விநோத வரிகளும் வியப்பூட்டும் வரலாறும்..!
‘உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்’ – குறள் (756)
ஒருநாடு சிறப்புற்று அமைய வேண்டுமெனில்; அந்நாட்டு அரசனுக்கு கிடைக்க வேண்டிய பொருள்கள் அனைத்தும் குறைவின்றி கிடைக்கப் பெறவேணடும். அதில் மிகமுக்கியப் பங்கு வகிப்பது ‘வரி’ என்பதனை குறிப்பிட விரும்பிய வள்ளுவர் ‘உல்கு பொருள்’ என்னும் சொல்லால் அதனை விளக்குகிறார். ‘வரி’ என்னும் சொல்லானது எப்பொழுதும் மிகஇயல்பாக மக்களால் பார்க்கப்படுவதில்லை. வரிகள் இயல்பான சூழலில் இருந்து மக்களை அசாதாரணமான கோவத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டது என்றால் அதுமிகையல்ல. இதன் காரணமாகவே வசூல் செய்பவர்களும், செலுத்துபவர்களும் எப்போதும் சுலபமாக இருந்ததில்லை என்பதுதான் மிகவும் வியக்கத்தக்க உண்மை. இந்த வரியின் மூலமே புதிய கற்கால மனிதன் தனக்கு தேவையான மற்றும் தனி மனிதனால் எளிமையாக ஏற்படுத்தி கொள்ள முடியாத அனைத்து வசதிகளையும் காலந்தோறும், காலத்திற்கு ஏற்றவாறும் மேம்படுத்தி வந்துள்ளான் என்பதே வரலாற்றுச் சான்று மட்டுமல்லாது; நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமும் இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. மனித சமூகத்தின் வளர்ச்சியுடன் இணைந்து உருவான மிகப் பழமையான நிர்வாக கருவிகளில் ஒன்றாக இந்த ‘வரி’ பார்க்கப்படுகிறது. சமூக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கும், இராணுவ பாதுகாப்பிற்கும், மன்னராட்சி காலங்களில் செலவினங்களுக்கும், பொதுச் சேவைகளுக்கும் வரி என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக அமைந்திருந்தது. அதேசமயம் உலக நாகரிகங்களும், பல்வேறு காலகட்டங்களிலும் தங்கள் தேவைகளையும், அரசியல் சூழலையும் பொருத்து விநோதமான மற்றும் தனித்துவமான வரி முறைகளை காலந்தோறும் உருவாக்கி வந்துள்ளது.
அதன் அடிப்படையில்தான் கி.மு 200 முதல் கி.பி 200 காலகட்டத்தில் மனுஸ்ருமிர்தியில் வரி (Kara), சுங்கம் (Sulka) போன்ற அரசு வருவாய் குறித்த முக்கியமான தரவுகள் அத்தியாயம் 7ல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் கால்நடைகள் மற்றும் தங்கத்தின் அதிகரிப்பில் ஒன்பதில் ஒருபங்கு என்றும், தானியத்தில் எட்டில் ஒருபங்கு எனவும் வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்ற தரவுகள் இடம் பொற்றுள்ளன. மேலும் இந்த காலகட்டத்தில் மிதமான வரிக்கோட்பாடும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதில் அரசனுக்கும், வணிகம் செய்பவருக்கும் நியாயமான பலன் கிடைக்கும் வகையில் வரி நிர்ணயிக்க வேண்டும் எனவும் அது தேனீ போன்று மதிநுட்பத்துடனும், படிப்படியாக உணவு உண்ணும் போக்கு கொண்டு ஆண்டுதோறும் வரி வசூலிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
பழங்கால இந்தியாவில், கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்த்திரம் (கி.மு 4ஆம் நூற்றாண்டு) என்ற நூலில் வரிமுறைகளை முறையாக வகுத்து, விவசாய உற்பத்தியின் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்தும் நிலவரி முறையை நிறுவியது போன்ற நிகழ்வுகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், சுக்ர நீதி (கி.பி 300-700) என்ற நூலில் ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் சுங்கம் வசூலிக்கக் கூடாது என்ற செய்தியும், அதோடு கூடவே கனிம வளங்களின் வரி அளவுகள் குறித்தும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. கி.பி 100 முதல் 300 வரை உள்ள யக்ஞவல்லி ஸ்ருமிர்தி என்ற நூலில் வரி ஏய்ப்புக்கு எட்டு மடங்கு தொகை தண்டனையாக வசூல் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரிமுறைகள் குறித்து ஆச்சார காண்டம் மற்றும் வ்யவஹார காண்டம் போன்றவற்றிலும் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மெசப்பொத்தேமியாவில் வரி செலுத்த முடியாதவர்கள் தங்களது உழைப்பை வரியாக கொடுத்து வந்துள்ளனர். கிரேக்கத்தில் போர் காலத்தில் மட்டுமே வரி வசூலிக்கப்பட்டது; அதுவும் பெரும்பாலும் செல்வந்தர்களின் மீது சமூகப் பொறுப்பாகவே வரி விதிக்கப்பட்டு வந்துள்ளது. ரோம் பேரரசில் சாமானிய குடிமக்களிடமிருந்து மட்டுமல்லாமல், கைப்பற்றிய நாடுகளிடமிருந்தும் சுங்கங்கள் வசூலிக்கப்பட்டன. சீனாவில் நிலவரி மட்டுமல்லாமல் உப்பு, தேயிலை போன்ற அன்றாட தேவைகளுக்கே சிறப்பு வரி விதிக்கப்பட்டது என்பதும் வரலாறு. இஸ்லாமிய கலீபாக்களில், ஜகாத், ஜிஜ்யா, கிராஜ் போன்ற மத அடிப்படையிலான வரிமுறைகளும் நிலவி வந்துள்ளன.
இந்தியாவில் சோழர்களின் காலத்தில் சந்தைவரி, துறைமுக சுங்கம், காடு மற்றும் மீன்பிடி வரி போன்ற சிலவரிகளும் இருந்திருகின்றன. சில நாடுகளில் வரிகள் பணமாக இல்லாமால் விலங்குகள், விளைச்சல்கள், அணிகள் அல்லது வேலைப்பாடுகள் மூலம் செலுத்தப்பட்டது. இவ்வாறு வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் வரி என்பது அரசிற்கு சாதகமான பொருளாதார மேம்பாட்டு கருவியாக மட்டும் இல்லாது, அந்தந்த சமூககத்தின் அரசியல் சிந்தனை, மதநம்பிக்கை, பொருளாதார அடிதளம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கருவியாக இருந்து வந்திருக்கின்றது. எனவே பழங்கால நாகரீகங்களின் வரிமுறைகள் இன்றைய கணக்கீட்டு சட்டங்களில் இருந்து வித்தியாசமாகவும், சில நேரங்களில் விநோதமாகவும் இருந்துள்ளன. மேலும், தற்போது உள்ள சில வரிமுறைகள் பின்னொரு காலத்தில் விநோதமானதாகவும் தோன்றலாம் என்பது காலத்தின் முடிவாகும். அதுபோன்ற சில விநோத வரிகளை இங்கு விவாதிப்போம்.
ஜன்னல் வரி
1696 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மன்னர் மூன்றாம் வில்லியமால் ‘ஜன்னல் வரி’ என்னும் அசாதாரணமான வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வரியானது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஜன்னல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது. மன்னரின் கருவூலம் காலியாக இருந்ததால் அதை நிரப்ப அவர் இந்த யோசனையை கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. 10 ஜன்னல்களுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு அதன் உரிமையாளர் வரி செலுத்த வேண்டும் என்பது வரியின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது. இதில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பகற்காக பலர் தங்கள் வீடுகளின் ஜன்னல்களை கற்களைக் கொண்டு அடைத்தனர் என்பது விநோதமான வரலாறு ஆகும். மேலும் இந்த வரி 1851 இல் நீக்கப்படும் வரை சுமார் 156 ஆண்டுகள் நீடித்ததாக சொல்லப்படுகிறது.
புகைக்கூண்டு வரி
புகைக்கூண்டு வரி என்பது வீடுகளில் உள்ள அடுப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்பட்ட வரியாகும். 14 ஆம் நூற்றாண்டிலிருந்து பல நாடுகளில் இந்த வரி வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இங்கிலாந்தில் 1662 முதல் 1689 வரையிலும் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த சமையல் அடுப்பு மற்றும் புகைக்கூண்டு ஒன்றுக்கு ஒரு நிர்ணய கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஏழை மக்களுக்கு அதிக சுமையாக இருந்ததால் 1689 இல் இவ்வரியானது நீக்கப்பட்டது. மேலும், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் மக்கள் தொகைக் கணக்கீடு நடத்த சிரமமாக இருந்ததால்; ஒவ்வொரு வீட்டிலும் புகைக்கூண்டுகளை எண்ணி வரி விதித்தனர். ஏனெனில், வீடு என்றிருந்தால் கண்டிப்பாக புகைக்கூண்டு என்னும் கட்டமைப்பு இருந்தாக வேண்டும் என்ற காரணகாரிய அடிப்படையில் வரி விதிக்கப்பட்டு எளிதாக வசூல் செய்யப்பட்டது.
ஸ்குடஜ் வரி
இங்கிலாந்தின் முதலாம் ஹென்றி ஆட்சிகாலத்தில் இவ்வரி முதன்முதலாக வசூலிக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் ஹென்றி (1154-1189) காலத்தில் இது அனைவருக்கும் பொதுவான வரியாக மாற்றப்பட்டது. ஸ்குடஜ் (Scutage) என்றால் லத்தீன் மொழியில் கவசம் என்று பொருள்படும். இது மத்திய கால இங்கிலாந்தில் விதிக்கப்பட்ட ஒரு சிறப்பு வரியாகும். இந்த வரியானது இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய இயலாதவர்கள் அதற்கு ஈடாக மன்னருக்கு செலுத்திய வரியாகும். இந்த வரியின் மூலம் ஈட்டும் பணமானது மன்னர் தனியார் இராணுவம் அமைத்து போர் செய்வதற்கு உதவியாக அமைந்தது. ஜான் மன்னன் இந்த வரியை மிக அதிகமாக பயன்படுத்தியதால் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஸ்குடஜ் வரி என்பது இங்கிலாந்து மக்கள் இராணுவத்தில் சேர்ந்து தங்களால் சேவை செய்ய இயலாத நிலையில் அவர்களின் கடமைகளைப் பணமாக (ஈடாக) மாற்றியது இவ்வரி எனலாம்.
டேன்கெல்ட் வரி
இவ்வரியானது வைக்கிங் (Viking) கடற்கொள்ளையர்களுக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட வரிப்பணமாகும். டேனிஷ் (Dane) என்பது வைக்கிங் கொள்ளையர்களைக் குறிக்கும் சொல்லாகும். கெல்ட் (Keld) என்பது வரி என்பதன் ஜெர்மானியச் சொல். இதனை எளிமையாகச் சொல்வோமேயானால் வைக்கிங் கடற்கொள்ளையர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆங்கியலேயர்களால் கொடுக்கப்பட்ட ஈடுபணமாகும் இது. இப்பணம் மக்களிடம் வரியாக வசூலிக்கப்பட்டது.
தேர்தல் வரி
தேர்தல் நேரத்தில் வாக்களித்து; ஒருநபரை தெரிவு செய்வதற்காக அரசிற்கு செலுத்தப்படும் வரி தேர்தல் வரி எனப்பட்டது. இது பிறவரிகளில் இருந்து வேறுபட்டது. இவ்வரி 17ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் தேர்தல் வரி என்பது தேர்தலில் வாக்களிப்பதற்காகவும், சொத்துக்கு ஈடாக ஒருநபர் மீதான வரியாகவும் இருந்து வந்தது. மேலும், 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாக்களிப்பதற்கான முக்கிய தேவையாகவும் தேர்தல் வரி இருந்து வந்துள்ளது. ஏனென்றால் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்கள் போன்ற தகுதியற்ற வாக்காளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இவ்வரி இருந்து வந்துள்ளது. பின்னர் 1937 ஆம் ஆண்டில் தேர்தல் வரி அரசியலமைப்பிற்கு முரணானது என்று கண்டறியப்பட்டு அன்றைய ஜனாதிபதி ஜான்சனின் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டது.
தாடி வரி
1535 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் ஹென்றியால் தாடிக்கு வரி விதிக்கப்பட்டது. ஒரு நபரின் சமூக செல்வாக்கின் அடிப்படையில் இவ்வரி விதிக்கப்பட்டது. மன்னர் எட்டாம் ஹென்றிக்குப் பிறகு அவரது மகள் முதலாம் ராணி எலிசபெத் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் தாடி வைத்திருக்கும் எவரும் வரி செலுத்த வேண்டும் என்ற விதியை உருவாக்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால் வரி வசூலின் போது யாராவது வீட்டில் இல்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. மேலும், 1698 இல் ரஷ்யாவின் மன்னர் பீட்டர் தி கிரேட் தன்னுடைய நாட்டிலும் இவ்வரியை விதித்தார். பீட்டர் ரஷ்ய சமூகத்தை ஐரோப்பிய நாடுகளைப் போல நவீன மயமாக்க விரும்பியதால் இத்தகைய வரி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக செம்பு நாணயத்தால் ஆன தாடி டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு 50 ரூபிள் வரியாக வசூலிக்கப்பட்டது.
பேச்சுலர் வரி
கி.பி 9ஆம் நூற்றாண்டில் ரோம் பேரரசால் விதிக்கப்பட்ட வரி பேச்சுலர் வரியாகும். இது திருமணத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பேரரசர் அகஸ்டஸால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி 20 முதல் 60 வயது வரையிலான தனிநபர்களுக்குப் பொருந்தும்படி விதிக்கப்பட்டது. ரோம்மைப் போலவும் 15ஆம் நூற்றாண்டில் ஒட்டோமான் பேரரசிலும் இவ்வரி விதிக்கப்பட்டிருந்தது. மேலும், இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் 1924இல் 21 வயது முதல் 50 வயது வரையிலான திருமணம் ஆகாத ஆண்களுக்கு பேச்சுலர் வரியை அறிமுகப்படுத்தினார்.
பாலியல் வரி
1971 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ‘ரோட் தீவு’ நிதி சிக்கலை எதிர்கொண்ட போது, ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பெர்னார்ட் கிளாட்ஸ்டோன் மாநிலத்தில் பாலியல் வரி விதிக்க முன்மொழிந்தார். இது செயல்பாட்டிற்கு வரவில்லை என்றாலும்; அதன் பின்னர் ஜெர்மனியில் 2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாலியல் வரிச் சட்டத்தின்படி; ஒவ்வொரு பாலியல் தொழிலாளர்களும் 150 யூரோக்கள் மாதம் வரியாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக உள்ளது என்றாலும், இத்தகைய வரிகளால் அத்தொழிலைக் கட்டுப்படுத்தவும் முடிகின்றது எனலாம்.
சிறுநீர் வரி
பண்டைய ரோமில் சிறுநீர் ஒரு மதிப்புமிக்க பொருளாகக் கருதப்பட்டது. காரணம் சிறுநீரில் அம்மோனியா அதிகம் உள்ளதால் துணிகளைச் சுத்தம் செய்யவும்இ பற்களை சுத்தம் செய்யவும் சிறுநீர் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பேரரசர் வெஸ்பாசியனால் பொது சிறுநீர் கழிப்பறைகளில் இருந்து சிறுநீர் விநியோகம் செய்யப்பட்டது என்பது விநோதமான வரலாற்று நிகழ்வாகும்.
முண்டச்சி வரி
கணவனை இழந்த பெண்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டதால் இதனை முண்டச்சி வரி என அழைத்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் 1976 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கல்வராயன் மலை கிராமங்களில்; கணவனை இழந்த பெண்களிடம் இருந்து இத்தகைய வரியை ஜாகிர்தார்கள் வசூல் செய்து வந்துள்ளனர். இந்த மலைப்பகுதி கிராமங்கள் பலஆண்டுகளுக்குப் பிறகும் ஜாகிர்தார்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முண்டச்சி வரி கட்டுவதற்கு இயலாத பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் இவ்வரியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக; மணமாகிச் செல்லும் பெண்கள் கணவனைப் பிடிக்காமல் பிறந்த வீட்டிற்கே திரும்பி வந்தாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ; உடனடியாக அப்பெண்ணிற்கு மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள். அதனை கல்யாணம் என்று சொல்லாமல் ‘நூல் போடுதல்’ என்று குறிப்பிடுவது வழக்கம். இவை தவிர்த்து வயதான நிலையில் கணவன் இறந்து விட்டாலோ அல்லது கணவனை இழந்த பெண்கள் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளாவிட்டாலோ அவர்களுக்கு மட்டும் ‘முண்டச்சி வரி’ செலுத்தினால் போதும் என்ற நிலை உருவானது. முண்டச்சி வரியில் மட்டும் திருப்தியடையாத ஜாகிர்கள் தங்கள் வருவாய்க்கென பல்வேறு விதமான வரிகளை அங்கு வசித்து வந்த மக்கள் மீது விதித்தனர். அதில் கொடுவாள் வரி, குடிவரி, வீட்டு வரி, வெள்ளாடு வரி, மாட்டு வரி, புனல் வரி, காடு வரி, புல் வரி, கூட்டு வரி, நாட்டு வரி, ஏர் வரி, திருமண வரி, காவாலி வரி (திருமணம் ஆகாத ஆண்களுக்கான வரி. 9 ஆம் நூற்றாண்டில் ரோம் பேரரசால் விதிக்கப்பட்ட பேச்சுலர் வரிக்கு ஒப்பானத இவ்வரி எனலாம்.) என 15க்கும் மேற்பட்ட வரிகள் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இதில் கவணிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில்; பெண்ணடிமை சின்னமாக விளங்கிய உடன்கட்டை ஏறுதல் என்னும் கலாச்சாரம் புழக்கத்தில் இருந்த அதே காலகட்டத்தில்தான், கணவனை இழந்தவர்களை மறுமணம் செய்யத்தூண்டும் இத்தகைய வரியும் விதிக்கப்பட்டது என்பது சற்று வியப்பைத் தருகிறது.
மார்பக வரி
19 ஆம் நூற்றாண்டில் கேரளாவின் திருவிதாங்கூர் மன்னர்; சில சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பகங்களை மூடுவதற்கு மார்பக வரி செலுத்த வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தார். இந்த வரி செலுத்தாமல் பெண்கள் தங்களது மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை. இதில் விநோதமான வரலாறு என்னவென்றால் வரியைக்கட்ட மறுத்த சேர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த ‘நங்கேலி’ எனும் பெண் ஒருவர் தன் மார்பகங்ளை அறுத்து முதன்முதலாக தனது எதிர்ப்பினை சமஸ்தானத்துக்கு தெரிவித்தார். இதில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக நங்கேலி இறந்தார். அவள் இறந்ததன் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சி ஏற்பட்டு; குறிப்பிட்ட சமூகப் பெண்களை மட்டும் அவமதிப்புக்கு உள்ளாக்கிய இச்சட்டமானது ஒழிக்கப்பட்டது.
பசுவாயு (பர்ப்) வரி
நியூசிலாந்தில் விவசாயிகள் பசுமாடுகளுக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்து வந்துள்ளது. ஏனெனில்இ பசுக்கள் தங்களின் செரிமானத்தின் போது அதிக அளவுள்ள மீத்தேன் வாயுவை வெளியேற்றுகிறது என்பது அறிவியல்படி நிரூபனம் செய்யப்பட்டதால்; மீத்தேன் வாயு புவிவெப்பமடைவதற்கு மிகமுக்கிய காரணமாக இருக்கின்றது என்பதை உணர்ந்த நியூசிலாந்து அரசு இவ்வரியை விதித்தது. இந்த வரி நடவடிக்கையின் மூலம் பெறப்படும் பணமானது புவி வெப்பமடைதலினால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டது. மேலும், இந்நிதியைக் கொண்டு அரசானது விவசாயிகளுக்கான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் ஆலோசனை சேவைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டது.
ஓப்ரோக வரி
ரஷ்யாவில் 16 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை இந்த வரியானது இருந்து வந்துள்ளது. ஓப்ரோக வரியின்படி ரஷ்யாவின் வேளாண் அடிமைகள்; மன்னர் அல்லது நில உரிமையாளர்களின் நிலங்களில் வேலை செய்ய வேண்டியது அவர்களின் முக்கிய கடமையாகும். ஆனால் சிலர் நேரடியாக உழைக்காமல் அதற்குப் பதிலாக பணம், பொருள், தானியம், அல்லது கால்நடைகளை வரியாகக் கொடுத்தனர். அத்தகைய வரியே ஓப்ரோக் (Obrok) வரி என்று அழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதாவது 1861 இல் இவ்வரியை நீக்கியபோது அடிமை முறையும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
பன்னேஜ் வரி
பன்னேஜ் வரி என்பது பன்றிகளை காடுகளில் மரக்காய்கள் மற்றும் பிற தாவர உண்ணிகளை உண்பதற்கு அனுமதிப்பதற்காக பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தால் இந்தியாவில் விதிக்கப்பட்ட விசித்திரமான வரியாகும். இதன்படி பன்றிகளின் உடல் எடையை அதிகரிப்பதற்கான முக்கியக் காரணமாக காடுகள் பயன்பட்டதால்; பெரும் வருமானம் ஈட்டக்கூடிய இத்தகைய வரியானது காடுகளின் உரிமையாளர்களால் வசூலிக்கப்பட்டது. பொதுவாகவே மன்னருக்கோ அல்லது நிலத்தரசருக்கோ காடுகள் உரிமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உப்பு வரி
14ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் உப்புக்கு வரியை விதித்தது. இதற்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியே முதன்முதலில் 1759 இல் உப்புக்கு வரி விதித்தது எனலாம். மேலும், பிரெஞ்சு புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தது இவ்வரி என்றால் அது மிகையல்ல. இவ்வரியானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945 ஆம் ஆண்டு ஒழிக்கப்படும் வரை தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்தது. இவர்களைப் பின்பற்றியே ஆங்கிலேயர்களும் இந்தியாவில் உப்பு வரியை விதித்தனர். 1930 ஆம் ஆண்டு இவ்வரியை எதிர்த்து இந்தியாவில் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. மகாத்மா காந்தி இதனை முன்னின்று நடத்தினார். தமிழகத்தில் திரு சி.ராஜகோபாலச்சாரி அவர்களின் தலைமையில் திருச்சிராப்பள்ளி முதல் வேதாரண்யம் வரை சுமார் 240 கிலோ மீட்டர் வரை மக்கள் நடந்து சென்று உப்பு வரிக்கு எதிரான தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
திமிர் வரி
1942 ஆம் ஆண்டு ‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க தீர்மானத்தை முன்வைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் தடுக்கும் விதமாக 1942 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள ஆங்கிலேய ராணுவத் தளவாட தொழிற்சாலையில் இருந்து ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் போர் கருவிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று போத்தனூர் வழியாக ஈரோடு சென்றது. இதனை தடுத்து நிறுத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகஸ்டு மாதம்13ஆம் தேதி நள்ளிரவில் ரெயில் தண்டவாளங்களை தகர்த்தெறிந்தனர். மேலும், 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ஆம் தேதி சூலூர் விமானப்படை தளம் போராட்டக்காரர்களால் சூரையாடப்பட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட கொட்டகைகள் மற்றும் லாரிகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் இரண்டு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். இது ஆங்கிலேயர்களை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்தது; இந்த தகவல் அறிந்து சூலூர் போலீஸ் நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை முடக்கினர். குறிப்பாக விமானப்படை தள சேதத்திற்கு மக்களே இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. இந்த இழப்பீடு வழக்கமாக செலுத்தும் வரிகளோடு; சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தினைக் கொச்சப்படுத்தும் நோக்கத்தோடு ‘திமிர் வரி’ என்று பெயரிட்டு வரி ஒன்றும் சேர்த்து வசூலிக்கப்பட்டது.
மேற்கூறிய வரிகள் மட்டுமல்லாது தொப்பி வரி, சுவரொட்டி வரி, செங்கல் வரி, சோப்பு வரி, மெழுகுவர்த்தி வரி, வாசனைத் திரவிய வரி, விக் வரி மற்றும் டாட்டு வரி போன்றவைகளும் பல்வேறு நாடுகளில் வரிகளாக வசூலிக்கப்பட்டன. வரி என்பது வெறும் அரசாங்க வருவாய்க்கான கருவி மட்டுமல்ல; சமூகத்தின் பண்பாடு, அரசியல், மதம், பொருளாதாரம் ஆகியவற்றின் பிரதிலிப்பாகவும் இருந்து வருகிறது. காலத்தையும், சூழலை பொறுத்து ஒருபுறம் மக்களின் வாழ்க்கையை சிரமப்படுத்திய வினோதமான வரிகளும், மறுபுறம் சமூகத்தில் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்குத் தேவையான வரிகளும் தோன்றியுள்ளன. மார்பக வரி, முண்டச்சி வரி போன்றவை சமூக அநீதி அடிமைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்க; உப்பு வரி, தேர்தல் வரி போன்றவை மக்களின் விழிப்புணர்வையும் புரட்சிகர மாற்றங்களையும் தூண்டியுள்ளன. இவ்வாறு வரலாற்றின் ஒவ்வொரு விநோத வரி முறைகளும் மனித சமுதாயம் எவ்வாறு மாற்றங்களை ஏற்று முன்னேறியுள்ளது என்பதற்கான சான்றுகளாக திதழ்கின்றன. எனவே, இன்றைய காலத்தில் வரி என்பது பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு சீரான கருவியாக இருந்தாலும், அதன் வரலாற்றுப் பயணம் சமூகநீதி, சுதந்திரம், மனித உரிமைகள் குறித்து நமக்கு ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.
‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு’ – குறள் (385)
– முனைவர் வீ.கிருஷ்ணகுமார்
உதவிப் பேராசிரியர்,
ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி,
போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம் – 625582.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

