ஹாம் வானொலி கேட்டலில், தொலைதூரத்திலிருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளைக் கேட்பதில் நம் அனைவருக்கும் மிகுந்த ஆர்வம். இதற்கு முதல் படியாக இருப்பது சிற்றலை வானொலிகள். அதனால் தான் ஹாம் வானொலிக்குள் வருபவர்கள் கூட சிற்றலை வானொலிகளை விரும்பி இன்றும் கேட்கின்றனர். 30 மெகா ஹெட்ர்ஸ்க்கும் மேலே உள்ள அலைவரிசைகளைக் கேட்பதுவும் இன்று அதிகமாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், அந்த ஒலி அலைகளின் தன்மை தெளிவாக அனைவருக்கும் கிடைப்பதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
Picture Credit: https://www.discounttwo-wayradio.com
ஒரு குறிப்பிட்ட தொலைதூர அமெச்சூர் வானொலியைக் கேட்ட ஹாம், அதனை உடனே தனது சக ஹாம்களுடன் பகிர்ந்துகொள்கிறார். அதுவும் குறிப்பாக உயர் மிகை அலைவெண்களில் (வி.ஹெச்.எஃப்) மற்றும் யூ.ஹெச்.எஃப் ஒலிபரப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அவ்வளவு மகிழ்ச்சி. 1960களில் சிற்றலை ஒலிபரப்புகளுக்கு எப்படி அமெச்சூர் வானொலி நேயர்களுக்கு ஆர்வம் இருந்ததோ, அது போன்றே இப்பொழுது இந்த வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் ஒலிபரப்புகளை விரும்பிக் கேட்கின்றனர். அதே சமயத்தில் அதற்கான டிஜிட்டல் தரமுள்ள வானொலிப் பெட்டிகளும் சந்தையில் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.
ஹாம்கள் மத்தியில் புகழ்பெற்ற அலைவரிசையாக இருப்பது 6 மீட்டர் ஆகும். அதற்கு காரணம், இந்த அலைவரிசையில் தான் தொலைதூர ஹாம் வானொலிகளையெல்லாம் கேட்க முடியும். எந்த சமயத்தில் இந்த அலைவரிசை திறக்கும் என்று கூடச் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு இந்த அலைவரிசை அமெச்சூர் வானொலிகள் மத்தியில் மர்மமான அலைவரிசையாக உள்ளது. அதிலும் இந்த அலைவரிசைக்கும் சூரிய புள்ளிகளுக்கும் (Sunspot) அப்படியொரு ஒற்றுமை.
உலக பயணங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிக முக்கியமான இடமாக இருப்பது டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே. அதற்குக் காரணம், இந்த பயணமானது நான்கு நாடுகளை இணைக்கிறது. தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு இந்த பயணமானது ஒரே ரயிலில் பயணிக்கலாம். மைனஸ் 20 டிகிரியில் ரயில் பயணிப்பது ஒரு சுகமாகும். அது போல வானொலி நேயர்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கும் வானொலி அலைகளின் மீதும் ஒரு ஆர்வம் இருக்கும். கடல்களைத் தாண்டி இந்த சிற்றலைகள் பயணிப்பது ஒரு வகையில் ஹாம்களுக்கு சுவாரஷ்யம் மிகுந்ததாக இருக்கின்றது.
