சமூக அக்கறையும் சத்திய ஆவேசமும் நிறைந்தவை சு.சமுத்திரம் அவர்களின் எழுத்துகள். திருநெல்வேலி அருகிலுள்ள திப்பனம்பட்டி எனும் குக்கிராமத்தில், ஒடுக்கப்பட்ட, வறுமையான குடும்பப் பின்னணியில் பிறந்த இவர் தன்முனைப்புடன் கற்று, அரசுப் பணியாளராகி, அதிகாரியாக உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். இவர் எதிர்கொண்ட பிரச்சினைகள், சவால்கள், போராட்டங்கள் ஆகியவற்றை அவ்வப்போது- வரலாற்று ஆவணம் போல -கதைகளாக, நாவல்களாக எழுதி வருகிறார். இவரது படைப்புகளுக்குள் எளிய மக்களின் எதார்த்த வாழ்க்கை பாசாங்கின்றி பதிவு செய்யப்படுகின்றன. சாகித்ய அகாதமி, ஆதித்தனார், இலக்கியச் சிந்தனை உட்பட சில விருதுகளை பெற்றுள்ளார். சென்னை, திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்த்தப்பட்ட உரையாடலின் தொகுப்பு இது.
இளம் வயதில் கிட்டத்தட்ட அனாதையாகவும், ஒரு சாதிக்குள்ளேயே வர்க்கபேதம் இருப்பதையும் உணர்ந்தவன் நான். அதில் பாட்டாளி வர்க்கம் சுரண்டப்படுவதைக் கண்டிருக்கிறேன். பல சமூகக் கொடுமைகளை நானே அனுபவித்திருக்கிறேன். நான் கதை எழுதத் தொடங்கியபோது இந்த விசயங்களை அப்படியே நேரடியாக கதைகளில் கையாண்டேன். பிறகு, ரஷ்ய நாவல்களைப் படித்தபோது இத்தகைய வர்க்க பேதங்கள் சர்வதேச தன்மை வாய்ந்தவை என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு பாட்டாளி வர்க்கத்துக்காக இயலும் வரை பேனா தூக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ‘தாமரை’ ஆசிரியர் கே.சி.எஸ். அருணாசலம் அவர்களின் தொடர்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அப்போதைய செயலாளரும், செம்மலர் ஆசிரியருமான கே.முத்தையா அவர்களின் நட்பும் கிடைத்தன.
இதே காலகட்டத்தில் எனது குடும்ப நண்பர் ச.செந்தில்நாதன் நடத்திய ‘சிகரம்’ இதழில் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த மூவரும்தான் என்னை வழிப்படுத்தினார்கள்.
ஆக, எந்த ஓர் எழுத்தாளனுக்கும் அவனது ஆரம்ப காலத்தில் எந்த வகையிலாவது எழுத்து வெளிவர வேண்டும் என்கிற வேகம் அவசியமாக இருக்கலாம். அது காற்றாற்று வெள்ளம்போல வெளிப் படலாம். இவற்றை அவனது தோழர்கள் – புறச்சூழல்கள் எப்படி அணைப்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்தே அந்த எழுத் தாளனின் சமூகநோக்கு பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.
ஜெயகாந்தனும் விந்தனும் இந்த வகையில் உருவானவர்கள்தான். கம்யூனிஸ்ட் இயக்கமோ, ஆர்.கே.கண்ணனோ இல்லை என்றால் ஜெயகாந்தனும் இல்லை; விந்தனும் இல்லை.
1947 காலகட்டத்தில் தில்லியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே தமிழ் வணிகப் பத்திரிகைகள்தான் கிடைக்கும். ‘தாமரை’, ‘செம்மலர்’ போன்ற இதழ்கள் வருவதில்லை. வணிகப் பத்திரிகைகளை மட்டுமே படித்து, அதில் வருகிற கதைகளைப் படித்துவிட்டு, அவற்றை குறைகூறி, ‘தில்லி தமிழ்ச் சங்க’த்தில் பல தடவை பேசி இருக்கிறேன். அப்போது பிரசு.செல்வராஜ் என்கிற ஓர் எழுத்தாள நண்பர், “நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கதையை எழுதிக் காட்டிவிட்டு குறை சொல்லுங்கள்’’ என்று அறைகூவல் விடும் பாணியில் கூறினார்.
அன்றே நான் இரண்டு சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன். ‘அங்கே கல்யாணம், இங்கே கலாட்டா’, ‘கலெக்டர் வருகிறார்’ எனும் அந்த இரண்டு கதைகளும் ஆனந்த விகடன், குமுதம் ஆகிய இதழ்களில் அடுத்தடுத்து வெளிவந்தன.
அந்த காலகட்டத்தில் கல்யாண வீடுகளிலும் அரசியல் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்வதுதான் ‘அங்கே கல்யாணம், இங்கே கலாட்டா’ கதை. ஒரு கலெக்டர் பஞ்சாயத்து அலுவலகத்துக்குப் போனால், அங்கு என்னவெல்லாம் நிகழும் என்பதைக் கூறுவது ‘கலெக்டர் வருகிறார்’ கதை.
இதுதான் நான் கதை எழுத வந்த சூழல். இத்தகைய சமூக நோக்கிலே, ‘எந்நன்றி கொண்டார்க்கும்’, ‘ஒரு சந்தேகத்தின் நன்மை’, ‘ஒரு போலீஸ் படையின் கிராமப் பிரவேசம்’ போன்ற கதைகளைத் தொடர்ந்து எழுதினேன்.
சென்னை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், வானொலியில் செய்தி ஆசிரியர், களவிளம்பரத் துறை இணை இயக்குநர் ஆகிய பதவிகளில் நான் இருந்தபோது, கை சுத்தமாக இருப்பதற்காக கடுமையாகப் போராடி வலுவாக எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருந்தது. எனது பதவி காலத்தில் நான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக நேரடியாகவே போராடி இருக்கிறேன். மூன்று முறை நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கிறேன். அனைத்திலும் வென்றாலும், அவை கொடுத்த காயங்கள் இன்னும் வலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை எல்லாம் வைத்துத்தான் ‘சத்திய ஆவேசம்’ என்ற நாவலை எழுதினேன். அது செம்மலரில் தொடராக வெளி வந்து, அதிக கவனிப்பைப் பெற்றது.
அரவாணிகள், ஆண் உடலில் சிறைபட்ட பெண்கள். இந்த நிலைக்கு பெற்றோரின் – குறிப்பாக தந்தையின் குரோமோசோம் களின் கோளாறே காரணம். அரவாணிகள் மானுடத்தின் மூன்றாவது பரிமாணம். இவர்கள் சினிமா, நாடகம் போன்றவற்றில் கேலிப் பொருளாக்கப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில், கடலூருக்கு அருகே இன்னொரு கூவாகமாக இருக்கிற ஒரு கிராமத்தில் அரவாணி மாந்தர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்தேன். பல்வேறு வர்க்க அரவாணிகளை சந்தித்து, அவர்களைப் பற்றி ஆனந்த விகடனில் தொடராக எழுதினேன். பிறகு அது நூலாக வெளிவந்தது. இந்நூல் இப்போது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பாடநூலாக உள்ளது. இந்நூலுக்கு ‘ஆதித்தனார்’ விருதும் கிடைத்தது.
இதில் கிடைத்த 50,000 ரூபாயில் 10,000 ரூபாயை அரவாணித் தோழர்களுக்கு நன்கொடையாக வழங்கினேன். அதைக் கொண்டு அவர்கள் ‘அரவாணிகள் சங்கம்’ உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளில் என்னை பங்கேற்க அழைக்கிறார்கள்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற எனது ‘வேரில் பழுத்த பலா’ நாவலானது, எனது சொந்த வாழ்க்கையில், கிராமத்தில் சொந்த வீடு என்று ஒன்று இல்லாமல் எனது கிராமமே வீடாகி வாழ்ந்த காலம் என்று ஒன்று இருந்தது. பிறகு, அந்த என் கிராம மக்களுக்காக தெருவிளக்குகள், குடிநீர் வசதி போன்றவற்றிற்காக மனுக்கள் எழுதி அவர்களிடம் கையெழுத்து வாங்கி, பஞ்சாயத்து யூனியனில் கொடுத்து, வெளிச்சமும் நீரும் கிடைக்க வழிவகை செய்தேன்.
கல்லூரி நிர்வாகம் தெலுங்கு மாணவர்களுக்கு ஒரு நீதியும், தமிழ் மாணவர்களுக்கு ஒரு நீதியுமாக இருந்தபோது போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறேன்.
பின்னர், செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றினேன். அப்போது மழையின் காரணமாக பள்ளிக்கூடம் ஒழுகியபோது மாணவர்களை அருகிலிருந்த கோயிலுக்கு அனுப்பிவிட்டு நான் பின்னே போனபோது, தலித் மாணவர்கள் வெளியே தூக்கி வீசப் படுவதைப் பார்த்தேன். மக்களை ஒன்று திரட்டி மீண்டும் தலித் மாணவர்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சித்தபோது பெரிய ரகளையே ஏற்பட்டது.
அதன் பிறகு, ஸ்ரீபெரும்புதூரில் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக இருந்தபோது, என்னை ஊழல் செய்யச் சொன்ன அதிகாரிகளுக்கும் எனக்கும் பெரும் போராட்டம் நடந்தது. இதனால் பதவியை விட்டு விலகி, மத்திய தகவல் அமைப்பில் சேர்ந்தேன். அங்கே தலைநகரில் வடமொழித் தமிழைப் போற்றியவர்களுக்கும், மண்வாசனைத் தமிழை வலியுறுத்திய எனக்கும் நீண்ட நெடும் போராட்டம் நடந்தது. இதில் மேல்சாதி ஆதிக்கமும் சேர்ந்து கொண்டது. ஆனாலும், நான் சளைக்காமல் போராடினேன். இதன் விளைவாக ‘அகில இந்திய அதிகாரிகள் சங்க’த்துக்கே செயலாளர் ஆனேன்.
பொதுவாக தாழ்த்தப்பட்ட படித்த இளைஞர்கள், தூசு படிந்த கண்ணாடி மாதிரி. கண்ணாடியைத் துடைக்க வேண்டுமே தவிர, உடைக்கக் கூடாது. நானே என்னைத் துடைத்துக் கொண்டேன். இதிலிருந்தெல்லாம் பீறிட்டு எழுந்ததுதான் ‘வேரில் பழுத்த பலா’ நாவல். அரசு அலுவலகத்தில் நிலவும் சாதியத்தையும், நேர்மை யானவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் சித்தரித்த அந்த நாவலுக்கு ‘சாகித்ய அகாதமி’ விருது கொடுத்தது.
இதை தாங்கிக் கொள்ள முடியாத மேட்டுக்குடியினர். “இலக்கியத்தில் இட ஒதுக்கீடு வந்துவிட்டது’’ என்றார்கள். உடனே நான், “எனது இலக்கியத்தை என் முன்னோர்கள் ஏறுவதற்குப் பயன்படுத்திய பனை நாரால் அளக்கிறேன். இந்த நார் இவர்கள் குறுக்கே போட்டிருக்கும் நூல்களை விட வலுவானது’’ என்று தெரிவித்த பிறகு அவர்கள் வாயடைத்து போனார்கள்.
ஆக, சமுத்திரத்தின் எழுத்துகள் எதிர்ப்பு அலைகளை எழுப்புபவையாக மட்டுமல்லாமல், சமூகத்தின் வரலாற்று ஆவணமாகவும் இருக்கிறது.
சந்திப்பு :சூரியசந்திரன்