அரசின் தலையீடு பொருளாதாரத்தைக் காப்பாற்றும், உங்களை அல்ல (தமிழில்: தா. சந்திரகுரு)

அரசின் தலையீடு பொருளாதாரத்தைக் காப்பாற்றும், உங்களை அல்ல (தமிழில்: தா. சந்திரகுரு)

இந்த தொற்றுநோய்க்கான சீனாவின் எதிர்வினை ட்ரம்ப்பிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. மிகவும் வலுவான பொது சுகாதார எதிர்வினை சீனாவிடம் இருந்தாலும், அங்கே ஏழைகளுக்கு மிகச்சிறிய அளவிலேயே உதவி இருந்தது. நவீன தாராளமயத்திற்கு முரணாக வலுவான அரசுகள் நிற்காது என்பதையும், மாறாக, அதுவே முக்கிய அம்சமாகவும் இருக்கிறது என்பதையுமே நெருக்கடி மீதான இந்த இரண்டு நாடுகளின் எதிர்வினைகளும் காட்டுவதாக இருக்கின்றன.

உலகளாவிய இந்த கொரோனா வைரஸ் நெருக்கடியை சர்வதேச ஒத்துழைப்பு கொண்டே கையாள வேண்டும் என்று பொது அறிவு சொல்கிறது. ஆனாலும் நடைமுறையில், ஒரே மாதிரியான பொருளாதார எதிர்வினையோ அல்லது மீண்டு வருவதற்கான பொதுவான வேகமோ இல்லாமல், ஒவ்வொரு தேசிய அரசும் தங்களுக்கேற்றவாறே இந்த தொற்றுநோயை எதிர்கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம் புதிய தாராளவாத சித்தாந்தத்தால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற அதே வேளையில், ஒவ்வொரு அரசாங்கமும் எடுக்கின்ற  முடிவுகள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற குறிப்பிட்ட அதிகார கட்டமைப்புகள், அரசியல் சூழ்நிலைகள் மற்றும் வர்க்க சக்திகளின் சமநிலை ஆகியவற்ரின் தாக்கத்தைக் கொண்டுள்ளன.  நாடுகளுக்கிடையிலான இந்த வேறுபாடுகள் இந்த நெருக்கடிக்குப் பின்னர் இன்னும் அதிகமாகவே வெளிப்படும் என்றே தோன்றுகின்றது. 

மேலாதிக்க சக்தியாக இருந்து வரும் அமெரிக்காவிற்கும், மேலாதிக்க சக்தியாவதற்கான சவாலை விடுத்து வருகின்ற சீனாவிற்கும் இடையிலே, இயற்கையாகவே மிக முக்கியமான வேறுபாடுகள் அமைந்திருக்கின்றன. நெருக்கடியை எதிர்கொள்வதில் இந்த அரசாங்கங்களுக்கு இடையில் இருக்கின்ற இந்த வேறுபாடுகள், இந்த இரண்டு நாடுகளிலும் மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கும், அரசிற்கும் மற்றும் சந்தைக்கும் இடையில் இருக்கின்ற அதிகாரச் சமநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 

அமெரிக்காவில் இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரிக்கப்பட்டிருக்கும் பொதுச் செலவினங்கள், நவீன தாராளமயத்தின் முடிவைக் குறிப்பதாக இந்த நெருக்கடி இருக்கிறதா என்ற விவாதங்களைத் தூண்டியுள்ளது. வலுவாகத் தலையீடு செய்கின்ற அரசிற்கும், நவீன தாராளமயத்திற்கும் இடையில் உள்ள  போலியான பிரிவினைக்கு அப்பால் செல்ல வேண்டியதன் அவசியத்தை, சீன மற்றும் அமெரிக்க எதிர்வினைகள்  எடுத்துக்காட்டுகின்றன. ஒவ்வொரு நாடும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை இதுவரையிலும் சமாளித்த விதத்தில், வெவ்வேறு அதிகார கட்டமைப்புகள் எவ்வாறு உறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடென் ஆகியோரின் பிரச்சாரம், சீன அரசாங்கத்தை யார் சிறப்பாக சமாளிக்க முடியும் என்பதாக இருப்பதால், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் அதிகரித்திருக்கின்ற நிலையில், இந்த வேறுபாடு இன்னும் பொருத்தமானதாகிப் போகிறது.

சீனாவைப் பொறுத்தவரை, இந்த 2020ஆம் ஆண்டு, 13ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதி ஆண்டு என்பதையும், விரிவான வளமான சமுதாயம் என்ற இலக்கை அடைய சீன அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆண்டாக இருப்பதால், மத்திய நிர்வாகம் தீர்வுகளை விரைவாக அடைவதற்கான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. இந்த இரண்டு அரசுகளின் எதிர்வினைகளை வடிவமைப்பதில், இந்த குறுகிய நோக்கிலான பார்வைகள் முக்கிய பங்கை வகித்திருக்கின்றன. 

