சுல்லுனு சுட்டெறிக்கும் மதியசூரியனின் மஞ்சளொலியில் எப்போதும் பாசிட்டிவ் அலைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கும் குமார் ஏதோ பதற்றத்துடன் உலாவிக் கொண்டிருந்தான். எதிர்படும் யாவர் மீதும் எரிந்து விழுந்துக் கொண்டிருந்தான். காலையில் உலக எழவு செய்திகளை சுமந்து வந்த பேப்பர் காரனில் துவங்கி மதியம் சமைக்க வந்த சமையல்காரி வரை திட்டி தீர்த்திருந்தான். அலுவலகத்திற்கும் முழுக்கு போட்டிருந்தான். குமாரின் இந்த செயல் அவன் தங்கை வனிதாவிற்கு வித்தியாசமாய் தெரிந்தது. காரணம் அவன் அம்மா இறந்த போது கூட அழுது புரண்ட வனிதாவை நிதானமாக தேற்றி வாழ்க்கையை இயல்பாக்கியது குமார்தான். அவ்வளவு எதார்த்தவாதி. பொறுமையாக எந்த பிரச்சினையையும் அனுகக்கூடியவன். இதனாலே எல்லோரும் அவனை “பொறுமை பொன்னம்பலம்” என்று அழைப்பார்கள். அவன் நண்பர்கள் வீடுகளின் பிரச்சினைகளுக்கு கூட தீர்த்து வைக்க குமாரே அழைக்கப்படுவான். அப்படி பட்ட குமார் இப்படி எரிந்த விழுவதைக் கண்ட வனிதா அவனிடம் சென்று காரணம் கேட்டாள். அவளையும் உன் வேலையை பார் என்று சொல்லி மூஞ்சியில் அடித்தவாறு சொல்லிவிட்டான்.
முகம் இறுகிப்போன வனிதா தன் அறைக்குள் சென்று மனகலக்கத்துடன் அமர்ந்துவிட்டாள். கொஞ்ச நேரம் தரைக்கும் விண்ணுக்குமாய் குதித்துக் கொண்டிருந்த குமார் தன்னிலை மறந்தவனாய் காணப்பட்டான். சிறிது நேரத்திற்கு பின்பு தான் பொறுமையிழந்ததை உணர்ந்து வனிதாவிடம் சென்று மன்னிப்பு கேட்டான். பின் அவன் சொன்னதுதான் மன்னிப்பை விட அவளை அதிர்ச்சியில் தள்ளியது. அவனுக்கு இரண்டு நாட்களாக சாப்பிடுவதை சுவைக்கவும் முடியவில்லை, மணமும் தெரியவில்லை. புதிதாய் வந்திருக்கும் சப்பை மூக்கு வைரசா இது என்ற சந்தேகமே அவனின் அந்த கோபத்திற்கு காரணமாய் இருந்துள்ளது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தவளாய் வனிதா அவசர அவசரமாய் குமாரை கிளப்பினாள். நேராக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர். இருவருக்கும் பரிசோதனை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து இருவரையும் தனியறைகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர். பிறந்தது முதல் பிரிந்து பழக்கமில்லா இருவருக்கும் தனியறை தனிமை கொஞ்சம் கலக்கத்தயே தந்தது. ஒருவர் பற்றி ஒருவர் சிந்திக்காத நொடிகளில்லை. பெற்றோர்கள் இறந்தபின் ஒருவர் மேலொருவருக்கான அன்னியோன்யம் அலாதியானதாக மாறியது . இருவரும் தனியறைகளுள் ஒரு மனதுடன் பரிசோதனை முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இரு நாட்களுக்கு பிறகு காலை புத்தொளி பனிதுளிகளை புணர்ந்துக் கொண்டிருந்த சமயத்தில் குமாரும் வனிதாவும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். உறக்கத்திலிருந்தவனை உதைத்து எழுப்பியது போல் செல்போனின் அழைப்பு சத்தம் ரீங்காரமாய் அவன் காதுகளுக்குள் உரசி அவனை எழுப்பியது. தூக்கம் கலைந்த கோவத்திலும், கனவு கலைந்த ஏக்கத்திலும் சோகத்தோடு எழுந்து பொத்தானை அமுக்கி போனை காதில் வைத்தான். எதிர்பக்கம் கம்மிய குரல் “சார் உங்களுக்கு பாசிட்டிவ்” என்றது. எச்சில் முழுங்க முடியாதவனாய் இவன் படபடத்து நிற்க மீண்டும் அந்த குரல் “சார் உங்களுக்கு பாசிட்டிவ் ,கிளம்பியிருங்க வண்டி வரும்” என்று சொல்லி இணைப்பை துண்டித்தது. அதுவரை எல்லாவற்றிலும் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் அறிவுறை சொல்லும் குமாருக்கு முதல்முறையாக பாசிட்டிவ் என்ற வார்ததை அறுவருக்கத்தக்கதாக இருந்தது. ஆனால், ஆறுதலாக முதல் முறை நெகட்டிவ் என்ற வார்த்தை உலகிலயே நல்ல வார்த்தையாக தோன்றியது. காரணம் வனிதாவிற்கு நெகட்டிவ். தேவையான எல்லாவற்றையும் வனிதா எடுத்து வைக்க போருக்கு செல்லும் தேர் போல அவசர ஊர்தி வாசலில் வந்து நின்றது. கலக்கமிருந்தாலும் அதை கண்களில் காட்டாமல் வழியனுப்பிவைக்க வந்த வனிதாவிடம் கண்டிப்பாக “இதுவும் கடந்து போகும்” என்று வழக்கமான தன் பாசிட்டிவ் விதைகளை தூவிவிட்டு கொரோனா வார்டுக்கு(போருக்கு) கிழம்பினான் குமார்.
தொலைக்காட்சிகளில் செய்திகளில் இரு பாதுகாப்பு உடை தரித்த மருத்துவ ஊழியர்கள் பத்திரமாக அழைத்து செல்லும்போது ஊரே செல்போனில் வீடியோ எடுத்து பின்னொலி கூட்டி சமூக வலைதளங்களில் பதிந்து கருணை லைக்குகளை அள்ளிக் குவிக்கும் வீடியோக்களை முன்னமே பார்த்திருந்த குமாருக்கு ஒருபக்கம் நாமும் வீடியோக்களில் பிரபலமாகிவிடுவோமா என்ற கலக்கம், மறுபக்கம் மதுரையில் ஒரு நோயாளியை வீட்டிற்குள் விடாமல் தெரு ஜனங்கள் அவர் தூக்குப்போட்டு சாகும் வரை கொண்டுசென்ற சேதியும் சிறிது பயத்தை ஏற்படுத்தி இருந்தது. அவற்றை தாண்டி மாநகராட்சியால் அடைக்கப்பட்ட வீட்டிற்குள் முடக்கப்பட்ட வனிதாவின் நினைவுகள் அலைமோதின.
இவ்வளவு எண்ண அலைகளுக்கு மத்தியில் ஆரம்பமே ஏமாற்றமாய் எந்த ஒரு அவசர உபகரணங்களுமற்ற அவசர ஊர்தியில் அவசர மருத்துவர் கூட இல்லாமல் பயணப்பட்ட போதுதான் மூளையில் உதித்தது அந்த அசறீரி டிவில காட்டுனதலாம் பொய்யா கோபால்??..
வனிதாவை பிரிந்த சோகத்தோடும், அவசர ஊர்தி கொடுத்த முதல் ஏமாறற்த்தோடும் முதன்மை பரிசோதனை முகாமுக்கு வந்து சேர்ந்தான் குமார். அங்கு கல்யாண சாமியான பந்தல் போட்டு சந்தை கூட்டம் போல் தனிமனித இடைவெளியில்லாமல் அமர்ந்திருந்த சக நோயாளிகளை கண்டு இரண்டாம் ஏமாற்றமடைந்தான்.பாவம் இந்த ஏமாற்றம் நூறை தாண்டும் என்று தெரியாத வெகுளியாய் இருந்தான். நான்கு மணிநேர காத்திருப்புக்கு பின் முதல்கட்ட சோதனை முடிந்து பத்துநாள் முகாமுக்கு அனுப்பபட்டான். ஆனால், இனிதான் உண்மையான சோதனை காத்திருக்கிறது என்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
தொடரும்……
சுபாஷ்
இந்திய மாணவர் சங்கம்
அருமை…இன்றைய கொரோனா காலகட்டத்தில் நடுத்தர மக்களின் நிலையை வெளிக்காட்டுகிறது..