இலங்கையில் முதல் இடதுசாரி ஜனாதிபதி
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
ஜனதா விமுக்தி பெருமனா (ஜேவிபி) என்னும் கட்சியின் தலைவரும், ‘தேசிய மக்கள் சக்தி’ (National Peoples’ Power) என்னும் இடது மற்றும் முற்போக்கு கட்சிகளின் கூட்டணியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க இலங்கையில் செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் அவருக்கு 57,40,179 வாக்குகள் (42.3 விழுக்காடு) கிடைத்திருக்கிறது. இது அவர் 2019இல் பெற்றிருந்த 4,18,553 வாக்குகளிலிருந்து (3.16 விழுக்காடு) குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வாகும். இது ஒரு வரலாறு படைத்துள்ள வெற்றியுமாகும். ஏனெனில், முதன்முறையாக இலங்கையில் ஜனாதிபதியாக ஓர் இடதுசாரி தலைவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
திஸாநாயக்கவின் வெற்றியின் எழுச்சிக்கு முக்கிய காரணம், 2022இல் நாட்டையே உலுக்கிய ‘அரகலய’ என்னும் போராட்டத்தை அவருடைய கட்சி முன்னின்று நடத்தியதேயாகும்.

நிறுவனமயமாக்கப்பட்டிருந்த அரசியல் ஊழல், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற இன்றியமையாப் பண்டங்களின் பற்றாக்குறை முதலியவற்றால் மக்கள் மிகவும் நொந்துபோயிருந்தார்கள். அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த எழுபதாண்டுகளாக ஆட்சியாளர்களால் செயல்படுத்தப்பட்டு வந்த பேரழிவுகரமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக விவசாயிகள் இடுக்கண்களுக்கும், இடையூறுகளுக்கும் உள்ளாகி இருந்தனர். பணவீக்கம் அதிகரித்திருந்தது. வேலையின்மை அதிகரிப்பதற்கும், மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைவதற்கும் வழிவகுத்தது.
அடக்கி வைத்த கோபம் இந்தப் போராட்டங்களில் வெடித்தது. அதிபர் ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு பிரதான ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கிடையில் அதிகாரப் பதவியை வைத்திருக்கும் முயற்சியில், ரணில் விக்கிரமசிங்கெ, ராஜபக்ஷக்களின் ஆதரவை முழுமையாகச் சார்ந்து இருக்க வேண்டும் என்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
விக்கிரமசிங்கெ நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் தயாராக இல்லாததால், அவர் நிலைமையைச் சரிசெய்திடத் தவறிவிட்டார். சர்வதேச நிதியத்தின் (IMF) கடும் நிபந்தனைகள் பலவற்றை ஏற்றுக்கொண்டு கடனுக்காக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர் ஊழலைச் சமாளிக்கத் தவறிவிட்டார். அவருடைய கொள்கைகள் நிலைமையைச் சரிசெய்வதற்குப் பதிலாக, மக்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றும் விதத்திலேயே அமைந்திருந்தன. நாட்டின் ஏற்றத்தாழ்வு அதிகரித்தது. நாட்டில் உயர் நிலையிலுள்ள 20 விழுக்காடு பணக்காரர்கள், நாட்டின் வருமானத்தில் பாதியை சொந்தமாக்கிக் கொண்டிருந்தனர். அதேசமயம் குறைந்த 20 விழுக்காட்டினரின் வருமானமோ வெறும் 5 விழுக்காடு அளவேயாகும். அரசாங்கத்தின் தோல்விகளுக்கு எதிராக மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தால், அதனை அரசாங்கம் அடக்குமுறையை ஏவி நசுக்க முயற்சித்தது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் (Online Safety Act) மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் (Anti-terrorism Act) போன்றவற்றை இயற்றி இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சிகளுமே பொருளாதாரத்தைச் சீரமைப்பது எப்படி என்பதைச் சுற்றித்தான் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டன.
மக்கள் எதிர்கொண்ட அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியும், திஸாநாயக்கவும் பிரச்சாரம் மேற்கொண்டதால், அவர்கள் மக்கள் மனதில் எளிதாக இடம் பிடிக்க முடிந்தது. திஸாநாயக்காவின் தேர்தல் அறிக்கை பொருளாதாரத்தை சீர்திருத்தவதற்கு முன்னுரிமை அளித்தது. மேலும் அனைத்துக் குடிமக்களுக்கும் அடிப்படை சேவைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைப்பது உத்தரவாதப்படுத்தப்படும் என்றும் அதற்கேற்ற விதத்தில் நாட்டில் வீங்கிக்கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வைச் சரிப்படுத்தக்கூடிய விதத்தில் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் உறுதிமொழி அளித்தார். இதில் கல்வி முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் தற்போது இருந்துவரும் கட்டமைப்பு வரையறைகளை சரிசெய்து மேம்படுத்துவது ஆகியவையும் அடங்கும்.
மேலும் விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்காக அரசாங்கத்தின் ஆதரவு அமைந்திடும் என்றும் அறிக்கை வலியுறுத்தியது. மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்தும் அறிக்கை குறிப்பிட்டு அவற்றிற்குத் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறது. 2009இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்தே தமிழர்கள் அதிகாரப் பகிர்வு மற்றும் நல்லிணக்க அணுகுமுறையைக் கோரி வருகின்றனர். இவ்விரு விஷயங்களிலும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தங்கள் உறுதிமொழிகளைக் காப்பாற்றிடத் தவறிவிட்டனர். இவை சிறுபான்மையினர் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தி இருக்கிறது.
மாகாணங்களுக்கான தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படும் என்றும், (இதற்குமுன் பத்தாண்டுகளுக்கு முன் 2013இல்தான் மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன) புதிய அரசமைப்புச்சட்டம் அவர்களின் பிரச்சனைகளைக் களைந்திடும் என்றும் ‘தேசிய மக்கள் சக்தி’ உறுதி அளித்திருக்கிறது.

அரசியல் துறையில், 1978இலிருந்தே நடைமுறையில் இருந்துவரும் இப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உடனடியாக ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திஸாநாயக்க உறுதி அளித்தார். அதேபோன்றே இப்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும் அவர் ‘ஊழல் மற்றும் இனவெறிக் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவேன்’ என்றும் உறுதி அளித்தார். ஆட்சியில் உள்ள அனைவரும் மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய விதத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும், ‘தாங்கள் எது செய்தாலும் தங்களுக்குத் தண்டனை இருக்காது’ என்கிற கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றன.
2022 போராட்டம் இரு பெரும் அரசியல் கட்சிகளின் திவால்தன்மையை தோலுரித்துக்காட்டிவிட்டது. மக்கள் இவ்விரு கட்சிகளுடனும் சலித்துவிட்டனர். இவ்விரு கட்சிகளையும் இனி நம்பமுடியாது என்றும், இவற்றால் நாட்டிலுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியாது எனவும் உணரத் தொடங்கிவிட்டனர். இவற்றுக்கு மாற்று குறித்து அவர்கள் ஆராயத் தொடங்கினர். ஜனதா விமுக்தி பெரமுனா/தேசிய மக்கள் சக்தி அத்தகைய மாற்றாக உருவெடுத்துள்ளது. 2022இல் நடைபெற்ற போராட்டத்தில் இவர்கள்தான் முன்னணியில் இருந்தார்கள் என்கிற உண்மையும், அரசியலில் நேர்மையானவர்கள் மற்றும் தூய்மையானவர்கள் என்கிற நற்பெயரும் இவர்களுக்கு உதவியிருக்கிறது.
இப்போது தேர்தல் வெற்றிக்குப்பின்னர், திஸாநாயக்கவும், அவருடைய கூட்டணியும் மாபெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன. அவருடைய உடனடிக் கவலை, சர்வதேச நிதியத்தின் (IMF) கடனை எப்படி சமாளிப்பது என்பதாகும். மக்கள் நலன் பாதிக்கப்படாத விதத்தில் இது தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்திருக்கிறார். இதனுடன் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களும் மற்றும் பல்வேறு நாடுகளுடனான உறவுகளும், குறிப்பாக அண்டை நாடுகளுடனான உறவுகளும், மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கும்.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் இருப்பிடம் மிகவும் முக்கியமானது. இந்தக் கடற்பரப்பில் ரோந்து செல்வதற்காக அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில் திஸாநாயக்கவுக்கு இது ஒரு சவாலான பணியாக இருக்கும். ‘சார்க்’ (SAARC) நாடுகள் மற்றும் அணிசேரா இயக்கம் (NAM) ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதன் அடிப்படையில் தன் சுயேச்சையான அயல்துறைக் கொள்கையையும் மற்றும் பல்துருவக் கோட்பாட்டை (multipolarity) வலுப்படுத்திடவும் தனக்கிருக்கும் உரிய பங்கினை செலுத்துவது மக்களின் நலனுக்கு சிறந்த முறையில் அமைந்திடும்.
மற்றொரு மிகப்பெரிய சவால், சிறுபான்மையினர் குறித்து அரசின் அணுகுமுறை தொடர்பானதாகும். திஸாநாயக்க, தமிழ் மக்களின் வாக்குகளில் சிறுபான்மையினரை மட்டுமே வென்றுள்ளார் என்பது நிதர்சனமான உண்மை. இது, சிறுபான்மையினர் குறித்து, குறிப்பாக தமிழர்கள் குறித்து, இவருடைய கட்சியின் அணுகுமுறை தொடர்பாக இருந்துவரும் அச்ச உணர்வுகளைக் காட்டுகின்றன. யுத்தமும், பொருளாதாரப் பின்தங்கிய நிலையும் சிறுபான்மையினரில் பெரும் அளவிலான பிரிவினர்களை அந்நியப்படுத்தி இருக்கிறது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றும் பெரும் பொறுப்பு திஸாநாயக்காவிற்கு உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் அதிகாரங்களை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதுதான் கேள்வி.

மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த மக்கள், திஸாநாயக்காவுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் அவர்களின் நேர்மை மற்றும் அவர்கள் பிரச்சாரத்தின்போது கொண்டுவந்த புத்துணர்ச்சியை நம்பி, அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இப்போது வெற்றிபெற்றவர்கள் மக்களின் அபிலாசைகளையும், மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளையும் நிறைவேற்றிட வேண்டும்.
நாங்கள் திஸாநாயக்காவுக்கும் ஜேவிபிக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் உறுதியளித்துள்ளபடி மாற்றத்தைக் கொண்டு வந்து, இடதுசாரிகளை வலுப்படுத்துவார்கள் என உண்மையாகவே நம்புகிறோம்.
ஆளும் வர்க்க கட்சிகளுக்கு எதிரான தேர்தல் வெற்றிகள் மக்களுடன் நின்று போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலமே எய்திட முடியும் என்கிற நம்பிக்கையை திஸாநாயக்காவின் வெற்றி மீண்டும் நமக்கு அளித்திருக்கிறது.
(செப்டம்பர் 25, 2024)
தமிழில்: ச.வீரமணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத பவுத்த பிக்குகளின முன் பரவியேற்பு நடத்திய திசநாயக எப்படி தமிழர்களின் நம்பிக்கைக்கு உரியவராக மாறுவார். ஈழத் தமிழர்களின் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து எந்தக் கருத்தும் இல்லாதவர்கள். எப்படி நம்புவது?