ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 3 தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 3 தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் ஒரு நாட்டின் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு சாட்சி சமீபத்தில் நடந்துவரும் சம்பவங்கள். இதனால் தான் அன்றே வானொலியின் முக்கியத்துவத்தினை அனைத்து நாடுகளும் அறிந்திருந்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது போர் நிலவரங்களை மட்டுமல்லாது, போர் வீரர்களுக்கும் உற்சாக வார்த்தைகளை ஒலிபரப்பியது வானொலி மட்டுமே. அதனால், எந்த சூழ்நிலையிலும் வானொலி என்ற ஊடகத்தினை மறந்துவிடக்கூடாது. ஆனால் மறந்துவிட்டோம். ஆனால் நம் அண்டைநாடுகள் வானொலியை மறந்துவிடவில்லை.

நேபாள வானொலிகள்

இந்தியாவிற்கும் சீனாவுக்குமான பிரச்சனை தொடங்குவதற்கு முன்பே நேபாளுடன் எல்லை பிரச்சனை தொடங்கிவிட்டது. குறிப்பாக உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள பகுதிகள் என்று இந்தியா கூறும் லிம்பியதுரா, காலாபானி மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாள அரசு தங்களின் நாட்டுப் பகுதியில் இணைத்து வரைபடத்தினை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை நேபாள நாடாளுமன்றத்திலும் வைத்து பிரதிநிதிகள் சபையில் அனுமதியும் பெற்றுவிட்டது. இதற்கும் வானொலிக்கும் என்ன தொடர்பு?

பொதுவாக எந்த நாடும் தனது கருத்துக்களையும் நிலைப்பாட்டினையும் முதலில் ஊடகங்கள் வாயிலாகவே வெளியிடும். அதிலும் குறிப்பாக வானொலிக்கு மிக முக்கிய இடம் அதில் உண்டு. நேபாள நாடாளுமன்றத்தின் 258 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்த போது, முதலில் அந்த தகவல் நேபாள வானொலியின் ஊடாகவே ஒலிபரப்பப்பட்டது. அதிலும் குறிப்பாக நேபாள இந்திய எல்லையில் உள்ள பண்பலை வானொலிகள் ஊடாகவே அவை ஒலிபரப்பத் தொடங்கின. அதிலும் இந்திய ஸ்பெக்ட்ரத்திற்குள் நுழைந்து, இந்தியப் பகுதிகளில் உள்ள அனைத்து வானொலிப் பெட்டிகளிலும், மேற்கண்ட மூன்று பகுதிகள் நேபாளத்தினுடையது என்று பாட்டின் வடிவில் ஒலிபரப்பியது நேபாள அரசின் வானொலிகள்.

சொல்லப்போனால், அதுநாள் வரையில் உத்திரகாண்ட் பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் நேபாள வானொலிகளை மட்டுமே கேட்டுவந்தனர். இந்த பிரச்சனைக்குப் பிறகு அந்த பகுதியில் வாழும் இந்தியர்கள் நேபாள அரசின் வானொலிகளைக் கேட்பதைத் தவிர்த்து வருகின்றனர். நேபாள் இது போல் தனது வரைபடத்தினை மாற்றச் சீனாவே காரணம் என்று இந்திய ஊடகங்களும், சில அதிகாரிகளும் கூறிவருவது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தியாவும் நேபாளமும் நீண்டதொரு எல்லையைக் கொண்டுள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களில் எல்லாம் நேபாளம் நிறையச் சமுதாய வானொலிகளை அமைத்துள்ளது. அதிலும் குறிப்பாக 1,880 கி.மீ. தூர எல்லையை இரு நாடுகளும் பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதில் 98% பகுதியில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. மீதமுள்ள லிபுலேக் கணவாய், காலாபானி மற்றும் லிம்பியதுரா பகுதிகளில் தான் இந்த சர்ச்சை.

நமது அரசு வானொலியான அகில இந்திய வானொலி சுதாரித்துக் கொண்டு அந்த பகுதிகளில் ஒலிபரப்பினை அதிகப்படுத்தினாலும், நேபாளைப் போன்று நாம் சமுதாய வானொலிகளுக்கு உத்திரகாண்ட் மாநிலத்தில் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் இந்திய நேபாள எல்லையில் மட்டும் நேபாளம் 200க்கும் அதிகமான சமுதாய வானொலிகளுக்கு அனுமதி அளித்து ஒலிபரப்பி வருகிறது. ஆனால் உத்திரகாண்ட் மாநிலம் முழுக்கவே நாம் இதுவரை 11 சமுதாய வானொலிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளோம். இதன் மூலம் நாம் வானொலிக்கும் ஸ்பெக்ட்ரத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அறிய முடிகிறது.

ஏற்கனவே அருணாசலப்பிரதேசத்தில் பல உள்ளூர் இந்திய மொழிகளில் சீன வானொலிகள் ஒலிபரப்பி வருகின்றன. அதை அறிந்த பின்பு இந்திய அரசு, அந்த பகுதிகளில் கவனம் செலுத்தி பல்வேறு இடங்களில் பண்பலை வானொலிகளைத் தொடங்கியது. அதே போன்று இப்பொழுது உத்திரகாண்ட் மாநிலத்திலும் நாம் பல சமுதாய வானொலிகளுக்கு அனுமதியை வழங்க வேண்டியுள்ளது.

படம்: Alokesh Gupta (https://alokeshgupta.blogspot.com)

உத்திரகாண்ட் வானொலிகள்

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன், ஹரித்வார், நைனிடால், முஸ்ஸெளரி, அல்மோரா மற்றும் சமோலி ஆகிய பகுதிகளில் மட்டுமே பண்பலை வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. அதுவும் குறைந்த சக்தியிலேயே தனது ஒலிபரப்புகளைச் செய்து வருகின்றன. இது தவிரச் சம்பா ஹல்துவானி, நைனிடால், பன்ட்நகர், ருத்ரபிரயாக் ஆகிய பகுதிகளில் மட்டுமே சமுதாய வானொலிகளுக்கு அனுமதியளித்துள்ளோம். இவை அனைத்தும் நம் நாட்டின் கருத்துகளை எதிரி நாட்டுக்கு ஒலிபரப்ப போதுமானவை ஆகாது. தற்பொழுது நேபாள வானொலிகள் அனைத்தும் பாடல் வடிவில் பிராச்சரத்தினைத் தொடங்கி ஒலிபரப்பி வருகின்றன. உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய வானொலிகளைப் பற்றிய விபரங்களையும் ஜோஸ் ஜேக்கப் என்ற புகழ்பெற்ற ஹாம் வானொலி ஒலிபரப்பாளர் தனது இணைய தளத்தில் தொகுத்துள்ளார். அவர்களின் இணைய தளத்திற்குச் சென்று மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம். (முகவரி கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.)

நேபாளத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் சமுதாய வானொலிகளின் பட்டியலை ‘உலக வானொலி தொலைக்காட்சிக் கையேடு’ விரிவாக வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வானொலிகளும் எந்த பகுதிகளில் தனது ஒலிபரப்பியை அமைத்துள்ளது, அதன் சக்தி என்ன என்பதையெல்லாம் அறியும் பொழுது, நமது நாடு இன்னும் ஸ்பெக்ட்ரத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

படம்: www.wrth.com

ஜாமிங்

ரொட்டியில் தடவிப் சாப்பிடும் ஜாம் பற்றிய கதையல்ல இது. ஸ்பெக்ட்ரத்தினை யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை இந்த ஜாமிங் மூலம் அறிந்து கொள்ள முடியும். எதிரி நாடுகள், நாம் ஒலிபரப்பும் வானொலி ஒலிபரப்பினை சக்தி வாய்ந்த சிற்றலை ஒலிபரப்பிகளைக் கொண்டு தடை செய்வார்கள். இதற்கு ஆங்கிலத்தில் ஜாமிங் என்று பெயர். இது போன்ற ஜாமிங்கை யார் செய்கிறார்கள், எங்கே இருந்து செய்கிறார்கள் என்பன போன்ற விபரங்களை அறிந்துகொள்ள நமது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் ஒரு தனிப் பிரிவே செயல்பட்டு வருகிறது. அதன் பெயர் கண்காணிப்பு பிரிவாகும். இந்த பிரிவானது, உலகின் அனைத்து நாடுகளின் ஊடகங்களை கண்காணிப்பதுடன், நமது நாட்டினைப் பற்றி எந்த விதமான செய்திகளை ஒலிபரப்புகின்றன என்பதையும் குறிப்பெடுத்து உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பி வருவர்.

ஒரு நாட்டின் ஒலிபரப்பினை ஜாம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்குக் காரணம், நாம் 200 கி. வா. சக்தியில் சிற்றலை ஒலிபரப்பினை செய்கிறோம் எனில், எதிரி நாடு 400 கி.வா. சக்தியில் ஜாம் ஒலி அலைகளை அனுப்பினால் மட்டுமே நம் ஒலிபரப்பானது எதிரி நாட்டுக்குள் செல்வது தடைசெய்யப்படும். இதற்கு உதாரணமாகப் பாகிஸ்தான் வானொலியைக் கூறலாம். இன்றும் அந்த வானொலி இலங்கை மற்றும் தமிழக நேயர்களுக்காகத் தமிழில் சிற்றலையில் ஒலிபரப்பி வருகிறது. ஆனால், நாம் அந்த ஒலிபரப்பினை தமிழகத்தில் கேட்க இயலாததற்குக் காரணமும் அதுவே.

இண்டலிஜென்ஸ்

ஒரு நாட்டின் பாதுகாப்பில் இண்டலிஜென்ஸ் மிக முக்கியமான ஒரு அங்கமாகும். இந்த இண்டலிஜென்சுக்கும் ஸ்பெக்ட்ரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்கில் நுழைந்ததை இந்த நுண்ணறிவுப் பிரிவு முன்கூட்டியே எப்படிப் பார்க்கத் தவறியது என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. இது பற்றிய ஒரு விரிவான கட்டுரையை நமது இந்திய அரசின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆங்கில தி இந்து நாளிதழில் எழுதியுள்ளார். அதன் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவரின் கூற்றுப் படி இந்தியாவில் Imaginary Intelligence (IMINT) என்ற நுண்ணறிவு அமைப்பானது எப்படி இதைக் கோட்டைவிட்டது எனக் கேள்வியெழுப்புகிறார். ஐ-மிண்ட் (IMINT) என்பது உளவுத்துறையில் உள்ள ஒரு அங்கமாகும். இது பல தகவல்களை நாட்டின் பாதுகாப்புக்காக தொடர்ந்து சேகரித்த வண்ணம் இருக்கும். இது செயற்கைக்கோள் மற்றும் வான்வழி புகைப்படங்களை எடுத்தல் வழியாகத் தகவல்களைச் சேகரிக்கும். IMINT உளவுத்துறை சேகரிப்பு நிர்வாகத்தின் துணைக்குழுவாகும், இது உளவுத்துறை சுழற்சி நிர்வாகத்தின் துணைக்குழுவாகவும்  இந்தியாவில் செயல்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், Signals Intelligence எனும் சிக்னல்கள் நுண்ணறிவு (SIGINT) என்பது சிக்னல்களை இடைமறிப்பதன் மூலம் தகவல்களைச் சேகரிக்கும் அமைப்பாகும். இவையனைத்தும் இதுபோன்ற காலகட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்கிறார் நாராயணன். இந்த அமைப்பும் ஸ்பெக்ட்ரம்மை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறது. இது மக்களிடையேயான தகவல்தொடர்புகள் (தகவல்தொடர்பு நுண்ணறிவு CO COMINT எனச் சுருக்கமாகக் கூறலாம்) அல்லது தகவல்தொடர்புகளில் நேரடியாகப் பயன்படுத்தப்படாத மின்னணு சமிக்ஞைகளிலிருந்து (மின்னணு நுண்ணறிவு E ELINT எனச் சுருக்கமாகக் கூறலாம்) தகவல்களைச் சேகரிக்கிறது. சிக்னல்கள் நுண்ணறிவு என்பது உளவுத்துறை சேகரிப்பு நிர்வாகத்தின் துணைக்குழுவாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. முக்கியமான தகவல்கள் பெரும்பாலும் குறியாக்கம் செய்யப்படுவதால் நம்மால் அறிந்துகொள்ள முடியாது. சமிக்ஞைகள் நுண்ணறிவு என்பது செய்திகளைப் புரிந்துகொள்ளக் குறியாக்க பகுப்பாய்வைப் பயன்படுத்துகிறது. போக்குவரத்து பகுப்பாய்வு-யார் யாரைத் தொடர்பு கொள்கிறார்கள், எந்த அளவுக்கு அந்த குறிப்பிட்ட அலைவரிசையில் இருக்கிறார்கள் போன்ற நாட்டின் பாதுகாப்பிற்கான தகவல்களைச் சேகரிக்கும்.

இது தவிர நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு அமைப்புகள் ஸ்பெக்ட்ரத்தினை மையமாக வைத்துச் செயல்பட்டு வருகின்றன. அதில் ‘தேசியப் பாதுகாப்பு கழகம் செயலகம் (National Security Council Secretariat (NSCS)), ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing (R&AW)) ஆகிய அமைப்புகள் இருந்தும் நாம் இன்று கல்வான் பகுதியில் இருபது இராணுவ வீரர்களை இழந்துள்ளது பெரிதும் வருத்தம் கொடுக்கக்கூடிய விஷயம்.

 (தொடரும்) ■

Tags: R&AW, SIGINT, IMINT, WRTH, Radio Nepal, Jaisakthivel, Radio, Amateur Radio, Ham

மேலதிக தகவல்களுக்கு:

Jose Jacob Page: https://www.qsl.net/vu2jos

Radio Nepal: http://radionepal.gov.np/corporate-en/

WRTH: http://wrth.com/

M.K.Narayanan article: www.thehindu.com/opinion/lead/making-sense-of-chinas-calculations/article31940534.ece

Imaginary Intelligence (IMINT): https://www.globalsecurity.org/intell/library/imint/imint_101.htm

Signals Intelligence (SIGINT): https://www.nsa.gov/what-we-do/signals-intelligence/

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]

தொடர் 1ஐ வாசிக்க

http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-2/

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *