ஞாயிறு விடுமுறை… எங்க வெளிய போகனு தெரியாம… உட்கார்ந்திருந்தான் வெங்கட் பட்டு….

டேய்… என்னடா… பலத்த யோசனை… எனக்கூறிய படியே வந்தான் ராஜ்… தன் நண்பர்களான பிரியன் விஷ்வா… லித்விக்குடன்…

ஒன்னுமில்ல டா…. நம்ம ஊர்ல ஆலமரத்துக்கு அங்கிட்டு இருக்குற… ஆத்துல வித்தியாசமான மீன்களாம் இருப்பதா எங்க சித்தப்பா சொன்னார்…

அதை எப்படியாவது தூண்டில் போட்டு பிடிக்கனும் டா…

ஆசையெல்லாம் நல்லாத்தான் இருக்கு… ஆனா நம்ம சின்ன பசங்க டா… எப்படி முடியும்… நம்மகிட்ட தூண்டில் இல்ல…

ஏன் முன்ன போல மீன் பிடிக்க ஒரு துண்டு கூட இல்லடா…

ஆமா… ராஜ் சொல்றது சரிதான் டா… என்றான் விஷ்வா…

என்னடா… எல்லாரும் நெகடிவா பேசுறீங்க… நம்ம நினைச்சா முடியும் டா… அதுக்கு ஐடியா எங்கிட்ட இருக்கு…

என்ன லித்விக் சொல்ற… அது எப்படி முடியும்…
வெங்கட் சித்தப்பா தூண்டில்கள் நிறையா வைச்சிருப்பார்.. அதை எடுத்துட்டு போனா போதும் சிம்பிள்…

கேட்க நல்லாத்தான் இருக்கு… மாட்டிக்கிட்டோம்னா…

அதெல்லாம் ஒன்னும் ஆகாது… என் கூட வா னு…
ரொம்ப அசால்ட்டா கூட்டிட்டு போயி தூண்டில் எடுத்துட்டு வந்தான் லித்விக்.

நால்வரும் நடைபயணமா போயிட்டு இருந்தாங்க… அவங்க தோற்றம் பார்க்க கெத்தா இருந்தது… சாதிக்கப்போறோம்னு கெத்து பார்வையில் தெரிஞ்சது.

ஆனா… வெங்கட் மட்டும் கொஞ்சம் பயந்து பயந்து வந்தான்…

கொஞ்ச தொலைவில் அந்த ஆலமரமும் ஆறும் அடைந்தார்கள்…
ஆர்வத்தில் வேகமாக தூண்டில் விட்டான் லித்விக்…

இருடா… உன் ஆர்வத்துக்கு அளவில்லாமல் இருக்கே…
சும்மா தூண்டில் மட்டும் வைச்சா மீன் தானா வருமோ என்றான் விஷ்வா…

ஐயோ… கடவுளே… மறந்துட்டேனே டா…

அதுக்கு ஏதாவது புழு இருந்தா கொண்டு வா… ஊசில மாட்டி இறக்கிடுவோம்…

ம்ம்… சரியா சொன்ன… இதோ வாரேன்… என்றே கொஞ்ச நேரத்தில் புழுவோடு வந்தான் ராஜ்… விஷ்வா…

தூண்டிலில் புழுவை மாட்டி நீரில் இறக்கினர்…

யாருக்கு முதல்ல மீன் சிக்குதுனு பார்ப்போம்… என்றே ராஜ் கூற எனக்கு… எனக்கு தான்னு கூச்சலிட்டனர்.

இருங்கடா… அமைதியா இருந்தா தான் மீன் மேல் வரும்.

பொறுமையா இருங்க என்றே தூண்டிலும் பார்வையுமாய் காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் தூண்டில் நரம்பு ஆட ஆரம்பித்தது…

டேய்… நான் நினைச்சது போல மீன் மாட்டிருச்சு டா…

ஆர்வமாய் பார்த்தனர்… சொன்னது போல பிடிச்சுட்டானே லித்விக்… செம்ம டா… என்றான் வெங்கட்…

ஆனா என் சிந்தனை முழுக்க சித்தப்பா மேல் தான்டா இருக்கு… என்ன சொல்வாறோனு…

பயப்படாதடா… நாங்க இருக்கோம்ல… கவனமா தூண்டில் போடு என்றான்…

சிறிது நேரத்தில் விஷ்வா கைகளில் இருந்த தூண்டிலிலும் மீன் மாட்டியது…

இவர்கள் எதிர்பார்த்தது போல் லாப்ஸ்டர் கிடைச்சாச்சு…

சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்…

வெங்கட் மட்டும் இறுதிவரை மீன் பிடிக்கலை… இவங்க பிடிச்ச மீன் எல்லாம் அந்த ஊர் பசங்க வந்து பார்த்துட்டு போனது ரொம்ப பெருமையா இருந்தது…

நண்பர்கள் சிரிச்சாலும் தன்னால முழுமையா சிரிக்க முடியாம வெங்கட் மட்டும் ஒதுங்கி நின்றான்.

என்னடா… வெங்கட் சோகமா இருக்க…நீ இல்லனா இந்த மீன் எங்களுக்கு கிடைச்சிருக்காது… தூண்டில் கொடுத்த உனக்கு தான் எல்லா மீன்களும்னு அவன் கையில் எல்லாத்தையும் கொடுத்தனர்…

சிந்தனைக்கும்… செயலுக்கும் நூலளவு தான் வித்தியாசம்… செயல்பட ஆரம்பிச்ச அப்புறம் இடையூறான சிந்தனையை தூக்கி போடனும் னு சித்தப்பா யார்கிட்டயோ கைபேசில பேசிக்கிட்டு இருந்தப்போ…

மீனும்… தூண்டிலுமாய் அவர் முன்னாடி இவர்கள் நின்று புன்னகைத்தனர்.

– சக்திராணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *