“ஸ்ரீ முருகன் டாக்கீஸ் (Sri Murugan Talkies)” நூலின் வாசிப்பு அனுபவம்.
இலக்கியம் வாழ்வின் பிரதிபலிப்பு, சிறுகதை வாழ்வில் ஏற்பட்ட குறிப்பிட்ட நிகழ்வின் தாக்கம். எட்கர் ஆலன்போ கூறுவது போல ஒரு குறித்த நிகழ்வை நோக்கிய வார்த்தைகளின் கோர்வை சிறுகதை. ஒரு புதினம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சிந்தனை துண்டலையும் விட, ஒரு சிறு கதை ஏற்படுத்தும் சிந்தனை தூண்டல் மிகவும் பெரியது. இவை அத்தனை உணர்வுகளையும் உள்ளடக்கியதாக உள்ளது நம் ஆசிரியரின் ஸ்ரீ முருகன் டாக்கீஸ் (Sri Murugan Talkies). பொதுவாக படைப்புகளில் காலம் கடந்து நிற்கும் தன்மை கொண்டவை, என எடுத்துக்கொண்டால் சமூக அக்கறையும், விழிப்புணர்வும் கொண்ட படைப்புகள் தான்.அது கவிதையாக இருந்தாலும் சரி, புதினமாக இருந்தாலும் சரி அல்லது சிறுகதையாக இருந்தாலும் சரி, அந்த வகையில் ஆசிரியரின் ‘மஞ்சள் விளக்கு’ சிறந்த உதாரணம். எத்தனை திரைப்படங்கள் எடுத்தாலும், எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும், மனம் திருந்தாத காம பித்தர்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறார்கள், என்பது நிதர்சனம்.
அடுத்ததாக எம்.ஜி.ஆர். செல்லையா போன்ற பல தொழில் இழந்தோர் உலகமயமாக்களால் பாதிக்கப்பட்டு கொண்டே இருப்பது அன்றாட நிகழ்வு. இக்கதை தொழில் செய்வதற்கு ஆசிரியர் கொடுக்கும் விழிப்புணர்வு. காலத்திற்கு ஏற்றார் போல் நாமும் மாறித்தான் ஆக வேண்டும், இல்லையெனில் நாமும் ஒதுக்கப்படுவோம். நோக்கியா அலைபேசி நிறுவன அதிபரின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரணம். மனிதர்கள் விசித்திரமானவர்கள் உண்மைதான். எத்தனை பகை இருந்தாலும் இறப்பின் பொழுது சேர்ந்து விடுவது உறவின் பலம். ஆனால் ‘போய்வா கனவா பொழுதோட’ கதையில், கல் போன்று இருந்த ரேணுகா, விசித்திரத்தின் விசித்திரம். ஏனெனில் கணவனின் இறப்பிற்குக் கூட கரையாதவள்.
ஆனால் கொல்லி வைத்த மகனை கட்டிப்பிடித்து அழும் விந்தையானவள். ‘ஸ்பா’ ஒரு விசித்திரமான இடம், சிலர் மன அமைதிக்காக உடலை சாந்தப்படுத்த செல்லும் வித்தியாசமான இடம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை வாழ்க்கையின் கோர முகத்தை சிறப்பாக எதார்த்த பாணியில் கூறியிருக்கும் ஆசிரியரின் தைரியம் பாராட்டுக்குரியது. உண்மைகளை அப்பட்டமாக சொல்ல பலருக்கு தைரியம் இல்லை, அதற்காக அவர்கள் கூறும் காரணம் உண்மையை வெளிப்படையாக கூறினால், அது முகம் சுளிக்க வைக்கும் என்று. வைரவன் கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் கதாநாயகன் போல் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஒரு வகையில் மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் நல்ல குணமும், உதவும் பண்பும் என ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ரமேஷ் ஃபோனை வேறொருவர் எடுக்கிறார் ரமேஷ் தொடர்பில் இல்லை என தீப்தி கூறும் பொழுதே கதையின் முடிவை கணித்து விட முடிகிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு தனி அத்தியாயம்.
ஒவ்வொருவரின் அனுபவமும் ஒரு வாழ்க்கை பாடம். இது கற்பனையாக எழுதப்பட்ட ஒன்று அல்ல, ஒரு உண்மையான அரசியல் தொண்டனின் அவல நிலையை கூறும் உண்மை.பெட்ரோல் குண்டுகள் தாக்கி வாழ்க்கையை இழந்த மனிதர்களை விட பல சுயநல தலைவர்களின் வார்த்தைகள் தாக்கி வாழ்க்கை அழிந்தவர்கள் தான் பலர்.அரசியலில் ஆழம் கண்டவர்கள் அறிந்த உண்மை இது. மாசாணம் கேட்ட அந்த பெரியோர்களே! தாய்மார்களே! எங்கோ கேட்ட வார்த்தைகள் அல்ல, எப்போதும் கேட்டு கேட்டு வெறுப்படைந்த அவரின் உள்ளத்தின் வார்த்தைகள். எளிய மக்களின் வாழ்வில் ஏற்படும் பல தவிப்புகளை எளிய பாணியில் எடுத்து வைத்திருக்கிறது ‘பட்டாளத்தில் இருந்து வாரேன்’ எதிர்பாராத வாழ்க்கை திருப்பங்கள் எதையும் கொண்டு வரும் என்பதைப் போன்ற நிகழ்வுகள் தினசரி பலர் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. முடிவு தான் தமிழ் பட பாணியில் முடிக்கப்பட்டு விட்டது.
எதார்த்த நிகழ்வுகள் பல நம் வாழ்வில் பல எதிர்பாராத தாக்கங்களை ஏற்படுத்துவது போல நடக்கும் நிகழ்வுகள் தான் ‘லாரி’ என்னும் சிறுகதை. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வில் கஷ்டங்கள் பல இருந்தாலும் அந்த வேலையை விட்டாலும் வேறு வழி ஏதுமில்லை என்னும் நிலை. உண்மையான உறவு நிலையை அறிந்ததும் விமலாவையும் ஒரு அக்காவாக ஏற்று வீட்டிற்கு அழைத்து வரும் சிவனேசர் நவயுக ராமசாமி தான். (முற்போக்கு சிந்தனையாளன்)
நாம் முன்னேறி விட்டதாக நினைக்கும் போதெல்லாம் இன்னும் சில வித்தியாசமான மனிதர்கள் குழந்தைகளில் பாலினம் பார்த்து, ஆண் மகவு மட்டுமே வாரிசு என்ற சிந்தனையை கொண்டு அதை வெளிப்படுத்தும் போதுதான் நாம் பின்னேறிக் கொண்டுள்ளோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ‘செவிலி’ என்னும் சிறுகதை இன்னும் இந்த சமுதாயம் முழுமையாய் மாறவில்லை பாலின பாகுபாடு கொண்டுதான் செயல்படுகிறது, என்னும் உண்மையை மீண்டும் நினைவு படுத்துகிறது.
இது மறுக்க முடியாத பழமை மனிதர்களின் மனதிலிருந்து என்றும் நீக்க முடியாத உணர்வாக உள்ளது. உண்மையில் அன்புக்கு ஏங்கும் பல அர்ப்பணிப்பு செவிலிகளை தினசரி வாழ்க்கையில் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் இது போன்ற முதிர்ச்சி இல்லாத மனித மனங்களை மாற்றும் வழிகளை நம் ஆசிரியர் அறிவுறுத்தவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.
‘கைப்பக்குவம்’ மனப்பக்குவம் உடைய நல் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என வெளிப்படுத்தும் முயற்சி கதிர் போன்ற கதாபாத்திரங்களை தினசரி எதிர்பார்க்கிறோம். காலம் மாறினாலும் என்றும் மாறாத தவிர்க்க முடியாத ஒன்றாக இப்போதும் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிகழ்வு சாதிய பாகுபாடு. 21 ஆம் நூற்றாண்டிலும் சாதிய பெருமை கொண்டு ஒரு சிலர் செயல்படுவது பரிதாபகரமானது. தனி சுடுகாடு, சுடுகாட்டுக்கு தனிப்பாதை, கீழ் சாதி பாதை என்ற பாகுபாடுகள் இன்னும் உள்ளது, என்பது கொடுமையான உண்மை. இருப்பவருக்கு ஒரு பொருட்டல்ல, இல்லாதவருக்கு அதற்கான ஏக்கம். இருப்பவர் அகற்ற நினைக்கிறார், இல்லாதவர் வளர்க்க நினைக்கிறார்.
அதிகமானாலும் பிரச்சனை, இல்லாமல் போனாலும் பிரச்சனை. அந்த விசித்திரமான பொருள் ‘முடி’ . சுற்றத்தார், உறவுகள் என அனைவரும் முடி இல்லாத ஒருவரை பார்க்கும் பாங்கு சற்றே வித்தியாசமானது. ஒருவரின் குண நலனை பற்றி எந்த சிந்தனையும் இன்றி எளிமையாக சொட்டை தலை, வழுக்கை என்று கிண்டல் செய்வது சாதாரணமாகிவிட்டது. ஒருவரை நாம் உருவ கேலி செய்வது எவ்வளவு தவறு, அதேபோல்தான் முடி இல்லாதவரை கிண்டல் செய்வதும் உருவ கேலி தான், என்பதை எடுத்துச் சொல்வதோடு அவர்களின் உயர்ந்த பண்புதான் அவர்களின் தன்மையை சொல்லுமே தவிர, முடி ஒரு பொருட்டல்ல என உணர்த்த’ வழுக்கை ‘ எனும் கதை முயற்சித்து இருக்கிறது. மொத்தத்தில் மயிறு பெரும் பொருட்டல்ல.
‘அன்பு என்னும் மருந்து’ கதையில் வரும் மாணிக்கவேல் போல் ஆசிரியரும், செந்தில்குமார் போல் மாணவரும் இருக்க வேண்டும் என நினைப்பதும் எதிர்பார்ப்பதும் எதார்த்தமானது. ஆனால் நடைமுறையில் சற்றே கடினமானது. ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கரையாக இருப்பது அவர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பது என்பது எப்போதும் நடக்கக் கூடியதுதான், ஆனால் இந்த தலைமுறையின் மாணவர்கள் பலர் செந்தில்குமார் போல் இருப்பதை விரும்புவதில்லை. ஒட்டு மொத்தமாக குறை கூற முடியாது என்றாலும் எண்ணிக்கையில் அதிகமானதை பொதுவில் எடுத்துக் கொள்ளும் வகையில் நன்றி உணர்வை வெளிப்படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளும் மாணவர்கள் குறைந்துவிட்டனர். ஒரு ஆசிரியராக கதை ஆசிரியரின் எதார்த்தத்தை தாண்டிய ஏக்கம் இக்கதையில் வெளிப்பட்டுள்ளது.
நம் வாழ்வில் பல விசித்திர மனிதர்களை சந்திக்கிறோம். ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு பக்க வாழ்க்கை இருக்கும் என்பதை பல நேரங்களில் யாரும் நினைப்பதில்லை. அவர்களின் மற்றொரு வாழ்க்கையை அறியும் பொழுது சிலர் மேல் நல் மதிப்பு உயர்கிறது, சிலர் மேல் பரிதாபம் ஏற்படுகிறது, சிலர் மேல் வெறுப்பும் வருகிறது. இப்படிப்பட்ட விசித்திர முகங்களை கொண்ட மனிதர்களுக்கிடையில் ஜெயராஜ் என்ற கதாபாத்திரத்தை எந்த வகையில் எடுத்துக் கொள்வது. அவர் மேல் யாரும் பரிதாபப்பட்டு உறவு கொண்டாடுவார்களோ என்ற எண்ணத்தால் தானோ என்னவோ மிகவும் நெருங்கிய நண்பர்களிடமே தன் சோகங்களை காட்டாமல் மறைத்திருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் இக்கதை எனக்குள் ஒரு வித்தியாசமான, என்னைப் பற்றி அடுத்தவர் அறிய அவசியம் இல்லை என்ற உணர்வோடு, நான் கொண்டிருந்த எண்ணங்களை நினைவுக்கு கொண்டு வந்தது. உளவியல் ரீதியாக சிந்திக்கும்போது நம் துன்பங்களை ஏன் அடுத்தவரிடம் சொல்லி அவரை துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நம்மில் பலர் நம் பிரச்சனைகளை பிறரிடம் சொல்லாமல் இருக்கலாம். ஆசிரியர் உளவியல் ரீதியாக மற்றொரு கருத்தையும் வெளிப்படுத்துகிறார் நமக்கு பிடிக்காதவர்களுக்கு பிடித்தவை நமக்கு பிடிப்பதில்லை. மனம் அதை வெறுக்கிறது.
‘கல்யாண சாப்பாடு’ கதை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான சிந்தனை, நம்மில் பலர் நம் வாழ்க்கையை முழுமையாக வாழாமல் பிறர் என்ன நினைப்பார்களோ, என்ற சிந்தனையில் நம் விருப்பங்களையும், ஏக்கங்களையும் வெளிப்படுத்துவது இல்லை. நல்ல மனிதர்களையும், உறவுகளையும் நாம் இழந்து விடக்கூடாது, அதே சமயம் நாமும் பிறரின் எண்ணங்களையும், விருப்பங்களையும், சாதி,சம்பிரதாயம் கட்டுப்பாடு என நிராகரிக்கக் கூடாது, என்ற உயர்ந்த சிந்தனையை நமக்குள் உருவாக்குகிறார்கள், விமலும்,ருத்ராவும், சிவ சைலமும். மனிதர்கள் எப்போதும் மனிதர்களாகவே பார்க்கப்பட வேண்டும்,இவன் அந்த ஆள், இவன் இந்த சாமி கும்பிடுகிறவன் என்று அல்ல.
பல்வேறு வகையான சிந்தனையை தூண்டும் இலக்கியத்தின் இனிமையை சிறுகதை வாயிலாக வாசிப்பிற்கு பரிசளித்த, ஊக்குவி பூட்டும், வாசிப்பை நேசிக்கும்
நல்ல ஆசிரியர் யாழ். ராகவன் அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்…
நூலின் தகவல்கள் :
நூல் : ஸ்ரீ முருகன் டாக்கீஸ் (Sri Murugan Talkies) – சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : திரு யாழ் .எஸ் ராகவன்
பதிப்பகம் : A M books house பதிப்பகம் , சென்னை
விலை : 150 ரூபாய்
நூலறிமுகம் எழுதியவர்:
ஆ.ஜேம்ஸ் போஸ்கோ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.