திடீர் அரசியல்
********************
சில அரசியல் அவதாரங்கள்
திடீர் திடீரென ஆஜராகிவிடுகின்றன
எதற்கும் தேசம்
எச்சரிக்கையாய் இருக்கட்டும்
நேற்று விதை போட்டு
இன்று மரம் ஆகி
நாளை அறுவடைக்கு
ஆள் கூப்பிடுகிறார்கள்
திடீர் ரசம் திடீர் சாம்பார் போல
சில அரசியல்வாதிகளுக்குத்
திடீர் நாக்குகள் முளைத்துவிடுகின்றன.
பொய்களில் புரள்வதால்
கேட்கும் செவிகளில் மின்னதிர்ச்சி.
மாற்றத்தின் விதை
வளர்ந்து முதிர்வதற்கு
மரத்தின் வயதை விட
பன்மடங்கு அதிகம் தேவை.
இலக்கும் வழியும் நேர்மையாய் இருக்க
புரட்சிக்கு ஏது குறுக்கு வழி?
*****
அமிர்தசரஸில் சாதத் பானு
உருது பாரசீகம் ஆங்கிலம் பயில
ஹஃபீஸ் உல்லா என்ற அப்பா தேவைப்படுகிறார்
அவரிடமிருந்து தான்
சாதத் பானு
மகளாக சமைய முடிகிறது
அறிவின் அறுவடைக்கு
ஆண்டுகள் தேவை
பரம்பரை சொத்து நகை நட்டு
வீட்டு உடைமை விளைபொருள்கள்
நாட்டுக்குக் கொடுத்த
சைபுதீன் அப்பாவிடம் இருந்தும்
சாதத் பானு அம்மாவிடமிருந்தும்தான்
ஒரு ஜாஹிதா எழ முடிகிறது
“ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை
அதைவிடவும்
ஏழ்மையிலிருந்து எல்லோர்க்கும் விடுதலை”
என்ற தந்தையின் வாழ்க்கையே தகவலாகிற போதுதான்
ஜாஹிதா வால்……
(கவிதை துண்டுபடுகிறது)
நிற்க
******
பிராமணியத்தின் பிடியிலிருந்து விடுபட்டு
சடங்கு சம்பிரதாயங்களை உதறி
பூணூல் ஒரு விலங்கெனப் பொங்கியெழுந்து
வேத சமூகத்தினரின் வெறுப்புக்கு ஆளான
ராமசாமி சிவனிடம் இருந்து
பாலகிருஷ்ணன் வழியாகத்தான்
ஒரு சீனிவாசன் வர வேண்டி இருக்கிறது
இளமையில் இருந்தே
கம்யூனிச இயக்கத்தில் கரைந்ததனால்
அனுபவமும் திறனாய்வும் ஆளாக்கிவிட்ட எம்பி சீனிவாசனால் …..
(கவிதை துண்டுபடுகிறது)
நிற்க
*****
(இரு துண்டுக் கவிதைகளும் இணைகின்றன)
சாதத் பானுவால்
எம் பி சீனிவாசனால்
இதயம் கலந்து இணைய முடிகிறது
மாற்றத்தின் விதை வளர்ந்து முதிர்வதற்கு
ஒரு மரத்தின் வயதை விட
பன்மடங்கு அதிகம் தேவை
மக்கள் அரசியலைக்
கொள்ளையடித்துக் கடத்துகிறபோது
திடீர் அரசியல்வாதிகளுக்கு
நாக்குகள் முளைத்துவிடுகின்றன.
திடீர் அரசியல் எவ்வளவு ஆபத்தானதென்று
திகைத்து நிற்கிறது தேசம்!
— – நா.வே.அருள்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.