சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் புத்தகம் | Su. Venkatesan's Vaigai Nathi Nagarigam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சு.வெங்கடேசன் எழுதிய “வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் – நூல் அறிமுகம்

“வைகை நதி நாகரிகம்” கீழடி குறித்த பதிவுகள் – நூல் அறிமுகம்

கீழடி அகழாய்வுப் பணிகளில் முதல் இரண்டாண்டு கண்டடைவுகளின்வழி எழுந்த வினாக்கள், அதற்கான இலக்கிய ஆதாரங்கள், வரலாற்று ஆதாரங்கள் மேலும் கீழடி அகழாய்வின் அடுத்தகட்டம் குறித்த முன்னெடுப்புகள் குறித்த பதிவுகளாகவும் கீழடி அகழாய்வு எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒன்றிய அரசால் முட்டுக்கட்டையிடப்பட்டது என்பதையும் அதன் காரணங்கள் என்னவென்பதையும் 2017ல் ஆனந்தவிகடனில் தொடராகப் பேசிய கட்டுரைகளின் நூல் வடிவமே இது. அத்தொடர் மட்டுமின்றி, பின்னொட்டாக தீக்கதிர், விகடன் தடம், தமிழ் இந்து திசை நாளிதழ், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் அக்காலகட்டத்தில் வெளிவந்த ஆசிரியரின் கட்டுரைகளையும் செவ்விகளையும் உள்ளடக்கியது இந்நூல்.

பழந்தமிழ்ச் சமூகமானது ஒரு இனக்குழுச் சமூகமாக மட்டுமே அறியப்பட்டிருந்த நிலையில், அவ்வாறில்லை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு திட்டமிடப்பட்ட நகர நாகரிகம் ஒன்று இங்கு செயல்பட்டிருந்தது என்பதற்கான தொல்லியல் ஆதாரமாகக் கீழடியின் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளிலேயே தெரிய வந்ததும், வணிகமும் பண்பாடும் ஊடுபாவாக இருந்து, பல்வேறு கலாச்சாரங்களின் பிணைவுகளாகவும் இப்பெரு நாகரிகம் உள்ளதென்ற இடத்திற்கு பழந்தமிழ் வரலாறு மீள்வாசிப்பு செய்யத்தக்க ஆதாரங்களைக் கொண்டிருந்தது கீழடி அகழாய்வுகள் என்பதும், முதலிரண்டு கட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களின் பட்டியலில் குறிப்பிட்ட மதச் சார்பான மத அடையாளம் சார்ந்த பொருட்கள் என்று எதுவும் இல்லை என்பது பழந்தமிழரின் சமயச்சார்பற்ற கலாச்சார மேலாண்மையை கீழடி உலகுக்கு எடுத்துச் சொல்கிறது என்பதும் மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர்க்கு பெரிய சம்மட்டி அடியாகி விடும் என்பதாலேயே கீழடியின் அடுத்த கட்ட ஆய்வுக்கு எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் என்பதை விளக்குகிறது நூல்.

முதலிரண்டு கட்ட அகழாய்வுகளின் முடிவுகளை உலகறியச் செய்த வகையில் இத்தொடரும் அதன் தொடர்ச்சியான சு.வெங்கடேசனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் மிக முக்கியமான வரலாற்றுக்கடமையை ஆற்றியிருக்கின்றன என்றால் அது மிகையில்லை. அதன் நீட்சியாக அவற்றின் தொகுப்பாக இந்நூலை ஒரு சேர வாசிக்கையில், அக்காலகட்டத்திய முக்கியமான நூலாக இது மாறிவிடுகிறது. அதிலும் தேனூர் கோதையின் பெயர் பொறித்த தங்கக்கட்டிகள், அதன்வழியே மதுரையில் தொழில் செய்த ஆயிரக்கணக்கான பொற்கொல்லர்கள், அத்தனை பேரின் தேவையிருந்த மதுரையின் செல்வ நிலை, கண்ணகியும் கோவலனும் தங்கியிருந்த கடை சிலம்பு ஏந்தல் (கடச்சனேந்தல்), கவுந்தியடிகள் சபித்த நரிகள் இருந்த அந்த நரி (அந்தனேரி), கால்நடைகளைக் கவர்ந்து வரும்போது தாக்கப்பட்டு இறந்து போன அந்துவனுக்கு நடப்பட்ட நடுகல் கண்டறியப்பட்ட புலிமான் கோம்பை (புள்ளிமான் கோம்பை), வெம்பூர் குத்துக்கால் வரிசை, ஆண்டிபட்டி – உசிலம்பட்டி கணவாய் பகுதியில் சித்திரக்கல் பொடவில் உள்ள யானை வேட்டை ஓவியம், அழகன்குளத்தில் கண்டறியப்பட்ட பானையில் இருந்த ரோமானியக் கப்பல் ஓவியம், கடல் பயணத்தில் கரை சேரக் காம்பசாகப் (compass) பயன்பட்ட காக்கை விருந்தினர் வருகையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படும் ஒப்புமை, நந்தவம்சத்து செல்வச் செழிப்பு குறித்த சங்கப் பாடல்கள், அலெக்சாண்டிரியாவுக்கும் அரிக்கமேடுக்கும் உள்ள வணிகத் தொடர்பு, அகஸ்டஸ் சீசரின் பியூட்டிங்கர் டேபிள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டியநாட்டு கொற்கை துறைமுகம் என்று இலக்கியங்களின் வழி, கல்வெட்டுகள் வழி, நடுகல்களின் வழி, பன்னாட்டு அறிஞர்களின் குறிப்புகளின் வழி வைகை நதி நாகரிகத்தை சு.வெங்கடேசன் புனைந்திருக்கும் கோடுகள் கற்கால மனிதனின் பாறை ஓவியங்களுக்கு ஈடாக நம் மனதிலும் வரலாற்றிலும் நெடுங்காலம் பதிந்து கிடக்கும்.

முதல் பதிப்பு வெளிவந்த 2017 டிசம்பரில் இந்த நூல் எத்தனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும் என்பது புலப்படுகிறது இப்போதைய வாசிப்பிலும்..!

நூலின் விவரங்கள்:

நூல்: வைகை நதி நாகரிகம் (Vaigai Nathi Nagarigam)
நூலாசிரியர் : சு.வெங்கடேசன் –
விலை: ₹ 210/-
வெளியீடு : விகடன் பதிப்பகம்

எழுதியவர் : 

✍️ – அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *