Sports and Social Division Article in Tamil By Era. Ramanan. Book Day (Website) And Bharathi TV (YouTube) are Branch of Bharathi Puthakalayam.

விளையாட்டும் சமூகப் பிரிவினையும் – இரா. இரமணன்



டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலிய, பிரெஞ்சு, விம்பிள்டன் (இங்கிலாந்து) மற்றும் அமெரிக்க ஓப்பன் போட்டிகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஆண்கள் ஒற்றையர் இரட்டையர் அதேபோல் பெண்கள் ஒற்றையர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் விம்பிள்டன் போட்டியில் சில வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது. போட்டியாளர்கள் அனைவரும் வெண்மை நிற ஆடையையே அணிய வேண்டும். மேலும் போட்டிகள் Men (ஆண்கள்), women (பெண்கள்) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக ஜென்டில்மேன், லேடிஸ் என்று குறிப்பிடப்படுகிறது.

மென் அல்லது விமன் என்கிற ஆங்கில வார்த்தைகள் ஒரு பாலினத்தை குறிப்பிடுகிறது; ஜென்டில்மேன் அல்லது லேடிஸ் என்பவை ஒரு சமூகப் பிரிவை (மேல்தட்டு) குறிப்பிடுகிறது. இந்த வார்த்தைகள் எப்படி வந்தன என்பதை பார்க்கலாம்.

மத்திய காலம் என்றழைக்கப்படும் கிபி ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை மேலை நாடுகளில் இரண்டு வகை மக்களே குறிக்கப்படுகின்றனர். மேல்தட்டு மக்களாகிய பிரபுக்கள் (ஏர்ல், பேரன்ஸ், நைட்ஸ், எஸ்குயர்ஸ்) மற்றும் அடிமைகள், குடிமக்கள் போன்றவர்கள். பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில்தான் ஜென்டில்மேன் என்கிற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்ததாம்.

இதற்கு அரசர் ஐந்தாம் ஹென்ரியின் சட்ட விதிகள் ஒரு காரணம் என்றாலும் முக்கியமான காரணம் இந்த காலத்தில் ஏற்பட்ட பெரும்தொற்றினாலும் மற்ற பொருளாதார காரணங்களினாலும் பிரபுக்களின் இளைய சந்ததியினர் நிலம் தொடர்பான தொழிலில் ஈடுபட விரும்பவில்லை. அவர்கள் அயல்நாடுகளுக்கு சென்று போர்களில் ஈடுபட்டு செல்வம் சேர்க்க தொடங்கினர். அல்லது வேறு பெரும் பிரபுக்களின் சபைகளின் தயவில் வாழத் தொடங்கினர். அவர்கள் தங்களை ஜென்டில்மேன் என்று அழைத்துக் கொண்டனர்.



ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது படையினருக்கு உடற்பயிற்சிக்காகவும் தங்களது பொழுதுபோக்கிற்காகவும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். இந்தியர்கள் விளையாட்டு உணர்வற்றவர்கள்; அதற்கு தேவையான உடல் வலிவற்றவர்கள் போன்ற கருத்துகளைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் வருகைக்கு முன்னரே இந்தியாவில் மல்யுத்தம், போலோ, வேட்டையாடுதல் போன்ற வீர விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அரசர்கள் குறிப்பாக பாட்டியாலா சமஸ்தான அரசர்கள் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளை ஆதரித்தார்கள். இந்த விளையாட்டுகள் ஆங்கிலேயர்கள், இந்திய மன்னர்கள் மற்றும் மக்களிடையே ஏற்படுத்திய உறவுகள் சிக்கலானவை. ஒருபுறம் ஆங்கிலேயர்கள் தங்களுடைய உயர்வு மனப்பான்மையை காட்டுவதும் இன்னொருபுறம் மன்னர்கள் ஆதரித்த அணிகளுடன் விளையாடுவதும் நடைபெற்றன. (சோஷியல் சயின்டிஸ்ட் 574-575- சவுரவ் சாகர் கட்டுரை).

இந்தப் பார்வை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. 2014இல் நீதியரசர் பரந்தாமன் அவர்களும் அவருடன் இருந்த இரு வழக்குரைஞர்களும் அவர்கள் அணிந்திருந்த ஆடை காரணமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விழா அரங்கினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர். 80களில் உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணையர் அவர்களும் வேட்டி அணிந்திருந்ததால் ஜிம்கானா கிளப்பினுள் அனுமதி மறுக்கப்பட்டார். இப்படிப்பட்ட கிளப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒத்த கருத்துடையவர்களுக்காக நடத்தப்படுவதாகவும் அவர்கள் சில நாகரீகங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் சொல்லப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை வேட்டி நாகரீகம் இல்லை போலிருக்கிறது.

இன்றைக்கு நம் நாட்டினர் பல விளையாட்டுகளில் திறமைகளை காட்டுகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு ரூ ஐந்து இலட்சம் செலவுத் தொகையை அளித்தும் தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் வென்றால் முறையே ரூ. 3 கோடி, 2 கோடி, 1 கோடி அறிவித்திருப்பதும் பாராட்டப்பட வேண்டியது. மக்கள் சீனம் போல பெரும்தொகையான மக்களுக்கு பயிற்சி அளித்தால் நாமும் அவர்களைப் போல் உலகில் முதல் நிலைக்கு வரலாம்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *