ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 8  தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 8 தங்க.ஜெய்சக்திவேல்

Open Source எனும் திறமூல மென்பொருட்களை பற்றி நாம் அறிவோம். அதே போன்றே திறமூல செயற்கைக்கோள்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பகுதியில் விரிவாக அதனைக் காணலாம். நம் அண்ட வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையான செயற்கைக்கோள்களை நாம் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால், ஒரு சில செயற்கைக் கோள்களை நாம் தொடர்பு கொள்ள முடியும். அவை நம் வீட்டின் மேலே கடந்து செல்லும் போது, நம் வீட்டிலிருந்த படியே அவற்றிடம் இருந்து வரும் சிக்னல்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும் முடியும்.

எப்படி சாத்தியம்?

இன்று தமிழகத்தில் உள்ள பல அமெச்சூர் வானொலிகள் நேரடியாகச் செயற்கைக் கோள்களைத் தொடர்பு கொள்வதற்கான சிறப்பு ஆண்டனாக்களைக் கொண்டுள்ளன. அவை நேரடியாகவே செயற்கைக் கோள்களைத் தொடர்பு கொண்டு வருகின்றன. 20 வருடங்களுக்கு முன் செயற்கைக்கோள்களைத் தொடர்பு கொள்வதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத ஒன்று. அந்த அளவிற்கு சிரமம் இருந்தது. குறிப்பாக அவற்றைத் தொடர்பு கொள்ள எர்த் ஸ்டேசன் அமைக்க வேண்டியிருந்தது. இது தனி மனிதர்களால் இயலாத ஒன்று.

 

Helical Antenna Source: wikipedia.org

ஆனால் இன்று இது சாத்தியம். எப்படிச் சாத்தியமாயிற்று? என்று பலரும் கேட்கலாம். அதற்குக் காரணம் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி என்று சொல்லலாம். ஒரு சிறிய ஸ்பைரல் ஆண்டனா போதும், நம் வீட்டின் மேலே பறக்கும் செயற்கைக்கோளைப் பிடிக்க. அந்த அளவிற்குத் தொழில்நுட்பம் நம் கைக்கு எட்டும் தூரத்திற்கு வந்துவிட்டது. நமக்கு கிடைக்கக்கூடிய பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கால நிலையைக் கணிக்கும் கோள்கள் ஆகும். அந்த செயற்கைக்கோள்களைத் தொடர்பு கொள்வதன் ஊடாக வானிலையை முன் கூட்டியே அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது.

பூமியின் கண்ணாடி

வானிலிருந்து நமது பூமியைப் பார்க்க யாருக்குத் தான் ஆர்வம் இருக்காது. நமது சிறு வயதில் நாம் அட்லஸை எடுத்து வைத்துக் கொண்டு எந்த நாடு, எங்கு இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருப்போம். அதன் நீட்சி இன்றும் பிபிசியில் டேவிட் அட்டன்பரோவும், சைமன் ரீவ்ஸ்வும் போகும் நாடுகளைக் காண நாம் நம் கைப்பேசியை விட நாடுவது அட்லஸை தான். அதற்குக் காரணம், நமக்கு ஒரு பரந்துபட்ட ஒரு பார்வை அதில் கிடைக்கிறது.

நம் பூமியைப் பார்க்க உதவும் திறமூல செயற்கைக்கோள்களில் முதன்மையானதாக USGS Earth Explorerரைக் கூறலாம். USGS முகவாண்மையால் கட்டுப்படுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் பொதுமக்களும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த செயற்கைக்கோள் துணை கொண்டு புவியியல் தகவல் முறைமையில் தகவல்கள் பெறவும், இடஞ்சார் முறையில் பூமியுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

 

Resourcesat-2 Source: space.skyrocket.de

இந்த செயற்கைக்கோள் மூலம் பல்வேறு தகவல்களைப் பெறுதல், சேமித்தல், பகுத்தாய்தல், மேலாண்மை செய்தல் போன்றவற்றைச் செய்ய முடியும். இதனை ஆங்கிலத்தில் Geopraphic Information Science  (GIS) என்று கூறப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் நாஸா மற்றும் இஸ்ரோவின் அனுமதிக்கப்பட்ட ஒரு சில தகவல்களைக் கொடுக்கிறது.

இந்த செயற்கைக்கோள் போன்றே லேண்ட்வீவர் (Landviewer), கோபர்நிகஸ் ஓபன் அக்ஸஸ் ஹப் (Copernicus Open Access Hub), சென்டினல் ஹப் (Sentinel Hub), நாஸா எர்த் டாடா (NASA Earthdata Search),  ரிமோட் பிக்ஸல் (Remote Pixel) மற்றும் INPE இமேஜ் கெட்டலாக் (INPE Image Catalog) ஆகிய செயற்கைக்கோள்களை நம் வீட்டிலிருந்தபடியே தொடர்பு கொள்ளமுடியும்.

ஸ்கைவார்ன்

உலக அளவில் பல புகழ்பெற்ற வானிலை கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன. அதில் ‘ஸ்கைவார்ன்’ (Skywarn) மிக முக்கிய அமைப்பாகும். ‘தேசிய கடல் மற்றும் வான்மண்டல குழுமம்’ (NOAA), ‘தேசிய வானிலை சேவை’ (NWS) வழங்கும் தகவல்களை இவர்கள் தொகுத்து அமெச்சூர் வானொலியில் ஒலிபரப்புகின்றனர். பல வி.ஹெச்.எஃப் மற்றும் யூ.ஹெச்.எஃப் வழியாகவும் சிற்றலை 75 மீட்டரிலும் காலநிலை தகவல்களை வழங்கி வருகின்றனர். இதே போன்றே நியூ இங்கிலாந்து காலநிலை வானொலியானது 3905 கி.ஹெ சிற்றலை வரிசைகளிலும் ஒலிபரப்பி வருகின்றனர்.

Source:http://www.arrl.org

காலநிலை தகவல்களைக் கொடுப்பது போன்றே தேசிய அணிவகுப்பு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஹாம் வானொலியினரின் பங்கு மிக முக்கியமானது. கார் பந்தயங்கள், மராத்தான் ஓட்டங்கள், பைக் பந்தயங்கள் போன்றவற்றிற்கு தொடர்பியல் அவசியமாகிறது. காரணம், இது போன்ற பல பந்தயங்கள் தொலைப்பேசி சிக்னல்கள் கிடைக்காத காட்டுப்பகுதியில் நடை பெறுகின்றன. அதனால், அந்த போட்டியாளர்களுக்கு உரிமம் பெற்ற வயர்லெஸ் கருவிகளைப் பயன்படுத்துவோர் தேவைப்படுகின்றனர். அந்த சமயங்களில் அமெச்சூர் வானொலியினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கின்றது.

இது போன்ற போட்டிகளில் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுவது உண்டு. அந்த சமயங்களில் உடனடி அவசர உதவி தேவைப்படும். ஆகையால் அனைத்து ஹாம்களும் ஒரே அலைவரிசையில் தொடர்பில் இருப்பர். போட்டியாளர்களின் எண்ணிக்கை, நேரம், தொலைவு ஆகியவற்றை பொறுத்து அமெச்சூர் வானொலியினரின் எண்ணிக்கை அமைகிறது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் முன்

  1. போட்டி அழைப்பாளர்களிடம் இருந்து முறையான அடையாள அட்டை, ஒரே மாதிரியான தொப்பி, டி.சர்ட் ஆகியவற்றை அமெச்சூர் வானொலியினர் அணிந்து கொள்வது அவசியம்.

  2. கண்டிப்பாக அமெச்சூர் வானொலியின் உரிமத்தினை கையில் அடையாள அட்டையுடன் வைத்திருக்க வேண்டும்.

  3. காட்டுப்பகுதியில் பணியாற்றும் படியிருந்தால், அதற்குத் தகுந்த ஆடைகளுடன், குடி தண்ணீர் மிக முக்கியம்.

  4. வானிலை முன் அறிவிப்புகளை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தவாறு செல்ல வேண்டும். குறிப்பாக மழை பாதுகாப்பு ஆடைகள் மற்றும் வயர்லெஸ் கருவிகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளத் தேவையான உரைகள் மிக முக்கியம்.

  5. ஹை ஃபிரீக்வன்சி வானொலி பெட்டிகளில் உங்கள் பெயரைப் பொறித்து வைத்துக்கொள்வது நல்லது. காரணம், வானொலிப் பெட்டி காணாமல் போவதிலிருந்து இது காப்பாற்றும்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஹாம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. அது, உரிமம். போட்டிகள் நடக்கும் இடம், உங்கள் பகுதிக்கு அருகில் எனில் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக வெளியூர் என்றால், உரிய அனுமதியைப் பெற்ற பின்பே ஹாம் வானொலிப் பெட்டிகளை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவில் ‘வயர்லெஸ் மற்றும் திட்டமிடல் அமைப்பிடம்’ இந்த அனுமதியைப் பெறுவது முக்கியம்.

 (தொடரும்) ■

 

மேலதிக தகவல்களுக்கு:

http://www.skywarn.org

http://www.arrl.org/news/midwestern-hams-spot-track-tornados-as-2011-begins

https://dot.gov.in

https://en.wikipedia.org/wiki/Helical_antenna

https://space.skyrocket.de/doc_sdat/resourcesat-2.htm

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]

தொடர் 1ஐ வாசிக்க

http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-8/

 

Show 2 Comments

2 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *