வாரிசாட்சி வழிகாட்டி ‘கியூபா’ – அண்டனூர் சுரா ‘இது நானாக எடுத்து முடிவு. கியூபாவின் எதிர்காலம், அடுத்தத் தலைமுறை, இளைஞர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. எதுவொன்றும் இந்த முடிவை நோக்கி என்னைத் தள்ளவில்லை. நான் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினாலும், என் எஞ்சிய வாழ்நாட்களைக் கியூபாவின் இறையாண்மை, புரட்சி, சோசியலிசம் இவற்றைக் காக்க, முன்னெப்போவதை விடவும் தயாராக இருப்பேன், என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்ற ராவுல் காஸ்ட்ரோ, தன்னிடமிருந்த கட்சியின் பொறுப்பையும், ஆட்சியின் பொறுப்பையும் தன் இரத்த உறவிடம் கொடுக்காமல், தன் குடும்பத்திற்கும் வெளியே மக்கள் நம்பிக்கைக் கொண்ட ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். கியூபாவில் நடந்தேறியிருக்கும் மற்றொரு புரட்சியாக இது பார்க்கப்படுகிறது.

ராவுல் காஸ்ட்ரோ, ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரர். கியூபாவை அமெரிக்காவிடமிருந்து முழுமையாக மீட்டெடுக்கும் ‘ கிரான்மா பயணக்குழு’வில் ஒருவராக இருந்தவர். ஃபிடல் அமைச்சரவையில் முதல் ஆயுதப் படையின் அமைச்சர். துணை அதிபராக இருந்து, ஃபிடலுக்குப் பிறகு அதிபர் பதவியேற்றவர். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமைச் செயலாளர்.

ஃபிடல் காஸ்ட்ரோ மரணத்திற்குப் பிறகு, கியூபா கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் ஒன்று, ஆட்சி அதிகாரத்தில் இரண்டு முறைக்கும் மேல் அங்கம் வகிக்கக்கூடாது. கட்சியில் வெளிப்படையான ஜனநாயகத் தன்மை நிலவ வேண்டும், என்பது. இந்த விதிகளுக்கு உட்பட்டு, கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்ட அவர், கட்சியை மிகுல் தியாஸ் – கானல் பெர்மூதெசு என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். இதன் மூலம், அறுபது வருட ஃபிடல் காஸ்ட்ரோவின் குடும்ப மற்றும் இரத்த உறவு ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஒப்படைப்பு, உலகத்திற்கே முன்மாதிரியான வழிவிடுதலாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து வெறும் நூற்றைம்பது கல் தூரத்தில் இருக்கிறது கியூபா. காற்றில் பறந்து முள்ளில் சிக்கிக்கொண்ட கைக்குட்டையைப் போல நெளிவும் சுழிவுமாக நிலப்பகுதியைக் கொண்ட சின்னஞ்சிறிய தீவு. ஸ்பெயின் காலனியத்தில் சிக்கிக்கொண்டு, மீளமுடியாமல் நீண்டநாள் தத்தளித்த அந்நாடு, ஸ்பானியர்களிடமிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டு, அமெரிக்க ஆளுகையின் கீழ் சிக்கிக்கொண்டது. ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு நேர்காணலில் ‘ இந்த பூமியில் அந்நிய நாட்டிடம் முதல் காலனியானது எங்கள் நிலம்தான். கடைசியாக அதிலிருந்து விடுபட்டது எங்கள் நிலம்தான்’ என்றார். இரு நாட்டிடமிருந்து விடுதலை பெற்ற ஒரே நாடு இது.

