“ரத்தன் டாடா – ஓர் இந்தியக் கனவு” நூல்
ரத்தன் டாடா எனும் கலங்கரை விளக்கம்
– சித்தார்த்தன் சுந்தரம்
1868 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி டாடாவும் அவருடைய தந்தையாரான நுசர்வன்ஜி டாடாவும் சேர்ந்து ஏஸியாட்டிக் பேங்கிங் கார்பொரேஷன் என்கிற ஒரு நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இதுவே டாடா குழுமம் என்கிற ஆலமரத்துக்கான முதல் விதையாக இருந்தது. இன்றைக்கு அதாவது 157 ஆண்டுகளுக்குப் பிறகு இக்குழுமம் இல்லாத துறையே இல்லை எனும் அளவுக்கு பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் 29 நிறுவனங்களோடு வேறு சில நிறுவனங்களும் உலகெங்கிலும் இயங்கி வருகின்றன.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இக்குழுமத்தின் சந்தை மூலதனத்தின் (Market capitalization) மதிப்பு சுமார் 446 பில்லியன் டாலர் (அதாவது, ரூ 37.84 லட்சம் கோடி). இக்குழுமத்தின் மொத்த வருவாய் ரூ 15.34 லட்சம் கோடி, நிகர வருவாய் ரூ 1.13 லட்சம் கோடி. இக்குழுமத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம்.
ஜாம்ஷெட்ஜி டாடா விதைத்த விதை அதற்குப் பிறகு ஜே ஆர் டி டாடா, ரத்தன் டாடா போன்றவர்களின் தலைமைத்துவத்தில் ஆலவிருட்சமாக விரிந்து பரந்திருக்கிறது.
இக்குழுமத்தின் நிர்வாகம் 1991 ஆம் ஆண்டு ஜே ஆர் டி டாடாவிடமிருந்து ரத்தன் டாடாவுக்கு கையளிக்கப்படுகிறது. அவர் டாடா குழுமத்தின் தலைவராக 2012 ஆம் ஆண்டு வரையும் அதன்பின் 2016-17 ஆண்டின் சில மாதங்களும் இருந்தார். இவர் பொறுப்பேற்ற போது குழுமத்தின் வருமானம் சுமார் 5 பில்லியன் டாலர் ஆனால் இவர் தலைமைத்துவத்திலிருந்து விலகிய போது அதாவது, 2012 ஆம் ஆண்டு இக்குழுமத்தின் வருமானம் சுமார் 100 பில்லியன் டாலர். சுருக்கமாகச் சொன்னால், 22 வருட காலத்தில் குழுமத்தின் வருமானத்தை சுமார் 20 மடங்கு அதிகரித்துக் காட்டிய சாதனையைச் செய்தவர் ரத்தன் டாடா.
இக்குழுமத்தின் விழுமியங்கள் குறித்தும், 1990களுக்குப் பின் குழுமத்துக்குக் கலங்கரை விளக்காக இருந்து வழிகாட்டிய ரத்தன் டாடாவின் தலைமைத்துவம், அறம், தொலைநோக்குப் பார்வை, நிர்வாகத் திறன், மனிதாபிமானம் என அவருடைய பன்முகத் தன்மை குறித்தும் எளிய தமிழில், தரவுகளின் ஆதரவோடு எழுதப்பட்டு சமீபத்தில் வெளிவந்திருக்கும் நூல் `ரத்தன் டாடா – ஓர் இந்தியக் கனவு’. நூலாசிரியர் சுப. மீனாட்சி சுந்தரம்.
இந்நூலானது `நேர்மை எனும் அச்சாணி` என்கிற தலைப்பில் தொடங்கி இக்குழுமத்தின் ஸ்டார்ட்-அப் முன்னெடுப்புகள், செமிகண்டக்டர் உற்பத்தி என புதிய துறைகளை நோக்கிப் பயணிப்பதில் நிறைவடைகிறது. இக்குழுமமானது கடந்த 10-15 ஆண்டுகளில் சுமார் 40 துளிர் நிறுவனங்களில் (ஸ்டார்ட்-அப்களில் – இதில் ஓலா, அர்பன் கம்பெனி, லென்ஸ்கார்ட், ஃபர்ஸ்ட் க்ரை, பேடிம், யுவர் ஸ்டோரி முதலியவையும் அடக்கம்) முதலீடு செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. இவை குறித்தத் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.
23 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல், இக்குழுமத்தின் `எம்பிரஸ் மில்’லில் தொடங்கி `டாடா எலக்ட்ரானிக்ஸில்’ நிறைவுறுகிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் தோற்றுவாய், அது சந்தித்த சவால்கள் அதை ரத்தன் டாடாவின் தலைமையில் அவரது குழுவினர் எதிர்கொண்ட விதம் என அதன் வரலாற்றைத் தரவுகளின் ஆதாரத்தோடு நறுக்குத் தெரித்தாற் போல எளிய தமிழில் நூலாசிரியர் எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும்.

குழுமத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயர் அல்லது அதன் தயாரிப்பு அல்லது அது வழங்கும் சேவைக்கேற்ப தலைப்புகள் இட்டிருப்பது நூலாசிரியரின் படைப்பாற்றலைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. உதாரணமாக, டீ தயாரிக்கும் நிறுவனம் பற்றி எழுதப்பட்டிருக்கும் இயலுக்குத் தலைப்பு `வாங்க டீ சாப்பிடலாம்’. இதில் டாடா டீ நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சியை (டெட்லி கையகப்படுத்தல், டாடா க்ளோபல் பெவரேஜஸ் என பெயர் மாற்றம் போன்றவை) சிறப்பாக எழுதியிருக்கிறார். அது போல `டாடா ஃபைனான்ஸ்’ பற்றிய இயலுக்கு `நிதியும், நீதியும்’ எனவும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி மீண்ட தாஜ் ஹோட்டல் பற்றிய இயலுக்கு `மீண்ட சொர்க்கம்’ எனவும், `நானோ கார்’ குறித்த இயலுக்கு `ஓர் இந்தியக் கனவு’ எனவும், இந்திய அரசிடமிருந்து ஏர் இந்தியாவை மீண்டும் தன்வயப்படுத்தியது குறித்த இயலுக்கு `வரவேண்டும் மகாராஜா’ எனவும், தமிழ்நாடு அரசும் டாடா இண்டஸ்ட்ரீஸும் சேர்ந்து ஆரம்பித்த `டைட்டன்’ வாட்ச் தயாரிப்பு நிறுவனம் குறித்த இயலுக்கு `பொன்னான நேரம்’ எனவும் பொருத்தமாகத் தலைப்பிட்டு அந்த இயல் எதைப் பற்றி பேச இருக்கிறது என்பதை வாசகர்களுக்குக் கட்டியம் கூறும் வகையில் பெயர் சூட்டியிருக்கிறார். ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இளவல் ஷாந்தனு நாயுடு பற்றி எழுதப்பட்டிருக்கும் அத்தியாயத்துக்கானத் தலைப்பு `நண்பர் நாயுடு’!
குழுமத்தின் கீழ் இயங்கி வரும் நிறுவனங்களில் எழும் பிரச்சனைகளை ரத்தன் டாடா எதிர் கொண்ட விதம் குறித்தும் அதை அவர் எப்படிக் கையாண்டு வெற்றி பெற்றார் என்பது குறித்தும் நூலாசிரியர் எழுதியிருப்பது தொழில் துறையில் இயங்கி வருவோருக்கும், மேலாண்மை படிக்கும் மாணவர்களுக்கும், கார்பொரேட் துறையில் பணியாற்றி வருவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
ரத்தனின் தலைமைத்துவப் பண்புகளில் சில: நிறுவனங்களை நவீனமயமாக்குவதில் உறுதியான பார்வை, கூட்டு முடிவெடுத்தலுக்கு முக்கியத்துவம், நிறுவனத்தின் கொள்கைகளை எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் உறுதியுடன் அமல்படுத்தல், டாடா குழுமத்துகென்று இருக்கும் முக்கியமான 5 விழுமியங்களில் (நேர்மை, புரிதல், தலையாய சிறப்பு, ஒற்றுமை, பொறுப்பு) எந்தவித சமரசமும் செய்து கொள்ளாத உறுதிப்பாடு, தொலைநோக்குப் பார்வை, வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கை சமூகத்துக்கு பலவித சேவைகள் மூலம் திருப்பியளிக்கும் மனிதாபிமானம், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல், குழுப் பணியின் (Team work) முக்கியத்துவம், கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவது என இது தொடர்கிறது.
157 ஆண்டுகால டாடா குழும வரலாற்றைச் சுருக்கமாகவும் அதே சமயம் ரத்தன் டாடா தலைமைத்துவத்தின் கீழ் இக்குழுமம் இயங்கி வந்த 22 ஆண்டு கால வரலாற்றை சற்றே விரிவாகவும் சுமார் 160 பக்கங்களில் கூறியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
இந்நூல் குறித்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், தரவுகளோடு கூடிய நிறைய தகவல்கள், எளிய மொழி. அதோடு தொழில் வாழ்க்கையில் ரத்தன் டாடா கற்றுக் கொண்ட படிப்பினைகள், அவர் குழுமத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திய உத்திகள் போன்றவை இதை வாசிக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக அவர்களின் தொழில்வாழ்க்கையில் பயன்படும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ரத்தன் டாடா – ஓர் இந்தியக் கனவு |
| ஆசிரியர்: | சுப. மீனாட்சி சுந்தரம் |
| வெளியீடு: |
சுவாசம்
|
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 சித்தார்த்தன் சுந்தரம் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

