ஆசிரியர் திரு யாழ் எஸ் ராகவன் அவர்களின் ‘’ஸ்ரீ முருகன் டாக்கீஸ் சிறுகதைகள் ‘’ என்ற சிறுகதை தொகுப்பு தற்போது என் கைகளில் புரள்கிறது . மொத்தம் 15 சிறுகதைகள் கொண்ட இந்தப் புத்தகத்தை ஏ எம் புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது .அருமையான நூல் வடிவமைப்பு பெற்றுள்ள இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகளை நாம் வாசித்துப் பார்க்கும் போது , நமது மண்ணில் நமக்குத் தெரியாமலே உள்ள மனிதர்கள் , இதுவரை அடையாளம் காணப்படாமலே உள்ள ஆட்கள் என்று விளிம்பு நிலை மனிதர்கள் சட்டென்று நெருங்கி வந்து நம் மனதுக்குள் இடம் பிடித்துக் கொள்கிறார்கள் . இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள் , எத்தனை எத்தனை விதமான வாழ்க்கைகளை இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ என்பதை நினைத்துப் பார்க்கும்போது , மனதுக்குள் ஒரு பிரமிப்பு விரிவதை தடுக்க முடியவில்லை.
‘ ஸ்ரீ முருகன் டாக்கீஸ் ‘ என்ற இந்த சிறுகதை தொகுப்பிற்கு பத்திரிகையாளர் திரு பா திருமலை அவர்கள் அணிந்துரை அளித்திருக்கிறார் . தமிழ் ஆசிரியர் திரு நீ நாகேந்திரன் அவர்கள் வாழ்த்துரை கொடுத்துள்ளார் இது தவிர சிறுகதையாசிரியர் யாழ் எஸ் ராகவன் அவர்கள் சொல்லித் தீராத கதைகள் என்ற தலைப்பில் இந்த சிறுகதைகளை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் .
பொதுவாக இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள் உள்ளார்களோ , அத்தனை சிறுகதைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன என்பது உண்மை தான். இதுவரை யாராலும் அடையாளம் காணப்படாத மனிதர்கள் , புறக்கணிக்கப்பட்டவர்கள் , மறந்து விடப்பட்டவர்கள் , ஏமாந்து போனவர்கள் என இந்த தொகுப்பில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை தான் கதைகளாக வந்து இடம் பிடித்திருக்கின்றன. சில சிறுகதைகளை வாசிக்கும் போது கண நேரப் பரவசமும் , சில சிறுகதைகளை வாசிக்கும் போதும் வெந்நீர் ஒத்தடம் கொடுத்த சுகமும், இன்னும் சில சிறுகதைகளை வாசிக்கும் போது மனதில் குண்டு ஊசியால் குத்தப்பட்ட வலியையும் நாம் உணர்கிறோம் .
முதல் சிறுகதையான ‘ மஞ்சள் விளக்கு ‘ என்ற கதையிலேயே பெரிய தம்பி என்ற ஒருவன் காப்பகத்தில் மனு எழுதிக் கொண்டிருக்கிறான் . அந்தப் பகுதியில் உள்ள ஒரு மஞ்சள் விளக்கு பழுதானதால் , எத்தனையோ பெண்களின் வாழ்க்கை சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டுள்ளது என்பதை கண்டு மனம் வெதும்பி அவன் அந்த மனுவை அரசாங்கத்திற்கு எழுதுகிறான்.
மஞ்சள் விளக்கு என்பது ஒரு குறியீடு . நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இந்த தேசமே ஒரு மஞ்சள் விளக்கு போலத் தான் காட்சியளிக்கிறது.
இரண்டாவது சிறுகதையான ‘ நாதஸ்வர ஓசையிலே ‘ என்ற கதையில் நாதன் என்ற மாணவன் நாதஸ்வரத்தை தன் உயிராக நேசித்து , நாதஸ்வரக் கலைஞர் மாரிமுத்து கூடவே சென்று அந்தக் கலையை கற்றுத் தேர்கிறான் ஆனால் கடைசியில் அந்தக் கலை அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியவில்லை . கட்டிட வேலைக்குத் தான் பிழைப்புக்கு செல்ல வேண்டியதிருக்கிறது.
‘முருகன் டாக்கிஸ் ‘ என்பது ஒரு அற்புதமான கதை . இதே போல , ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு டாக்கீஸ் இருந்த காலகட்டங்கள் உண்டு . அந்தக் காலகட்டத்தில் அந்த டாக்கிஸ்கள் உழைத்து களைத்துப் போய் வரும் மனிதர்களுக்கு ஒரு சொர்க்க புரியாத விளங்கியதும் உண்மை. அதன் பிறகு உருண்டோடிய காலகட்டங்களில் , அந்த டாக்கிஸ்கள் எல்லாம் திருமண மண்டபங்களாகவும் , பலசரக்கு கடைகளாகவும் , மால்களாகவும் மாற்றமடைந்தது காலம் செய்த கோலம்..
இந்தக் கதையில் அந்த டாக்கிஸை தன் வாழ்க்கை என்று நம்பி , அங்கே தியேட்டரில் சிறு சிறு வேலைகள் முதல் படம் ஓட்டுவதற்கு தேவையான அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்த செல்லையா என்ற பாத்திரம் , கடைசியில் மாடுகளுக்கு புல்லை அறுத்து கட்டிக் கொண்டிருக்கிறது. நினைவுகளைத்தான் அசை போடுவதற்கு தியேட்டர் அனுபவம் கொடுத்திருக்கிறது…
‘ பெரியோர்களே தாய்மார்களே ‘ என்ற சிறிது சிறுகதை எப்படி அரசியல் , மோகத்தால் இளைஞர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட ஒரு தொழிலைக் கூட விட்டு விட்டு , சீரழிந்து போகிறார்கள் என்பதை மனதில் படும்படி சிறப்பாக சொல்கிறது.
‘பட்டாளத்தில் இருந்து வருகிறேன் ‘ என்ற சிறுகதை ஒரு சினிமா போல விரிந்து செல்கிறது
‘சமரசம் உலாவும் இடமே ‘ என்ற சிறுகதை இன்னும் நம் இந்திய கிராமங்களில் சாகாமல் இருக்கின்ற சாதியத்தின் கோர முகத்தை ,அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறது.
‘ வழுக்கை ‘ நல்ல சிறுகதை நல்ல பாத்திர படைப்புகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
எப்பொழுதும் நல்ல மனிதர்கள் இந்த பூமியில் இருந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது தான் அன்பு என்னும் சிறு கதை சொல்ல வருவது. இந்தக் கதையின் ஓர்மை கூடி , சிறுகதை இலக்கணங்களின்படி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது . அதில் வருகின்ற மாணிக்கவேல் என்ற ஆசிரியரும், செந்தில்குமார் என்ற மாணவனும் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார்கள் .
அடுத்ததாக ‘ அரூப வர்ணம் ‘ என்ற சிறுகதை உளவியல் சார்ந்து சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது . நம் ஒவ்வொரு மனதிற்கும் ஒரு வண்ணம் பிடித்திருக்கிறது இந்த வண்ணம் நமது மகிழ்ச்சியின் அல்லது சோகத்தின் குறியீடாக இருக்கிறது .சிலருக்கு எல்லா வண்ணங்களையும் எடுத்து போர்த்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது .
இந்தக் கதையில் வரும் ஜெயராஜ் என்ற பாத்திரம் தன் மனைவியைப் பற்றி தன் நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லும் போது , இப்படி வண்ணத்தின் மீது ஆசைப்பட்டு அவள் அவரை பிரிந்து , இன்னொருவனோடு சென்றுவிட்டாள் என்று சொல்லும் இடம் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது .
‘ கல்யாணச் சாப்பாடு ‘ என்ற சிறுகதை இன்னும் பெரிய மனிதர்களின் மனதில் சாகாமல் இருக்கும் சாதி அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் எவ்வாறு விளையாடுகிறது என்பதை அருமையாக சொல்லி கலப்புத் திருமணத்திற்கு வழி வகை செய்கிறது.
இந்தப் பதினைந்து சிறுகதைகளையும் வாசித்து விட்டு , அசை போடும் போது , , சில விஷயங்கள் நம் கண் முன்னே தோன்றுகின்றன . நாம் வாழ்கின்ற இந்த சமூகத்தில் யாராலும் அடையாளப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்ட எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கென்று வாழ்க்கையும் இருக்கிறது. அவர்களுக்கும் மகிழ்ச்சி துக்கங்கள் உண்டு . அதையெல்லாம் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் யாழ் ராகவன் அவர்கள். அதற்காக நாம் அவரை பாராட்ட வேண்டும்.
அடுத்ததாக இவர் சிறுகதைகளுக்காக எடுத்துக் கொண்ட மொழி , சாதாரண சனங்கள் பயன்படுத்தும் வட்டார வழக்கு மொழியாகும். அதன் மூலமாக பாத்திரங்களின் இதயத்தின் . துடிப்பை நமக்கு உணர்த்துகிறார் அதற்காக நாம் அவரை ஊக்குவிக்க வேண்டும் இந்தக் கதையில் சித்தரிக்கப்படும் சில சம்பவங்கள் உண்மையில் இதயத்தை தொடுபவையாக இருக்கின்றன . வேறு எந்தச் சிறுகதைகளிலும் அவைகாணக் கிடைக்காதவைகளாகவும் இருக்கின்றன . அது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதாகும் .
நாம் முக்கியமாக ஆசிரியருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் , இத்தனை சிறப்பம்சங்கள் உள்ளே இருந்தாலும் , சிறுகதை என்பது முதல் வரியில் இருந்தே தொடங்கி விட வேண்டும் என்பது தான். ஒர் ஓர்மையை நோக்கிச் செல்லும் எல்லாச் சிறுகதைகளும் அதை அடைந்து விடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் பயணம் அதை நோக்கித்தான் இருக்க வேண்டும் என்பது தான் நாம் நினைவில் கொள்ள வேண்டியது.. வாசகனை கைப்பிடித்து அழைத்துச் சென்று தர்ம , நியாயங்களை நாம் காட்ட வேண்டியதில்லை . அதை படைப்பே செய்து விடும்.
ஒரு நான்கைந்து சிறுகதைகள் இந்த தொகுப்பிலும் ஓர்மை கூடி , சிறுகதையின் அனைத்து இலக்கணங்களோடும் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன .. அடுத்தடுத்து நண்பர் ராகவனிடமிருந்து , சிறந்த சிறுகதை தொகுதிகளை நாம் எதிர்பார்ப்போம் என்று ,அந்தச் சிறுகதைகள் நமக்கு உறுதியளிக்கின்றன.
அவருக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
நூலின் தகவல்கள் :
நூல் :”ஸ்ரீ முருகன் டாக்கீஸ்” – சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : திரு யாழ் .எஸ் ராகவன்
பதிப்பகம் : ஏ எம் பதிப்பகம் ,சென்னை
விலை : 150 ரூபாய்
நூலறிமுகம் எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.