பேரிடர் காலத்தில் உதவி செய்து வரும் அமெச்சூர் வானொலியினர் பற்றிப் பார்த்துவருகிறோம். பேரிடர் யாரிடமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை. அதனால், எல்லா சமயங்களிலும் ஹாம் வானொலியினர் தயார் நிலையில் இருப்பது அவசியமாகிறது. கட்டுரைத் தொடரைப் படித்துக் கொண்டு வருபவர்களுக்கு இந்த அமெச்சூர் வானொலிக்குள் வர விருப்பம் இருக்கலாம். அவர்களுக்கான ஒரு அறிமுகமே இந்த தொடர்.
பேரிடர் அழைப்புகள் (Distress Calls)
அமெச்சூர் வானொலியை உபயோகிக்கும் ஹாம்கள், பேரிடர் காலங்களில் எப்படி அழைப்புகளை கொடுக்கிறார்கள் என்பது இங்கு முக்கியம். அதுவும் எந்த அலைவரிசையில் கொடுக்க வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம், இங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. உங்களில் எத்தனைப் பேர் இந்த பேரிடர் கால அழைப்புகளை அல்லது ஒலிபரப்புகளைக் கேட்டுள்ளீர்கள்? ஆங்கிலத்தில் இது போன்ற அழைப்புகளை Distress Calls என்று அழைப்பர். Distress என்பதற்கு நேரடி தமிழ் அர்த்தம், துன்பம் அல்லது துயரம் ஆகும். அப்படியானால், இது துயர அழைப்பா? எனில் அதற்கு அர்த்தம் அது அல்ல. பேரிடர் காலத்தில் துன்பமும் துயரமும் ஏற்படுவது இயற்கையே, எனவே இதற்கு ‘பேரிடர் அழைப்புகள்’ எனலாம்.
Source: https://clickamericana.com
‘லைஃப் ஆஃப் ஃபை’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் நடுக்கடலில் ஒரு பெரிய கப்பல் விபத்தில் சிக்கிக்கொள்ளும். அப்பொழுது அந்த கப்பலின் மாலுமிகள் இது போன்ற ஒரு வயர்லெஸ் கருவியின் ஊடாக, இந்த பேரிடர் அழைப்பினை கொடுப்பார்கள். அதே போன்று ‘டைட்டானிக்’ திரைப்படத்திலும், கப்பல் மூழ்கும் சமயத்தில் இதே போன்ற அவசரக் கால அழைப்பினை தான் ‘பேரிடர் அழைப்பாக’ அந்தக் கேப்டன் கொடுப்பார்.
Source: https://clickamericana.com
பொதுவாக நிலத்தில் இருக்கும் போது ஏற்படும் ஆபத்தினை விட, கடலில் ஆபத்துகள் அதிகம். அந்த இடங்களில் பயணிக்கும் கப்பல்கள் அனைத்தும், இந்த வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைத் தான் பயன்படுத்தி வருகின்றன. அதற்கும் அமெச்சூர் வானொலிக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஹாம் வானொலிகள் பயன்படுத்தும் அதே கருவிகளைத் தான் கப்பல்களிலும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் அலைவரிசைகளில் மட்டுமே மாற்றம்.
சேமித்தல் அவசியம்
அமெச்சூர் வானொலியை வைத்திருக்கும் ஹாம்கள் தங்களின் வானொலியில் ஏதேனும் ஒரு அவசரக் கால பேரிடர் அலைவரிசையைப் பதிவு செய்து வைத்திருப்பர். இந்த அலைவரிசையில் மட்டுமே பேரிடர் ஏற்படும் பொழுது அழைப்புகளைக் கொடுக்க வேண்டும். ஒரு வேலை, அந்த அலைவரிசை தெரியவில்லை எனில், பொதுவான அலைவரிசையில் அவசரக்கால அழைப்பினைக் கொடுத்துவிட்டு, கேட்டுக் கொண்டு இருக்கும் யாரேனும் ஒரு அமெச்சூர் வானொலியை, குறிப்பிட்ட அந்த பேரிடர் அலைவரிசையிலும் தெரிவிக்கக் கூறவேண்டும்.
அமெச்சூர் வானொலியைப் பொருத்து, உரிமம் இருப்பவர்கள் மட்டுமே இந்த வானொலியை இயக்க முடியும். அப்படியிருக்க, பேரிடர் காலத்தில் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்த கூடாதா? என்றால், இல்லை. பேரிடர் காலத்தில் அமெச்சூர் வானொலியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அந்த சமயத்தில் உங்களுக்கு ஹாம் டைரக்டரியைப் பார்க்கவெல்லாம் நேரம் இருக்காது, ஏதேனும் ஒரு அலைவரிசையில் உடனடியாக தேவையான உதவியைக் கேட்டு ஒலிபரப்பலாம்.
Source: https://clickamericana.com
எப்படி அழைப்பது?
பேரிடர் அழைப்புகளை எப்படி அழைக்க வேண்டும் என்று ஒரு சில சட்டதிட்டங்கள் உள்ளது. அவற்றை விரிவாகக் காண்போம்.
உடனடியாக அவசர உதவி உங்களுக்குத் தேவை. அந்த சமயத்தில் ஆபத்தில் உள்ளவர் எதுவும் விரிவாகப் பேசக் கூடிய சூழ்நிலை இல்லை. அது போன்ற நேரத்தில் பயன்படுத்தும் வார்த்தை ‘மே டே’ (May Day). மோர்ஸ் குறியீட்டில் அதே தகவலை அனுப்ப வேண்டும் எனில் ‘எஸ்.ஓ.எஸ்’ (SOS) என்று கொடுக்க வேண்டும்.
∙ ‘மே டே, மே டே, மே டே’ என்று மூன்று முறை கூறிவிட்டு உங்கள் நிலையத்தின் பெயரைக் கூற வேண்டும். நிலையத்தின் பெயர் என்பது உங்களின் ‘அழைப்புக் குறியீடாக’ (Call Sign) இருக்கலாம்.
∙ அதன் பின் நீங்கள் இருக்கும் பகுதி பற்றிய விபரங்களை அட்ச ரேகை, தீர்க்க ரேகையுடன் கூற வேண்டும். அப்படி அது தெரியவில்லை எனில், முழுமையான முகவரியைக் கூற வேண்டும்.
∙ நீங்கள் எந்த வகையான பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதைத் தெளிவாகக் கூறுவது அவசியம். அப்படிக் கூறும் பொழுது தான், உதவிக்கு வருபவர்கள், தேவையான கருவிகளை அங்கு எடுத்துவருவர்.
எந்த மாதிரியான உதவி உங்களுக்குத் தேவை என்பதனையும் தெளிவாகக் கூறவேண்டும். குறிப்பாக மருத்துவ உதவியா? அல்லது போக்குவரத்து உதவியா? என்பதையும் குறிப்பிட வேண்டும்.
Source: https://clickamericana.com
‘மே டே’ என்பதனை இடைவிடாமல் தொடர்ந்து கூற வேண்டும். குறிப்பாக அந்த அழைப்பிற்குப் பதில் வரும் வரை, கூறிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் அவசரக் கால பேரிடர் ஒலிபரப்பினை யாரும் கேட்கவில்லை என வருத்தம் வேண்டாம். யாரேனும் ஒருவர் எங்கேனும் கேட்டுக் கொண்டுதான் இருப்பார். அந்த நம்பிக்கையில் தொடர்ந்து பதில் கிடைக்கும் வரை ஒலிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு வேலை உங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை எனில், வேறு ஒரு அலைவரிசையைப் பயன்படுத்தி பேரிடர் அழைப்பினை விடுக்கலாம். நீங்கள், இந்த அலைவரிசையை மாற்றி ஒலிபரப்ப தீர்மானித்த பின், அடுத்த அலைவரிசைக்குச் செல்லும் முன், நீங்கள் செல்லவுள்ள புதிய அலைவரிசையை இந்த அலைவரிசையில் மூன்று முறைக் கூறிவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதற்குக் காரணம், நீங்கள் செய்யும் ஒலிபரப்பினை யாரேனும் கேட்டு கொண்டு இருக்கலாம். அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சிகளாம். ஆனால் அந்த அழைப்பு உங்களுக்கு வந்து சேராமல் இருந்திருக்கலாம்.
பேரிடர் அழைப்பிற்குப் பதில்
அமெச்சூர் வானொலி உபயோகிக்கும் பலர் இது போன்ற பேரிடர் அழைப்பு வந்தால் எப்படி பதில் கொடுக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். ஒரு சில ஹாம்கள் இது போன்ற அழைப்புகளை பெரும் பொழுது, கொஞ்சம் பதற்றமடைவதும் உண்டு. அந்த பதட்டத்தினை மூச்சினை இழுத்துவிட்டுக் குறைத்துக் கொள்வது அவசியம்.
i. அது போன்ற அவசர அழைப்பு கிடைத்தவுடன், முதலில் நீங்கள் கேட்ட நேரத்தினையும், அலைவரிசையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
ii. அடுத்து அந்த அழைப்பிற்குப் பதில் கொடுக்க வேண்டும். உங்கள் நிலையத்தின் பெயரையோ அல்லது உங்களது அழைப்புக் குறியீட்டினையோ கூற வேண்டும். “உங்களின் அழைப்பு எனக்கு கிடைத்தது, எது போன்ற ஆபத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்?” என்பதை கேட்க வேண்டும்.
iii. அதன் பின் இனி கூறப்போகும் இந்த தகவல்களையும் சேகரிக்க வேண்டும்.
• சரியாக எந்த இடத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?
• எந்த விதமான பிரச்சனையில் அகப்பட்டுள்ளீர்கள்?
• வேறு ஏதேனும் தகவல் கூற விரும்புகிறீர்களா?
iv. அந்த ஆபத்தில் சிக்கிக் கொண்டு இருக்கும் நிலையத்திடம், தொடர்ந்து அதே அலைவரிசையில் இருக்கும்படி கூறவேண்டும்.
v. உடனடியாக அரசின் குறிப்பிட்ட அமைப்பிற்கு அழைத்து, நிலைமையைக் கூறவேண்டும். முதலில், நீங்கள் யார்? எங்கு இருந்து அழைக்கிறீர்கள்? எப்படி இந்த அவசர அழைப்பு உங்களுக்குக் கிடைத்தது?, போன்ற விபரங்களை தெளிவாகக் கூற வேண்டும். அதன் பின் அவர் உங்களுக்குத் தேவையான விபரங்களைக் கூறுவார்.
vi. அந்த அதிகாரி கூறும் அலோசனைகளைக் குறித்துக்கொள்ள வேண்டும்.
vii. உடனே பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ள நிலையத்திற்கு, அவர் கூறிய விபரங்களைக் கூற வேண்டும். நீங்கள் யாரைத் தொடர்பு கொண்டீர்கள், அவரது பெயர் மற்றும் அலுவலக விபரங்களைக் கூறவேண்டும்.
உங்களால் முடிந்தவரை அந்த அலைவரிசையில் தொடர்ந்து இருக்கவும். அவருடன் பேசிக் கொண்டு, அதே சமயத்தில் அதிகாரிகளுக்குத் தேவையான விபரங்களையும் கூறிக் கொண்டு இருக்கலாம். இதன் மூலம் ஆபத்தில் இருப்பவருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். மேலும், வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டாலும் தெரிவிக்க வசதியாக இருக்கும். ■
(தொடரும்)
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க