சீனப் புத்தாண்டுக்கு முன்னதாக, சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. அது பொதுவாக நுகர்வு அதிகரிக்கும் காலமாகும். ஆனால் 2020ஆம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை கொரோனா வைரஸ் சீர்குலைத்தன் விளைவாக, ஒட்டுமொத்த பொருளாதாரமும் திடீரென உறைந்து போனது. வூஹான் முடக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, சீனாவில் இருந்து இரண்டு வாரங்கள் கழித்து அமெரிக்காவிற்கு வருகை தருவதற்காக இருந்தவர்களுக்கு பயணத் தடையை அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது. இருந்தபோதிலும், அந்தத் தடை விதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகும்கூட, வரவிருக்கின்ற நெருக்கடிக்கு எதிராக அமெரிக்கா எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, பங்குச் சந்தையை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிய ட்ரம்ப், அமெரிக்க பொருளாதாரத்திற்கும், மக்களின் உடல்நலத்திற்கும் இந்த கோவிட்-19 நோய் ஏற்படுத்தப் போகின்ற ஆபத்தை குறைத்தே மதிப்பிட்டார். 

பொது சுகாதார நெருக்கடிநிலை உலகளாவிய மந்தநிலையைத் தூண்டி விட்டிருக்கிறது. அதிலிருந்து சீனாவோ அல்லது  அமெரிக்காவோ தப்பிக்கவில்லை. இரண்டு நாடுகளிலும் வேலையின்மை விகிதம் வேகமாக அதிகரித்து, பிப்ரவரி 20 அன்று சீனாவில் 6.2 சதவீதத்தையும், மார்ச் 20 அன்று அமெரிக்காவில் 4.4 சதவீதத்தையும் எட்டியது. மிக சமீபத்தில், அமெரிக்காவில் புதிய வேலையின்மை கோரிக்கைகள் 3 கோடியைத் தாண்டி உயர்ந்துள்ளன. இது 2007-09 நிதி நெருக்கடியின் போது தாக்கல் செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. சுகாதார நெருக்கடிநிலையாக முதலில் தொடங்கிய அந்த அதிர்ச்சி, சீனாவிலும் அமெரிக்காவிலும் பெரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியாக பின்னர் மாறியது.

படம் 1: சீனா மற்றும் அமெரிக்காவில் அண்மையில் மிக அதிகமாக அதிகரித்திருக்கும் வேலையின்மை விகிதம்

படம் 2: அமெரிக்காவில் அண்மையில் மிக அதிகமாக உயர்ந்திருக்கும் புதிய வேலையின்மை கோரிக்கைகள்

இந்த இடத்தில்தான் அந்த நாடுகளுக்கிடையிலான ஒற்றுமைகள் முடிவுக்கு வந்தன. முதலாவதாக, சீன அரசின் அதிகாரக்  கட்டமைப்புகள் தொழிலாளர் சந்தையில் அரசாங்கம் நேரடியாகத் தலையிடுவதற்கு உதவின. முக்கியமாக, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வேலைவாய்ப்பை அதிகரித்ததோடு, உள்கட்டமைப்புத் திட்டங்களில் பொது முதலீட்டையும் சீனா அதிகரித்தது. மேலும், மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மாகாணங்களின் ஒருங்கிணைப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிக செயல்திறனுடன் பொது சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு உதவியது. இருப்பினும், சீன அரசாங்கத்தின் கொள்கைகள் முக்கியமாக நீண்டகாலப் பொருளாதார விளைவுகளையே மையமாகக் கொண்டிருந்தன. பொதுவாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதை அந்தக் கொள்கைகள் புறக்கணித்தன.

இதற்கு நேர்மாறாக, தன்னுடைய நவீன தாராளவாத சித்தாந்தத்திற்கு ஏற்ப செயல்பட்ட அமெரிக்க அரசாங்கம், வேலைவாய்ப்பை மறைமுகமாக அதிகரிக்கவும், பாதுகாக்கவும் முயற்சித்தது. தொழில் நிறுவனங்களுக்கு கடன் வடிவில் பணப்புழக்கமும், பணியாளர்களைப் பராமரிப்பதற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. ஆயினும் இதன் விளைவாக ஒரு வியத்தகு தோல்வியே ஏற்பட்டது. அதாவது வேலையின்மை அசாதாரணமாக அதிகரிப்பதற்கு அது வழிவகுத்தது. மேலும், சீனாவுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவில் மத்திய அரசாங்கத்தை விட, தனிப்பட்ட மாகாணங்களுக்கு இருந்த அதிகப்படியான சுதந்திரம், மத்திய ஒருங்கிணைப்பின் பலவீனம் ஆகியவை வைரஸைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல்களை அமெரிக்காவிற்கு ஏற்படுத்தி தந்தன. இருந்த போதிலும், பலவீனமான சமூகக் குழுக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு அமெரிக்க நிர்வாகம் அதிக முக்கியத்துவம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கம் வரவிருக்கும் பொதுத் தேர்தலை எதிர்த்துப் போராடுவதாக இருந்திருக்கலாம். ஆனாலும் அவர்களுடைய நடவடிக்கையில் இருந்த சீனாவுடனான வேறுபாடு குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. 

மத்திய மற்றும் உள்ளூர் அமைப்புகளின் முயற்சிகள்

பொது சுகாதார நெருக்கடியைக் கையாள்வதைப் பொறுத்தவரையில், சீன அரசின் கட்டமைப்புகளே மிகவும் திறமையானவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஒருகட்சி முறையால் மத்திய அரசுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கும் முழுமையான அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற அத்தகைய கட்டமைப்பு, மத்திய மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு இடையிலான உராய்வுகளைக் குறைக்கிறது.

கொள்கை இலக்குகளை நிர்ணயிக்கிற சீன மத்திய அரசு, உறுதியான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பான மாகாண அரசாங்கங்களின் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கிறது. இப்போதைய நெருக்கடிக்கெதிராக, அதிபர் லி கெக்கியாங் தலைமையிலான தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுக் குழுவால் மத்திய ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஹூபே மாகாணத்தில், குறைந்தபட்சம் ஒரு நகரத்தில் இருந்த மருத்துவ ஊழியர்களை ஆதரிப்பதற்கான பொறுப்பை சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அந்தக்குழு உறுதி செய்தது. மத்திய அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களால் வூஹானில் கட்டப்பட்ட, 1,600 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகள் இந்த ஏற்பாடுகளின் செயல்திறனுக்குத் தெளிவான சான்றாக உள்ளன. 

சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. கட்சி எதிர்ப்பு மற்றும் மாகாண மற்றும் கூட்டாட்சி பகுதிகளுக்கு இடையிலான பொதுவான மோதல்கள் ஆகியவற்றால் மைய ஒருங்கிணைப்பு இல்லாதிருந்த நிலைமை அமெரிக்காவில் அதிகரித்தது. மார்ச் 31ஆம் தேதி மாகாண ஆளுநர்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு  மற்ற மாகாணங்களுடன் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தனர். மருத்துவ உபகரணங்களை மையமாக விநியோகிக்கும் பணிக்கு சுகாதார மற்றும் மனித சேவைகள் அமைப்பின் செயலாளர் அலெக்ஸ் அசார் பொறுப்பேற்ற பிறகும், துணை அதிபரின் தலைமையில் ஒரு சிறப்புக் குழு நிறுவப்பட்ட பின்னரும், உபகரணங்கள் மற்றும் நிதி ஆகியவற்றின் விநியோகத்தின் மீது அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகவேனும் அவ்வாறு இருந்தது. 

பல வாரங்களுக்கு பழைய உபகரணங்களையே மீண்டும் பயன்படுத்திய பின்னர், இந்த பிரச்சனை குறித்து, நியூயார்க்கில் உள்ள தனது நண்பர்களிடமிருந்து அதிபர் ட்ரம்ப் கேள்விப்பட்ட பிறகே, நியூயார்க் மருத்துவமனைகளுக்குத் தேவையான உதவிகள் கிடைத்தன. ஆயிரக்கணக்கான மக்கள் பொதுமுடக்கத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டு நடத்திய  ஆர்ப்பாட்டங்களை மறைமுகமாக தொடர அனுமதித்ததன் மூலம், அதிபர் சில மாகாணங்களை விடுவிக்கின்ற வகையில் குடிமக்களை ஊக்குவித்தார். அதன் விளைவாக, கூட்டாட்சி மற்றும் மாகாண அளவிலான அதிகாரிகளுக்கிடையேயான மோதல்கள் படிப்படியாக கூர்மையாகின. உண்மையில், ஜார்ஜியா, தெற்குகரோலினா மற்றும் டென்னசி போன்ற பன்னிரண்டு அமெரிக்க மாகாணங்கள் தங்கள் பொதுமுடக்கத்தை ஏற்கனவே நீக்கி விட்டிருந்தன. பொது சுகாதார நெருக்கடியைக் கையாள்வதில் டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்த போதாமை, அரசதிகாரத்தின் கட்டமைப்பு பலவீனங்களை மேலும் அதிகப்படுத்தியது.

அரசும் சந்தையும் 

பொருளாதார மீட்சியின் போது, அரசின் அணுகுமுறையில் இருந்த இந்த வேறுபாடுகளும், அரசிற்கும் சந்தைக்கும் இடையிலான உறவுகள் குறித்த  பொருத்தமான அணுகுமுறைகளும் வெளிப்படுகின்றன. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் உரிமையாளராக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்தை உற்பத்தி செய்யும் அளவிற்கு, சந்தை செயல்முறைகளில் முக்கிய பங்காற்றுவதாக சீன அரசு இருக்கிறது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மொத்த நகர்ப்புற வேலைவாய்ப்புகளில் சுமார் 13 சதவீதத்தை வழங்கி வருவதாக, சமீபத்திய தரவு (2017–2018ஆம் ஆண்டிற்கானது) காட்டுகிறது. இத்துடன் பொதுத்துறை அதிகாரிகளும் சேர்க்கப்படும் போது, அது 30 சதவீதத்தை எட்டி விடுகிறது. இது நெருக்கடி காலங்களில், அரசுத் துறைகளின் மூலமாக பொருளாதாரத்தில் நேரடியாக அரசாங்கம் தலையிடுவதற்கு அனுமதிக்கிறது. 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் இராணுவம் போன்றவை குறிப்பாக கல்லூரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில், வேலைவாய்ப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதலை, மார்ச் 20 அன்று, அரசு கவுன்சில் வெளியிட்டது, அரசுக்குச் சொந்தமான பெரிய நிறுவனங்கள் விரைவாக, பட்டதாரிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கத் தொடங்கின.

அதேநேரத்தில், தங்களுடைய பணியாளர்களைப் பராமரிப்பதற்கான  ஊக்கத்தொகைகளை தனியார் நிறுவனங்களுக்கும் சீன அரசாங்கம் வழங்கியது. கல்லூரி மாணவர்களை ஓராண்டிற்கும் மேலாகப் பணியமர்த்துகின்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மானியத்தைப் பெறும் என்று கவுன்சில் வெளியிட்ட அந்த வழிகாட்டுதலில் முன்மொழியப்பட்டிருந்தது. ’தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யாத, அல்லது மிகச் சிலரை மட்டுமே பணிநீக்கம் செய்துள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், ஹூபே மாகாணத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், நிறுவனங்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் 2019ஆம் ஆண்டில் செலுத்திய வேலையின்மை காப்பீட்டில் 100 சதவீதமாக மானியம் இருக்கலாம். ஒட்டுமொத்த ஊதியச் செலவுகளில் 2 சதவீதம், ஊதிய வருமானத்தில் 1 சதவீதம் என்று அது இருக்கலாம். நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய மற்றவர்களுக்கான மானியம், மூன்று மாத வேலையின்மை காப்பீட்டுத் தொகை என்ற அளவிற்கு இருக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கிடையில், வேலைவாய்ப்பு மற்றும் தேவைகளை அதிகரிப்பதற்கான புதிய உள்கட்டமைப்பிற்காக, பொது முதலீடு பயன்படுத்தப்பட்டது. பொருளாதார மீட்டெடுப்பை விரைவுபடுத்துவதையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைப் பேணுவதையும் அது நோக்கமாகக் கொண்டிருந்தது. முக்கிய துறைகளில் புதுமைகளை எளிதாக்குகின்ற புதிய முதலீட்டு திட்டங்களை அமல்படுத்துவது, புவியியல்ரீதியாக நாட்டின் நடுவில், மற்றும் மேற்கில் பொருளாதார ரீதியாக பலவீனமான இருக்கின்ற பகுதிகளில் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவது என்று வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திறன் கொண்ட தொழில்களில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்தது. முப்பத்தொரு முக்கிய மாகாணங்களில், தங்களுடைய அரசாங்க அறிக்கைகளில் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மார்ச் 5ஆம் தேதிக்குள் இருபத்தைந்து மாகாணங்கள் முன்மொழிந்தன. 5ஜி அடிப்படை நிலையங்கள், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு மையங்கள் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, முதலீடுகளின் மிகப்பெரிய பங்கு 5ஜி நெட்வொர்க்குகளின் வளர்ச்சிக்காக அளிக்கப்பட்டது. தங்களுடைய முந்தைய திட்டங்களுக்கு முன்கூட்டியே, மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள்ளாக, 250,000 5ஜி அடிப்படை நிலையங்களை நாடு தழுவிய அளவில் நிர்மாணிப்பதற்கு, உள்நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களான யூனிகாம் மற்றும் சீனா டெலிகாம் ஆகியவை தங்களுடைய ஒத்துழைப்பை அறிவித்தன.

அமெரிக்கா கொண்டிருந்த வேறுபாடு மிகவும் கூர்மையாக இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த பணியாளர்களில் 85 சதவிகிதத்திற்கும் மேலாக, தனியார் தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் இருக்கின்றனர். சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் போன்று அமெரிக்காவில் இருக்கின்ற அரசு தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அது தொழிலாளர் தேவையை கணிசமாகப் பாதிப்பதாக இருக்கவில்லை. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பற்றாக்குறை, புதிய வேலைகளை உருவாக்கும் வகையில் பொது முதலீட்டை அதிகரிக்க விருப்பமின்மை ஆகிய நிலைமை இருப்பதால், மறைமுகமான உதவிகள் மூலமாக, அதாவது தங்கள் பணியாளர்களைப் பராமரிப்பதற்கான  ஊக்கத்தொகையை முதலாளிகளுக்கு வழங்குவது, நிதியை எவ்வாறு செலவழிக்கலாம் (அல்லது கூடாது) என்ற  நிபந்தனைகளை விதிப்பதன் மூலமாக, அமெரிக்க மத்திய அரசு வேலையின்மையால் ஏற்பட்ட விளைவுகளை மறைக்க முயன்றது. 

’கொரோனா வைரஸ் உதவி, நிவாரணம் மற்றும் பொருளாதார பாதுகாப்புச் (கேர்ஸ்-CARES) சட்டம்’ மார்ச் 27 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அனைத்து அளவிலான வணிகங்களையும் ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட உதவிகளை வழங்கியதுடன், இந்த உதவிகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்காக 2 லட்சம் கோடி டாலர் தூண்டுதல் தொகுப்பின் பெரும்பகுதி வழங்கப்பட்டது. இந்த உதவிகளில் சில. வேலைவாய்ப்பிற்கு உதவக்கூடும் என்றாலும், இவ்வாறான மறைமுக முறையிலான உதவி சிக்கல் கொண்டதாகவே இருக்கும் என்பது விரைவிலேயே தெளிவாகியது. ஏப்ரல் 9 அன்று வணிகங்களுக்கும், மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கும் 2.3 லட்சம் கோடி டாலர் வரை உதவிகளை வழங்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த உதவிகளுக்கான பாதுகாப்பாக இருக்கும் வகையில், கேர்ஸ் சட்டத்தின் கீழ் அமெரிக்க கருவூலம் சுமார் 19500 கோடி டாலர்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. 

இவ்வாறு பெருமளவில் பணப்புழக்கம் செலுத்தப்பட்டதன் பலவீனங்கள் உடனடியாகத் தெளிவாகத் தெரிந்தன. பெருவணிகங்களுக்கான உதவி வழங்கும் திட்டத்தில், பங்குகளைத் திரும்ப வாங்குதல், போனஸ் தொகை அளித்தல், நிர்வாகிகளுக்கான ஊதியம் அல்லது பணியாளர்களைப் பராமரிப்பது குறித்து எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை என்பதால், நிறுவனங்கள் தங்கள் பங்கு மதிப்பை உயர்த்திக் கொள்ளவும், பங்குதாரர்களுக்கு போனஸ் தொகையை வழங்கவும் இந்த நிதிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றன. அதே நேரத்தில் ’நேரடி கடன் திட்டங்களுக்குப் பொருந்துகின்ற இழப்பீடு, பங்கு மறுகொள்முதல், போனஸ் தொகை கட்டுப்பாடுகளை, கேர்ஸ் சட்டத்தின் கீழ் உதவி பெறுபவர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களுக்கான உதவி வழங்குகின்ற திட்டம் அதிக கட்டுப்பாடுகளுடன் வந்தது. எவ்வாறாயினும், ’ஊதியத்தைப் பராமரிக்கவும் தொழிலாளர்களைத் தக்கவைக்கவும் முடிந்த அளவிற்கு நியாயமான முயற்சிகளை’ மேற்கொள்ளுமாறு மட்டுமே மத்திய வங்கி கேட்டுக் கொண்டதால், ஊழியர்களும் பாதுகாக்கப்படவில்லை. 

சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் ஊதிய பாதுகாப்பு திட்டம் (பிபிபி) மூலம் உதவிகளைப் பெற சிறு வணிக சங்கத்தில் விண்ணப்பிக்கலாம். ஊதியம் (மொத்தத்தில் 75 சதவிகிதம்), அடமானங்களுக்கான வட்டி, வாடகை மற்றும் பிற பயன்பாடுகள் ஆகியவற்றிற்காக இந்த உதவிகள் செலவழிக்கப்பட்டால், அவை மானியமாக மாறும். இருந்த போதிலும், வணிக நிறுவனங்கள் இந்த நிதியை கடன்களாகக் கருதி, தங்கள் ஊழியர்களில் சிலரைப் பணிநீக்கம் செய்தன. மிக முக்கியமாக, பிபிபியிலிருந்து வந்த நிதி விரைவாகத் தீர்ந்து விட்டது, மேலும் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் கிடைத்த பின்னரும், அதைப் பெறுகின்றவர்களுக்கு அதனை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் ஏற்பட்டன. வங்கிகள் ஏற்கனவே சுமார் 1000 கோடி டாலர்களை முறைப்படுத்துவதற்கான கட்டணமாகப் பெற்றதால், இந்த வழங்கல் முறை சர்ச்சைக்குரியதானது. 

கொரோனா வைரஸ் தாக்கியதால், வேலையின்மை மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்ததற்கு நேரடியாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நவீன தாராளமய, நிதிமயமாக்கப்பட்ட கட்டமைப்புகளே காரணமாக இருந்தன என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பொது சுகாதார நெருக்கடிநிலை, கூலித் தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்ற இரண்டு தாக்குதல்களையும் எதிர்கொள்ள தன்னால் இயலவில்லை என்பதையே இந்த அமைப்பு நிரூபித்திருக்கிறது.

சமூகப் பாதுகாப்பு

சமூக பாதுகாப்பு குறித்து, உலக சந்தையில் இருக்கின்ற இந்த இரண்டு ஆதிக்க அரசுகளுக்கிடையிலான வேறுபாடுகளும் இதுபோன்றே வெளிப்பட்டிருக்கின்றன.

சீனப் பொருளாதாரக் கொள்கைகள், கொரோனா வைரஸின் பேரியப் பொருளாதார அம்சங்களை – அதாவது வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கியே இருந்தன. இந்த முடிவிற்கான முக்கிய அம்சமாக, விரிவான வளமான சமுதாயம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கான இறுதி ஆண்டாக இந்த 2020ஆம் ஆண்டு இருந்தது. இது 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதி ஆண்டாகவும் இருக்கிறது. 

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அதன் இலக்கை அடைவதற்கு, ஆண்டு வருமான வரம்பான 2,300-யுவானுக்கு மேல் (2010ஆம் ஆண்டு நிலையான விலையில் 340 டாலர்) கிராமப்புறங்களில் உள்ள 55.1 லட்சம் ஏழை மக்களை உயர்த்துவது என்ற ஒரேயொரு பணி மட்டுமே எஞ்சியிருக்கிறது.  கொரோனா வைரஸ் நெருக்கடி அந்த இலக்கை அடைவதற்கான சிரமத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் அதிகரித்துள்ளது. ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் அந்த வரம்பிற்கு கீழ் செல்வதற்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. இதனாலேயே நாடு முழுவதும் பொது முதலீட்டை விரிவுபடுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அக்கறையை அரசாங்கம் மேற்கொண்டது. 

ஆனாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் பிற பகுதியினருக்கு சீனா அளிக்கின்ற நேரடி வருமான உதவி என்பது குறைவாகவே உள்ளது. தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை, குறைந்தபட்சம் ஓர் ஊதியச் சுழற்சிக்கு அவர்கள் வழக்கமான ஊதியத்தைப் பெறுவார்கள் என்பதை, உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2018ஆம் ஆண்டின் இறுதிக்குள், சீனாவின் மக்கள் தொகையில் 97 சதவீதம் பேர் ’ஐந்து காப்பீடுகள் மற்றும் ஒரு நிதியின்’ (ஓய்வூதியக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வேலையின்மை காப்பீடு, பணியின் போது எற்படுகின்ற காயங்களுக்கான காப்பீடு, மகப்பேறு காப்பீடு மற்றும் வீட்டுவசதி வருங்கால வைப்பு நிதி). பகுதியாக பொது சுகாதார காப்பீட்டின் கீழ் இருக்கின்றனர். அதற்கான செலவுகள் ஓரளவு முதலாளிகளாலும், ஓரளவு ஊழியர்களாலும் செலுத்தப்படுகின்றன, ஊழியர்களின் ஊதியத்திலிருந்து அவை நேரடியாகக் கழிக்கப்படுகின்றன. கோவிட்-19ஐப் பொறுத்தவரை, காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு பொதுத்துறை மூலமாக அனைத்து மருத்துவச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு பொது சுகாதார காப்பீடு மூலம் செலுத்தப்படுகிறது, மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு நிதி பட்ஜெட் மூலமாக வழங்கப்படுகிறது.

ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், பொருளாதார நடவடிக்கைகளின் சரிவினால் வறுமையை எதிர்கொள்ளும் நபர்களுக்கும் பண ஆதரவை வழங்குவதற்கான எந்தவொரு மைய முடிவும் இருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, மத்திய சீனாவில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஹெனானில், பதிவுசெய்யப்பட்ட ஏழை ஊழியர்களுக்கு, பெருந்தொற்றுநோய்க்கான சிறப்பு மானியமாக மிகக் குறைந்த அளவில் 2,000 யுவான் (282 டாலர்), மட்டுமே ஒரேயொரு தடவையில் வழங்கப்பட்டது. பிற மாகாணங்கள் தொடர்ந்து நுகர்விற்கான கூப்பன்களையே நம்பியிருந்தன. ஆனாலும் இந்த கூப்பன்களை சுற்றுலா போன்ற குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மளிகைப் பொருட்கள் அல்லது அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. வூஹான் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கூப்பன்கள் மட்டுமே அடிப்படைத் தேவைகளுக்கு செல்லுபடியாகும், ஆனால் இவை முதலில் வந்தவர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்ற அடிப்படையில், ஆன்லைன் முறை மூலமாகவே வழங்கப்படுகின்றன. எனவே ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களும், சுயதொழில் செய்பவர்களும் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். பற்றாக்குறை மற்றும் மோசமான நிலைமைகளால் ஏழைகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

இது அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானதாக உள்ளது. நவம்பர் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு டிரம்பின் ஆதரவுதளத்தைப் பலப்படுத்துவதற்கான சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு, வீடுகளுக்கு ஒரே நேரத்தில் பணத்தைத் தருவதன் மூலமாக, உடனடி நிவாரணத்தை வழங்குவதிலும், வேலையின்மைக்கான சலுகைகளை அதிகரிப்பதிலும் அமெரிக்க நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளது. 75,000 டாலருக்கு கீழ் வருமானம் ஈட்டுகின்ற குடிமக்கள் தலா 1,200 டாலர் வரை (கூடுதலாக ஒவ்வொரு குழந்தைக்கும் 500 டாலர்) பெறுவார்கள் என்று கேர்ஸ் சட்டம் கூறுகிறது. அதே நேரத்தில் வேலையின்மைக்கான சலுகைகள் பதின்மூன்று வாரங்கள் நீட்டிக்கப்பட்டு, அரசு சலுகைகளுக்கு மேல் கூடுதலாக 600 டாலர் வழங்கப்பட்டது. வேலையின்மைக்கான உதவிகளைப் பெறுவதற்கான தகுதிகள் தளர்த்தப்பட்டன. முதன்முறையாக சுயதொழில் புரியும் குடிமக்களால் உதவிகளைப் பெற முடிந்தது. கூடுதலாக, வெளியேற்றங்கள் நான்கு மாதங்களுக்கு தடைசெய்யப்பட்டன. கூட்டாட்சி ஆதரவால் தரப்பட்ட அடமானக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது அறுபது நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், மருத்துவமனைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட 10000 கோடி டாலரிலிருந்து ஒரு பகுதி, காப்பீடு செய்யப்படாத குடிமக்களின் கோவிட்-19 தொடர்பான பிரச்சினைகளுக்கான மருத்துவக் கட்டணங்களை ஈடுசெய்வதற்குப் பயன்படும் என்று அறிவிக்கப்பட்டது. கேர்ஸ் சட்டத்திற்கு முன்னர் இருந்த ’முதலில் குடும்பங்கள் -கொரோனா வைரஸ் எதிர்வினைக்கான சட்டம்’, ஊதியத்துடனான நெருக்கடிகால குடும்ப விடுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த விடுப்பு முடிந்தபின்னரான பணியாளரின் நிலைக்கு உத்தரவாதம் தரப்பட்டது. அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை இலவசமாக அளிக்கப்பட்டது. 

இந்த நடவடிக்கைகளின் மூலம் சில உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட்டன என்பதை மறுக்கமுடியாது என்றாலும், அரசாங்கத்தின் இந்த தேர்விற்குப் பின்னால் உள்ள உந்துதல்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருக்கின்றன. பொது முதலீட்டை அதிகரிக்காமல் அல்லது உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு வழங்காமல், உடனடி உதவிகளை வழங்கும் குறுகிய கால தலையீடுகளை மட்டுமே, வெளிப்படையாக தன்னுடைய சொந்த தேர்தல் தளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் இருந்தபோதிலும், அமெரிக்காவில் இருக்கின்ற பாதிக்கப்படக்கூடிய மக்கள் குழுக்கள் இன்னும் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியே இருக்கின்றனர் என்பது முக்கியமாக இருக்கிறது. ஒரேதடவையில் தரப்படுகின்ற தொகையின் ஒரு பகுதியை வங்கிகள் தங்களுடைய கடனுக்காக கைப்பற்றிக் கொள்ள முடிகிறது. முன்கூட்டியே கட்டணத்தை செலுத்துவது அல்லது பணத்தைக் கழித்துக் கொள்ளும் விதிமுறைகளை உள்ளடக்கிய திட்டங்கள் கொண்ட மருத்துவரீதியாக காப்பீடு செய்யப்பட்டிருக்கும் குடிமக்கள், மற்றும் அடிப்படை மருத்துவத் திட்டங்களில் உள்ள குடிமக்கள் தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, 1,400 முதல், 9,000 டாலர் வரையிலான தொகையைச் செலுத்த வேண்டும். கடைசியாக, புதிய வேலையின்மைக்கான கோரிக்கைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், தொழிலாளர் துறை அந்த விண்ணப்பங்களைக் கையாள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையற்றவர்கள் வறுமையின் விளிம்பிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். 

அடுத்தது என்ன?

சந்தைகள் மற்றும் தனியார் மூலதனத்திற்கு எதிரான அரசின் பலவீனம் குறித்த கருத்தியல் வாதங்களை ஒதுக்கி விட்டு, தேசிய அரசை கொரோனா வைரஸ் நெருக்கடியானது முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்டு, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல பெரிய பொருளாதாரங்களில் அரசாங்கங்கள் தைரியமாகத் தலையிட்டிருக்கும் நிலையில், கெயினிசியனிசத்திற்குத் திரும்புதல் அல்லது நவீன தாராளமயத்திற்கு மரண அடி பற்றி பேசுவது மிகவும் முன்கூட்டியதாகவே  இருக்கும். சர்வாதிகாரமும், வலுவான அரசும் நவீன  தாராளமயத்திற்கு முரணானவை அல்ல, அவை அதன் முக்கிய கூறுகளாகும் என்பது புலப்பட்டிருக்கிறது.  

’அரசாங்கங்கள் புதிய வழிகளில் செயல்படவில்லை, மாறாக தங்களையே மிகைப்படுத்திக் கொண்ட பதிப்புகளாகவே அவை இப்போது இருக்கின்றன’ என்று ரோட்ரிக் கூறுகிறார். அரசாங்கங்கள் தங்களுடைய முந்தைய நிகழ்ச்சி நிரல்களைத் தொடரவும், தீவிரப்படுத்தவும், இந்த பொது சுகாதார நெருக்கடி என்பது அவற்றிற்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பமாகும்; அதன் சாத்தியமான விளைவுகளாக, தீவிரமடையும் பொருளாதார போக்குகள், அரசியல் மோதல்களே இருக்கும். 

இது ஏற்கனவே நடந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது, ஏனெனில் சீன அச்சுறுத்தலை யாரால் திறமையாகச் சமாளிக்க முடியும் என்பது பற்றியே அமெரிக்க அரசாங்கத்தின் இரண்டு அரசியல் கட்சிகளும் வாதிட்டு வருகின்றன. பொது சுகாதார நெருக்கடி குறித்த குற்றச்சாட்டை சீன அரசாங்கத்தின் மீதே சுமத்த அவை முயற்சித்து வருகின்றன. அதே நேரத்தில், ஜப்பானும் அமெரிக்காவும் தற்போது சீனாவில் உள்ள தங்களுடைய தொழில்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு மாற்றியமைத்துக் கொள்ளவோ அல்லது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற நாடுகளுக்கு நகர்த்தவோ முயல்கின்றன. 

அமெரிக்காவும் சீனாவும் இதுவரை இந்த நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் பல்வேறு வழிகள், அவற்றிற்கிடையே போட்டி எவ்வாறு உருவாகக்கூடும் என்பதையே வெளிப்படுத்துகின்றன. 

பொது சுகாதார நெருக்கடியை மையப்படுத்தப்பட்ட வழியில் எதிர்கொள்ளக்கூடிய திறன் தன்னிடம் இருப்பதை சீன அரசு நிரூபித்துள்ளது, வளங்களின் பொது உடைமை மற்றும் முக்கிய தொழில்களில் பொது முதலீட்டை நம்புவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிற அதே நேரத்தில், வீட்டு வருமானத்திற்கு நேரடியாக உதவுவது மற்றும் வறுமையை நீக்குவது போன்றவை குறித்து மிகவும் குறைவாகவே அக்கறை காட்டியுள்ளது. இதற்கு மாறாக, பொது சுகாதார நெருக்கடியைக் கையாள்வதில் பெரும் கட்டமைப்பு பலவீனங்கள் இருப்பதை அமெரிக்க அரசு எடுத்துக் காட்டியுள்ளது. அதன் நவீன தாராளவாத சித்தாந்தம், பொருளாதார நெருக்கடியை திறம்பட எதிர்கொள்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் வேலையின்மை அதிகரித்திருக்கின்றது. அதே நேரத்தில், நவீன தாராளமயத்தின் துயரத்தை மீறி, அமெரிக்க அரசு ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் மிகவும் வலுவாக ஆதரித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் பொதுத் துறையைப் பொறுத்தே, கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை என்பதால், இந்த நாடுகளுக்கிடையே இருக்கின்ற வேறுபாடுகள் வரவிருக்கும் காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். நவீன தாராளமய ஆதரவாளர்களுக்கு ஏற்கனவே சவால் விடப்பட்டுள்ளது. அவர்களின் தோல்வி அமெரிக்காவில் தெளிவாக உள்ளது. அது சீனாவுடனான மேலாதிக்க போட்டியைப் பாதிக்கிறது. நவீன தாராளமயம் படிப்படியாக வாடுவதும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மேலாதிக்க போட்டியில் மாறிவருகின்ற சமநிலையும், உலகெங்கிலும் உள்ள மாற்று பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளுக்கான விவாதத்தின் விதிமுறைகளை நிச்சயம் மாற்றுவதாகவே இருக்கும். 

தானோஸ் மொரைடிஸ், ஆம்ஹெர்ஸ்டில் உள்ள யுமாஸில் பொருளாதாரத் துறை  பிஎச்டி மாணவர்.

யுனிங் ஷி, லண்டன் பல்கலைக்கழக ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க பள்ளியில் பொருளாதாரத் துறை பிஎச்டி மாணவி. 

 

https://www.jacobinmag.com/2020/06/china-united-states-coronavirus-covid-nation-state?__cf_chl_jschl_tk__=f12d7560c846fe8331884d8d3f4417318d9083b2-1591930872-0-AZUi5ofSdS8UR4jVgqJ3JqSkKKjv4yGxox5TnfvtD-9lfkArkaMaeoky3zME_m7qF8mbJw9cl-GCn5TavqYQlAXT5XuG0hNJtrPQOif5o3WoocUDtdAFwQAmhYLPAQJoGFYisV9h23xg4YSXK2VSNj8rq5PqlZEZZJLtPpi2I0H3BZWeiNG8_eX-U4OxVe8lCwoypcRm5dzZIs2qc4HLXBvZvufZ_Sv8Rf0i0Lfo9eeoGbm6zEVBJ_kx605VLF6c4bKGD_9qRJ0wGeDKkVP1_e1PVEEDwcaL1dgnltrxUMN-9Nj-xentQ1vVo5wIlUd_5EaWWddrkMqFjsaZaaYcMipsPiuYeWpbDCfajduenVqptsazohOJije3qy8jOz7R1rNul8BhzGWOGIMZLrEJlPFRPMqAH-ZHF8C5zbVBULFB

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *