“சடையன்குளம்” நாவல் – நூல் அறிமுகம்
தலித் இலக்கியம் என்ற வகைமை தமிழ் இலக்கியச் சூழலில் தோன்றியது அல்லது கோட்பாட்டு ரீதியாக/சித்தாந்த ரீதியாக அடையாளங் காணப்பட்டது முதல் நாளது தேதி வரை அதன் வீச்சும் வீரியமும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் தலித்திய இலக்கியம் என்று மட்டுமல்ல பொதுவாகவே தலித் இலக்கியம் என்பதன் பொதுவான பண்புக்கூறுகளாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களுக்கு முக்கியத்துவம் தருகிறது. வைதீக மரபுக்கும் ஆதிக்க சாதிகளின் பண்பாட்டுக்கும் எதிரானதாக உள்ளது. அதிகாரத்தை நேரடியாக கேள்வி கேட்கிறது.
இன்றைய நிலையில் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளது என்ற கூற்றினை மறுபரிசீலனை செய்யலாம். கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதது என்பதானது, இது வரை இலக்கியக் கர்த்தாக்களாக விளங்கியவர்களின் கோட்பாட்டினை மறுதலித்து சுத்தசுயம்பு இலக்கியவாதிகள் இலக்கியத்துக்கென முன்மொழிந்த கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
தலித் இலக்கியத்தின் கோட்பாடாக, அம்பேத்கரின் சமூக தத்துவம் எது என்பதற்கான விளக்கத்தையே எடுத்துக்கொள்ளலாம். அம்பேத்கர் தன்னுடைய சமூக தத்துவம் எது என்பதற்குரிய விளக்கமாகவும், தான் கட்டமைக்க விரும்புகிற முன்மாதிரி சமூகத்திற்கும் (Ideal Society), தன்னுடைய அரசியல் கொள்கை என்ன என்பதற்குரிய விளக்கத்திற்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதையே பதிலுரையாக முன்வைக்கிறார். ஆக, தலித் இலக்கியத்தின் கோட்பாடானது அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதைத் தவிர வேறாக இருக்க முடியாது.
இந்நிலையில், தலித் இலக்கியங்கள் சமூகத்தின் கண்ணாடி போல மட்டும் இருந்தால் போதுமா, சமூகத்தில் நிலவிய தலித்துகளின் மீதான ஆதிக்க சக்திகளின் அத்துமீறல்களையும் அதனால் பட்ட வாதைகளையும் வலிகளையும் எடுத்தியம்புவதோடு தலித் இலக்கியம் திருப்திப்பட்டுக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. வெறுமனே வலிகளை மட்டும் காட்சிப்படுத்துவதில் நிகழும் ஆபத்து என்னவென்றால், அடிபட்டுக்கொண்டு மட்டுமே தலித் சமூகம் இருந்ததாகவும் அத்தகைய அடிமைத்தனத்துக்கு எதிராக எந்தவொரு எதிர்வினையும் தலித் சமூகத்தால் மேற்கொள்ளப்படவில்லையோ என்ற தவறான வரலாற்றுப் பார்வை ஏற்பட வழிவகுத்துவிடக்கூடாது. ஆதிக்க சாதிகள் தலித்துகளின் மீது ஏற்படுத்திய வடுக்களைக் காட்சிப்படுத்துவதோடு, அதனை தலித்துகள் எவ்வாறு தம் வாழ்வியல் போக்கில் எதிர்நோக்கினர், அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றினர், அந்த எதிர்வினையானது அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கவினையாக மாறியது எவ்வாறு என்ற கதையாடல்களையும் நாம் சொல்ல வேண்டியுள்ளது.
இந்த இடத்தில் இது காறும் (முதற்பதிப்பு வெளிவந்த காலமான 2012 வரை) வெளிவந்த தலித் இலக்கிய வகைமைக்குள்ளான புதினங்களில் இருந்து ஸ்ரீதர கணேசனின் ‘சடையன்குளம்’ எவ்வாறு வேறுபடுகிறது என்பதை சொல்லியாக வேண்டும். புதினத்தின் தொடக்கம் முதலே சாதி இந்துக்களின் ஆதிக்கச் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவதோடு, அவற்றுக்கெதிராக தலித் கதாபாத்திரங்களின்வழி எதிர்ச்செயல்வினையையும் புதினம் நெடுகப் பதிவாக்கியுள்ளார் ஆசிரியர்.
கதையின் முதன்மைப் பாத்திரங்களான தொடிச்சி என்ற அந்தோணியம்மா, நல்லையா என்ற அந்தோணிசாமி, குன்னிமரியான், தம்மக்கார சாம்பாத்தி, முத்துவீரன், மரியசிலுவை என்ற வைத்தான் செல்லையா, பெர்டின் சிஸ்டர், குழம்படிப் பகடை, கினமெண்ட் பாதர் போன்றோர் தங்களது பேச்சு செயல்கள் ஆகிய எல்லாவற்றின் வழியாகவும் சாதிய சமூகத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பினை தொடர்ந்து வெளிப்படுத்தியபடியே உள்ளனர். அதிலும் குறிப்பாக தொடிச்சி கதாபாத்திரம் எழுச்சி மிக்க ஒரு வரலாற்றுப் பாத்திரமாகவே வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டே ஆக வேண்டும். பிற தலித் பாத்திரங்கள் சாதிப்படிநிலையை ஆமோதித்து அங்கலாய்க்கும்படியான தருணங்களில் எல்லாம் தொடிச்சி எழுப்பும் கேள்விகளும் மேற்கொள்ளும் எதிர்வினைகளும் வாசிக்க வாசிக்க உத்வேகத்தைத் தரக்கூடியதாக உள்ளதை மறுக்கவியலாது.
கதையின் தொடக்கத்திலேயே கிணற்றில் நீர் இறைக்கும் வாளியை தொடிச்சி கழுவிவிட்டுப் பிடித்தாள் என்பதற்காக அந்தக் கிணற்றையே ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் தேவர், நாயக்கர் சாதியினர் அக்கிணற்றையும் தலித் சாதியினர் பயன்படுத்த முடியாத வகையில் மனித மலத்தை கேணியில் கலந்து விடும் கொடுஞ்செயலைச் செய்யும் நிகழ்வு மனதைப் பதைபதைக்கவைக்கிறது. நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் இப்போது வேங்கைவயலில் இத்தகைய ஒரு கொடுஞ்செயல் தொடர்கிறது என்பது சமத்துவ சமூகத்தில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வெட்கித் தலை குனியச் செய்வதாகும். அந்தக் கொடுஞ்செயலை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே செய்தார்கள் என்ற ‘உண்மை’யை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புலனாய்ந்து கண்டறிந்த சூழலும் அவநம்பிக்கை கொள்ளச் செய்வதாகத்தான் உள்ளது.
மேலும், புதினம் தொடங்கும் இடம் முதல் கதை நெடுக சாதி இந்துக்கள் மற்றும் அதன் வழி உண்டான இந்தப் படிநிலைச் சமுதாய அமைப்பினால் பாதிக்கப்பட்டாலும் தலித் சமூகமானது தொடர்ந்த செயல்பாட்டினால் தங்கள் வாழ்முறையினால் அவற்றை கடந்து எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெறும் போக்கானது, புதினத்தின் வாசிப்பிலும் ஒரு வேகத்தைக் கூட்டுகிறது என்றால் மிகையில்லை. புதினம் அந்த வகையில் ஒரு நேர்மறைத்தன்மையுடன் உள்ளதையும் குறிப்பிடவேண்டும். கதையின் இறுதிப் பகுதி மட்டுமே அதில் விதிவிலக்கு. ஆதிக்க சாதியினராலும் காவல்துறையினராலும் தங்களது குடியிருப்புகள் சேமிப்புகள் முழுவதும் சூறையாடப்பட்டு விடும் நிலை, அது வரையில் புதினம் ஏற்படுத்திவந்த ஒரு நேர்மறைத்தன்மையை சற்றே அசைத்துவிடுவதையும் தவிர்க்கவியலவில்லை. ஆனாலும் தப்பி ஓடி வந்த மக்களோடு இருக்கும் புலமாடன் மரியசிலுவையிடம் பணம் கொடுத்து மக்களுக்கு திங்க வாங்கிட்டு தண்ணி பிடிச்சுட்டு வரச் சொல்வதில் மீண்டும் வாழ்க்கைப்பாடு தொடரவும் அதை எவ்வகையிலாவது எதிர்கொள்ளத் தயாராவதும் உள்ளுறையாகக் காட்டப்படுவது சற்றே ஆசுவாசத்தைத் தருகிறது.
தலித் சமூகங்களான பறையர் மற்றும் சக்கிலியர் சமூகங்களின் இடையே உள்ள உள்முரண்களைச் சுட்டிக்காட்டுவதோடு, அச்சமூகங்களுக்கிடையில் ஏற்படும் உறவையும் இயல்பூக்க நிலையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதரகணேசன். மேலும் தொடர்ந்து ஆதிக்க சாதிகளை எதிர்க்க இரு சமூகங்களும் கூட்டிணைவில் எதிர்வினைச் செயல்பாடுகளை முன்னெடுப்பதாகக் காட்டியிருப்பதும் தேவையானதும் முக்கியமானதுமான அரசியல் பார்வை. அதே போல் மறவர், நாயக்கர், கோனார், செட்டியார் போன்ற ஆதிக்க சாதிகளுக்கு இடையே உள்ள முரண்களையும் வெளிப்படையாகச் சொல்லிச்செல்கிறார்.
அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் பாதுகாப்பு வெளியினை நாவல் நடக்கும் காலகட்டத்திய காவல்துறையினர் சட்டத்தின் ஆட்சி மூலம் வேறு வழியின்றி சகாயம் செய்வதன் மூலம் எடுத்துக்காட்டுகிறார். கிறித்துவ சபையினரின் வருகை எவ்வாறு கிராம சமூகத்துள் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் அதனை எவ்வாறு வெகு மக்கள் எதிர்கொண்டனர் என்பதையும் கதையின் போக்கில் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமையாத்தேவர் நல்லையா குடும்பத்திற்கு அவர்களது காட்டில் யாரும் உழவு செய்ய மாடுகள் அனுப்பாத நிலையில், கட்சியின் சார்பில் அவரும் இன்னும் சில தோழர்களுமே வேற்றூரில் இருந்து உழவு மாடுகள் கொண்டு வந்து உழவுப்பணி மேற்கொள்வதோடு அதை எதிர்த்து சண்டையிட வரும் அதே தேவர் சாதி ஆட்களோடு சண்டையிட்டு நல்லையா குடும்பத்திற்கு உதவுகிறார். ஆனால், முத்துவீரன் என்ற அருந்ததியர் சாதி இளைஞனும் கோமதி என்ற கோனார் சாதி கைம்பெண்ணும் காதலித்து ஊரை விட்டுச் சென்று மணம் முடிக்க தொடிச்சி முதலியோர் அதே கம்யூனிஸ்ட் கட்சி ராமையாத்தேவரிடம் உதவி கேட்கும்போது, ‘தொழில் பிரச்சனன்னா வந்து சொல்ங்க. கட்சி வந்து நிக்கும். காதல் பிரச்சனக்கெல்லாம் கட்சி வராது. அதுலயும் சாதிப் பிரச்சனயாயிருக்கு’ என்று சொல்லி உதவ மறுத்துவிடுகிறார். இதுவும் கதைப்போக்கிலேயே அக்காலகட்டத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாதி பற்றிய பார்வை குறித்த விமர்சனமாகவும் இயல்பூக்கமாகவே அமைகிறது.
இது போன்ற பல தெறிப்புகள் புதினம் முழுதும் நிறைந்திருக்கின்றன. பறைச்சாதி குன்னிமரியானும் மறச்சாதி செம்பகமும் காதலித்த நிலையில் நைச்சியமாகப் பேசி காவல்நிலையத்தில் இருந்து செண்பகத்தை அழைத்துச் செல்லும் மந்திரத்தேவர் மறு நாள் மகளை ஆணவக் கொலை செய்துவிடுவது, சின்னராசாத்தேவர் சம்முகம் பகடையின் இளவயது மகளைக் கூட்டித் தரச் சொல்கையில் அப்பெண்ணை வீட்டிலேயே சமாதி வைத்துக் கொன்றுவிட பெற்றோர் முடிவெடுப்பது அதனை அண்ணன் முத்துவீரன், பறையர் சாதி இளைஞர்களுடன் சேர்த்து முறியடித்து சின்னராசாத்தேவருக்கும் உரிய தண்டனை கொடுப்பது, ஜமீன் ஒழிப்பு ரயத்துவாரி திட்டத்தாலும் நில உச்சவரம்புச் சட்டத்தாலும் ஜமீனின் நிலம் ஏழை எளியோர்க்குக் கிடைப்பது, அதில் ஜமீன் தன் நிலம் முழுதும் கைவிட்டுப் போகாத வகையில் உள்குத்து வேலை பார்ப்பது, நல்லையாவும் ஊர்காத்தானும் கொல்லப்பட்ட நிலையில் ஆதிக்க சாதியினருக்கு எதிரான பதில் தாக்குதலுக்கு மரியசிலுவைக்கு தூத்துக்குடி பர்ணான்டஸ் சமூகத்தினர் உதவுவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
13 ஆண்டுகளுக்கு முன்வந்த புதினம் என்றாலும் இன்றளவிலும் அதன் பொருத்தப்பாடும், எழுத்தின் புதுமைத்தனமும், அது சொல்ல வந்த கருத்தியலுக்கான தேவையும் குறையாமல் உள்ளது. கதை முழுதும் தூத்துக்குடி வட்டார வழக்கு நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான வட்டார வழக்குச் சொல்லகராதியும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் ஸ்ரீதரகணேசன் பள்ளிப்படிப்பை முடிக்காதவர் என்பதும் தினத்தந்தி படித்துத்தான் தமிழ் நன்கு படிக்கக் கற்றுக் கொண்டார் என்ற குறிப்பும் புதினத்தைப் படித்து முடிக்கையில் வியப்பு ஏற்படுத்துகிறது. ஆசிரியரது மீசை சிறுகதைத் தொகுப்பினை மட்டுமே இதற்கு முன்னர் வாசித்துள்ளேன்.
தலித் இலக்கிய எழுத்தாளர் வரிசையில் ஸ்ரீதர கணேசனுக்கு கண்டிப்பாக ஓர் இடம் உண்டு என்பதற்கு இப்புதினமே சான்று. தலித் எழுத்துகள் மீதான ஆர்வம் கொண்டோர் தவறவிடக் கூடாத படைப்பு.
தலித் இலக்கியம் குறித்த சிந்தனையாளர் ராஜ் கவுதமனின் கூற்றை இங்குக் குறிப்பிட்டு முடிப்பது நூலினைப் பற்றிய சரியான பார்வையாக இருக்கும் என்று நினைக்கிறேன் – ‘இங்கே தலித் இலக்கியம் என்பது தலித் இலக்கியத்தால் மட்டுமே வரையறுக்கப் படவில்லை. சாதிப்போராட்டங்கள், சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டுக் கிளர்ச்சிகள், பொருளாதார சமத்துவத்தைப் பற்றிய பேராட்டங்கள், அரசியல் கிளர்ச்சிகள் ஆகியவற்றோடு ஒன்றாகவே தலித் இலக்கியம் எழுந்துள்ளது.’
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “சடையன்குளம்” நாவல் |
| ஆசிரியர்: | ஸ்ரீதர கணேசன் |
| வெளியீடு: | கருப்புப் பிரதிகள் |
| விலை: | ₹.300 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻அன்புச்செல்வன் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

