வானொலி நேயர்கள் பலருக்கும், தொலைதூரத்திலிருந்து வரும் வானொலி ஒலிபரப்பினை தனது இல்லத்திலிருந்தவாறு கேட்பது பிடிக்கும். இதைக் கேட்பது என்று சொல்வதை விட ‘பிடிப்பது’ எனலாம். அதற்குக் காரணம், உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மொழி புரியாத ஒரு வானொலியைப் பிடிப்பது அலாதியான ஒன்று எனலாம். மொழி புரியாத வானொலியை ஏன் கேட்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இங்கு வானொலியின் மொழி முக்கியமல்ல, அது எவ்வளவு தொலைவில் இருந்து நம்மை வந்தடைகிறது என்பதே முக்கியம்.

Picture Credit: www.dxzone.com

வானொலி ஒலிபரப்பினைக் கேட்பதற்கே இப்படியென்றால், ஹாம் வானொலி ஒலிபரப்பிற்கு சொல்ல வேண்டுமா என்ன. மிகத் தொலைவிலிருந்து வரும் ஹாம் நிலையத்தினை, நம் வரவேற்பு அறையில் அமர்ந்து கொண்டு கேட்பது என்பது ஒரு சுகம். அதே போல் நம் ஒலிபரப்பும், தொலைதூரத்திற்கு செல்கிறது என்றால், இன்னும் நமக்குச் சந்தோஷமே கூடும்.

எந்த ஒரு வானொலி நேயரும், தன்னிடமுள்ள QSL வண்ண அட்டை, எந்த நாட்டிலிருந்து வந்துள்ளது என்பதைக் குறிப்பாகக் கூறுவர். அதிலும், கிடைத்தற்கரிய வானொலியின் வண்ண அட்டை நம் கையிலிருந்தால், பெருமைக்கு அளவே இல்லை. தொலைதூர ஒலிபரப்பு என்றவுடன் சிற்றலை வானொலியை மட்டுமே நினைப்பவர்கள் உண்டு. சிற்றலை மட்டுமல்லாது, மத்தியலை, பண்பலை, வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் போன்ற அலைவரிசைகளில் ஒலிபரப்பும் வானொலிகளும் இதில் அடக்கம்.

இப்படி அதிக தொலைவிலிருந்து பிடிக்கும் நிலையங்களை ‘அமெரிக்க ரேடியோ லீக்’ ஆவணப்படுத்தி வருகிறது. Distance Records என்ற பெயரில் இவை அனைத்தினையும் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். நீங்களும் ஏதேனும் நீண்ட தொலைவிலிருந்து வந்த வானொலியைக் கேட்டிருந்தால், அந்த வானொலியின் விபரங்களை இந்த இணைய தளத்தினில் பதிவேற்றலாம்.

வானொலி போட்டிகளில் கலந்து கொள்ளல்

போட்டிகள் என்றாலே உற்சாகம் தான். வானொலி நேயர்களுக்கு ஒரு சில வானொலிகள், மாதம் தோறும் போட்டிகளை வைக்கின்றன. அந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் நேயர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளை அனைத்துலக வானொலிகள் அனுப்பி வருகின்றன.

Picture Credit: www.qrznow.com

ஹாம் வானொலியிலும் ஏராளமான போட்டிகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. நீங்கள் இது போன்ற போட்டிகளில் கலந்துகொள்ளவில்லையெனில், இது ஒரு குழப்பமான ஒன்றாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பொதுவாக ஹாம் வானொலியில் நடக்கும் போட்டிகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது எண்ணிக்கை. ஆம், குறிப்பிட்ட நேரத்தில், எத்தனை எண்ணிக்கையிலான ஹாம் வானொலி நிலையங்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது. அவற்றின் பெயர், ஒலிபரப்பிய அலைவரிசை, நேரம், சக்தி போன்றவற்றின் அடிப்படையில் போட்டிகள் வைக்கப்படுகின்றன.

வானொலி விளையாட்டு

இந்த போட்டிகளை ஆங்கிலத்தில் Radio Sport என்றும் கூறுவர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அதிகப்படியாக உங்களால், எத்தனை வானொலி நிலையங்களைத் தொடர்புகொள்ள முடிகிறது என்பது இங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒரு சில போட்டிகள் ஒரு குறிப்பிட்ட நாட்டினை மையப்படுத்தி மட்டுமே நடக்கும். இன்னும் ஒரு சில போட்டிகள், ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் மட்டும் நடக்கும். இந்தியா போன்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் கூட, இது போன்ற போட்டிகள் நடைபெறுகின்றன.

Picture credit: www.redbubble.com

போட்டிகளில் கலந்து கொள்வதை விட முக்கியமானது, அந்த போட்டியின் போது, கேட்ட வானொலி நிலையங்களின் பட்டியலை முறையாக வரிசைப்படுத்தி எழுதி அனுப்ப வேண்டியது மிக முக்கியம். ஒரு சில போட்டியாளர்களே, எப்படிப் பதிவிட வேண்டும் என்று தெளிவாகத் தெரிவித்துவிடுவர். இன்னும் ஒரு சிலர், அதற்கென தனியான ஒரு இணையப் பக்கத்தினை உருவாக்கி, அதில் பதிவிடக் கூறுகின்றனர்.

இதன் ஊடாக, போட்டியை நடத்துபவர்கள், நீங்கள் உண்மையாகவே அந்த வானொலிகளைக் கேட்டீர்களா? என்று சோதிக்கவும் செய்வர். அதற்கு இன்று பல்வேறு பொதுவான இணையதளங்கள் உதவுகின்றன. இது எப்படிச் செயல்படுகிறது என்று அறிந்து கொண்டால், ஆச்சரியப்படுவீர்கள். ஒவ்வொரு ஹாம் வானொலி நிலையங்களும், தான் கேட்கும் ஒலிபரப்பினை ஒரு குறிப்பிட்ட பொதுவான இணையதளத்தினில் பதிவு செய்வர். அந்த இணையதளத்தின் துணைகொண்டு, யார், யார், எந்த எந்த வானொலிகளைத் தொடர்புகொண்டார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குச் சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவுப் பரிசுகள் கொடுக்கப்படும்.

என்ன பயன்?

இது போன்ற போட்டிகளால் என்ன நன்மை? இது போன்ற கேள்விகள் தொடக்கக் காலம் முதல் இன்று வரை கேட்கப்படும் ஒரே மாதிரியான கேள்விகள். இதற்கு எந்த வகையில் பதில் கூறினாலும், இதைக் கேட்கும் நபருக்கு பொதுவான புரிதல் இல்லாத பட்சத்தில், அதில் பயனே இல்லை.  இது போன்ற போட்டிகள் ஊடாகத் தான் புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்கிறோம். மேலும், நமது வானொலிப் பெட்டியின் தரம், அமைத்துள்ள ஆண்டனாக்கள் போன்றவற்றின் தரத்தினையும் அறிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு. அதை விட முக்கியமானது, நல்ல மகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டாக இது இருக்கும் என்பதில் எள் அளவும் ஐயம் வேண்டாம்.

ஒரு சில சமயங்களில் ‘விரைவுப் போட்டிகள்’ (Rapid Fire) ஹாம் வானொலியில் நடப்பதுண்டு. ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான நிலையங்களை நம் இல்லத்தில் பிடித்து, அந்த நிலையங்களின் விபரங்களை CQ World Wide DX Contest (CQWW)க்கு அனுப்பி Worked All Continents (WAC) விருதினைப் பெறலாம். அதாவது அனைத்து கண்டங்களிலும்  உள்ள ஹாம் வானொலி நிலையத்தினை கேட்டவர் என்ற விருது.  இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில், ஒரே சமயத்தில் 160 மீட்டர் முதல் 10 மீட்டர் வரையிலான நிலையங்களைக் கேட்பதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைகிறது.

மோர்ஸ் வேகத்தினை அதிகரிக்க…

இது போன்ற போட்டிகளினால் இன்னும் ஒரு சில நன்மைகளும் வளரும் ஹாம்களுக்கு உண்டு. குறிப்பாக, நீங்கள் எந்த அளவிற்குச் சுறுசுறுப்பாக உள்ளீர்கள், நீங்கள் வசிக்கும் பகுதியில் எப்படி ஹாம் வானொலிகள் தெளிவாகக் கிடைக்கிறது. எந்த வகையான ஆண்டனாக்களை பயன்படுத்தினால், எந்த வகையான வானொலிகளைத் தெளிவாகக் கேட்க முடிகிறது, போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் மோர்ஸ் குறியீட்டுக்கான வேகத்தினை அதிகரிக்க விரும்பினால், இது போன்ற போட்டிகளின் துணை கொண்டு நீங்கள் அதனையும் அதிகரித்துக் கொள்ள உதவுகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அமைப்புகள் ஹாம் போட்டிகளை வைக்கின்றன. அதில் முக்கியமான அமைப்பாக ‘அமெரிக்க ரேடியோ ரிலே லீக்’ அமைந்துள்ளது. அவர்கள் January VHF Sweepstakes, June VHF QSO Party, Field Day, September VHF QSO Party, Sweepstakes, 160-Meter மற்றும் 10-Meter Contest ஆகியவற்றை நடத்துகின்றனர். இதே போன்று சீ.க்யூ என்ற மாத இதழானது WPX மற்றும் WW போட்டிகளை நடத்துகின்றனர். இது போன்ற உலகளாவிய போட்டிகளின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த போட்டிக்கான விபரங்களை அறிந்துகொள்ள வசதியாக, அவற்றின் இணைய தளங்களின் முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டி என்றதும் வாரம் முழுவதும் இருந்து கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ண வேண்டாம். பொதுவாக இது போன்ற போட்டிகள் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கும். அதுவும் வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இவை நடக்கும். உங்களுக்கு உகந்த நேரத்தில், அந்த இரண்டு நாட்களில் கலந்து கொள்ளலாம். குறிப்பாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01க்கு தொடங்கும் போட்டி, ஞாயிறு நள்ளிரவு 12.00 மணிக்கு நிறைவுபெறும். 48 மணி நேரம் நடைபெறும் இந்த போட்டி பெரும்பாலும் சனி ஞாயிறு மட்டுமே நடைபெறும்.

இது போன்ற போட்டிகள் எப்பொழுது நடைபெறுகிறது, எந்த நேரத்தில் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்வதே, ஒரு சவாலான செயலாகவே இருந்து வருகிறது. மூத்த ஹாம்கள் இது பற்றி தெரிவித்தால் மட்டுமே, இளம் ஹாம்களுக்குத் தெரியும். இன்னும் ஒரு சில ஹாம்கள், தாம் மட்டுமே இது போன்ற போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்து, சக ஹாம்களுக்கு சொல்வதில்லை. ஆனால், இன்றைய சமூக ஊடக காலம் நமக்கு எல்லாவற்றையும், எல்லோருக்கும் கொடுக்கும் வகை செய்துள்ளது.

போட்டியில் கலந்துகொள்ளும் முன், அந்த போட்டிக்கான சட்டதிட்டங்களைத் தெளிவாக அறிந்துகொள்வது முக்கியம். மேலும், அந்த நிலையத்தினையும் ஒரு முறை கேட்டுவிடுவது நன்மை தரும். ஒரு சில நிலையங்கள் போட்டிக்கான அறிவிப்பினையே ஹாம் வானொலி ஒலிபரப்பில்தான் கூறுவார்கள். ஒரு சில போட்டிகளுக்கு எண்களையும் பகிர்ந்து கொள்வார்கள். இவற்றையெல்லாம் தெளிவாகப் பதிவு செய்து கொள்ளவேண்டியது முக்கியம். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை, ஆனால் போட்டியை நடத்துபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்கள் என்றாலும், அதற்கு வழிவகை செய்துள்ளனர். இதன் ஊடாக, தொடக்க நிலையினர், போட்டி எப்படி நடத்தப்படுகிறது, போட்டியாளர்கள் எவ்வாறு பேசுகின்றனர், என்பன போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.

 (தொடரும்) ■

மேலதிக தகவல்களுக்கு:

www.arrl.org/distance-records

https://www.cqww.com

www.arrl.org/contests

www.hornucopia.com/contestcal

https://www.contestcalendar.com

https://www.darc.de/der-club/referate/ausland/english-version

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]



தொடர் 1ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 1 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 2ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 2 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 3ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 3 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 4ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 4 தங்க.ஜெய்சக்திவேல்



தொடர் 5ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 5 – தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 6ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 6 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 7ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 7 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 8ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 8 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 9ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 9 தங்க.ஜெய்சக்திவேல்



தொடர் 10ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 10 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 11ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 11 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 12ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 12 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 13ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 13 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 14ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 14 | தங்க.ஜெய்சக்திவேல்



தொடர் 15ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 16ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 16 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 17ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 17 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 18ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 18 தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 19ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 19 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 20ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 20 | தங்க.ஜெய்சக்திவேல்

தொடர் 21ஐ வாசிக்க

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 21 | தங்க.ஜெய்சக்திவேல்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *