பேரிடர் காலத்தில் உள்ளவர்களுக்கு நாம் அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் உதவி செய்யத் தயாராக இருப்போம். அப்படியான உதவியே அந்த சமயத்தில் அவர்களுக்குப் போதுமானது. நாம் வசிக்கும் பகுதியில் எந்த வித ஆபத்தும் இல்லாத போது, பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய உங்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் எப்படிச் செய்ய என்று தெரியாது. அதற்குப் பேரிடர் கால தொடர்பியல் உங்களுக்கு உதவும். அது என்ன பேரிடர் கால தொடர்பியல்? விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம்.
வானிலை வானொலி Source: https://72hours.ca
பேரிடர் கால தொடர்பியல்
அமெச்சூர் வானொலிக்குள்ளே நடக்கும் அனைத்தினையும் ஒரு சாதாரண மனிதனால் அறிந்துகொள்வது இயலாத காரியம். அந்த அளவிற்குப் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. பேரிடர் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளது. நீங்கள் அந்த பகுதிக்குச் செல்ல முடியாது, ஆனால் உதவி செய்ய ஆர்வமாக உள்ளீர்கள் என்றால், அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் அமெச்சூர் வானொலியை நிறுத்தாமல், அந்த குறிப்பிட்ட பேரிடர் அலைவரிசையைத் தொடர்ந்து கேட்டு கொண்டு இருப்பதே ஆகும். ஏதேனும் உதவியை வெளியாட்களிடம் கேட்கும் போது, அந்த உதவியை உங்களால் செய்ய முடியும் எனில் அந்த அலைவரிசைக்குள் செல்லலாம்.
வானிலை ஆய்வு மையம் Source: http://www.imdchennai.gov.in/np2.htm
உதாரணமாக ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீங்கள் சென்னையில் உள்ளீர்கள், எனவே, உங்களால் உடனே அங்குச் செல்ல முடியாது. ஆனால் உதவி செய்ய விரும்புகிறீர்கள். எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. அந்த பேரிடர் கால சிறப்பு அலைவரிசைக்குள் சென்று “CQ CQ CQ Buvaneshwar” என்று போய் கூறக்கூடாது. இதைவிட ஒரு பெரிய முட்டாள் தனம் ஏதும் இல்லை. இப்படிச் செய்வதால், அங்கு உதவித் தேவைப்படுபவர்களை நீங்கள் தேவையில்லாமல் இடையூறு செய்வதாகவே ஆகும். அந்த சமயத்தில் வேறு ஏதேனும் முக்கியத் தகவலை அவர்கள் ஒலிபரப்பி இருப்பர்.
அப்படியே நீங்கள் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், அந்த பேரிடர் ஒலிபரப்பினைத் தொடர்ந்து கேளுங்கள். அதில் சென்னையில் உள்ளவர்களுக்கு ஏதேனும் தகவல் பரிமாற்றத்தினை செய்ய வேண்டும் எனக் கூறினால், அப்பொழுது உங்களின் உதவியானது மிகப் பெரியது. குறிப்பாக அந்த ஒலிபரப்பினை நீங்கள் அஞ்சல் செய்யலாம். இன்னும் ஒருபடி மேலே, உங்கள் பகுதியில் உள்ள ரீப்பீட்டர்களுக்கு இந்த தகவலை அனுப்பலாம்.
மற்றும் ஒரு உதவியையும் நீங்கள் செய்ய வாய்ப்புள்ளது. மலைப்பாங்கான இடங்களில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். அந்த மாதிரியான சமயங்களில் தொடர்பியல் முக்கியமானது. குறிப்பாக இரண்டு மலைகளுக்கு இடையே இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது தெளிவாக கேட்காமல் போகக்கூடும். அந்த சமயத்தில் இரண்டு நிலையங்களின் ஒலிபரப்பினை உங்களால் கேட்க முடிகின்றது எனில், அந்த இரண்டு நிலையங்களுக்கு இடையே ஒரு இணைக்கும் நிலையமாக நீங்கள் இருந்து உதவலாம். அந்த சமயங்களில் உங்கள் அழைப்புக் குறியீட்டினைக் கூறி,“நான் உங்கள் இரண்டு நிலையங்களையும் கேட்க முடிகிறது, உங்களது ஒலிபரப்பினை அஞ்சல் செய்து உதவி செய்யலாமா?” என்று கேட்கலாம். இப்படியானதைத் தான் ‘பேரிடர் கால தொடர்பியல்’ என்று கூறுகிறோம்.
பொதுச் சேவை
ஹாம் வானொலியினர் என்றாலே, பொதுச் சேவை தான். பேரிடர் காலத்தில் மட்டுமே உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த காலகட்டத்திலும் நீங்கள் உதவியைச் செய்யலாம். உங்கள் பகுதியில் உள்ள ஹாம் வானொலி மன்றத்தினைத் தொடர்பு கொண்டு, “ஏதேனும் பொதுச் சேவை செய்ய ஆட்கள் தேவை எனில் எம்மையும் இணைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறலாம். பொது சேவையில் பல வகைகள் உள்ளன. காலநிலை கண்காணிப்பு, கார் மற்றும் பைக் பந்தயங்கள், விளையாட்டு மற்றும் அணிவகுப்புகள் போன்றவற்றிற்கு உதவிகளைச் செய்யலாம்.
வானிலை கண்காணிப்பு
‘வெதர் மேன்’ என்ற நபரை இன்று நம் அனைவருக்கும் தெரியும். கால நிலை குறித்து முன்கூட்டிய இவரின் அறிவிப்பினை பலரும் இன்று சமூக ஊடகங்களில் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம். இன்று பல அமெச்சூர் வானொலி நிலையங்களும் வானிலையைக் கண்காணித்து வருகின்றன. குறிப்பாகப் பல வானிலை செயற்கைக்கோள்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவை தரும் தகவல்களை சக ஹாம் வானொலி நிலையத்துடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
வானிலை மோசமாகும் போது அனைத்து ஹாம் வானொலியினரின் பங்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அது போன்ற காலகட்டத்தில் இந்த ஹாம் வானொலிகள் காலையும் மாலையும் தொடர்ந்து கால நிலை வேறுபாட்டினை அறிவித்தபடி இருக்கும். உலக அளவில் இது போன்ற வானிலை பற்றி அறிந்து கொள்ள ஹாம் வானொலியினர் பயன்படுத்துவது ‘ஸ்கை வார்ன்’. இது ‘தேசிய கடல் மற்றும் வானிலை குழுமத்தினால்’ நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் ‘தேசிய வானிலை சேவை மையத்தின்’ தகவல்களையே ஸ்கை வார்ன் மக்களுக்கு அறிவித்து வருகிறது. இந்தியாவிலும், இது போன்ற மையங்கள் உள்ளன. குறிப்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சேவை மிகப் பெரியது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது 1875ல் தொடங்கப்பட்ட பழமையான வானிலை ஆய்வு மையமாகும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்றாக திகழ்ந்தாலும், இதுவே பழமையான மையமாகும். மற்றவர்களை விட அமெச்சூர் வானொலியினர் இந்த மையத்தின் தகவல்களை அவ்வப்போது தங்களின் ஒலிபரப்பில் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
Source: http://www.imdchennai.gov.in/np2.htm
தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களிலும், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய ஒன்றியப் பிரதேசங்களிலும் வானிலை தொடர்பான செயற்பாடுகளை இந்த மையம் கவனித்துக் கொள்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மண்டல மையங்களின் தலைமையகங்கள் கொல்கத்தா, குவஹாத்தி, மும்பை, நாக்பூர், மச்சிலிப்பட்டணம் மற்றும் புது தில்லியில் அமைந்துள்ளன.
1792ல் முதல் வானிலை ஆய்வானது சென்னையில் ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டது. அதன் எச்சம், இன்றும் கல்லூரி சாலையில் உள்ள இந்த வானிலை ஆய்வு மையத்தில் காணக் கிடைக்கிறது. இந்த வானிலை மையத்தில் உள்ள பல கருவிகள் நேரடியாகச் செயற்கைக் கோள்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியவை. ஒரு சில அமெச்சூர் வானொலி நிலையங்களும், இது போன்ற செயற்கைக் கோள்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தன்மை கொண்டது. ‘ஓபன் சோர்ஸ்’ எனும் ‘திறமூல’ செயற்கைக் கோள்கள் பல நம் வீட்டின் மேலே பறந்து செல்கின்றன. அவை கொடுக்கும் தகவல்களை நாமும் பயன்படுத்த முடியும். எப்படி என்று அடுத்த கட்டுரையில் காண்போம்.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
http://www.skywarn.org
https://www.weather.gov
https://www.noaa.gov
http://www.imdchennai.gov.in/np2.htm
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க