ஸ்ரீதர்பாரதி  கவிதைகள்

ஸ்ரீதர்பாரதி கவிதைகள்

கடலும் சிறுவனும்           
 ==================
ஓவிய ஆசிரியர்  தம் மாணவச் செல்வங்களுக்கு  வீட்டுப்பாடமாய்  கடல்
வரைந்து வண்ணம் தீட்டிவருமாறு  பணித்தார்
மறுதினம் மாணவச்
செல்வங்கள் அவரவர் தீட்டிய   சித்திரங்களை மேசைமீது  சமர்ப்பித்தனர்
ஓவியங்கள் அனைத்தையும் உற்றுநோக்கி  மதிப்பிட்ட  ஆசிரியர்
புதிதாய் வகுப்பில் சேர்ந்த  தனுஷ் கோடி  மாணவன் வரைந்த கடலின் சித்திரம் கண்டு
அதிர்ந்து போனார்
அவனை அழைத்து   அதுகுறித்து வினவிய பொழுது   ‘எங்கள் கடல் இப்படித்தான்இருக்கும்’ என்றான்
‘அது போகட்டும்   கடலின் நிறம்
இப்படியா  இருக்கும்  ?’ என்ற  ஆசிரியருக்கு  மறுமொழியாய்
கண்ணீர்த்துளியைத் தந்த  அவன் கண்களின் நிறமும்  அவன் தீட்டிய கடலின்
நிறமும்  ஒன்றுபோலவே  இருந்தது.

 

 

 

 

 

 

 

பறையிசைக்காதலர்

==================

சுருள்கேசமும்
கருப்புவெள்ளை தாடியுமாய் தென்னகத்து மைக்கேல்ஜாக்சனின் தோற்றம் கொண்ட அந்த நடனக்கலைஞருக்கு அகவை நாற்பத்தி சொச்சம்
சாலிகிராமம் தேநீர்க்கடையில் பலமுறையும்
வடபழநி மதுக்கூடத்தில் சிலமுறையும் சந்தித்ததுண்டு அன்னாரை
பறையிசையென்றால் போதும்
மனுஷர் அடவுகளில்
பூமியதிரும்
“பறைச்சத்தத்துக்கு  பேயாட்டம்
ஆடும்போதே ஆவிபோய்டணும் ” என்பார் சகாக்களிடம் சந்தோசமாய்
விருகம்பாக்கத்தில் அப்படித்தான் ஒருசமயம் பறைசாற்றப்பட
“விடுதலை இசை ..
வீறுகொள் இசை …
வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை…..” என காற்றில் வாள்வீசி வீதியென்றும் பாராமல் குதித்தாடினார்
வளசரவாக்கத்தில் ஒருமதியத்தில் எதேச்சையாய் பார்த்துகொண்டபோது
பூவென முகமலர்ந்து சொற்கள் உதிர்த்தார்
புதிதாய்
புத்தர் கலைக்குழுவில் பறையிசைக்க பயிற்சியெடுத்துக்கொண்டிருப்பதா
மாதங்கள் கடந்திருக்கும்
மற்றொருமதியத்தில் கோடம்பாக்கம் தெருவொன்றில் பறையதிர்ந்துகொண்டிருந்தது மனுசர் இருந்தாலும் இருக்கலாமென்ற ஆவலில் அங்குமிங்குமாய் நோட்டமிட்டேன்
பாவிமனுசர் ராசாமாதிரி
ரோசாமாலைசூடிக்கொண்டு கண்ணாடிப்பெட்டிக்குள் கால்நீட்டி கண்மூடிக்கிடந்தார்
காதுகேட்காதவன் கணக்காக.
-ஸ்ரீதர்பாரதி
9790158975
Show 1 Comment

1 Comment

  1. selvakumarik

    கடலும் சிறுவனும், பறையிசை இரு கவிதையும்..துயரத்தை சொல்லின..
    வரிகளில் வலிகள் அதிகம்..அருமை கவிதைகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *