சர்வதேச அளவில் ஸ்பெக்ட்ரம்மை கட்டுப்படுத்தும் அமைப்பாக ஐ.டி.யூ எனும் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் உள்ளது. இந்த அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவிலிருந்து இயங்குகிறது. இவர்கள் தான் உலகம் முழுவதும் உள்ள வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் பயன்படுத்தும் அலைவரிசைகளைத் தீர்மானிக்கின்றனர். முன்னதாக இந்த அமைப்பானது ‘பன்னாட்டுத் தந்தி ஒன்றியம்’ என்று அறியப்பட்டது. இது 1865, மே 17 அன்று பாரிசில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கமே, மாறிவரும் தொழில்நுட்பத்தினை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதே ஆகும். குறிப்பாகத் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி, அதனைத் தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பாக இது இருந்து வருகிறது. இந்த ஒன்றியத்தில் உலக அளவில் உள்ள பன்னாட்டு அமைப்புகளும், அரசுகளும் உறுப்பினராக இருந்து வருகின்றன.
உள்கட்டமைப்பு
இந்த ஐ.டி.யூவில் பல்வேறு கிளை அமைப்புகள் உள்ளன. அதில் ஒரு சில அமைப்புகள் இந்த ஸ்பெக்ட்ரத்தோடு தொடர்புடையவை. அதிலும் மிக முக்கியமான அமைப்பாகக் கருதப்படுவது ‘அலைவழி தொடர்பு’ எனும் அமைப்பாகும். இதன் முக்கிய செயல்பாடே, உலகளவில் உள்ள ஸ்பெக்ட்ரத்தினை மேலாண்மை செய்வது ஆகும். (ஸ்பெக்ட்ரம் என்பதைத் தமிழில் அலைத்தொகுதி, அலைக்கற்றை என்றும் அழைக்கிறார்கள்). அலைவழித் தொடர்பில் செயற்கைக்கோள் சுற்றுப்பாதை ஒருங்கிணைப்பு மிக முக்கியமானதாகும். இன்று உலக அளவில் அனைத்து தொலைக்காட்சிகளும் செயற்கைக்கோள் வழியாகவே ஒளிபரப்பி வருகின்றன. இதனால், அந்த அலைவரிசைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி அதனைக் கட்டுப்படுத்தவில்லையெனில், நாம் நம் வீடுகளில் நிம்மதியாக அனைத்துத் தொலைக்காட்சிகளையும் காண முடியாது.
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதில் சீர்படுத்துதல் அவசியமாகும். ஐ.டி.யூவுலும் சீர்படுத்துவதற்கென தனியான ஒரு அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பானது ஐ.டி.யூ தொடங்கப்பட்டதிலிருந்தே செயல்பட்டு வருகிறது. தந்தி என்ற ஒரு சேவை இருந்த போது இதன் தேவை முக்கியமாகக் கருதப்பட்டது. பன்னாட்டுத் தந்திகளை இது ஒருங்கிணைக்கும் வேலைகளை அப்பொழுது செய்து வந்தது. அதன் பிறகு இது தொலைப்பேசி சேவைகளையும் கூடுதலாகக் கவனித்துக் கொள்ளும் அமைப்பாக மாற்றம் அடைந்தது.
எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், அதில் ஆய்வு மற்றும் மேம்படுத்துதல் முக்கியம். அந்த வகையில் ஐ.டி.யூவிலும் மேம்படுத்தும் அமைப்பானது செவ்வனே செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பின் மிக முக்கிய நோக்கமே, பல்வேறு நாடுகளில் உள்ள மக்களுக்கும் ஒரே மாதிரியான சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவது ஆகும். மேலும் அனைத்து தரப்பு மக்களும் வாங்குவதற்குத் தகுந்த வடிவில் இந்த தொலைப்பேசிகளை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு தருவதும் இதன் ஒரு பணியாக இருந்தது. இதன் காரணமாகவே இன்று உலகின் பல நாடுகளில் தொலைத்தொடர்பு சேவை கிடைப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது எனலாம்.
ஐ.டி.யூ டெலிகாம் எனும் மற்றும் ஒரு முக்கிய அமைப்பானது இதில் செயல்பட்டுவருகிறது. இதன் முக்கியப் பணியாகச் சர்வதேச அளவில் கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதாகும். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அரசுகளுடன் இணைந்து இவற்றை நடத்துகின்றன.
வருடத்திற்கு இரண்டு முறை சிற்றலை வரிசைகளை அனைத்து வெளிநாட்டு வானொலிகளும் மாற்றும். இதனை ஐ.டியூவுற்கு கீழ் இயங்கும் உயர் அலைவரிசை ஒருங்கிணைப்பு குழுமம் ஒழுங்குபடுத்துகிறது. நமது நாட்டின் பொதுத் துறை வானொலியான அகில இந்திய வானொலியும் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளது. சிற்றலை வரிசைகளைப் போன்று பண்பலை மற்றும் மத்தியலைவரிசைகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யத் தேவையில்லை. அதனால், நம்மூர் வானொலிகள் தொடர்ந்து அதே அலைவரிசைகளிலேயே ஒலிபரப்பி வருகின்றனர். அதற்கு உதாரணமாக நமது சென்னை அகில இந்திய வானொலியின் மத்தியலைவரிசையானது காலம் காலமாக 720 கி.ஹெர்ட்சில் எந்தவித மாற்றமும் இன்றி ஒலிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெச்சூர் வானொலிக்குள்ளே
ஹாம் வானொலி எனும் அமெச்சூர் வானொலியைப் பயன்படுத்துவோர், பேரிடர் காலங்களில் பல்வேறு வகைகளில் அனைவருக்கும் உதவி செய்து வருகின்றனர். அதில் யாருக்கு, எங்கே மற்றும் எப்படி உதவிகளைச் செய்கின்றனர் என்பதை இங்கு அறிந்து கொள்வோம். பொதுவாக உதவித் தேவைப்படுபவர்களிடம் கண்டிப்பாக எந்த வித தொலைத்தொடர்பு சாதனங்களும் இருக்காது, அப்படியே இருந்தாலும் அவை வேலை செய்யாது, அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹாம் வானொலியினர் நேரடியாகச் சென்று உதவி செய்வர்.
எப்பொழுதெல்லாம் உதவித் தேவைப்படுமோ அப்பொழுதெல்லாம் அமெச்சூர் வானொலியினர் களத்தில் இருப்பர். பேரிடர் காலத்தில் ஒலிபரப்புவதற்கு என்று ஒரு சில அலைவரிசைகளை ஒதுக்கியுள்ளனர். அந்த அலைவரிசைகளின் ஊடாக மட்டுமே அமெச்சூர் ஒலிபரப்பாளர்கள் ஒலிபரப்பினைச் செய்ய முடியும். வழக்கமான காலகட்டத்தில் பயன்படுத்தும் அமெச்சூர் அலைவரிசைகளைப் பேரிடர் காலத்தில் பயன்படுத்தக் கூடாது. இந்த அலைவரிசை விபரங்கள் ‘டம்மீஸ்’ இணையதளத்திற்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம். இணைய தள முகவரி கட்டுரையின் நிறைவில் கொடுக்கப்பட்டுள்ளது.
பேரிடர்
நாம் நினைக்கும் போது பேரிடர் ஏற்படுவதில்லை, யாரும் எதிர்பாராத சமயங்களில் தான் பேரிடர்கள் ஏற்படுகின்றன. அந்த சமயத்தில் ஹாம் வானொலியானர் தனது சொந்த வானொலிப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு களத்திற்குச் செல்கின்றனர். இதில் ஒரு சிலவற்றை அவசரமாகப் புறப்படுவதன் காரணமாக, அவர்கள் மறந்துவிட வாய்ப்புள்ளது. காரணம், அவசரக் காலத்தில் நாம் என்ன செய்கின்றோம் என்பது நமக்கே தெரியாது. அதன் காரணமாக இந்த அமெச்சூர் வானொலி நிலையங்கள், பேரிடருக்கு என்று தனியான ஒரு வானொலி கிட்களை வைத்துள்ளனர். அதாவது முதலுதவி கிட் போன்ற இந்த கிட்களை பேரிடர் காலத்தில் அப்படியே தூக்கிப் போட்டு கொண்டு உடனடியாக செல்ல முடியும்.
கோ கிட்
அதென்ன ‘கோ கிட்’?, இந்த வகையான கிட்களில் ஒரு வானொலி நிலையத்தினை தொடங்க தேவையான அனைத்துப் பொருட்களும் அடங்கியிருக்கும். விரிவாகச் சொல்ல வேண்டுமாயின், இதில் ஒரு வி.ஹெச்.எஃப், ஹெச்.எஃப் அமெச்சூர் வானொலிப் பெட்டிகள், ஹேண்டி, யாஹி ஆண்டனா, இன்வர்டட் வி (அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பக் கூடிய ஆண்டனா), பவர் சப்ளை போன்ற முக்கியப் பொருட்களோடு அந்த பகுதியின் வரைபடம் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த கிட்களில் உள்ள வேறு முக்கியப் பொருட்களின் விபரங்களை இந்த கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள ARES Field Resources Manual இணைய தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு அமெச்சூர் வானொலி நிலையத்திற்கும் இந்த கிட்கள் வேறுபடலாம். ஆனால், பொதுவாக ஒரு சில பொருட்கள் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.
நீண்டநாள் தாங்கக் கூடிய உணவு: பேரிடர் ஏற்பட்டுள்ள பகுதிகளில் உணவு எளிதாகக் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அதனால், இந்த அமெச்சூர் நிலையங்கள் தங்களுக்குத் தேவையான உணவினையும் எடுத்துக் கொண்டே அந்த பகுதிகளுக்குச் செல்வர். குறிப்பாக எளிதில் கெட்டுப்போகாத உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு செல்வர். மேலும் பேரிடர் காலத்தில் நாம் கண்டிப்பாக அடுத்த வேலை உணவுக்காக மற்றொருவரைச் சார்ந்து இருக்கக் கூடாது. இந்த இடங்களுக்கு கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகளை எடுத்துச் செல்வர். அப்படி எடுத்துச் செல்லும் அவர்கள் கண்டிப்பாக அந்த கேன்களை திறக்கும் கருவிகளையும் எடுத்துச் செல்வது கட்டாயம்.
சரியான உடைகள்: அமெச்சூர் வானொலியினர் அனைத்து விதமான தட்ப வெட்பநிலையிலும் பணி செய்யப் பழகிக் கொள்வது உத்தமம். குறிப்பாக கடும் குளிரிலும் வேலை செய்ய வேண்டும். அப்படியான சமயங்களில், அந்த பகுதிகளுக்குத் தகுந்த உடைகளை அணிந்து கொள்வது சரியானது ஆகும். மேலும் மிக அதிகமான உடைகளையும் இந்த மாதிரியான சமயங்களில் எடுத்துச் செல்லக்கூடாது. பயணிக்கும் போது, அதனை ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல எளிதாக இருக்க வேண்டும்.
வானொலிப் பெட்டிகள்: அமெச்சூர் வானொலிப் பெட்டிகளில் பல்வேறு வகைள் உள்ளன. எந்த பெட்டியை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை மூத்த ஹாம்கள் அறிவர். அவர்களின் ஆலோசனைப் படி இது போன்ற சமயங்களில் நடந்துகொள்வது மிக முக்கியம். குறிப்பாக எடை கூடிய அமெச்சூர் வானொலிப் பெட்டிகளைப் பேரிடர் காலங்களில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் அனைவராலும் எளிதில் பயன்படுத்தக் கூடிய அமெச்சூர் வானொலிப் பெட்டிகள் இது போன்ற சமயங்களில் உத்தமம்.
செக் லிஸ்ட்: எந்த ஒரு இடத்திற்கும் உங்கள் பொருட்களை எடுத்துச் சென்றாலும், அதற்கு ஒரு செக் லிஸ்ட் இருப்பது அவசியம். இந்த மாதிரியான ஒரு பட்டியல் கைவசம் இருந்தால், எந்த நேரத்தில் புறப்பட்டாலும், அந்தப் பட்டியலை ஒரு முறைப் பார்த்துக் கொண்டால், எந்த விதமான முக்கியப் பொருட்களையும் நாம் மறந்துவிடவோ, அல்லது தொலைத்துவிடவோ வாய்ப்பே இல்லை. பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் அலைவரிசை பட்டியல், அருகில் உள்ள அமெச்சூர் வானொலி நிலையத்தின் தொலைப்பேசி எண்கள், தனிப்பட்ட ஹாம் நண்பர்களின் தொலைப்பேசி எண்கள், ஆபத்துக் காலத்தில் உதவி செய்யக் கூடிய அரசுத் துறைகளின் கைப்பேசி எண்கள் அடங்கிய ஒரு சிறு நாட்குறிப்பும் இருப்பது மிக அவசியம். ‘கோ கிட்’களில் விற்பன்னரான டான் கென்னர் அவர்களின் செக் லிஸ்ட் பட்டியல் கொண்ட புத்தகத்தின் இணைய தள முகவரி குறிப்புதவிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
Dummies: www.dummies.com/cheatsheet/hamradio
HFCC: www.hfcc.org
ITU: https://www.itu.int/en/Pages/default.aspx
ARES Field Resources Manual: www.arrl.org/files/file/ARESFieldResourcesManual.pdf
Spectrum: https://www.iaru-r1.org/spectrum
Don O’Connor: www.ke7hlr.com/ecw/personal_go-kit_2011.pdf
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]