"சுபம்" தெலுங்கு திரைப்பட விமர்சனம் (Subham Telugu Movie Review) - இரா.இரமணன் | சமந்தா திரைப்படம் | www.bookday.in

சமந்தா தயாரித்த “சுபம்” தெலுங்கு திரைப்பட விமர்சனம் – இரா.இரமணன்

“சுபம்” தெலுங்கு திரைப்படம் மே மாதம் 2025இல் வெளிவந்த இந்தப் படத்தை பிரவீன் கண்டரெகுலா இயக்கியுள்ளார். சமந்தா தயாரித்துள்ளார். அவரே ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துமுள்ளார். ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி, சிரினிவாஸ், சரண் பெரி, ஷரியா கொந்தம், ஸ்ரவாணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி, வம்ஷிதார் கவுட் ஆகியோர் நடித்துள்ளனர்.

பீமிலி எனும் ஒரு கடற்கரை சிறு நகரம். கேபிள் டிவி மூலமே தொலைக்காட்சிகளை பார்த்துக் .கொண்டிருந்த காலம். டிஷ் ஆன்டென்னாக்கள் முளைக்க தொடங்கும் காலம். ‘ஜன்ம ஜன்மலா பந்தம்’ எனும் தொலைகாட்சி தொடர் நீண்ட காலமாக ஒளி பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் வரும் கதாநாயகனும் கதாநாயகியும் ஒன்று சேர்வார்களா, எப்போது சேர்வார்கள் என்று ஒவ்வொரு நாளும் பெண்கள் ஆவலாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் ஒரு தலைமுறை முடிந்து மூன்றாவது தலைமுறை இளம்பெண்கள் தலை எடுத்து விட்டார்கள். அப்போதும் அந்த தொடர் முடியவில்லை. முடிவு தெரியாமலே காலமாகிவிட்ட கிழவிகள் இளம்பெண்கள் மீது ஆவியாகி வந்து தொற்றிக்கொண்டு அந்த தொடரை பார்க்கிறார்கள். பகலெல்லாம் சாதாரணமாக இருக்கும் பெண்கள் இரவு ஒன்பது மணிக்கு அந்த தொடர் ஒளி பரப்பத் தொடங்கியவுடன் மாறிவிடுகிறார்கள். குறுக்கே யார் வந்தாலும் தூக்கி எறிகிறார்கள். பொருட்களை போட்டு உடைக்கிறார்கள்.

"சுபம்" தெலுங்கு திரைப்பட விமர்சனம் (Subham Telugu Movie Review) - இரா.இரமணன் | சமந்தா திரைப்படம் | www.bookday.in

இதை எப்படி எதிர்கொள்வது என்று மூன்று இளைஞர்கள் யோசிக்கிறார்கள். அதில் ஒருவன் கேபிள் டிவி நடத்துபவன். அண்மையில் திருமணம் ஆனவன். மற்ற இருவரும் வெவ்வேறு பணிகளில் உள்ளவர்கள். ஆண்கள் மனைவிகளை நேசிக்க வேண்டும். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பவர்கள். இப்போது இவர்களுக்கும் அந்த ஊரிலுள்ள மற்ற ஆண்களுக்கும் இரவு ஒன்பது மணி தொடர் காட்சியால் பிரச்சினை. ஒரு மந்திராவதியை அணுகி தீர்வு கேட்கிறார்கள். ஒற்றை காலில் நின்று ஒரு பாடலை பத்து இலட்சம் முறை கூற வேண்டும். அது தங்களால் முடியாது என்று கூறியதும் 10000/ ரூபாய் பணம் செலுத்தி ஒரு திரவத்தை வாங்கிக்கொள்ள சொல்கிறாள் மந்திரவாதி. ஊர் பெண்களின் தலைமுடியை கத்தரித்து அதில் போட வேண்டும் என்று கூறுகிறாள். ஆனால் அதுவும் எந்தப் பலனும் அளிக்கவில்லை.

தொலைகாட்சி தொடரில் நாயகி வேலைக்கு செல்வது நாயகனுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கு அடிபட்டு மருத்துவ மனையில் சேர்த்து அவள் அவனை காப்பாற்றினாலும் அவன் அவளை வெறுக்கிறான். மேலும் விளம்பரத்திற்காக தொடர் குறித்து அந்த நாயகன் பெண்களுடன் போனில் உரையாடுகிறான். பீமிலி நகர பெண்கள் அவன் நாயகியை கொடுமைப்படுத்துவதை கண்டிக்கிறார்கள். அவன் கோபமாகி ‘இது என் தொடர்; எப்படி வேண்டுமானாலும் எடுப்பேன்’ என்று பதில் கூறுகிறான்.

"சுபம்" தெலுங்கு திரைப்பட விமர்சனம் (Subham Telugu Movie Review) - இரா.இரமணன் | சமந்தா திரைப்படம் | www.bookday.in

ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் மீண்டும் மந்திரவாதியை சந்திக்கிறார்கள். தொடரில் வரும் நாயகனும் நாயகியும் சேர்ந்தால்தான் ஆவிகள் வெளியேறும்; முடிவு உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்று மந்திரவாதி பூடகமாக கூறுகிறார். இது இளைஞர்கள் மனதில் ஒரு யோசனையை தோற்றுவிக்கிறது. ஒரு சிறு திரைப்படக் குழுவை அழைத்து தொடரை தாங்களே முடித்துவிடுவது. அதை கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பி விடுவது என்று ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் தொடரின் நாயகர்களை எப்படி சேர்த்து வைப்பது என்று தெரியவில்லை. ஆகவே தங்கள் மனைவிகளிடமே ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களின் யோசனைப்படி இறுதிக் காட்சி எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. பெண்களுக்கு பிடித்த மாதிரி முடிவு இருப்பதால் ஆவிகள் பெண்களின் உடலை விட்டு வெளியேறிவிடுகின்றன. இப்படி கதை முடிகிறது.

இந்தப் படம் தொலைகாட்சி சீரியல்களை பெண்கள் வெறித்தனமாக பார்ப்பது குறிதது என்று தொடங்கி ஆனால் ஆண்கள் பெண்களை சமமாக நடத்த வேண்டும்; குடும்ப விஷயங்களை அவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதாக முடிகிறது. இரண்டு சம கால பிரச்சனைகளை நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். மந்திரவாதிகளின் வழிகளை கிண்டலடிக்கும் இடமும் குறிப்பிடத் தகுந்தது. டிஷ் ஆன்டென்னாவுக்கும் கேபிள் டிவிக்கும் நடைபெறும் போட்டியை காட்டியிருப்பது ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வரையிலானதே’ என்பதை சுட்டுகிறது. இளைஞர்கள் அழைத்து வந்த திரைப்படக் குழுவிலுள்ள கதாநாயகன் இறுதிக் காட்சியை கதாநாயகிக்கு முத்தம் கொடுப்பது போல் எடுக்கலாம் என்று சொல்வதும் அவள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் இத்தகைய குழுவிற்குள் உள்ள பிரச்சனைகளை நயமாக சித்தரிக்கிறது. இறுதிக் காட்சியில் டிஷ் டிவிக்காரர் கேபிள் டிவி இணைப்புகளை அறுப்பதும் அதை இளைஞர்கள் சமாளிப்பதும் நல்ல உத்திகள்.

இறுதிக் காட்சியிலும் சரி அதற்கு முந்தய காட்சிகளிலும் பெண்களை கோரமாக காட்டியிருக்க வேண்டாம். இறந்து போன நம் முன்னோர்களை நாம் மரியாதையாக பார்க்கிறோம். அதே போல் இறந்து போனவர்களின் ஆவி வந்து குடியேறுகிறது என்று சொல்லாமல், பெண்களே ஆண்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக அப்படி நடித்தார்கள் என்று காட்டியிருக்கலாம். ஒரு முற்போக்கான விஷயத்தை சொல்வதற்காக இன்னொரு பிற்போக்கான விஷயம் பார்ப்பவர்கள் மனதில் படிந்து விடக்கூடாது அல்லவா?

படப்பிடிப்பு விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமாமுனிப் பட்டினம் என்கிற அழகிய இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு நதி ஒன்று கடலுடன் கலக்கிறது. கண்களை உறுத்தாமல் கதையுடன் இயைந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சீரியஸான விஷயத்தை நகைச்சுவையாக சொல்வது சற்று சிரமமானது. அதை ஓரளவிற்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எழுதியவர் : 

✍🏻இரா.இரமணன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *