அமெச்சூர் வானொலியினர் பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி அதன் ஊடாக தனது சமுதாயத்திற்கு உதவிகளைச் செய்வதோடு, அவர்களுக்குத் தேவையான தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றனர். சென்னையில் மெட்ராஸ் அமெச்சூர் சொசைட்டி (MARS), வண்டு நெட் மற்றும் சவுத் இந்தியன் அமெச்சூர் ரேடியோ லீஃக் (SIARS) ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவர்களில் மார்ஸ் மற்றும் வண்டு நெட் தனியாக நெட்களை (NET) நடத்தி வருகின்றன.
அமெச்சூர் நெட்
இண்டர்நெட் என்று அறிந்திருப்போம். அதே போன்று ஹாம் வானொலியிலும் நெட்கள் பிரபலமாகப் பார்க்கப்படுகிறது. இது இண்டர்நெட் போன்றதல்ல. வானொலியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து ஹாம்களும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒன்றிணைவர், அதற்குப் பெயர் தான் நெட். இன்றும் இந்த நெட்கள் சென்னையில் தினமும் காலையும் மாலையிலும் அமெச்சூர் அலைவரிசையில் ஒலிபரப்புகின்றனர்.
இவை இரண்டு வானொலிகள் தவிர இன்னும் ஒரு சில வானொலிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த நெட்களில் ஏற்காடு, கொடைக்கானல், சென்னை நெட்கள் அமெச்சூர் வானொலி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில், எந்த ஊரிலிருந்து எந்த நெட், எந்த அலைவரிசையில் செயல்படுகிறது என்பதை விரிவாகக் கொடுத்துள்ளோம். உங்களிடம் வி.ஹெச்.எஃப் வானொலிப் பெட்டிகள் இருந்தால், இந்த வானொலிகளையெல்லாம் கேட்கலாம்.
பெயர் ஊர் அலைவரிசை
VU3SMA சென்னை 145.000 +600
VU2MRR சென்னை 145.175 +600
VU2MVR சென்னை 145.075 +600
VU3VCG சென்னை 144.975 +600
VU2MWG சென்னை 434.1000 +1600
VU2CBE கோவை 144.800 +600
VU2RPT கோவை 145.200 +600 (செயல்பாட்டில் இல்லை)
VU2AOT கோவை 145.750 -600 (செயல்பாட்டில் இல்லை)
VU2IDR கும்பகோணம் 144.000-600
VU2KOD கொடைக்கானல் 145.150-600
VU2MRR கொடைக்கானல் 145.775-600
VU2MWG கொடைக்கானல் 434.100 +1600 (செயல்பாட்டில் இல்லை)
VU2LEU நாகர்கோவில் 145.850-600
VU2RYM இராஜபாளையம் 145.600 -600
VU2TJR தஞ்சாவூர் 145.850-600
VU2KJO தூத்துக்குடி 145.675-600
VU2VCM ஏலகிரி 145.475-600
VU2TCD ஏற்காடு 145.850-600
VU2POC ஏற்காடு 434.950 +1600
VU2YCD ஏற்காடு 434.950-1600
VU2DND கோத்தகிரி 144.7500 -600
VU2UDT உடுமலை 144.9000 -600
VU2IRT ஊட்டி 144.9750 -600 (செயல்பாட்டில் இல்லை)
VU2ECS கீழக்கரை 144.950 -600
The repeaters across Tamil Nadu & Kerala
Source: VU3BOJ
நெட்டில் கலந்துகொள்ளல்
அமெச்சூர் வானொலியினர் அனைவருமே நெட்டில் தொடர்ந்து பங்கு கொள்வதைப் பெருமையாக கருதுகின்றனர். இதன் மூலம் ஒத்த கருத்துடைய ஹாம்கள், தங்களின் தொழில்நுட்ப அறிவை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதோடு, பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை இந்த நெட்டின் துணை கொண்டு மேற்கொள்கின்றனர். ஒரு சில நெட்கள் பொழுது போக்கினை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. ஒரு சில ஹாம்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை இந்த நெட்டில் வரும் மூத்த ஹாம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இன்னும் ஒரு சில நெட்கள் ‘ரேடியோ செஸ்’ போன்ற விளையாட்டுகளையும் இதில் நடத்துகின்றனர். ஒரு சில ஹாம்கள், அமெச்சூர் வானொலி பொருட்களைச் சேகரிப்பவர்களாக இருப்பர். இவற்றை இந்த நெட்டின் மூலம் தெரிவித்து, அவற்றைத் திரட்டுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். இன்னும் ஒரு சில நெட்கள் போட்டிகளை ஹாம்களுக்கு வைத்து, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு விருதுகளை வழங்கி உற்சாகப்படுத்துகிறது.
Image: calcoara.com
பயனுள்ள நெட்கள்
பொழுதினை போக்க ஒரு சில நெட்கள் இருந்தால், இன்னும் ஒரு சில நெட்களோ அரசுக்கு உதவும் வகையில் செயல்படுகின்றன. குறிப்பாக, போக்குவரத்து தகவல்களை ஒலிபரப்பும் நெட், வானிலை நிலவரத்தினை அறிவிக்கும் நெட், அவசரக்கால நெட் மற்றும் பேரிடர் கால நெட் எனப் பல வகையான நெட்கள் தற்பொழுது உலகம் முழுவதும் ஒலிபரப்பி வருகின்றன.
இந்த நெட்கள், ஏதேனும் ஒரு வகையில் இந்த சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் ஒலிபரப்பி வருகின்றன. இது அமெச்சூர் வானொலியினருக்கே உரித்தான ஒரு வகையான மனிதாபிமானத் தன்மையாகும். ஒரு சில நெட்கள், சட்ட திட்டங்களை வகுத்து, அதன் அடிப்படையில் செயல்படுகின்றன. இவற்றை ‘டைரக்டேட் நெட்’ என்று அழைப்பர். இது போன்ற நெட்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அவை எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ, அந்த தகவல்களை மட்டுமே அதில் ஒலிபரப்புவர். அந்தத் தேவை நிறைவடைந்தவுடன் அந்த நெட்கள் நிறுத்தப்பட்டுவிடும்.
மறுகொணரி (Repeater)
தமிழகத்தில் செயல்பட்டுவரும் அனைத்து நெட்களும் மறுகொணரியின் உதவியுடனே ஒலிபரப்பி வருகின்றன. அதற்கு காரணம், இவற்றின் துணைகொண்டே, இந்த ஒலிபரப்புகள் நீண்ட தூரம் பயணிக்க முடியும். முதலில் ‘மறுகொணரி’ என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு சிலர் இதனை ‘மீளச்செயலி’ என்றும் அழைக்கின்றனர். அதற்குக் காரணம், குறைந்த சக்தியில் ஒலிபரப்பாகும் இந்த நெட்களுக்கு, அதிக சக்தியைக் கொடுப்பதால், அதற்கு மீளச்செயலி அல்லது மறுகொணரி என்று அழைக்கப்படுகிறது.
Image: qrznow.com
இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள ஊர்களில் தான் இந்த மறுகொணரி அமைக்கப்பட்டு, ஹாம் வானொலியினர் ஒலிபரப்பும் ஒலி அலைகளை, வாங்கி அது மறுகொணர்ந்து, மீண்டும் உயர் சக்திவாய்ந்ததாக்கி பெரிய அலைக்கொடி (Antenna) மூலம் ஒலிபரப்பப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சில மறுகொணரிகள் மலைமீது அமைந்துள்ளன. குறிப்பாக கோத்தகிரி, ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி மற்றும் ஏற்காடு மறுகொணரிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்றடைகின்றன.
தமிழகத்தில் எப்படி மிக அதிக மக்களைச் சென்றடையும் வானொலியாகக் கொடைக்கானல் அகில இந்திய வானொலியுள்ளதோ, அதே போன்றே, இந்த கொடைக்கானல் மறுகொணரியும் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் ஹாம்களைச் சென்றடைகிறது. சமீபத்தில் உடுமலைப்பேட்டை ஹாம்களும் ஒரு புதிய மறுகொணரியை கொடைக்கானலில் அமைத்துள்ளனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
(தொடரும்) ■
மேலதிக தகவல்களுக்கு:
http://www.vu2qar.com/repeaters.html#table1-5a
https://www.repeaterbook.com
http://hamradioindia.com/html/repeaters.htm
கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]
தொடர் 1ஐ வாசிக்க
http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க