“சுப்ரபாரதிமணியன் கதைகள்” – நூல் அறிமுகம்
கலவரங்களும் பின் நிற்கும் அரசியலும்
(சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளை முன் வைத்து)
– முத்தழகு கவியரசன்
முன்னுரை
கலவரங்களைப் பல வகைகளில் முன்னிறுத்தலாம். அவற்றுள் சாதிக் கலவரங்கள், மதக்கலவரங்கள், இனக்கலவரங்கள், தீண்டாமைக் கலவரங்களென நெழிவு சுழிவுகளோடு பின்னிக் கிடக்கின்றன. ஆனால் அவையெல்லாம் மனிதர்களுக்கும், மனிதர்களின் வாழ்விற்கும் எதிராகத்தான் நின்று கொள்கிறது. இன்றைய வாழ்வுச் சூழலிலும் இக்கலவரங்கள் நடைபெற்று தான் வருகின்றன. இருப்பினும் இவற்றினை மீறிய அறிவார்ந்த நுணுக்கமானக் கலவரங்களும் பெருகிக்கொண்டு வருவது மனச்சங்கடங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வுகள், நீட் தேர்வுகளென பல நிலைகளில் அறியப்பட்டாலும், ஆராயப்பட்டாலும் இக்கலவரங்களுக்கு எல்லாம் பின் நிற்பது அரசியலே என்னும் யூகத்தையும் மனதிற்குள் கிளப்பி விடுகிறது. ஏனென்றால் கலவரங்கள் யாருக்காக நடை பெறுகின்றன? அதனின் பலன் யாருக்காக? இவற்றை முழுமையாகத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசின் கடமையாக இருக்கிறதல்லவா? என்கிற கேள்விகள் உதித்தாலும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நகரத்திலிருந்து நகரத்திற்கு, வருகை, வதை, தகனம், வேற்றுமண்ணும் புதுக் குழந்தையும் போன்ற ஐந்து கதைகளில் இருக்கக்கூடிய மையத்திற்கும், அரசின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள உறவு சரியானதா? இல்லை அதற்கு நேர்மாறானதா? என்னும் கண்ணோட்டத்தில் இக்கட்டுரை விவாதிக்க முனைகிறது.
மையங்களும் அவற்றின் போக்குகளும்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் கதை மையங்கள் என்பது இதைத்தான் அவர் அதிகமாக பதிவு செய்திருக்கிறார் என்று வரையறுத்துக் கூறுவதில் சிக்கல்களே முன் வரும். பலதரப்பட்ட, விவாதிக்கக்கூடிய முரண்களைக் கையாண்டு இருக்கிறார். பயணங்களின் வழியாக, அந்தனுபவத்தை நாவலாகவும், கட்டுரைகளாகவும் கொண்டு வருகிறார். சுற்றுச்சூழல், தொழில் நகரங்கள் உருவாவதற்குமுன் அவ்விடங்கள் எப்படியெல்லாம் இருந்தன. மாற்றம் வந்தப் பின்பு அதனுடைய தனித்துவம் யாருக்காக சார்பு நிலையைக் கொடுக்கிறது போன்ற கேள்விகளும் இயல்பாகவே வந்து விடுகின்றன.
இவையெல்லாம் தனிப்பட்ட அல்லது முழுமையாக வெளிப்படாமல் ஆங்காங்கே அச்செயல்பாடுகளின் கிளைகள் பெருமளவில் பரவலாக்கம் பெறுகின்றன. அப்பெருக்கமே அன்றாட மக்களின் வாழ்வு இழப்பையும் பதிலாக எழுதி வைக்கிறது. அதன் தொடர்ச்சியாக, 1. இடம்பெயர்ந்து செல்லும் நிலை 2. அணுஉலைக் கூடம் 3. மருத்துவமும் பணமும் 4. தறிகளின் பரிதாபம் 5. அடையாளங்கள் கேள்வியாகிறது. இந்த ஐந்து மையங்களின் கீழ் இடம்பெறும் கதைகளின் அலசல்கள் பின்வருமாறாக அமைகிறது.
இடம்பெயர்ந்து செல்லும் நிலை
நகரத்திலிருந்து நகரத்திற்கு, இந்து – முஸ்லீம் மக்களின் கலவரத்தைப் பற்றி விவரித்திருக்கிறது. ஹைதராபாத் நகரத்தைப் பின்புலமாகக் கொண்டு, துன்பவியல் வகைப் பாட்டில் அமைகிறது.
முதன்மைப் பாத்திரமாக வரும் அருள் இப்பாத்திரத்தின் மனைவியாக வரும் சாந்தி, சண்முகம், விஜயா என இவர்களைக் கொண்டு, இந்நகரத்தின் கலவரங்களிலிருந்து எப்படியாவது தப்பித்து மற்றொரு நகரமான செகந்திராபாத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் கதை செல்கிறது. மாற்றாலாகிப் போகக்கூடிய அந்நகரமும் பாதுகாப்பானது என்ற முடிவுக்கும் உடனடியாக வர இயலாதெனவும் ஒரு முடிச்சை அவிழ்த்து விடுகிறார். இருந்தாலும் நம்பிக்கைப் பிடியில் நகர்கிறார்கள்.
கலவரங்களைக் குறிப்பிடும் போது “முக்கிய இந்து பண்டிகைகளின் போதோ, முஸ்லீம் பண்டிகைகளின் போதோ வருஷத்திற்கு நாலு முறையாவது நகரம் மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு ஊரடங்குச் சட்டம் வந்துவிடும். கல்லெறிதல் ஆரம்பித்து, கத்திக் குத்தில் தீவிரமாகும். பிறகு சூரையாடுதலும், சாவும் சர்வசாதாரணம். பிறகு தினமும் ஒரு மணி நேரம் என்று ஆரம்பித்து ஊரடங்குச் சட்டம் விலகும். சகஜமாவதற்கு இருபது இருபத்தைந்து நாட்களாகிவிடும்”(பக்473). “பண்டிகை வரும்போது மதக்கலவரங்கள், தனி மனித விரோதங்கள் என்றால் இது சளைக்கவில்லை. ஏதோ சண்டை என்று கேட்கப்போன கோனாரை நீண்ட கத்தியால் ஒருவன் அடிக்க ஓங்க, அவர் கையை நீட்டி தடுக்க முயன்றபோது கத்தி பாய்ந்து வலதுகை பாதித் துண்டாகிவிட்டது”(பக்474). “ரபீக் மாதிரி ஒரு மனுஷன் கெடைப்பாரா. அவர் கருகி செத்தது. ஐயோ. முணுமுணுத்துக்கொண்டான் அருள்”(பக்474).
இறுதியாக இடம்பெறும் காட்சிகளில் “கொஞ்ச நேரம் சென்றிருப்பார்கள். பெருத்த சப்தம் ஏதோ கேட்டது. புகை உயர்ந்து கிளம்புவது தெரிந்தது. வெடிகுண்டுகள் என்பது அருளின் மனதில் வந்தது. சப்தம் மீண்டும் கேட்கவே அவர்கள் சிதற ஆரம்பித்தார்கள்”(பக்477). மதங்களின் முரண்பட்டப் போக்கினால் அல்லல்படும் மனிதர்களின் வாழ்வும், ஊரடங்குச் சட்டத்தால் ஏற்படும் அன்றாட வாழ்வின் பரிதவிப்பும் அருளை வைத்து அவற்றைக் காட்சிப் படுத்தித் தந்திருக்கிறார்.
நிம்மதியாக வாழவேண்டுமென்றால் இங்கிருப்பது நியாயமில்லை என்ற முடிவுடன் கிளம்பும் சூழ்நிலை அக்கதையில் தென்படுகிறது. அரசின் புதிய நடவடிக்கையால், இரண்டு நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும் என்ற செய்தியைக் கேட்டு, நடு இரவில் அங்கிருந்து கிளம்பும் காட்சிகள் பெரும் பதற்றமான, போராட்டக் களமாகக் கதைக்குள் காட்டப்படுகிறது. மக்களின் நடமாட்டம் சாலையில் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறது. கதையின் முடிவில் அருள் தனியாக நிற்கும் காட்சிகள் வேதனைகளைத் தருகின்றது. செகந்திராபாத் நினைவுகளாகவே அவனுக்குச் சென்றிருக்கிறது. அவன் பல பிணங்களுக்கு மத்தியில் நிற்கிறான். அதற்குக் காரணம் குண்டுவெடிப்பு. தன்னோடு வந்தவர்கள் அவ்வெடிப்பில் சிதறுண்டு இரத்தக் குவியல்களாகக் கிடக்கிறார்கள். அவ்வுடல்களின் மத்தியில் அவன் தண்ணீர் தாகத்தோடு அல்லாடுகிறான். தன்னோடு உடன் வந்தவர்களும் என்ன ஆனார்கள். தேடிக் களைப்படைகிறான். ஆனால் கதையினூடாக வாசித்துப் புரிந்துகொள்ளும் பட்சத்தில், அவர்களும் இறந்திருக்கக் கூடும் அக்குண்டு வெடிப்பில் என்றுதான் சிந்திக்க வைக்கிறது.
இதற்கிடையில் இடம்பெயரும் பெண்களைச் சோதனை என்கிற பெயரில் சில இராணுவ வீரர்கள் தகாத நடத்தைகளில் ஈடுபடும் அத்துமீறல்களும், எதையும் கேட்க முடியாத தருணத்தை அவர்களுக்கு உருவாக்கி இருக்கிறது. கவலரங்கள் மனிதனின் வாழ்க்கையை எப்படிச் சீரழிக்கும் என்ற போக்கினை முன் நிறுத்துகிறார்.
அணுஉலைக் கூடம்
வருகை – செல்லத்தாயினை முன் வைத்து கதையின் நகர்தல் அமைந்திருக்கிறது. துன்பத்தை நிலைநிறுத்தும் வகைப்பிரிவில் அடங்குகிறது. கதைக்குள் இடம்பெறும் ஒரு கிராமத்திற்கு பிரதமர் வருகிறார். எதற்கென்றால் அங்கே அணுஉலைக்கூடம் அமைப்பதற்காகவும், அதற்கு எதிராக நடக்கும் போராட்டத்தைத் தடுக்கவும் தான்.
ஆனால் இது தெரியாமல் பிரதமரை பார்க்க ஆர்வத்தோடு இருக்கும் செல்லத்தாயும், இறுதியில் அதற்கானக் காரணத்தையும் புரிந்து கொண்டு கையாளும் காட்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. “எள்ளச்சி பாளையத்திற்கு அந்தப்புறம் ஏதோ தொழிற்சாலை வரப்போவதாக எல்லோரும் பேசிக்கொள்வது செல்ல தாயிக்குத் தெரியும். ஒருநாள் தன் மகன் பொன்னுரங்கத்திடம் கூடச் சொன்னாள்.“ஏணயா… எளச்சிபாளையத்திலே ஏதோ பெரிசா தொழிற்சாலை வரப்போகுதாம். குண்டு, வெடியெல்லாம் பண்ணுவாங்களாம். நீயும் போய்சேரன்… எத்தனை நாளைக்கு மில்லுலே எட்டு ரூபா சம்பளத்துக்கு அலைவே. ஏதோ சர்க்காரு தொழிற்சாலைங்குறாங்க.” அம்மா… அது பேக்ரியில்லே… அணு உலை… அனுசக்தி சம்பந்தமானது”(பக்506). மற்றும் “அதெல்லாம் இங்யே வந்தால் நாமெல்லாம் ஊரைக் காலி பண்ண வேண்டியிருக்கும். இப்பவே எளச்சிபாளையம் காலியாயிடுச்சு தெரியமா? நம்மளை எப்ப காலிபண்ணச் சொல் வாங்களோ?”(பக்507). “ஆனா… வழக்கமா விக்கறதை விட பாதிக்குக் கூட விலை தரமாட்டாங்க. “அப்புறம் என்னத்துக்கு.! ஆமா வர்ற அந்த மகாராசன் பணம் குடுக்கத்தான் வர்றாரா?. பொன்னுரங்கன் சிரித்துக் கொண்டான்”(பக்507). அரசுகளின் அதிகார இறையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் கிராமங்களின் நிலைப்பாடு பெரும் பாதிப்புகளை ஊர்ஜிதப்படுத்தி இருக்கின்றது. வீதியில் வரும் பிரதமரின் காட்சிகளும், அவற்றின் பிரதிபலிப்பும் அடுக்கடுக்காக வரையறுத்து காட்டி இருக்கிறார்.
