தமிழ்மாநிலத்தின் தலைநகரம் முழுமையும் கண்ணுக்குத் தெரியாத வைரசின் சுற்றுலாத் தளமாக மாறியிருந்தது. திரும்பிய திசையெல்லாம் கல்லூரிகளும் பள்ளிகளும் முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. கரையான் புற்றின் நெரிசல் மிகுந்த கூடுகளைப் போல் எப்போதும் காட்சியளிக்கும் எழில் மிகு மாநகரம் கேட்பாரற்று வெறிச்சோடிப் போயிருந்தது. வாழ வந்த கூட்டமெல்லாம் வசைப்பாடி ஊருக்கு பாதையாத்திரை கிளம்பியிருந்தது. பரிசோதனைகள் முடிந்த குமார் முகாமிற்கு கிளம்ப ஒரு வண்டியில் ஏற்றப்பட்டான். போனை எடுத்தாலே தனிமனித இடைவெளியை பின்பற்ற சொல்லி அரசாங்கத்தின் அறிவிப்பு தவறாமல் ஒலிக்கும். ஆனால் அவசர ஊர்திக்கெல்லாம் காதுகள் இல்லாததால் அதில் பயணிப்போருக்கு அந்த அறிவிப்புகளெல்லாம் செல்லாது போல. பத்து இருக்கைகள் கொண்ட வேனில் பதினைந்தாவது ஆளாக குமாரும் முகாமை நோக்கி பயணப்பட்டான். வானூர்திகள் வானைப் பிளக்கும் வட்டாரத்தில் ஜெயினர்கள் நடத்தும் கல்லூரி ஒன்றில் உருவாக்கப்பட்டிருந்த முகாமில் இறக்கிவிடப்பட்டனர் குமாரும் அவனது பதினான்கு கூட்டாளிகளும்..
மீண்டும் முகாமில் பரிசோதனை துவக்கப்பட்டிருந்தது. வந்தவர்களின் நோய் வரலாறுகளை அறிந்துக்கொண்ட பிறகே அறைகள் ஒதுக்கப்பட்டன. வரிசையில் கடைசியாக இருந்த குமாருக்கு பரிசோதனையில் ஒரு எதிர்பாராத சோதனையும் அவனோடு வரிசையில் காத்திருந்தது. குமார் ஒரு இரட்டை நோயாளி. சிவப்பு நாட்டில் வைரஸ் பரவ தொடங்கியவுடனே குமாருக்கு இங்கு மனக்கலக்கம் பரவ தொடங்கியிருந்தது. பாரதத்திற்கெல்லாம் இந்நோய் வந்தால் நாம்தான் முதல்பலி என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான். காரணம் அவனுக்குள்ள காச நோயும், சர்க்கரை நோயும். இறுதியாக பரிசோதனை முடிந்து, ‘இங்கெல்லாம் உங்களுக்கான வசதியில்லை; மருத்துவமனை அனுப்புகிறோம் காத்திருங்கள்’ என சொல்லிவிட்டு செவிலியர் கிளம்பிவிட்டார். ‘இதென்னடா குமாருக்கு வந்த சோதனை’ என கண்ணத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டான். நொடிகள் யுகமாய் கடக்க புட்டங்களிரண்டும் அனலாய் கொதிக்க தொடங்கியிருந்தது. மாலை சூரியனை இரவின் இருட்டு கவ்வி விழுங்கியிருந்தது. பாசிட்டிவ் அலைகளை மட்டுமே உள்வாங்கியிருந்த குமாருக்கு முகாம் கொடுத்த நெகட்டிவ் அலைகள் நெருடலாகவே இருந்தது. எண்ணப்பட்ட இரவு உணவுகள் கொண்டு வந்து மேசையில் மொத்தமாக போடப்பட்டது. நோயாளிகளோ ஒன்றுக்கிரண்டாய் அடுத்தவருக்கு கிடைக்குமா என்று யோசிக்காமல் கபளீகரம் செய்ய துவங்கியிருந்தனர். பற்றாத சோறும் , உண்டால்தான் சத்து என்ற நிலையும் இருக்கும்போது அவர்களை குறை சொன்னால் தகுமா? இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குமார் மனதால் உணவை ருசிக்க தயாரில்லை. உடலால் சாப்பிடுவதை தவிர உயிர்வாழ வழியில்லை என்பதை புரிந்துக் கொண்டு ஒரு பொட்டலத்தை எடுத்து வைத்துக் கொண்டான்.
சர்க்கரை நோயாளி என்பதால் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டுதான் உணவு உண்ண வேண்டும். அறை ஒதுக்கப்படாததால் எங்கு சென்று கால்சட்டையை கழற்றி ஊசி போடுவதென்று குழப்பம். செவிலியரை பார்க்கப் போனால் நீலக்கடல் மீன்களை மறைப்பது போல் கண்களைத் தவிர உடலை மறைக்கும் கவச உடையோடு நான்கைந்து பேர். யாரைக் கேட்டாலும் சலிப்புத் தட்டிய குரலில் ‘வண்டி வரும் பொறுங்க’ என்ற கோரஸ் பதில். சோதனைக்கு மேல் சோதனையா என்று நொந்துக்கொண்ட குமார் நேராக ஊசிப்பையை எடுத்துக்கொண்டு கழிவறைக்குள் நுழைந்தான். மூத்திர நாத்தமும், மருந்தின் நெடியும் ஏதோ புதுவித இரசாயன கலவையின் வாசனையை தந்தது. நாசிகளை மூடிக் கொண்டு கண்ணில் வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு நின்றவாரே ஊசியை செலுத்திக் கொண்டான், குமார். நோயை நொந்துக் கொண்டு உணவை உண்டு முடித்தான். இனம்புரியாத சோகம் அவனை கவ்வியிருந்ததை அவன் கவனிக்க தவறவில்லை. இதற்கிடையில் வனிதாவை பற்றிய நினைவுகளும் மனதை கலங்கடித்திருந்தது. தனக்கு இடம் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னால் தேவையற்ற பதட்டமடைவாள் என்றெண்ணி அவள் கொடுத்த 22 அழைப்புகளையும் தவிர்த்திருந்தான். உண்ட மயக்கமும் அலைந்த கிரக்கமும் கண்களை கொஞ்சம் மூடச் சொல்லி கெஞ்சியது.
திடீரென்று ஒரு அழைப்பு. “உங்களுக்கு வசதிகள் சரியாக இருக்கிறதா? நாங்கள் மாநகராட்சி ஊழியர்கள்” என்றது ஒரு குரல். எண்ணெயில் விழுந்த அப்பளத்தை போல் நடந்த யாவற்றையும் சொல்லி எனக்கு உதவுங்கள் என்று கதறிவிட்டான், குமார். பாவம் அந்த இளைஞன் மழலையில் தகப்பனைத தவறவிட்டு, பருவத்தில் தாயை பறிகொடுத்து பயத்தை மறைத்தே வாழபழகியவன். ஊர் பாசையில் சொல்லப்போனால் அம்மாஞ்சி, கைப்பிள்ளை, சோனகிரி இப்படி அடுக்கலாம். ஆனால் தைரியசாலி தான் அவன். இல்லையென்றால் ஒரு தங்கையுடன் தனியே இம்மாநகரில் பிழைக்க முடியுமா?
அழைப்பு துண்டித்த அடுத்த ஐந்தாவது நிமிடம் முகாம் பொறுப்பு மருத்துவரின் அழைப்பு, நடுங்கிய குரலில் கார்ப்பரேஷன் கமிஷனரிடம் “ஏனப்பா புகார் செய்தாய்? உனக்கு என்ன பிரச்சினை, நாங்களே பாவம் அல்லும் பகலுமாய் உழைத்துக் கொண்டிருக்கிறோம், புரிந்துக்கொள்ளுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என அவனைப் பேச விடாமலே அந்த குரல் இணைப்பைத் துண்டித்தது. ஒரு நிமிடம் நடந்தவை விளங்காத குமாருக்குப் புரிந்ததெல்லாம் தன்னிடம் பேசியது ஒரு அதிகாரி என்று. உடனே அவசர ஊர்தியும் வந்துவிட்டது.. சத்தமில்லாமல் ஏதோ புரட்சியை செய்தது போல கர்வமாய் ஏறி ஊர்தியில் அமர்ந்துக்கொண்டன், குமார்.
சுபாஷ்
இந்திய மாணவர் சங்கம்
தொடர் 1ஐ வாசிக்க : கதை தொடர்: வாழ பழகுவோம் – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)