நேர் கோட்டுப் பயணம்
ஒலி அலைகளில் நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கக்கூடியது வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் அலைகள். இதனால், இதற்கான அலைக்கொடியே (antenna) வேறுபட்டு இருக்கும். இது போன்ற அலைகளுக்கு ஒரு பெரிய கட்டடம் இருந்தால் கூட ஒலியலைகள் தடைப்பட்டுப் போகும். வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் அலைகளின் இயல்வு (signal) சக்தி வாய்ந்ததாக இருப்பினும், அது பயணிக்கும் தன்மை வேறுபட்டதாக இருப்பதால், அதிக தொலைவுக்குச் செல்வதில் சிக்கல் உள்ளது. அதன் காரணமாக மோர்ஸ் குறியீட்டினை இதன் ஊடாக அனுப்பப்படுவதில்லை. மேலும் மோர்ஸ் குறியீட்டின் முக்கியத்துவமே, குறைந்த சக்தியில் அதிக தொலைவு பயணிக்கும் தன்மை கொண்டதாகும், இதனை இன்றும் இராணுவம் மற்றும் பல முக்கிய துறைகளில் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
Picture Credit: https://doubtnut.com
வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் அலைவரிசைகள் சிற்றலையைப் போன்று அல்ல. சிற்றலை வரிசையானது எப்படியிருந்தாலும் நாம் ஒரு நல்ல அலைக்கொடியை அமைத்திருந்தால், தெளிவாகக் கேட்க முடியும். ஆனால், வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் அலைகள் தெளிவாகச் சக்தி மிக்கதாக இருந்தால் மட்டுமே நம்மை வந்தடையும். அதனால் தான் இதனை வரியோட்டத்தில் (scanning) வானொலிப் பெட்டியை அமைத்து எளிதாக ஹாம் வானொலிகளைப் பிடிக்கின்றனர். இது சிற்றலையில் அவ்வளவாகச் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் இன்றைய எண்ணியல் (digital) வானொலிப் பெட்டிகளில் வரியோட்ட வசதி கொண்டதாக இருப்பதால், எளிதாக அனைத்து சிற்றலை ஒலிபரப்புகளையும் கேட்க முடியும்.
இது போன்ற எண்ணியல் வானொலிப் பெட்டிகளில் வரியோட்டத்தில் கிடைக்கும் வானொலி நிலையங்கள் தானாகவே பதிவு செய்துகொள்ளப்படுகிறது. இதனால், எளிதாக, குறைந்த நேரத்தில், அனைத்து வானொலிகளையும் நாம் கேட்டுவிட முடிகிறது. பத்து நிமிடத்தில், நாம் உலகினையே சுற்றி வர இந்த வானொலிப் பெட்டிகளால் முடிகிறது.
வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் ஒலிபரப்பைச் செய்யவும், கேட்கவும் உத்திர (beam) அலைக்கொடிகளை பயன்படுத்துவது சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், நாம் இந்த வகை அலைக்கொடிகளை வீட்டிலேயே எளிதாகச் செய்துகொள்ள முடியும். மேலும், இந்த அலைக்கொடிகளுக்கு குறைந்த அளவான இடம் இருந்தால் போதுமானது. செங்குத்தாக இந்த அலைக்கொடிகளை அமைத்து ஒலிபரப்புகளைக் கேட்கலாம். அதற்குக் காரணம், ஒலியலைகள் 360 டிகிரி கோணத்திலிருந்தும் பெற இது வசதியாக இருக்கும். வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் ஒலிபரப்பில் ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இணைய தளம் உள்ளது, அது தான் www.dxworld.com.
ஸ்போராடிக் ஈ
ஸ்போராடிக் ஈ (Sporadic_E_) அல்லது எஸ் என்பது பூமியின் மீவளி மண்டிலம் (அயனோஸ்பியரின்) சிறப்பியல்புகளை பயன்படுத்தி வானொலி அலை பரவலின் அசாதாரண வடிவமாகும். வானொலி பரவலின் பெரும்பாலான வடிவங்கள் மீவளி மண்டிலத்தின் எஃப் பிராந்தியத்தின் இயல்பான மற்றும் சுழற்சியான அயினியாக்கப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பூமியின் மேற்பரப்பை நோக்கி (அல்லது “வளைந்து”) வானொலி அலைகளை மீண்டும் பயன்படுத்துகின்றன, அவ்வப்போது ஸ்போராடிக் ஈ பரப்புதல் அசாதாரணமாக அயனியாக்கம் செய்யப்பட்ட வளிமண்டல வாயுவின் சிறிய “மேகங்களை” வெளியேற்றும் கீழ் மின் பகுதி (தோராயமாக 90 முதல் 160 கி.மீ உயரத்தில் இது அமைந்துள்ளது). இது எப்போதாவது உயர் மிகை அலைவெண்களில் (வி.எச்.எஃப் அதிர்வெண்) நீண்ட தூரத் தொடர்புக்குப் பயன்படுகிறது. பொதுவாக இதுபோன்ற தகவல்தொடர்புக்கு மிகை அலைவெண் அலைவரிசை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
Picture Credit: https://en.wikipedia.org/wiki/Sporadic_E_propagation
இது அனைத்து நேரங்களிலும், இருக்காது. ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே இருக்கும். இந்த சமயத்தில் தொலைதூரத்திலிருந்து வரும் பண்பலை வானொலிகளை கூட கேட்கலாம். அந்த சமயங்களில் பன்னாட்டு உயர் மிகை அலைவெண்களில் ஒலிபரப்பாகும் ஹாம் வானொலிகளையும் கேட்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டு.
இது போன்ற சமயங்களில் இந்த ஒற்றை எஸ் மேகத்தைப் பயன்படுத்தி 800–2200 கி.மீ கூட தொடர்பு கொள்ள முடியும். தூரத்தில் இந்த மாறுபாடு மேகம் அமைந்துள்ள உயரம் மற்றும் அதன் அடர்த்தி உள்ளிட்ட பல காரணிகளை பொறுத்து அமையும். அதிகபட்ச பயன்படுத்தக்கூடிய அதிர்வெண் பரவலாக வேறுபடுகிறது, ஆனால் பொதுவாக 25 – 150 மெகா ஹெர்ட்ஸ் வரம்பில் இது வருகிறது, இதில் பண்பலை ஒலிபரப்பு அலைவரிசை (87.5-108 மெகா ஹெர்ட்ஸ்), தொலைக்காட்சி அலைவரிசை (அமெரிக்க அலைவரிசைகள் 2-6, ரஷ்ய அலைவரிசைகள் 1-3, மற்றும் ஐரோப்பிய அலைவரிசைகள் 2-4, மேற்கு ஐரோப்பாவிலும் இது பயன்படுத்தப்படவில்லை), குறைந்த சக்தி வானொலிகள் – சிபி (citizen band) வானொலி (27 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் அமெச்சூர் வானொலி 2 மீட்டர், 4 மீட்டர், 6 மீட்டர் மற்றும் 10 மீட்டர்களில் பயன்படுகிறது. வலுவான நிகழ்வுகள் 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு அதிகமான அதிர்வெண்களில் பரப்புவதற்கு அனுமதிக்கிறது.
ஸ்போராடிக் ஈ என்ற பெயரைப் போன்றே இதுவும் குழப்பமான ஒன்றாகும். இது ஒரு அசாதாரண நிகழ்வு எனலாம். ஸ்போராடிக் ஈ எந்த நேரத்திலும் நிகழலாம்; இருப்பினும், இது பருவகாலங்களில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கோடைக்காலத்தில் ஸ்போராடிக் மின் செயல்பாடு உச்சமாக இருக்கும். வட அமெரிக்காவில், ஜூன் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரையில் மிகவும் உச்சமாக இருக்கிறது, மேலும் ஜூலை பிற்பகுதியிலும் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் ஒரு சில சமயங்களில் இது ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுவாக தெற்கு அரைக்கோளத்தில் இதன் செயல்பாடு டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்குகிறது, கிறிஸ்துமஸ் முடிந்த உடனேயே ஸ்போராடிக் ஈ மிக அதிகமாக காணப்படும். எனவே இந்த சமயங்களில் தொலைதூர வானொலிகளைக் கேட்க விரும்புபவர்கள் முயற்சிக்கலாம். காரணம், அந்த வானொலிகள் அனைத்தும் மிக எளிதாக இந்த காலகட்டத்தில் கிடைக்கும்.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
www.dxworld.com
https://web.archive.org/web/20070624122447/http://www.amfmdx.net/fmdx/sporadic-e.html
https://web.archive.org/web/20090412030636/http://dxfm.com/
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
தொடர் 11ஐ வாசிக்க