திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் – கு.மணி 

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம்

– கு.மணி

இலக்கணம் என்றாலே எட்டிக்காயாய் நினைப்பது மாணவர்களின் இயல்பு இலக்கண வகுப்பு என்றாலே பல மாணவர்கள் முகத்தைச் சுழித்துக் கொள்வர் என்றாலும் ஒரு ஆசிரியர் நினைத்தால் இலக்கண வகுப்பினை இனிதாக மாற்றமுடியும். இலக்கண வகுப்பினை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க வைக்க திரை இசைப்பாடல்களை பயன்படுத்தினால் நிச்சயமாக மாணவர்கள் இலக்கண வகுப்பினையும் இன்புற ஏற்றுக்கொள்வர். மாணவர்களையும் மகிழ்ச்சியாக பங்கேற்கச் செய்ய முடியும். இலக்கணத்தை இனிமையாகவும், எளிமையாகவும் மாணவர்கள் கற்பிப்பதற்கு கண்ணதாசன், பட்டுக்கோட்டை, மருதகாசி, வாலி, வைரமுத்து பாடல்கள் பெரிதும் கைகொடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

குறிப்பாக திரையிசைப் பாடல்கள் மூலம் நாம் அணி இலக்கணத்தை எவ்வாறு கற்றுக் கொள்ளலாம் என்பதனை இக்கட்டுரையின் வாயிலாக நாம் அறியலாம். பொதுத்தேர்விற்கு இன்னும் சில மாதங்கள்உள்ள நிலையில் அணி இலக்கணம் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் போது ஐந்து மதிப்பெண்களை எளிதில் பெறமுடியும்.

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். எழுத்து சொல், பொருள், யாப்பு, அணி என்பன. இவற்றில் மற்ற இலக்கணங்களை விட நுட்பமானது. அணியிலக்கணம் அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நுால் தண்டியலங்காரம். இந்நுாலில் தன்மை அணி முதல் பாலிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றிக் கூறப்படுகிறது. அவற்றுள் சிலவற்றை திரைப்பட பாடல்கள் மூலம் விளக்கலாம்.

தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் கவிஞர் தம் கற்பனையை ஏற்றிப்பாடுவது தற்குறிப்பேற்ற அணி. சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் இதனைக் காணலாம்.

”போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட”
– சிலப்பதிகாரம்

கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும் போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளை கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுகின்றார்.

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

இதனை எளிதான முறையில் விளக்க கவிஞர் கண்ணதாசன் ”தாயைக்காத்த தனயன்” திரைப்படத்தில் எழுதிய

”மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது”

இமை இரண்டும் மூடித்திறப்பது இயல்பு. இது காதலனைப் ”பார் பார்” என்பது போல் இருக்கிறதாம். அது போல முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக நிகழ்வது தான். இது ”வா வா” என்று காதலியை நோக்கி அழைப்பது போல் உள்ளது என் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக் கூறி தற்குறிப்பேற்ற அணியை எளிதாக விளக்கியுள்ளதைக் கூறலாம்.

வஞ்சப்புகழ்ச்சி அணி

வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் பழித்தல், பழிப்பது போல் புகழ்தல் என்பது

தேவரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
– திருக்குறள்

இந்தக்குறளில் கயவர்கள் தன் மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றி செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என திருவள்ளுவன் கூறுகின்றான்.

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

இதனை நிழல் நிஜமாகிறது படத்திற்காக கண்ணதாசன் கம்பன் ஏமாந்தாள் என்ற பாடலில்

“அம்புவிழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால்தானோ
அவள் அருஞ்சுணைப் பால் என ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ”

என்று அழகை வர்ணித்த வார்த்தைகளின் மற்றொரு கோணம் சொல்லும் ஒரு வஞ்சப்புகழ்ச்சி.

இரட்டுற மொழிதல் அணி

ஒரு சொல்லோ, சொற்றோடரோ இரு பொருள்பட வருவது இரட்டுற மொழில் அணி எனப்படுகிறது.

”மாலை வந்தன்று மன்ற
காலை யன்ன காலை முந்துறுத்தே”
– (ஐங்குறுநுாறு)

மாலைக் காலத்தில் தலைவி, தலைவனைப் பிரிந்திருக்கிறாள். பிரிவுத்துயரில் இருக்கும் அவள் மீது தென்றல் வீசுகிறது. ”துன்பம் தரும் தென்றல் காற்றை முன்னால் விட்டு பின்னால் மாலை என்னும் காலனாகிய கூற்றுவன் வருவது போல் உள்ளதே” என்கிறாள். இப்பாடலில் “காலை” என்பது காற்று என்றும், காலன் என்றும் இரு பொருள்களில் வருகிறது.

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

“பலே பாண்டியா” என்ற திரைப்படத்தில்

”அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ?
இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்

மேலும் இப்பாடலில் வரும் பலவரிகள் “காய்” என்ற சொல்லுக்கு பல அர்த்தங்களை ஏந்தி வந்துள்ளன இதை விட இரட்டுறமொழிதல் அணிக்கு விளக்கமும் வேண்டுமோ!

உவமை அணி

உவமை என்பது ஒரு பொருளை அதன் தன்மை கொண்ட மற்றொரு பொருளோடு ஒப்புமை கூறல். உவமையணியில் உவமானம், உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும். ”போல” என்ற உவமை உருபு வெளிப்படையாகத் தோன்றும்.

”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை”
– திருக்குறள்

பூமி தன்னை தோண்டுபவரையும் பொறுத்துக் கொள்வது போல தம்மை இகழ்வோரை நாம் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

”குடும்பத்தலைவன்” என்ற திரைப்படத்தில் வரும் திருமணமாம், திருமணமாம் என்ற பாடலில்

”செம்பருத்திப் பூவைப் போலக்
காற்றில் அசைந்திருப்பாளம்
செப்புசிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்”

எனக் கண்ணதாசன் உவமைகளை காட்டியிருக்கும் விதம் உவமையணியினை மிக எளிதில் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது.

வேற்றுமை அணி

கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
வேற்றுமை படவரின் வேற்றுமை அதுவே.
(தண்டியலங்காரம், நுாற்பா 41)

வேற்றுமை அணி என்பது தொடராலும் சில குறிப்புகளாலும் ஒன்றாக அமையும். ஒப்புடைய இருபொருள்களைக் காட்டி ஒன்றை மட்டும் வேறுபடுத்துவது.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
– திருக்குறள்

இக்குறளில் தீயும் சுடும், நாவினால் கூறும் தீய சொல்லும் சுடும் என்று ஓப்புமை கூறி பின்பு தீயினால் சுட்டபுண் ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்டவடு ஆறாது என்று வேற்றுமை கூறியதால் வேற்றுமை அணி ஆயிற்று.

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

வெண்ணிலவை முதல் நாள்
இரவில் படைத்தான்
பெண்ணிலவை மறு நாள்
பகலில் படைத்தான்
இத்தனை பேரழகு
வெண்ணிலவில் இல்லையடி
கத்தரிப் பூக்கறைகள்
பெண்ணிலவில் இல்லையடி

வைரமுத்துவின் வைரவரிகள் வேற்றுமை அணியை படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஐய அணி

கவிஞர் தான் கருதிய ஒரு பொருளின் அழகினை மகிழ்வுடன் எடுத்துரைக்கும் போது, அதனைக் கற்போர் அதிசயிக்கும் வண்ணம் சொல்லும் அதிசய அணி.

“ஐய அணி என்பது அதிசய அணியின் ஒரு வகை உவமையையும், பொருளையும் ஐயுற்றுரைப்பது.

வண்டு தடுமாறுந் தாமரை கொல்
மாதர் விழியுலவு வாண்முகங்கொல்
– குறள் 1081

இக்குறளில் தலைவியின் முகத்தைப் பார்த்து அது தாமரையா? அல்லது முகமா? எனத்தலைவன் ஐயங்கொள்கின்றானாம்.

இதே ஐய அணியில் அமைந்துள்ள

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழமோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ

என சுமதி என் சுந்தரி படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதியிருக்கும் பாடல் ஐய அணிக்கு சிறந்த உதாரணம்.

முரண் அணி

ஒன்றுக்கொன்று மாறுட்ட சொல்லும், பொருளும் வருவது முரண் அணி. இதனை விரோத அணி என்றும் குறிப்பிடுவர்.

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்.

“ஒரு தலைராகம் படத்திற்காக டி.ராஜேந்திரர் எழுதிய பாடலில் முரண் அணி சிறப்பாக இடம் பெற்றிருப்பதை நாம் அறியலாம். இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம், குழந்தை தாலாட்டு பாடுவதில்லை. பூபாளம் காலையில் பாடப்பெறுவது இவை அழகிய முரண்கள் ஆகும்.

சொற்பின் வருநிலை அணி

ஒரு சொல்லை ஒரே பொருளில் பலமுறை கையாளுவது சொற்பின் வருநிலை அணி ஆகும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
– குறள் 299

இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல். ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பின் வருநிலை அணி ஆகும்.

திரையிசைப் பாடல்களில் அணி இலக்கணம் (Stylistic Device Grammar in Tamil Movie Songs) | தற்குறிப்பேற்ற அணி | வஞ்சப் புகழ்ச்சி அணி | உவமை அணி

பாசம் என்ற திரைபடத்தில் கவிஞர் கண்ணதாசன்

பால்வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்

என்ற பாடலில் வண்ணம் என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்து சொல்பின்வரு நிலையை அழகாக்கிறது.

35 அணி வகைகளில் சிலவற்றை திரைப்பட பாடல்கள் வழி விளக்கியுள்ளேன். மாணவர்களின் கவனத்தை சிதறவிடாமல் சிறந்த முறையில் வகுப்பறையில் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டியது. ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும். அவ்வாறு ஆசிரியப் பெருமக்கள் வகுப்பறையில் செயல்படும் போது கற்றல், கற்பித்தல் இரண்டும் மிக எளிமையாகிறது. கற்றதை மாணவர்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வழிகாட்டியாக திரைப்படப் பாடல்கள் நமக்கு உதவுகின்றன.

கருத்துவாய்ந்த திரைப்படப் பாடல்களைக் கையாண்டு தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க முற்பட்டோமானால் மாணவர்கள் ஆர்வத்துடன் பயில்வது மட்டுமின்றி மனமகிழ்ச்சியும், நிறைவும் வகுப்பறைகளில் நிகழ்வதோடு ஆசிரியர், மாணவர் உறவு மேம்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

எழுதியவர்:
– கு.மணி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ராமச்சந்திர வைத்தியநாத்

    மாணவர் கற்பது இருக்கட்டும். எனக்கே இதை வாசித்ததும் இலக்கணம் சுலபமாகியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *