 11ஐ வாசிக்க