Fidel Castro death anniversary: Check out some rare photos of the Cuban revolutionary who defied US- The New Indian Express

கியூபாவை ஸ்பானியர்களிடமிருந்து மீட்டுக்கொடுத்தவர், ஜோஸ் மார்ட்டி. இந்தியாவுக்குக் காந்தியைப் போலக் கியூபாவின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார். எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘நம்மை ஒடுக்குகிற ஸ்பானியர்களையும் நேசிப்போம். ஸ்பானியர்களை எதிர்த்து நாம் எல்லா வல்லமைகளோடும் போராடுவோம். ஆனால் அவர்கள் மீது நாம் பகைமை கொள்ளாதிருப்போம். நம் போராட்டம் ஸ்பானியர்களுக்கு எதிரானதல்ல. அமைப்புக்கு எதிரானது’ என்பதன் மூலம் எதிரிகளையும் நேசிப்போம், என நல்லிணக்கத்தை விதைத்தவர். இவர், ஸ்பானியர்களிடமிருந்து கியூபாவை மீட்க, 1892 ஆம் ஆண்டு, ஒரு கட்சியை நிறுவினார். அக்கட்சியின் பெயர், கியூபா புரட்சிகரக் கட்சி. ஸ்பானியர்களுடனான கொரில்லா போரில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்.

கியூபா ஸ்பானியர்களிடமிருந்து 1898 ஆம் ஆண்டு விடுதலை பெற்றாலும், அமெரிக்கா தன் ஆளுகையின் கீழ் பிடித்துக்கொண்டது. கியூபா மக்கள் அமெரிக்கக் காலனியத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். அப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு, 1902, மே 20 அன்று கியூபாவிற்குச் சுதந்திரம் வழங்கிய அமெரிக்கா, கியூபாவில் தலையிடுகிற உரிமையை அமெரிக்காவுக்குத் தருகிற அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துடன் கூடிய குடியரசாக அறிவித்தது. அமெரிக்காவின் தலையீடற்ற சுதந்திரம் நோக்கி கியூபா மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். மக்களை ஒருங்கிணைக்க, 1925 ஆம் ஆண்டு மக்கள் சோஷலிசக் கட்சியைக் கட்டினார்கள். கியூபாவை அமெரிக்கா சோஷலிசத்துடன் நடத்துவதாகவும், கியூபா மக்களுக்கு உதவும் உற்ற நண்பன் எனவும் அமெரிக்கா தொடர்ந்து பரப்புரை செய்ததால், மக்கள் சோஷலிசக் கட்சி என்கிற பெயரை, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி என மாற்றம் பெற்றது. இதற்கிடையில் மேலும் சில கட்சிகள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத் தகுந்த கட்சிகள் – பாரம்பரிய கட்சி, ஆர்த்தொடாக்ஸ் கட்சி.

ஃபிடல் காஸ்ட்ரோ ஆர்த்தொடாக்ஸ் கட்சியில் முதலில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர், கட்சி எடுத்த சில கொள்கையில் முரண்பட்டதும், உடன்படாத முடிவுகளில் கேள்வி கேட்டதையும் கொண்டு, ஃபிடல் கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டார். அக்கட்சியிலிருந்தபடியே, அவர் ஓர் இராணுவ அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம், அமெரிக்காவுக்கு எதிராகக் கிளர்ச்சி நடத்தினார். 1952 ஆம் ஆண்டு அமெரிக்கா தலையீடற்ற சுதந்திர கியூபா எனத் தன்னைத்தானே கியூபா இராணுவ அமைப்பு பிரகடனப்படுத்திக் கொண்டது. பிறகு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆர்த்தொடாக்ஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. நாட்டின் அதிபராக புல்ஜென்சியோ பாடிஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதலாளி மற்றும் நிலப்பிரபுக்களின் நபராக இருந்தார். இவரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற, ஃபிடல் மோன்கடோ நகரத்தில் ஒரு திட்டம் வகுத்தார். அத்திட்டம் ‘ மோன்கடோ திட்டம்‘ என அழைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, அதிபர் பதவியிலிருந்து பாடிஸ்டா இறக்கப்பட்டார். இந்தக் கிளர்ச்சியாலும் அடக்குமுறையாலும் நிகழ்ந்த உயிர் இழப்புகள் மிக அதிகம்.

Fidel Castro, Former Cuban Strongman, Dies - WSJ

பாடிஸ்டாவை அடுத்து, கியூபா அதிபராகப் பதவி ஏற்றவர் உரூசியா. இவர் சான்டியாகோ நகரில் நீதிபதியாக இருந்தவர். அமெரிக்காவிடம் கியூபா காலனியாக இருந்த காலத்தில், சிறைக் கைதிகளாக இருந்த புரட்சியாளர்களைத் தன் தீர்ப்பின் வழியே விடுவித்தவர். இவர் கியூபாவின் இடைக்கால அதிபராகப் பதவி ஏற்றிருந்தாலும், , கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுக்க நேர்ந்தது. ஃபிடல், அப்போது புரட்சிப்படையின் தலைவராக இருந்த போதிலும், அதிபருக்கு எதிராக, கிளர்ச்சி செய்வதன் மூலம், இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்குமென, தயங்கச் செய்தார். அப்போது அதிபரின் கீழிலிருந்து அமைச்சர்கள், ஃபிடல் காஸ்ட்ரோவைப் பிரதமராகப் பதவி ஏற்க, கேட்டுக்கொண்டார்கள். ஃபிடல் அப்பதவியை ஏற்காமல், அமைச்சரவைக்கு ஒரு நிபந்தனையை விதித்தார். ‘பிரதமர் பதவியை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நிறைவேற்றப்பட வேண்டிய புரட்சிகர சட்டங்களைத் தீர்மானிக்கிற பொறுப்பை என்னிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும்’. அதற்கேற்ப சட்ட விதிகள் மாற்றப்பட்டு, அதிபர் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமருக்கு முக்கிய அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. 1956 பிப்ரவரியில் பிரதமர் பதவியேற்ற ஃபிடல் 1976 டிசம்பர் வரைக்கும் பிரதமராக இருந்தார். கியூபாவிலிருந்த அத்தனை சோசலிஸ்ட் கட்சிகளையும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சி என்கிற ஒற்றைக் குடையின் கீழ் கொண்டு வந்தார்.

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியும் அக்கட்சியிலிருந்து, ஆட்சி அதிகார உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறையும் இந்தியத் தேர்தல் நடைமுறைக்கு நேர் எதிரானது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முறையின் கீழ், மற்ற தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒரு மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது, அம்மாநிலத்தின் சட்டசபை. உள்ளாட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்வதிலும், தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவிப்பதிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம். ஆனால் கியூபா தேர்தல் முறை இதற்கு நேர் எதிரானது. இந்தியத் தேர்தல் முறையோடு ஒப்பிட்டுச் சொல்வதாக இருந்தால், கிராம வார்டு உறுப்பினர்களே ஒன்றிய உறுப்பினர்களையும், ஒன்றிய உறுப்பினர்கள் மாவட்ட உறுப்பினர்களையும், மாவட்ட உறுப்பினர்கள் சேர்ந்து சட்ட மன்ற உறுப்பினர்களையும், சட்ட மன்ற உறுப்பினர்கள் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் முறையைக் கொண்டது. இவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்தே இந்த உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறார்கள். பொதுமக்களின் அதிருப்தியைப் பெறும் உறுப்பினர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவிப்பது கட்சி அல்ல, மக்கள். ஓர் உறுப்பினர் பதவிக்குப் பத்து பேர் அளவுக்குப் போட்டியிடலாம். தேர்தலை நடத்துவது, கட்சி. தேர்தலில் தொண்ணூறு சதவீதத்திற்கும் குறையாமல் வாக்குப்பதிவு நடந்தாக வேண்டும். ஒரு வாக்கு மாவட்டம், என்பது சராசரியாக ஆயிரம் பேர். இதுவே பெருநகரங்களில் ஆயிரத்து ஐந்நூறு. வாக்கு மாவட்டப் பிரதிநிதிகள் மாகாணத்திற்கும், அவர்கள் தேசிய சபைக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வெற்றி பெற வேண்டிய வேட்பாளர் மொத்த வாக்குப்பதிவில் ஐம்பது விழுக்காடு வாக்குகள் பெற்றாக வேண்டும். அப்படிப் பெறாத பொழுது, நடந்துமுடிந்தத் தேர்தலில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் வேட்பாளர்களுக்கிடையே மறுபோட்டி நடைபெறும். அதில் அதிக வாக்குகள் பெறுபவர், வெற்றி பெற்றவராவார். பிரதமர் வேட்பாளர் என்று தனியே கிடையாது. தேசிய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவைப் போன்றே பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். கியூபாவின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்த ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள், சான்டியாகோ டி கியூபா நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். உறுப்பினர்களுக்கென்று தனியே தர ஊதியம் கிடையாது. ஆனால் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான படிகள் உண்டு. தகுதிக்கேற்ப ஊதியம் வழங்காமல் தேவைக்கேற்ப சம ஊதியம் வழங்கும் நாடு கியூபா.

பிரேசில் நாட்டிலிருந்து சென்ற கிறித்தவ பாதிரியார் பெட்டோ, இது குறித்து ஃபிடல் காஸ்ட்ரோவிடம் கேட்டார். ‘ உங்கள் நாட்டில் முழு நாள் வேலை செய்தவருக்கும், அரை நாள் வேலை செய்தவருக்கும், சில மணி நேரம் வேலை செய்தவருக்கும் ஒரே அளவில் ஊதியம் வழங்குகிறீர்கள். இம்முறை சரியா?’ எனக் கேட்டார். இதற்கு காஸ்ட்ரோ, ‘ இதை நாங்கள் சோசலிசம் என்று சொல்வதற்கு அப்பாற்பட்டு, நுட்பமாக கம்யூனிசம் என்கிறோம். சோசலிசத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். கம்யூனிசத்தின்படி, அவரவர் தேவைக்கேற்ப ஊதியம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்கிறோம்’ என்றார்.

With End Of Castro Era In Sight, Cuba Prepares To Pass Power To New Generation : The Two-Way : NPR

பிப்ரவரி 1959 முதல் டிசம்பர் 1976 வரை பிரதமராக இருந்த ஃபிடல், அதன்பிறகு 1976 முதல் 2008 வரை அதிபர் பதவி வகித்தார். இங்கு அதிபர் பதவி என்பது அமெரிக்க அதிபர் பதவிக்கு நிகரானது அல்ல, இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு நிகரானது. இவரைத் தொடர்ந்து சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ அப்பதவிக்கு வந்தார்.

ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலக்குறைவுக்குப்பிறகு ஜுலை 31, 2006 அன்று தற்கால அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராவுல் காஸ்ட்ரோ, பிறகு முறைப்படி அதிபராகத் தேர்வு செய்யப்பட்டடார். அதன்பிறகு, கியூபா கட்சி மற்றும் ஆட்சி சட்டத்திருத்தத்தின்படி, இரு முறைக்கும் மேல் ஆட்சியில் நீடிக்க முடியாது, என்கிற விதியின் கீழ், அச்சட்டத்தை மதித்து, கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகிக் கொண்டு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கியூபா அதிபர் மிகுல் தியாஸ் – கானல் பெர்மூதெசுவிடம் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியை முழுமையாக ஒப்படைத்தார்.

இந்தக் கொரானா காலத்தில் கியூபாவின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரெம்ப் அறிவித்த பொருளாதாரத் தடையால் தென் மற்றும் வட அமெரிக்கக் கண்ட நாடுகளிடம் தனிமைப்பட்டிருக்கும் இந்நேரத்தில், கியூபாவின் ஆட்சி மற்றும் கட்சியின் அதிகார மாற்றம், உலக நாடுகளின் கவனத்தைக் கியூபாவின் பக்கம் திருப்பியிருக்கிறது. கியூபாவிடமிருந்து, நம் அரசியல்கட்சி தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுண்டு. அது குடும்பம் மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி மற்றும் ஆட்சி அதிகாரங்களைப் பொதுமைப்படுத்துவதாகும். சின்னஞ்சிறிய நாடு கியூபா, உலகத்திற்கு வழிகாட்டுகிறது!

May be an image of 1 person and smiling

– அண்டனூர் சுரா ( எழுத்தாளர் )
அலைபேசி – 9585657108