சு.ரா.வுக்குப் பின் – நூல் அறிமுகம்
செயலின் இனிமை
பாவண்ணன்
மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று மறைந்தார். அவரோடு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து குடும்பப் பொறுப்புகளைச் சுமந்திருந்த கமலா அம்மையார், அதற்குப் பிறகான நாட்களில் பிரிவின் வேதனையை ஆற்றும் பொருட்டு எழுதத் தொடங்கினார். சு.ரா.வோடு சேர்ந்த வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளையும் தன் தாயாரைப் பற்றியும் தன் இளமைக்கால நினைவுகளைப்பற்றியும் கல்வி கற்ற அனுபவங்களைப்பற்றியும் நினைவுக்குறிப்புகளாக எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ஏற்கனவே இரு நூல்களாக (நெஞ்சில் ஒளிரும் சுடர், நான் தைலாம்பாள்) வெளிவந்தன. அவ்வரிசையில் ’சு.ரா.வுக்குப் பின்’ மூன்றாவது நூலாகும்.
![]()
கமலா அம்மையார் தன்னுடைய குடும்பக்கடமைகளைக் கவனித்தபடியே இத்தகு கட்டுரைகளை எழுதியிருக்கும் விதம் அவருடைய ஆர்வத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. எழுத்து எப்படிப்பட்ட துயரத்திலிருந்தும் மானுடரை மீட்டெடுக்கும் அற்புதமான வரம் என்பதற்கு இத்தகு புத்தகங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன.
ஒவ்வொரு நாளிலும் செய்ய வேண்டிய திட்டங்களை சரியாக வகுத்துக்கொண்டு, அவற்றைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் பழக்கம் மட்டுமே தொடங்கிய செயலை நல்லவிதமாக நிறைவேற்றும் வாய்ப்பை ஒருவருக்கு வழங்குகிறது. கமலா அம்மையாரின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும்போது இவ்விரண்டு குணங்களும் அவரிடம் இயல்பாகவே படிந்திருப்பதை உணரமுடிகிறது.
அதிகாலை நடைப்பயிற்சி ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்பதில் ஒருவருக்கும் இரண்டாவது கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதே சமயத்தில் நடை என்பது ஒருபோதும் ஒரு கடமையாக அமைந்துவிடக்கூடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு பூங்காவில், மூவாயிரம் அடி தொலைவு, நாலாயிரம் அடி தொலைவு என தூரக்கணக்கு வைத்துக்கொண்டும் அரைமணி நேரம், முக்கால் மணி நேரம் என நேரக்கணக்கு வைத்துக்கொண்டும் நடந்துவிட்டு வேகவேகமாக வெளியேறிச் செல்பவர்களை நாம் தினந்தோறும் பார்க்கலாம். நடக்கும் நேரத்தில் நடந்துவிட்டு, கூடுதலாக சிறிது நேரம் உட்கார்ந்து நண்பர்களோடு சிரித்துப் பேசிவிட்டு விடைபெற்றுக்கொண்டு செல்பவர்களையும் நாம் பார்க்கலாம். எது பின்பற்றத்தக்க வழிமுறை என்பது ஒவ்வொருவருடைய விருப்பம் சார்ந்த ஒன்று.
கமலா அம்மையார் இந்நூலில் தன் அதிகாலை நடைப்பயிற்சியைப்பற்றிய தகவல்களை விவரித்திருக்கும் விதம் நன்றாக உள்ளது. முதன்முதலாக நடைப்பயிற்சிக்குச் சென்றபோது வீட்டிலிருந்து புறப்பட்டு அவர் தனியாகவே செல்கிறார். பிறகு அதே வளாகத்தில் வசிப்பவர்கள் இரண்டுமூன்று பேர் அவரோடு இணைந்துகொள்கிறார்கள். அந்த எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து ஏழெட்டாக மாறுகிறது.
எல்லோருடைய நடையும் ஒரே வேகத்தில் இருப்பதில்லை என்பதால் பூங்காவுக்குச் சென்றதும், ஒவ்வொருவரும் தம் வேகத்துக்குத் தக்க விதத்தில் தனித்தனியாக நடக்கிறார்கள். குறிப்பிட்ட நேரம் நடந்த பிறகு, பூங்காவில் உள்ள திட்டையில் உட்கார்ந்து உரையாடுகிறார்கள். இந்த உரையாடல் அவர்களிடையில் நட்பை வளர்க்கிறது. பங்கேற்பாளரின் எண்ணிக்கையும் சுற்றி நடப்பவர்கள் நின்று அதிசயமாகப் பார்த்துவிட்டுச் செல்கிற அளவுக்கு அதிகரிக்கத் தொடங்குகிறது. எண்ணிக்கை உயர்ந்ததும் தமக்குள் தொடர்புக்காக வாட்சப் குழு ஒன்றை அமைத்துக்கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு எழுகிறது. அது தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உறுதுணையாக இருக்கிறது.
பேச்சுக்கு நடுவில் ஏதேனும் ஒரு ஞாயிறு அன்று ஒருநாள் பயணமாக எங்காவது சென்றுவரலாம் என அவர்கள் திட்டமிடுகிறார்கள். முதலில் அருகில் இருக்கும் பூவாறுக்குச் சென்றுவருகிறார்கள். அது வெற்றிகரமாக அமைந்துவிடுகிறது. ”துணிந்த கட்டைகள். வீட்டில் அடக்கிவைக்க ஆண்கள் இல்லை” என்னும் விமர்சனச் சொற்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. முதல் வெற்றியைத் தொடர்ந்து, காளிகேசம், கன்னியாகுமரி, சிதரால், திருவட்டாறு, மார்த்தாண்டம், முத்தக்காடு என அவர்களுடைய பயண எல்லை விரிந்துகொண்டே செல்கிறது. ஒருநாள் பயணம் இரண்டுநாள் பயணமாக மாறுகிறது. பிறகு வெளிமாநிலப்பயணமாகவும் வெளிநாட்டுப்பயணமாகவும் விரிவடைகிறது.
ஒவ்வொரு பயணம் தொடர்பாகவும் கமலா அம்மையார் தம் கட்டுரைகளில் எழுதியிருக்கும் குறிப்புகள் அவருடைய ரசனைக்கும் தகவல்களைக் கிரகிக்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளன. நியுசிலாந்து, தாய்லாந்து, கென்யா ஆகிய நாடுகளுக்கு அவர் சென்று வந்த பயணங்களைப்பற்றி எழுதியிருக்கும் குறிப்புகள், இனி அந்நாடுகளுக்குச் செல்ல விரும்பும் அன்பர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்றன.
நியுசிலாந்தில் மில்ஃபேர்டு செளண்ட்ஸ் ஏரிக்கு அருகில் ஒன்பதாயிரம் அடி உயரத்திலிருந்து விழும் அருவியைப் பார்த்தது, கென்யாவில் நக்குரு ஏரிக்கரையில் பவளநிறக்கால்கள் கொண்ட ஃபிளமிங்கோ பறவைகளையும் மஞ்சள் மூக்கு நாரைகளையும் பார்த்தது என ஒவ்வொரு அனுபவத்தையும் அழகுணர்ச்சியோடு எழுதியிருக்கிறார் கமலா அம்மையார். இத்தகு குறிப்புகள் எல்லாக் கட்டுரைகளிலும் நிறைந்திருக்கின்றன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த சுப.உதயகுமாரின் மனைவி மீரா ஒரு பள்ளி நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியை ஓர் இலட்சியப்பள்ளியாக மாற்றும் கனவோடு பிள்ளைகளுக்குப் பயிற்சி கிட்டும் விதமாக பல துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்து பிள்ளைகளோடு உரையாட வைக்கிறார். அந்தப் பள்ளியின் பாடத்திட்டத்தில் கதை சொல்வது ஒரு பிரிவாக இருக்கிறது. பகல் பொழுதில் தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை இதற்காகச் செலவு செய்யத் திட்டமிட்டு, அப்பள்ளிக்கு கதை சொல்லும் பாட்டியாக செல்கிறார் கமலா அம்மையார். ஏறத்தாழ இரண்டாண்டு காலம் கதை சொல்லும் பாட்டியாக அப்பள்ளிக்குச் சென்றதையும் பிள்ளைகளோடு சுவாரசியமாக பொழுதைச் செலவு செய்ததையும் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் கமலா அம்மையார்.
இவ்வளவு செயல்களையும் செய்பவர் எண்பது வயதை நெருங்கும் ஒருவர் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர் கொண்டிருக்கும் ஊக்கமும் வேகமும் உடல்சார்ந்ததல்ல. மனம் சார்ந்தவை. அவையே விசையாக மாறி அவரைச் செயல்படுத்தத் தூண்டுகிறது. தான் ஆற்றிய செயலின் இனிமையையே கமலா அம்மையார் இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்திருக்கிறார். கமலா அம்மையாருக்கு வாழ்த்துகள்.
நூலின் தகவல்கள் :
நூல் :சு.ரா.வுக்குப் பின்
ஆசிரியர் : கமலா ராமசாமி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் – 629001
விலை : ரூ.130
நூல் அறிமுகம் எழுதியவர் :
பாவண்ணன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

