கடந்த இரண்டு கட்டுரைகளில் நாம் கல்வான் எல்லைப் பிரச்சனையை ஸ்பெக்ட்ரமை மையப்படுத்திப் பார்த்தோம். இந்த பகுதியில் நாம் மீண்டும் அமெச்சூர் வானொலிப் பக்கம் போகலாம். அமெச்சூர் எனும் ஹாம் வானொலி பற்றிப் பேசவும் எழுதவும் அவ்வளவு தகவல்கள் உள்ளன. குறிப்பாகப் பேரிடர் காலங்களில் இதன் தேவை மிக அதிகம். கொரோனா காலகட்டத்திலும் இதன் தேவை அதிகமாகவே உள்ளது.
பெங்களூர் நகரில் உள்ள ‘இந்தியன் இண்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹாம்’ அங்குள்ள மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ஊரடங்கின் போது வெளியில் சுற்றுபவர்களை ஒழுங்குப்படுவது, அவர்களை வெளியே வரவேண்டாம் என எச்சரிப்பது, மீறிச் சுற்றுபவர்களைக் காவல் துறையினருக்கு ஹாம் வானொலி மூலம் தெரிவிப்பது, எனப் பல பணிகளைச் செய்து வருகின்றனர்.
எப்படித் தெரிந்து கொள்வது?
உதவி யாருக்கு எந்த சமயத்தில் தேவை என்பது யாருக்கும் தெரியாது. அது கொரோனாவாகவும் இருக்கலாம், புயல், பெரு மழை, பூகம்பமாகவும் இருக்கலாம். இது போன்ற சமயங்களில் அமெச்சூர் வானொலியைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு உதவி செய்பவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். பேரிடர் காலங்களில் செயல்படும் அமெச்சூர் வானொலிகளுக்கு ஒரு சில சட்டதிட்டங்கள் உள்ளன. அவற்றை விரிவாக ‘அமெரிக்க ரேடியோ ரிலே லீஃக்’ வெளியிட்டுள்ளது.
இந்த சட்டதிட்டங்களை அமெச்சூர் வானொலியினர் வீட்டிலிருந்து செயல்பட்டாலும், அல்லது பேரிடர் நடந்த இடங்களிலிருந்து ஒலிபரப்பு செய்தாலும், அவற்றை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். ஒரு வேலை இது பற்றி விரிவாகத் தெரியவில்லை எனும் போது, இது பற்றிய விபரங்களை அருகில் உள்ள அமெச்சூர் வானொலி மன்றங்கள் ஊடாக தெரிந்து கொள்ளலாம்.
பேரிடர் காலங்களில் நடந்து கொள்ளும் முறை பற்றிய பயிற்சிகளைச் செய்யும் பொழுது, வேறு பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும். குறிப்பாக முதல் உதவிகளை எப்படிச் செய்வது, யாருக்கு எந்த மாதிரி செய்ய வேண்டும், போன்ற விபரங்களையும் கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
பேரிடர் கால செயல்பாடு
ஒவ்வொரு பேரிடரும் வெவ்வேறு வகையானது. ஆகையால், இதில் ஸ்டெப்-பை-ஸ்டெப் என்பது வாய்ப்பே இல்லாத ஒன்று. அதனதன் தேவை மற்றும் பேரிடரின் வகையைப் பொருத்து இது மாறுபடும். எனவே, எந்த ஒரு முன் முடிவுடன் செயல்படுவது இயலாத காரியம். இருப்பினும் அடிப்படையான ஒரு சில சட்ட திட்டங்களை கடைப்பிடிப்பது அவசியமாகும். அவை.
- முதலில் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு மிக முக்கியம். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் உள்ளனர் என்று உறுதிப்படுத்தியபின் தான் நீங்கள் மற்றவருக்கு உதவி செய்யக் களத்திற்கு வரவேண்டும்.
- எந்த பகுதியிலிருந்து நீங்கள் செயல்பட உள்ளீர்களோ, அந்த இடத்தில் செயல்பாட்டில் உள்ள அவசரக்கால அலைவரிசையில் எது போன்ற தேவை தற்பொழுது அவசியமாக உள்ளது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப களத்தில் இறங்கவேண்டும்.
- உங்களை ஒருங்கிணைக்கும் அந்த கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்ய வேண்டும்.
- உங்கள் பகுதி பேரிடர் கால ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பில் இருப்பது அவசியம்.
வாகன விபத்து
பேரிடர் காலத்தில் தான் அமெச்சூர் வானொலியினர் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. நீங்கள் போகும் இடத்தில் எந்த ஒரு விபத்து நடந்தாலும் உடனடியாக களத்தில் இறங்கி செயல்படத் தயாராக இருக்க வேண்டும். ஒரு தேர்ந்த ஹாம் ஏற்கனவே தொலைப்பேசி வழியாக அவசர உதவிக்கு யாரேனும் அழைத்திருப்பர் என்று நினைத்து, அந்த விபத்தினை தெரிவிக்காமல் இருந்துவிடமாட்டார்.
விபத்து மட்டுமல்லாது, தொலைப்பேசி சிக்னலே இல்லாத பகுதியில் ஒரு வாகனம் பழுதாகி இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு அமெச்சூர் வானொலி ஊடாக உதவி செய்வது, காட்டுத்தீ போன்றவற்றையும் தெரியப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும். இதில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று உண்டு. இது போன்ற சமயங்களில் எப்படித் தெளிவாகத் தெரிவிப்பது? யாரிடம் தெரிவிப்பது என்பது மிக முக்கியம். அமெச்சூர் வானொலி ஊடாக எப்படி அவசரத் தேவையைத் தெரிவிப்பது எனப் பார்ப்போம்.
- உங்கள் அமெச்சூர் வானொலியை இயக்கி, அதனை முழு சக்தியில் ஒலிபரப்பாகும் படி வைத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் ‘பிரேக்’ என மூன்று முறை கூற வேண்டும். இந்த சமயத்தில் ஏற்கனவே பேசிக்கொண்டு இருப்பவர்களை இடையூறு செய்வதாக நினைத்துக் கூச்சப்பட வேண்டியதில்லை.
- உங்களின் கட்டுப்பாட்டில் அந்த குறிப்பிட்ட அலைவரிசை வந்தபின், உங்களுக்குத் தெரிந்த அல்லது, உங்களுக்குத் தேவையான உதவியைத் தெரிவிக்கலாம்.
- இந்த நேரத்தில் முக்கியமான ஒன்று, நீங்கள் சொல்ல வரும் கருத்தினை தெளிவாகச் சொல்ல வேண்டும், அப்பொழுது தான் உதவி செய்பவர் சரியான உபகரணங்களோடு அந்த பகுதிக்கு வர வசதியாக இருக்கும். இந்தியா முழுவதும் உள்ள ரீப்பீட்டர்களை இணைக்கும் வசதி இங்கு இல்லை. ஆனால், அமெரிக்க, போன்ற மேலை நாடுகளில், ஒரு பேரிடர் ஏற்பட்டுவிட்டால், அனைத்து ரிப்பீட்டர்களையும் நொடிப்பொழுதில் இணைக்கு வசதியுள்ளது.
- அதே சமயத்தில் அரசின் அவசர உதவி எண்களை அழைத்து, உங்கள் பெயரைக் கூறிய பின், நீங்கள் யார், எங்கே இருந்து அழைக்கிறீர்கள், எந்த மாதிரியான உதவி அந்த பகுதிக்குத் தேவைப்படுகிறது என்பன போன்றவற்றை எந்த வித பதட்டமும் இல்லாமல் தெளிவாகக் கூறவேண்டும்.
- எல்லா தகவல்களையும் தெரிவித்த பின், கண்டிப்பாக ‘‘பேரிடர் கால ஒலிபரப்பு முடிவடைந்தது, இனி பொதுவான ஒலிபரப்புக்கு அலைவரிசையைப் பயன்படுத்தலாம்” எனத் தெரிவிக்க வேண்டும்.
இவை அனைத்தினையும் எந்தவித பதட்டமான சூழலாக இருந்தாலும், தெளிவாகப் பேசும் பயிற்சி மிக அவசியம். இது போன்ற சமயங்களில் நீட்டி முழக்கிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக விபத்துகளை இது போன்ற ஒலிபரப்புகளில் தெரிவிக்கும் போது கீழ்க்கண்ட தகவல்கள் உங்களிடம் இருப்பது அவசியம்.
- விபத்து நடந்த சாலையின் எண் மற்றும் சாலையின் பெயர்
- இடத்தின் சரியான முகவரி, அல்லது எத்தனையாவது மைல் கல்லில் விபத்து நடந்த இடம் உள்ளது.
- எந்த திசையில் சென்ற வாகனம் அது, எந்த பாதையில் அந்த வாகனம் தற்பொழுது நின்றுள்ளது.
- அந்த விபத்து போக்குவரத்தினை இடையூறு செய்துள்ளதா?
- விபத்தில் யாருக்கேனும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா?
- விபத்தில் சிக்கிய வாகனம் தீப்பிடித்துள்ளதா? புகை வருகிறதா? அல்லது எரிபொருள் கீழே கொட்டியுள்ளதா? போன்ற விபரங்களைத் தெளிவாகத் தெரிவிப்பது அவசியம்.
விபத்து பகுதியில் என்ன நடந்ததோ அதை மட்டும் கூறுங்கள், அதைவிடுத்து நடக்காத ஒன்றைத் திரித்து உண்மை சம்பவங்களுக்கு மாற்றாக எதையும் கூற வேண்டாம்.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
ARRL Emergency training course:
http://www.arrl.org/files/file/Public%20Service/ARES/ARESmanual2015.pdf
http://www.arrl.org/emergency-communication-training
http://www.arrl.org/online-course-catalog
Tags: DX India, Radio Free Asia, All India Radio, China Radio International, Jaisakthivel, Radio, Amateur Radio, Ham.
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க