குளிர் நடுங்குகிறது
——————————
-ஸ்ரீரசா
——————————
குளிர் நடுங்குகிறது
உழவு செய்பவர்களின்
குரல்களிலிருந்து
தீப்பொறி கிளம்புகிறது
கார்ப்பரேட் நுகத்தடியான
சட்டங்களைக் கட்டைகளாக்கி
நடுவழியில் போட்டெரித்து
வியர்வையின் முத்துக்களாய்
விளைந்த கோதுமையின்
மாவெடுத்துப் பிசைந்த
சப்பாத்திகள் சுட்டுச்
சாப்பிட உரமேறிய
விவசாயக் கைகள்
டெல்லியின் வீதிகளில்
சூடு சூடுகின்றன
உயரும் செங்கொடிகள்
நெருப்பின் கூர்முனையாய்ச்
சாம்பல் போர்த்திய
வீதிகளில் அசைகின்றன
மதவெறி ஆட்சியாளரின்
அடியிலேறுகிறது
அந்தச் சூடு
அணைக்க அவர்களின்
துப்பாக்கி ஏந்திய
துணை இராணுவமும்
காவல்துறையும்
கோபம் பொருந்திய
தண்ணீர்க் கணைகளை
வீசியெறிகிறார்கள்
காறி உமிழ்ந்த
எச்சிலொன்றாலேயே
விவசாயிகள்
அதனைத் தடுத்தெறிகிறார்கள்
சாலைகளில் அகழிகள் தோண்டி
போர்க்களத்தின் காட்சிகளை
உண்டாக்கினார்கள் ஆட்சியாளர்கள்
நெடுநெடுவென வளர்ந்து நிமிர்ந்த
விவசாயக் கால்களோ
அந்தப் பள்ளங்களைத் தங்கள்
உறுதிகளால் நிரப்பி நடந்தார்கள்
கங்கைக் கரையில் நின்று
நீரோ தன் வழக்கமான
பிடிலெடுத்து வாசிக்கிறார்
மனதின் குரலோடு
தன் மகத்துவத்தைப் பேசுகிறார்
விவசாயிகளின் உயிர்க்குரல்
ஓங்கி யெழுந்ததில்
மனதின் குரல் செத்துவிழுந்தது
இருள் மண்டிய
இந்தத் தேசத்தில்
விவசாயி தன்
முதல் சுடரை ஏற்றுகிறான்
சொக்கப்பனை பற்றி எரிகிறது
எரிக்க இன்னும் விறகுதேவை
அந்த மூன்று சட்டங்களை
முறித்துப் போட்டால்
இப்போதைக்குப் போதும்…
கும்பினி ஆட்சியை எதிர்த்த
சுதந்திரப் போரின்
நிகழ்காலக் காட்சிகளை
விவசாயப் போராளிகள்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்
பகத்சிங் நாடாளுமன்றத்தின்
நடுவில் தன் குண்டுகளை
எறிகிறான்…
கேளாத செவிகள் கேட்கட்டும் என்று…
இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கங்கள்
எங்கெங்கும் எழுந்து தெறிக்கின்றன
குளிர் நடுங்குகிறது
போர் நெருப்பால்
குளிர் நடுங்குகிறது.
Image
– ஸ்ரீரசா



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *