மின்மினிகளை ஏமாற்றி இரையாக்கும் சிலந்தியின் தந்திரம்
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 2
மின்மினிகளின் ஒளிர்தல் அவற்றின் ரகசிய மொழியாகும். மின்மினிகள் இந்த ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்தி மற்ற மின்மினிகளுடன் தொடர்பு கொள்கின்றன என்பது நமக்குத் தெரியும்.
அப்ஸ்கான்டிடா டெர்மினாலிஸ் இனத்தின் ஆண் மின்மினிகள் பெண்களைக் கவர்ந்திழுக்க இரண்டு விளக்குகளுடன் பல துடிப்பொளிகளை எழுப்புகின்றன. அதே சமயம் பெண் மின்மினிகள் ஆண்களைக் கவர்ந்திழுக்க ஒரே விளக்குடன் ஒற்றைத் துடிப்பொளியை ஏற்படுத்துகின்றன.
இதனால், மின்மினிகள் ஆண் மற்றும் பெண் சமிக்ஞைகளை வேறுபடுத்தி அடையாளம் காண முடியும், இருளில் ஒருவருக்கொருவர் கண்டுபிடிக்க முடியும். இது இனச்சேர்க்கைக்கு மிகவும் முக்கியமான பண்பாகும்.
மின்மினிகளின் இந்தப் பண்பினை நம்மை விட சிலந்திகள் நுட்பமாக புரிந்து கொண்டுள்ளன என்பதே சமீபத்திய செய்தி. சீனாவின் ஹுவாஜாங் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் நிபுணர் சின்ஹுவா ஃபூ தலைமையிலான குழு, கரண்ட் பயாலஜி இதழில் 19, ஆகஸ்ட், 2024 அன்று இந்த ஆய்வை வெளியிட்டது.
மின்மினிகளின் உயிரி ஒளிர்தல் சமிக்ஞைகளை ஆராய்ந்து வரும் ஃபூ, தனது ஓர் ஆய்வுப் பயணத்தில் சிலந்திகளைப் பற்றி விசித்திரமான ஒன்றைக் கண்டார். சிலந்தி வலைகளில் சிக்கிய மின்மினிகளில் கிட்டத்தட்ட அனைத்தும் ஆண்களே. ஒருங்கிணைக்கப்பட்டு எடுத்துக் கொண்டால், இதற்கு பெரிய அர்த்தம் இருக்காது. ஆனால் அடுத்தடுத்த ஆய்வுப் பயணங்களில் அவர் அதே விஷயத்தைக் கண்டார்.
அரானியஸ் வென்ட்ரிகோசஸ் என்பது சீனா, ஜப்பான் மற்றும் கொரியா முழுவதும் பரவலாக காணப்படும் ஒரு சாதாரண தளர்ந்த நூற்புச்சிலந்தி இனமாகும். இச்சிலந்தியின் வலையில் ஒரு பெண் மின்மினி சிக்கியது அரிதாகவே காணப்பட்டது, வெறும் வாய்ப்பாக இதனைத் தள்ளிவிட இயலாது. ஆராய்ச்சியாளர்கள் பல இரவுகள் சிலந்திகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில், மின்மினிகளின் நடத்தை இன்னும் விசித்திரமாக இருந்ததைக் கண்டனர்.
சிலந்தி வலையில் சிக்கிய பின்னர், ஆண் மின்மினிகள் பெண் மின்மினிகளைப் போல, ஒற்றை துடிப்பு ஒளியை ஒளிரச் செய்வதைப் பார்க்க முடிந்தது. இது ஒரு தற்செயல் நிகழ்வாகக்கூட இருக்கலாம், இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய ஒரு சோதனையை நடத்தினர்.
சிலந்தி உள்ள வலையில் சிக்கிய ஆண் மின்மினிகள், பெண் மின்மினிகளைப்போல சமிக்ஞை செய்வதை சோதனை உறுதிப்படுத்தியது. சிலந்தி இல்லாத வெற்று வலைகளில் சிக்கிய ஆண்மின்மினிகள் இவ்வாறு மாற்றி சமிக்ஞை செய்வதில்லை. இது மின்மினிகள் வலையில் சிக்கியவுடன் துன்ப சமிக்ஞைகளை வெளியிடுகின்றன என்ற கருதுகோளுக்கு முரணானது.
மேலும் ஏதோ ஒன்று இருந்தது. அதனைக் கண்டறிய ஆய்வாளர்கள், மின்மினிகளின் ஒளிரும் பகுதியை கருப்பு நிறத்தால் மறைத்து, அவற்றை சிலந்தி வலையில் சிக்க வைத்தனர். ஒளிராத இந்த மின்மினிகளை சிலந்திகள் ஒன்றும் செய்யவில்லை, அல்லது வெறுமனே தின்று விடுகின்றன.
ஒளிரக்கூடிய ஆண் மின்மினிகளின் மீது சிலந்தி ஒரு சிறு தாக்குதலொன்றை நடத்துவதைக் கண்டறிந்தனர். இந்த தாக்குதல் மின்மினிகளின் ஒளிரல் தெரியும் போது மட்டுமே நடந்தது. மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட மின்மினியை சிலந்தி தன் வலையிலேயே விட்டு வைத்தது.
சிலந்தியின் விஷம் அல்லது கடிதான் இந்த நடத்தை மாற்றத்திற்கு காரணம் என்பது தெளிவாக இல்லாதபோதிலும், இத்தாக்குதலின் ஏதோ ஒன்று மின்மினிகளின் நரம்புகளைப் பாதித்து அவற்றின் சமிக்ஞை பாணியை மாற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அதாவது, இவை ஆண் மின்மினிகளைப் பிடித்து, பெண் மின்மினிகள் பொதுவாகப் பயன்படுத்தும் சமிக்ஞை வடிவங்களை ஒளிரச் செய்ய வைக்கின்றன.
இத்தந்திரத்தினால் ஏமாற்றப்பட்டு அச்சிலந்தியின் வலையில் ஏகப்பட்ட ஆண் மின்மினிகள் சிக்கிக்கொண்டு சிலந்திக்கு உணவாகின்றன.
நாமறிந்த வரையில் சைக்கோசா இன சிலந்திகள் வலையின் மையத்தில் இறந்த பூச்சிகள் மற்றும் குப்பைகளாலான பெரிய குவியல்களை உருவாக்குகின்றன. இருப்பினும், அவைகளின் இலக்கு இரையை வசீகரிப்பது அல்ல, வேட்டையாடிகளைத் தடுப்பதே.
மற்றவர்களைத் தங்கள் இறப்பை நோக்கி வசீகரிக்க, தன்னிடம் சிக்கிய ஒரு உயிருள்ள, மரணபயத்தில் இருக்கும் ஒரு பூச்சியை கைப்பாவையாக ஆக்குவது முற்றிலும் வேற லெவல் தந்திரம் தானே.
மின்மினி மற்றும் சிலந்தி இடையேயான இந்த சிக்கலான உறவு, இயற்கையில் ஒவ்வொரு உயிரினமும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், உயிர்வாழவும் எவ்வளவு தூரம் செல்லும் என்பதைக் காட்டுகிறது. இந்த ஆய்வு, நாம் இயற்கையைப் பற்றி எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறோம் என்பதையும் உணர்த்துகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தொடர்ந்து பேசுவோம்…
எழுதியவர் :
த. பெருமாள்ராஜ்
ஆய்வுக்கட்டுரை இணைப்பு :
https://doi.org/10.1016/j.cub.2024.07.011
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.