பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துக கட்டுரை – தமிழில்: ச.வீரமணி




தமிழில்:ச.வீரமணி

உலகில் ஒவ்வொரு 11 நிமிடங்களில் ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ தன்னுடைய நெருங்கிய நபரால் (intimate partner) அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார் என்கிற அதிர்ச்சி அளிக்கும் உண்மைத் தகவலை, ஐ.நா.செக்ரடரி ஜெனரல் அந்தோனியோ குத்தரேசு (Antonio Guterres) தாக்கல் செய்தது, மிகவும் விரிவான அளவில் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. நவம்பர் 25 அன்று “பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை ஒழித்துக் கட்டுவதற்காக” சர்வதேச தினமாக அனுசரித்திட வேண்டும் என்று ஐ.நா.மன்றம் அறைவவல் விடுத்தது. உலகம் முழுதும் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அந்தோனியோ குத்தரேசு தெரிவித்துள்ளார்.

வழக்கமாக நடைபெறும் யுத்தங்களில் மக்கள் பலியாவதைக் காட்டிலும் அதிகமான அளவில் குடும்ப வன்முறை நிகழ்வுகளில் பெண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு குடும்ப வன்முறை நிகழ்வுகள், பெண்களுக்கு எதிரான அறிவிக்கப்படாத யுத்தமாக நடந்துகொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் குவி மையமாக இருக்கின்ற, நன்கு வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படக்கூடிய நாடுகளில்கூட, பெண்களுக்கு எதிரான பதிவுகள் மிகவும் மோசமாக இருப்பதாகவே, ஐ.நா. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த நாடுகளின் தரவுகளிலிருந்து தெரிய வருகிறது.

இந்தியாவிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. சராசரியாக, ஒவ்வொரு நாளும் 86 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று 2021 தேசியங்க குற்றப் பதிவேடு (National Crime Bureau) வெளியிட்டுள்ள தரவிலிருந்து தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மணி நேரத்தில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 49 பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் வரதட்சணை தொடர்பான குடும்ப வன்முறை காரணமாக சராசரியாக 18 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரே ஆண்டில் மட்டும் 6,589 வரதட்சணைச் சாவுகள் பதிவாகி இருக்கின்றன. வரதட்சணைக் கொடுமைகளிலிருந்து தப்பி உயிர் பிழைத்திருப்பவர்களிடம் ஆய்வு செய்தபோது, இவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், குடும்ப அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகியதாகக் கூறியதாக தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 காட்டுகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் எந்தவொரு அரசாங்கத்தையும் வெட்கத்தால் தலைகுனியச் செய்யும். ஆனால் இந்தியாவில் இவை தொடர்பாக ஒரு வார்த்தைகூட ஆளும் அரசாங்கத்திடமிருந்து வெளிவரவில்லை. சிலர் இதனை பெருந்தொற்று (pandemic) என்றே சித்தரிக்கிறார்கள். உண்மையில், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது நம் சமூக அமைப்பில் தோன்றியிருக்கும் நோய் ஆகும். மூர்க்கத்தனமான சாதிய நடைமுறைகளால் தலித் பெண்கள் மிக மோசமான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், பெண்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு தண்டனை என்பது அநேகமாக இல்லை என்பதேயாகும். சாதிய மற்றும் ஆணாதிக்க சமூக அமைப்பு முறை காரணமாக, பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களில் 75 விழுக்காட்டினர் தண்டிக்கப்படுவதில்லை. இவ்வாறு தண்டனை என்பது மிகவும் குறைவாக இருப்பதற்கு, குற்றம் நடந்ததற்குப்பின்னர் விசாரணையில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் ஏற்படும் சறுக்கல்களாகும். காவல்துறையினர் முறையாக விசாரிப்பதில்லை, நீதிமன்றத்திலும் நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கப்படுவது, வன்முறைக்கு ஆளான பெண்கள் மீது சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிக்கப்படுவது ஆகியவையே குறைந்த தண்டனைக்குக் காரணமாகும்.

கணவனால் அல்லது உறவினர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறையுடன் ஒத்துப்போகக்கூடிய பெண்ணே உதாரண மனுஷி (ideal woman), என்கிற சிந்தனைப்போக்கு புதிய ஆட்சியாளர்களின் கீழ் புதிய வாழ்க்கையாக பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. திருமணமான பெண் கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் (marital rape) அதனைக் கிரிமினல் குற்றமாகக் கருத அரசாங்கம் மறுத்துவிட்டது. ஏனெனில் அது குடும்பத்தைச் சீர்குலைத்துவிடுமாம். இதுதான் அவர்கள் மனநிலையின் பிரதிபலிப்பாகும். மனுவாதி கலாச்சாரம், குடும்ப உறவுகளை ஜனநாயகப்படுத்துவதற்கும், பெண்களை சமத்துவத்துடன் பாதுகாப்பதற்கும் பெரும் தடையாக இருக்கிறது.

மேலும் ஒவ்வொரு பாலியல் வன்புணர்வுக் குற்றமும், பலியானவரின் மதம் மற்றும் குற்றம் செய்த நபரின் மதத்தைச் சார்ந்தும் பார்க்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. பில்கிஸ் பானோ வழக்கில், பாலியல் வன்புணர்வை ஏற்படுத்திய மற்றும் கொலைகளைச் செய்திட்ட கயவர்கள், விடுதலை செய்யப்படுவதற்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார். அதே சமயத்தில் முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டப்படும்போது, ஆளும் கட்சியினரும் அதன் அமைப்புகளும் பெண்களுக்கு நீதி வேண்டும் என்று கோருவது, தற்செயலான நிகழ்வு அல்ல.

இதற்கு மிகவும் சரியான எடுத்துக்காட்டு, சமீபத்தில் அஸ்ஸாம் முதல் அமைச்சர், ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஷ்ரத்தா வாக்கர் (Shraddha Walkar) வழக்கு தொடர்பாக உதிர்த்துள்ள வார்த்தைகளாகும். அவர் கூறியிருந்ததாவது: “ஒவ்வொரு நகரத்திலும் அஃப்லாப் போன்றவர்களைத் தடுக்க மோடி போன்ற இரும்பு மனிதரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.” ஷ்ரத்தாவைக் கொடூரமான முறையில் கொலை செய்தது அவள் உறவு வைத்திருந்த முஸ்லீம் நபர். எனவேதான் இதனை ‘லவ் ஜிகாத்’ என்று கூறி மிகவும் வெறித்தனமான முறையில் மதவெறி நச்சுப்பிரச்சாரத்தை மேற்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற அதே சமயத்தில் இதேபோன்று மற்றொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அசம்கார் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இளம் பெண் ஒருவர் அவளுடைய முன்னாள் ஆண் நண்பனால் (boy friend), கொல்லப்பட்டு ஆறு துண்டுகளாக்கப்பட்டார். சிதாபூர் மாவட்இடத்தில் இதேபோன்று மற்றொரு பெண் அவருடைய கணவனால் கொல்லப்பட்டு துண்டு துண்டுகளாக்கி வயலில் தூக்கி எறியப்பட்டிருந்தார். ஆனால் பாஜக தலைவர்கள் இவை குறித்தெல்லாம் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. காரணம், பலியானவரும், கொலை செய்தவனும் இந்துக்கள். இதேபோன்றே தலித் பெண்கள் உயர் சாதியினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, ஒரு வார்த்தைகூட இவர்கள் உதிர்ப்பதில்லை. இவ்வாறு பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளை மதவெறி அடிப்படையில் பார்க்கும் போக்கு மிகவும் ஆபத்தாகும். இது நீதிமன்ற நடைமுறைகளையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும் அநேகமாக ஒழித்துக்கட்டிவிடும்.

முதலாளித்துவமும், அதன் சமூகக் கட்டமைப்புகளும் ஆணாதிக்க சமூகப் பழக்க வழக்கங்களுக்கு உதவுகின்றன. இதுதான் உலகம் முழுதும் உள்ள நிலையாகும். முதலாளித்துவம் பெண்களை குறைந்த கூலிக்கு அமர்த்த வேண்டும் என்பதற்காகவே அவர்களின் கீழ்நிலையில் உள்ள சமூக அந்தஸ்தையும், கலாச்சார முறையையும் அப்படியே வைத்துக்கொள்ள விரும்புகின்றன. முதலாளித்துவ உலகம் பெண்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், வன்முறையைப் பிரயோகிப்பதற்கும் அடிப்படை இதுதான். இந்தியாவிலும் வலதுசாரி இந்துத்துவா பேர்வழிகள் மனுஸ்மிருதியையும் சாதியக் கட்டமைப்பையும் தூக்கிப்பிடிப்பதன் மூலமும், பெண்வெறுப்பு மற்றும் ஆணாதிக்க மனோபாவம் மீளவும் வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இது, சிறுபான்மையினர் மத்தியில் உள்ள பிற்போக்கு சக்திகளுக்கும் வலுவை அளித்து, அவர்களும் பெண்களைத் தங்களுக்குக் கீழ் தள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள்.

அரசமைப்புச்சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான சட்டங்களைக் கறாராக அமல்படுத்தக் கோரியும், போராட்டங்களை முன்னிலும் பன்மடங்கு வீர்யத்துடன் நடத்திட வேண்டும். இடது மற்றும் ஜனநாயக சக்திகள் தங்களுடைய போராட்ட நடவடிக்கைகளில் இதனையும் ஒரு முக்கியமான அங்கமாக இணைத்துக்கொள்ள வேண்டும்.

(நவம்பர் 23, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.