இரண்டு மண் குடங்களை வீதியில் வைத்துக் கொண்டு உட்காரும் நிலை போராட்டத்தின் முதல் காட்சியாக நினைக்க வைத்திருக்கிறது. “எப்பவும் கஷ்டம்தா. கஷ்டமில்லாமே மனுஷ ஜீவனம் இருக்க முடியுமா?” என்றாள். மொழிபெயர்ப்பாளர், எல்லாம் கிடைக்கிறது. அணு ஆலை பற்றி ஆட்சேபணை எதுவுமில்லை என்கிறாள்” என்றார். (பக்510). கோபத்தின் உச்சத்தில் நிற்கும் செல்லத்தாயின் வார்த்தை உரையாடல்கள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அங்கிருந்து பிரதமர் செல்கிறார். அவள் வைத்திருந்த மண் குடங்கள் மிதிபட்டு உடைந்து சிதைகின்றன.
கதையில் மேற்கோளிட்டுக் காட்டப்படும் கருத்துகளும் இவையே. மக்களின் நலனுக்காக அரசு இயங்குவதில்லை. வேறு வேறு மொழி என்றாலும், அதனை இலாவகமாக ஏமாற்றிச் செல்லும் அதிகாரிகளின் நிலைப்பாடும் சற்று உற்று நோக்க வைத்திருக்கிறது.
மருத்துவமும் பணமும்
வதை – இங்கே வதைக்கப்படும் காட்சிகள் நாகரிகமாக நகர்த்தப்படுகின்றது. கதையின் முக்கியப் போக்கு மருத்துவமனை. அம்மருத்துவமனையின் வளர்ச்சி எப்படி அமைந்திருக்கிறது என்றால் அவை பணத்தின் செங்கற்களால் என்றே முடிவு செய்ய வைக்கிறது.
வசதியானவர்களைவிடவும், நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை மிகவும் அல்லல் படுகிறது. நோய்களுக்கான தீர்வை மருந்துகள் நிறைவேற்றிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அதற்கும் பணம் தான் முக்கியப்படும் போது, மனிதர்களின் திண்டாட்டமே தீர்வாக மாறுகிறது. சிலர் தப்பித்துக் கொள்கிறார்கள். பலர் அதன் பிடியிலிருந்து விடுபட முடியாமல் இறக்கிறார்கள்.
பொன்னுசாமியின் தந்தைக்கு ஏதோ வயிற்று வலி என்று வேலூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்குக் கூட்டி செல்கிறான். மருந்து சீட்டினைக் கையில் கொடுத்து அதற்காகப் பல கட்டிடங்களுக்கு அலையும் காட்சிகளும், பிடிபடாத மனவோட்டங்களில் அங்குமிங்கும் அலைய வைக்கும் நர்சுகளின் வார்த்தைகளும் பெரும் அவமானமும், எரிச்சலும் அவனுக்கு நேர்கிறது. கதைக்குள் நடக்கும் முக்கிய முரண்பாடாக “தோரணையில் அவர்கள் பெரிய டாக்டர்களாக இருக்க வேண்டும் என்று தோன்றியது பென்னுசாமிக்கு. அவர்கள் கும்பலாக இருந்தனர். ‘அருக்காணி புருஷன் யார்’ என்றார். குரல்கள் திரும்பத் திரும்ப கேட்டன. ஒருவர் கூனிக்குறுகி வந்தார். அவரைத் தொடர்ந்து வயதான ஒரு பெண் கைகளைக் கூப்பினாள்: ‘அருக்காணி அம்மாங்க’ ‘செரி… என்ன டெபாசிட் இரண்டாயிரம் கட்டியிருக்கீங்க. இன்னைக்கு இன்னம் அஞ்சாயிரம் உடனே கட்டுங்க. இல்லைன்னா மூச்சு குடுக்கிற மிஷினைக் கட் பண்ணிடுவம். அந்த மிஷினுக்கு ரொம்படிமாண்ட். சொன்னது புரிஞ்சதா. “உம் புருஷன் ரொம்ப மோசந்தா. உயிரைக் காபாத்தணும்ன்னா இன்னும் முப்பதிலிருந்து ஐந்தாயிரம் தேவைப்படும். முடியுமான்னா வெச்சிட்டிருக்கோம். இல்லின்னா கொண்டு போயிடுங்க”
தலைமை டாக்டரின் வார்த்தைகள் பொன்னுசாமியை அதிர வைத்தன. தூணில் சாய்ந்தான். பக்கமிருந்த வெளி அவனின் நிலை குலைவைச் சொன்னது. என்ன மனிதாபி மானமற்ற பேச்சு. வார்த்தைகளில் சேவை என்பதன் அர்த்தம் எதுவுமில்லாமல் வியாபாரம் என்ற தொனி மிதக்க அதே வார்த்தைகள் அப்பாவை முன் நிறுத்திச் சொல்லப்பட்டது போல அவனுக்குப் பட்டது”(பக்569). வியாபார உத்திகள் மருத்துவமனைகளில் எப்படி நடக்கின்றது என்பதை வெளிப்படையாகவே விவரித்து சென்றிருக்கிறது. தேவையில்லாமல் இங்கே வந்து விட்டமோ? என்ற மனநிலையும் பொன்னுசாமிக்கு வந்திருக்கிறது.
பணம் பலரையும் பதற்றம் செய்யத் தூண்டியிருக்கிறது. இப்போது அப்பா பிணமாகக் காட்சித் தருகிறார். உயிரற்ற உடலைக் கொண்டு போவதற்கும் பணம் இல்லாமல் தடுமாறுகிறான். ஆட்டோ, லாரி என அதற்கான வாகன உரிமையாளர்களிடம் உரையாடும் உரையாடல்களும் பணத்தின் மீதான குறிக்கோள்கள் மிகைமிஞ்சி செல்கிறது. இறுதியில் அப்பாவால் கொடுக்கப்பட்ட தங்க சங்கிலியை விற்று, ஒரு டாக்சியில் ஏற்றிக்கொண்டு போகும் காட்சியோடு முடிந்திருக்கிறார்.
கதையில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவை மருத்துவமனைகள் யார் நலனுக்காக? பணத்திற்காக மாறும் மருத்துவர்கள் எப்படி நோயாளிகளின் மேல் அக்கறை கொள்வர்? மக்களை ஏமாற்றும் இம்மாதிரியான மருத்துவமனைகள் எதற்கு? எனக் கேள்விகளின் ஊடான நிகழ்வுகளும் ஆழமாக கதையினுள் பின்னிப் பிணைந்துள்ளது. “வதை” நரகத்தின் முதல் வாசலாகத் திறந்திருக்கிறது.
தறிகளின் பரிதாபம்
தகனம் – நெசவாள மக்களின் வாழ்க்கையைக் குறிப்பிடும் கதை. அருணாச்சலம் எனும் பாத்திரத்தை வைத்து, அங்கு நடக்கும் சூழல்களைக் காட்சிப் படுத்துகிறார். முதல் காட்சியாக அருணாச்சலத்திற்கு மனைவி கமலம் ஒத்தடம் கொடுக்கிறாள். இவ்வொத்தடம் கொடுக்கப் படுவதற்கான காரணத்தைக் கடந்த காலவெளிக்குள் விளக்கி இருக்கிறார். கதையின் மையமும் இதன் வழியாக உருபெறுகிறது. நாற்பது வயதில் நெசவுத் தொழிலை அடையாளமாகவும், தறிக்காக பாவினை வாங்கிக்கொண்டு வீதயில் வருகிறார்.
நெசவாளர்களுக்கென்று தனியாக தொழிற்சங்கங்கள் இல்லாதது வருத்தமளிக்கும் செய்தியும் கூறப்பட்டிருக்கிறது. வீதியில் வரும் பொழுது வாகனங்களின் வரிசைகள், எதிர்படும் கொடிகள், வர்ணங்கள் என “அலங்கார வளைவுகள் சிவப்பு நீல வர்ணங்களில் தெரிந்தன. போலீஸ்காரர்கள் அங்கங்கே தென்படுகிறார்கள். மெல்ல பேச்சு கேட்கிறது. மந்திரி சீக்கிரம் வந்து பேச்சை ஆரம்பித்து விட்டார் என்பது தெரிந்தது. ‘கைத்தறி வார விழா’ என்று கொட்டை எழுத்து கண்ணில் பட்டது. பேனரின் நீல எழுத்துக்களைப் பார்க்க பார்க்க அவருக்குச் சந்தோஷமாக இருந்தது.
“நெசவாளர்களின் துயர் துடைக்க இந்த அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தோளில் கைத்தறியை போட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். தோளில் போடும் துண்டு முதல் உடுத்தும் வேட்டி வரை எல்லாமே கைத்தறி ஆடைகள்தான். மைய அரசு கைத்தறிக்குத் தந்த மானியங்களைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது. இதை நாங்கள் மைய அரசுடன் பேசி மானியத்தை மீண்டும் உயர்த்த வழிவகைகள் செய்வோம். நாங்கள் உங்கள் பிள்ளைகள்”(பக்705). கதையின் முக்கிய பார்வையை இவ்வாக்கியங்களில் உணரலாம். இருந்தால் இவையெல்லாம் பேச்சளவில் முன்னோட்டமாகவும், நிலையாகவும் எடுத்துக் கொள்ள வைத்திருக்கிறது.
ஏனென்றால் தற்கால அரசியல் கூட்டங்களுக்கு மக்களிடத்தில் பணத்தினைக் கொடுத்து நிரம்பி வழியும் தலைகளாக “முருகப்பனோடு” உரையாடும் உரையாடல், இவையெல்லாம் பொய்யான மாயையாக மந்திரியின் பேச்சாடல் நிலைபெறும். “ஒண்ணுமில்லை. மந்திரி வாராருன்னு கூட்டிட்டு வந்தாங்க’ என்ன நீங்கல்லாம் வந்துட்டீங்க’ “கூப்பிட்டாங்க. வந்துட்டம். சாயப்பட்டறையில் இருந்தம். லாரி வெச்சிக்கிட்டு வந்து கூப்புட்டாங்க. வந்தேன். இருபது ரூபாய் கைக்காசு. காலையில் டிபன் குடுத்தாங்க. மீட்டிங் சீக்கிரம் முடிஞ்சிரும்”(பக்706). இதற்கடுத்து வெளிப்படுத்தப்படும் காட்சிகள், கலவரத்தின் உத்திகளோடு சென்றிருக்கிறது.
எவ்வளவு நாட்களுக்குத்தான் இந்தப் பொறுமை. நடுக்கூட்டத்தில் எழுந்து நின்று கேள்விக்கேட்ட ஒருவனின் வார்த்தைகள் “எங்க கூலியைக் கொறச்சுட்டாங்க. கேக்கிறதுக்கு ஆளில்லாமல் போச்சு’ பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள் ஏதோ விபரீதம் என்பதுபோல் எழுந்தார்கள்”(பக்706). கேள்விகளுக்கான விடையைத் தேடிச்சென்றாலும் பதில்களைக் காட்டிலும், விபரீதங்களே முன்வந்து நிற்கின்றது. ஓர் அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதற்கு மாறாக தன் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஏமாற்றக்கூடிய அரசாட்சியில் நெசவாளர்கள் நிலைக் கவலைக்கிடமாக இருக்கின்றது என்பதை ஆசிரியர் கதையின் வழியாக நிரூபணம் செய்திருக்கிறார். நடைமுறை வாழ்விலும் இத்தாக்கம் நின்றுகொண்டுதான் இருக்கிறது. “தகனம்” நெசவாளர்களின் துயரப்போக்கு என்றே கூறலாம்.
அடையாளங்கள் கேள்வியாகிறது
வேற்று மண்ணும் புதுக் குழந்தையும் – துன்பத்தை ஆழமாகப் பதிவுசெய்கிறது. சுந்தரம் கதையின் முதன்மைப் பாத்திரமாக இடம்பெறுகிறார். முரண்படும் போக்கில் கதையின் தன்மை தமிழர்களின் மீதானக் கலவரங்களை முன் வைக்கிறது. ஏனென்றால் சுந்தரம் ஒரு தமிழன். தமிழ் குடும்பமாக அடையாளப்படுத்திச் சொல்லும் காட்சிகள் கலவரங்களைப் பேசுகின்றன.
குடும்ப உறவினை முகவரியாகக் கொண்டு, அங்கு நடக்கும் கலவரச் சிக்கலைக் காட்டுகிறது. கதையில் இருவகையானப் போக்கு காணப்படுகின்றது. தன் குடும்ப உறவின் பாதையில் செல்லும் வழி ஒன்றானாலும், இரண்டாவதாக வரும் கதைப்போக்கு நகர்புறத்தில் தமிழர்களின் மீதான சிக்கலை வெளிக்காட்டுகிறது. “நகரம் முழுவதும் போஸ்டர்கள். வேற்று மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும். வேற்று மாநிலத்தாருக்கு வேலை தராதே கோஷங்கள். ‘சன் ஆப் த சாயில்’ (பக்198).
கதையின் முக்கியப் பிரிவாக இதனைக் காணலாம். சுந்தரனின் நகர்புற வாழ்வு இதனையொத்துதான் செல்கிறது. மற்றும் அங்கு நடக்கும் கலவரங்களின் காட்சியாக “பத்து தினங்களுக்கு முன் தமிழ்ப் புத்தகக்கடை ஒன்றைத் தீக்கரையாக்கினர். தமிழர்கள் அதிகமாய் இருக்கும் ஓரிரு பகுதிகளில் சிலரைத் தாக்கிக் காயப்படுத்தி இருக்கிறார்கள். பஸ்ஸில் நிறையக் குழப்பமாய் வாய்த்தகராறுகள் நடந்தன. காலைக் காட்சிகளில் தமிழ்ச் சினிமாக்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழ்ச் சினிமாப் போஸ்டர்களின் தமிழ் எழுத்துகள் தாரால் அழிக்கப்பட்டன. சினிமா நட்சத்திரங்கள் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானவர்கள். தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழி கோலுபவர்கள் என்று கிழிபடாமல், தார் பூசப்படாமல் சிரித்தும், நடனமாடியும், சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். பொது இடங்களில் தமிழன் அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு விதியாயிற்று”(பக்198). இப்படிப் பல சிக்கல்கள் கதைக்குள் இடம்பெறுகிறது.
இரண்டு வகையான கதைப்போக்கு இருக்கிறது. ஒன்று சுந்தரத்தின் மனைவி பிரசவத்திற்காக அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். உறவுகள் மீதான அக்கறை, இணக்கமென முதலில் இதுசார்ந்த கதையோட்டத்தினைக் கொடுத்திருக்கிறார் கதைசொல்லி. இதற்கடுத்துதான் நகர்புற வாழ்வில் நடக்கும் பிரச்சனை மிகுந்த சூழலைக் கொண்டு வந்திருக்கிறார். இவ்விரண்டும் கடந்தகாலம் – நிகழ்காலம் என்னும் காலவரையறைக்குள் அமைந்திருக்கிறது. குடும்பத்தையும் அவற்றின் உறவுகளையும் அறிமுகப்படுத்திச் சொன்னாலும், இதற்குப் பின் சொல்லும் கதை ஒரு சமூகத்தின் பிரச்சனையும், அந்தந்த நாட்டின் வாழ்வுரிமைப் பற்றிய சிக்கலையும், அடையாளத்தையும் வலுவாக ஆணியிட்டு அடித்திருக்கிறது. “வேற்று மண்ணும் புதுக் குழந்தையும்” தமிழர்கள் மீதான கலவரத்தின் உச்சக்கட்டமாக அமைந்திருக்கிறது.
போக்கின் பிரிவினையில் அரசின் நிலைப்பாடு
கதைகளிலிருந்து வெளிப்படுத்தப்படும் பொருண்மைகள் எதார்த்த மக்களின் வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கிச் சென்றாலும், போராட்டங்களின் விளைவிற்கு மக்களின் சாதகமான நிலை என்றால் அவைக் கேள்விக்குறியே? அது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மேற்சொன்ன ஐந்து கதைகளின் மையங்கள் வெவ்வேறு அடிப்படையில் அமைந்தாலும், அரசின் செயல்பாடு மறைமுகமாகவே நிலைபெறுகின்றது. இக்கதைகள் அனைத்தும் மறைமுகமான அரசியலைப் பிரகடனப்படுத்துகிறது. கலவரங்களைத் தீர்க்காமல் ஒதுங்கி நிற்கும் இவ்வகைப் போக்கும் சிந்திக்க வைத்திருக்கிறது. வேற்று மாநிலத்தில் தமிழர்களின் மீதானத் தாக்குதல்களும், அடக்கு முறைகளும், வாழ்வுரிமைப் போராட்டங்களும் உன்னிப்பாக கவனிக்க எண்ணுகிறது. இடம்பெயர் வாழ்வின் தன்னடையாளச் சிக்கல் என்பது மறைமுகமாகத்தான் இருக்க வைத்திருக்கிறது. கதையின் மையங்களும், வெளிப்படுத்தும் காட்சிகளும் அரசியல் என்ற ஒற்றை இலக்கை சிந்திக்கத் தூண்டிவிடுகிறது.
வாழ்க்கையை மட்டுமில்லாது அவ்வாழ்க்கையில் பயணப்பட்டு செல்வதற்கும் இடையூறாக பல காரணிகள் முன் நிற்கின்றன. வருகை எனும் கதையினைத் தவிர, மீதமிருக்கும் கதைகள் அனைத்தும் நகரப் பின்புலத்தைச் சார்ந்து நிற்கிறது. தமிழர்கள் மற்ற மாநிலத்தில் வேலை நிமித்தமாகவோ, இல்லை வேறுக் காரணங்களுக்காகவோ வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருந்தாலும், அவர்களின் அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடியத் தன்மை அங்கே குறைவுதான். அரசுகள் மக்களை ஏமாற்றும் விதம் அறிவின் மறுக்கட்டமைப் பாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கல்வி, மருத்துவம், வேளாண் தொழில்கள் போன்ற பல துறைகளின் ஈர்க்கக்கூடிய நிலை, இன்று பிரிவுப்படுத்தப்பட்ட செயல்பாடாக உருவெடுத்திருக்கிறது. சரியான வேலை வாய்ப்பின்மை – ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் நிலை – சிறுகுறுத் தொழில்களின் மீதான அரசின் நிலைப்பாடு – நகர மக்களின் வாழ்வு, பொருளாதாரம் – அதற்கேற்ற முழுமையான வடிவங்கள், இவ்வனைத்தும் உரிய மதீப்பிட்டில் அணுகுகின்றதா? சுப்ரபாரதிமணியன் கதைகளிலிருந்து வெளிப்படும் மக்களின் நிலையாமை, அடையாளத்தை, பண்பாட்டுத் தளத்தை மீறிய நடவடிக்கைகளும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது இவ்வைந்து கதைகளின் பின்னணியும் மேற்சொன்னதை உள்வாங்கித்தான் அமைந்திருக்கிறது.
முடிவுரை
ஆக்கம், ஆக்கப்பூர்வமானப் பதிவுகள், பண்பாட்டிற்கும் – வேலைகளுக்கும் அரசு உரிய மதிப்பினை இவர்களுக்குக் கொடுத்திருக்கிறதா என்றால் இல்லை. வேற்று மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுதல் – மனித உரிமை மீறல்கள் – மதக்கலவரங்கள் – கிராமத்தில் உருப்பெரும் அணுஉலை ஆராய்ச்சிக்கூடம் – பணத்திற்காக இயங்கும் மருத்துவமனை – நெசவாளர்களின் மானிய நிலைப்பாடு சமூகத்தில் இவர்களுக்குண்டான அநீதிகளும், அவற்றின் பார்வைகளும், மறைமுகமான பங்களிப்பும், அரசின் நோக்கமும் போக்கும் வருத்தமளிக்கக் கூடியதாக அமைகின்றன.
முதன்மை நூல் :
சுப்ரபாரதிமணியன் : 2012 சுப்ரபாரதிமணியன் கதைகள். காவ்யா வெளியீடு, சென்னை.
பார்வை நூல் : செல்வராஜ், கே.பி.கே: 2005, சுப்ரபாரதிமணியன் படைப்பும் பகிர்வும், காவ்யா வெளியீடு, சென்னை.
நூலின் விவரங்கள்:
நூல் : சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் (முதல் தொகுப்பு)
நூலாசிரியர் : சுப்ரபாரதிமணியன்
வெளியீடு : காவ்யா பதிப்பகம், சென்னை.
தொடர்புக்கு : 9840480232 : 9486101003
விலை : 1150.
எழுதியவர் :

✍🏻 முத்தழகு கவியரசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
