சுதாகர் நல்லியப்பன் - குமரவேல் இராமசாமி எழுதிய "நீலமலைத் தொல்லியல் (பாறை ஓவியங்கள், பெருங்கற்படைச் சின்னங்கள், பழங்குடி தொடர்புறவுகள்)" புத்தகம் | Sudhakar Nalliyappan and Kumaravel Ramasamy's "Neelamalai Tholliyal" (Archaeology of the Blue Mountains) Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சுதாகர் நல்லியப்பன் – குமரவேல் இராமசாமி எழுதிய “நீலமலைத் தொல்லியல் (பாறை ஓவியங்கள், பெருங்கற்படைச் சின்னங்கள், பழங்குடி தொடர்புறவுகள்)” – நூல் அறிமுகம்

பழங்குடிகள் பற்றிய தேடல் என்பது, இன்றைய பழங்குடிகளைப் பற்றிய அறிதலாக மட்டும் இல்லாமல், பண்டைய செம்மை இலக்கியத்தின் தொடர்பையும், அங்கே உள்ள தொல்லியல் தடங்களை அறிதலாகவும் இருக்கிறது. அதனால் இன்றைய பழங்குடிகள் பற்றி ஆய்வு என்பதை மானுடவியலாளர்கள் மட்டும் செய்வதாகச் சுருக்கிட முடியாது. தொல்லியல் போன்ற துறைகளும் இணைந்தாக வேண்டும். “நீலமலைத் தொல்லியல்” என்கிற இந்த நூல் ஓவியத் துறையினையும் சேர்த்துக் கொள்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி பகுதிக்கு முன்பு வரை, தமிழகத்தில் பாறை ஓவியங்கள் இல்லை என்ற கருத்து இருந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையினர் 1978ஆம் ஆண்டு மல்லபாடி பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்தனர். இதற்குப் பிறகு தமிழகத்தில் பாறை ஓவியத்தைத் தேடும் ஆர்வம் அதிகரித்தது. தற்போது தமிழகத்தின் வடக்கில் செஞ்சி, வேலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களிலும், வடமேற்கில் கிருஷ்ணகிரியிலும், மேற்கு மலையடிவாரத்தில் திருப்பூர், கோவை, தேனி, திண்டுகல் பகுதியிலும் மேற்கு மலையில் நீலகிரியிலும் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

நீலகிரி மலைத்தொடரில் காணப்படும் ஓவியங்களின் விவரங்கள் “நீலமலைத் தொல்லியல்” என்கிற இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. நீலமலை என்பது இன்றைய நீலகிரி மாவட்டத்தையே குறிக்கிறது. மாவட்டத்தின் பெயர் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய பழங்குடிகள் பேசுவது, நேரடி தமிழாகவும், கன்னடம், மலையாளம் கலந்ததாக இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டு பகுதிக்குள் இருப்பவர்கள். அவர்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது, அவர்கள் பரந்து காணப்படுகிற அனைத்து மாநிலத்தையும் உள்ளடக்கியே கணக்கில் கொள்ள வேண்டும். பழங்குடிகளுக்கு நாட்டு எல்லையோ, மாநில எல்லையோ கிடையாது. பொதுநீரோட்ட எல்லைக்குள் அவர்களை அடக்க முடியாது.

நீலமலை (நீலகிரி) மாவட்டம் பழங்குடிகளின் மாவட்டம் என்று அழைக்கும் அளவுக்கு அதிகமான பழங்குடிகள் அங்கு வாழ்கின்றனர். அதனால் பழங்குடிகள் என்றால், நீலமலை முதன்மை இடத்தைப் பெறுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் அழிநிலைப் பழங்குடிகளாகக் கணிக்கப்பட்ட ஆறு சமூகத்தினர் இந்த மாவட்டத்தில் வாழ்கின்றனர். அதனால் இவர்களைப் பற்றியும், இயற்கையாகவும் செயற்கையாகவும் அழிவுக்கு உள்ளாகும் பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தும் பணி உடனடித் தேவையாக இருக்கிறது. இந்தப் பணியினை உணர்ந்து இந்நூலாசிரியர்களான சுதாகர் நல்லியப்பன், குமரவேல் இராமசாமி ஆகியோர்களுடன் யாக்கை குழுவினர் ஆவணப்படுத்தும் பணியினைச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஏன் இதனைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், இத்தகைய ஆவணப்படுத்துதல் அரசு துறைசார்ந்தவர்கள் செய்ய வேண்டிய பணியாகும். நாம் அதுவரை காத்துக் கொண்டிருக்க முடியாது. யாக்கை போன்ற அமைப்பை ஏற்படுத்திச் செய்ய வேண்டியதும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

இந்த யாக்கை குழுவினர் இந்தப் பணியினைச் செய்து, அதனை நூலாகவும் தமிழ் உலகுக்குத் தந்துள்ளனர். நீலகிரி (நீலமலை) மாவட்டத்தின் தொல்லியல் தடங்களான பாறை ஓவியங்கள், நெடுங்கல், நடுகற்கள், கல்வெட்டுகள், பழங்குடியினர் வரலாறு, சடங்குகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆவணங்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

பாறை ஓவியங்கள் மனிதயினத்தின் வாழ்வியலையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்கான முதன்மையான, தொன்மையான சான்றாக இருக்கிறது. மனிதயினத்தின் எலும்புகள், மண்டை ஓடுகள் போன்றவை மிகமிகப் பழமையான சான்றாக இருக்கிறது, அதாவது ஹோமோ சேப்பியன், நியாண்டர்தால், டெனிசோவன் போன்ற பழைமையான மனிதயினங்கள் எலும்புகள் சான்றாக இருக்கிறது, இருந்தாலும் மனிதனால் உருவாக்கிய சான்று என்றால் அது பாறை ஓவியமே மிகமிகப் பழமையானது தொடக்கமானது. பெருங்கற்காலச் சின்னங்கள் என்பது இதற்கு அடுத்தபடியாகவே வருகிறது. அதுமட்டுமில்லாது பாறை ஓவியங்கள் தொடர்ந்து வரையப்பட்டதாகத் தெரிகிறது. மனிதயினத்தின் மாற்றத்தையும் வளர்ச்சியினையும் பாறை ஓவியமே சிறந்த சான்றாக இருக்கிறது. பாறை ஓவியங்கள், இயற்கை சீற்றத்தைக் கடந்து இத்தனைக் காலத்துக்குத் தாக்குபிடிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது, இந்த ஓவியத்தின் நிறங்களைப் பாறை உள்வாங்கி வைத்திருப்பதால்தான் இந்தக் காலமாக அது மறையாமல் நீடித்து நிலைபெற்றுள்ளது.

மார்கன், “மனிதகுலம் மிக அடிநிலையிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறியது என்ற முக்கியமான மெய்மை, அவர்களின் தொடர்ச்சியான வாழ்வாதாரக் கலைகள் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது.” (பண்டைய சமுதாயம், பக்-79) என்கிறார். கலைகள் கலையினை மட்டும் வெளிப்படுத்தவில்லை வரலாற்றையும் எடுத்துக் காட்டுகிறது. பாறை ஓவியங்கள் மூலம், அன்றைய மக்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமில்லாது வேட்டையில் தொடங்கி விலங்கு வளர்ப்பு, வேளாண்மை, பயன்படுத்திய கருவிகள் ஆகியவைகளின் மூலம் மனிதயினம் வளர்ச்சி பெற்ற வரலாற்றை எடுத்து இயம்புகிறது.

73 நீலமலை கிராமங்களை ஆய்வு செய்து, 45 தகவலாளிகளின் கருத்துகளை உள்ளடக்கி, பழைய முடிவுகளை மீளாய்வு செய்து, புதிய முடிவுகளுடன் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 452 பக்கங்கள் பல்வேறு நிறங்களைக் கொண்டதாகவும், 146 படங்களுடன், 90 விளக்கப்படங்களுடனும், 17 அட்டவணைகளுடனும், 13 நிலவரை படங்களுடனும் ஓர் ஆவணங்களின் தொகுப்பாக இந்நூல் இருக்கிறது. மொத்தமாகப் பார்க்கும் போது ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அனைவரும் நீலமலைக்குச் சென்று அந்தத் தொல்லியல் தடங்களைக் காண முடியாது என்பது உண்மை தான், ஆனால் சில இடங்களையாவது கண்டிப்பாக நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று இந்த நூலின் படங்கள் நம்மைத் தூண்டுகிறது. இந்த நூலில் ஆறு இயல்கள் இருக்கிறது, ஒவ்வொரு இயலுக்கும் தனித்தனி நிறமிட்ட தாள்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இந்த நூல் பேசுவது பழங்குடிகள் பற்றியது, நூலின் வளைவாக்கம் நவீனமாகக் காணப்படுகிறது.

மேலும் இந்த நூல், ஆய்வாளர்களுக்கானதாக மட்டுமில்லாது பொதுவானவர்களையும் மனதில் கொண்டே உருவாக்கப்பட்டிருப்பதை, படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. காலக்கணிப்பு வேறுபாடு, அதிகமான ஒப்பாய்வு இல்லாமல் அனைவரும் படிக்கும்படியான தொகுப்பாக இருக்கிறது. இந்த நூல் தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் இடம்பெற்றால் விரும்பும் அனைத்து வாசகர்களும் படித்துப் பயன்பெறுவர். பள்ளிக்கூடம், கல்லூரி ஆகிய கல்வி நிறுவன நூலகங்களில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் நூலாக இது இருக்கிறது. கீழடியில் நடந்த அகழாய்வு எப்படிப் பொதுமக்கள் பார்வைக்குச் செல்லக்கூடியதாக இருந்ததோ, அதேபோலப் பழங்குடிகள் பற்றிய வாழ்க்கை முறைகளையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும், அதற்கு இந்த நூல் ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

பழங்குடிகள் பற்றிய அடிப்படை புரிதல் இருந்தால்தான் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து தீர்வை வைக்க முடியும், அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும்படியாகப் பழங்குடிகள் பற்றிய பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். பழங்குடி மக்களுக்கும் பொதுநீரோட்டத்தில் இருக்கும் மக்களும் ஒரே சிந்தனையுடையவர்களாக இருக்க முடியாது, பழங்குடிகளைப் பொதுநீரோட்டத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பழங்குடிகளின் தனித்தன்மையினை அறிந்து கொள்ள வேண்டும். பழங்குடிகளைவிட நாகரிகம் பெற்றவர்களாகப் பொதுநீரோட்டத்தில் இருப்பவர்கள் நினைத்துக் கொண்டு அவர்களுக்கான தீர்வைக் கொடுக்க முடியாது, அவர்களின் போக்கையும் நிலைமைகளையும் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே சரியான தீர்வைக் கொடுக்க முடியும். பழங்குடிகளைப் புரிந்து கொண்டு போடப்படுகிற சட்டங்களே நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க முடியும். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பழங்குடிகள் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களுக்கான தீர்வு என்பது அவர்களை நன்றாகப் புரிந்து கொண்டதின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

பழங்குடிகள் என்றால் அவர்கள் நாகரிகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற தவறான புரிதலில் இருந்து விடுபட வேண்டும். பொதுநீரோட்டத்தில் இருக்கும் மக்களின் நாகரிகத்தின் தொடக்கத்தை, பழங்குடிகளின் ஓவியம், இசை கருவிகள், வழிபாடு போன்றவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நவீன மக்களின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு, பழங்குடிகளை ஆராய வேண்டும்.

“நீலமலைத் தொல்லியல்” என்கிற இந்த நூல் ஆறு இயல்களைக் கொண்டுள்ளது, ஆறு இயல்களிலும் நிறையப் படங்களையும் பல்வேறு எழுத்துகளில் தகவல்களையும் கொண்டுள்ளது. நான் ஒவ்வொரு இயலையும் படிப்பதற்கு ஒரு முறையினைக் கையாண்டேன். முதலில் இயல்களில் காணப்படும் படங்களையும் அதற்கான விளக்கங்களையும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும், பிறகு எழுத்துகளைப் படிக்கும்போது, படத்தை இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப் படித்ததால் இந்த நூலை முழுமையாக அனுபவிக்க முடிந்தது.

ஆறு இயல்களையும் சுருக்கமாகப் பார்ப்பதற்கு முன், அந்த இயல்களின் தலைப்புகளைப் பார்ப்போம். 1.தொல்பண்பாடு, 2.நீலமலை அறிமுகம், 3.நீலமலைப் பாறை ஓவியக் கலைப்படைப்புகள், 4.திறனாய்வுப் பார்வை, தொடர்புறவுகள், 5.நீலமலைப் பெருங்கற்படைச் சின்னங்கள், 6.பழங்குடித் தொடர்புறவுகள் சடங்குகள். இந்தத் தலைப்புகளே அதன் பேசு பொருளை வெளிப்படுத்திவிடுகிறது.

முதல் இயல் தொல்பண்பாடு. பாறை ஓவியங்கள் பற்றி விளக்கங்களும், உலக அளவிலும், இந்திய அளவிலும் பாறை ஓவியம் எந்த வகையில் காணப்படுகிறது என்பதை விவரித்துவிட்டுத் தமிழகத்துப் பாறை ஓவியங்கள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகிறது. தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஓவியம் காணப்படும் இடங்களாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி போன்ற இடங்களிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் ஓவியம் காணப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

வெண்சாந்து, செஞ்சாந்து நிறங்களில் தமிழகத்து ஓவியங்கள் காணப்படுகிறது. செஞ்சாந்து ஓவியங்களில் உள்ள நேர்த்தி, வெண்சாந்து ஓவியங்களில் காணப்படவில்லை. வெகு சில இடங்களில் மட்டுமே வெண்சாந்து ஓவியங்கள் நேர்த்தியாக இருக்கிறது. செஞ்சாந்து ஓவியங்கள் காலத்தால் பழைமையானதாகவும் வெண்சாந்து ஓவியங்கள் பிற்காலத்தவையானதாகவும் கருதப்படுகிறது. வெண்சாந்து ஓவியங்கள் வரலாற்று தொடக்கக் காலத்தை என்று கணிக்கப்பட்டுள்ளது.

குச்சி வடிவத்தில் கோடிட்டவகையில் மனித உருவ ஓவியங்கள் காணப்படுகிறது. விலங்குகளின் உள்ளுறுப்புகளைக் காட்டும் படம் வரையப்பட்டிருப்பதைக் காணும் போது, இந்த ஓவியம் ஏதோ புரிதலுக்கு இப்படி வரைந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. விலங்கில் உண்ணக்கூடிய பகுதி, உண்ணக்கூடாத பகுதி ஆகியவற்றைப் பிரித்து அறிந்து கொள்வதற்கு வரைந்து விளக்கி இருப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது.

ஓவியத்தைப் பற்றி பேசுகிற இடங்களில், சங்க இலக்கியச் சான்றுகளுடன் குகை ஓவியங்கள் இணைத்துப் பார்க்கப்படுவதைப் பார்க்கும் போது சங்க இலக்கியத்துக்கும் இன்றைய பழங்குடி மக்களுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாவது இயல் நீலமலை அறிமுகம். இந்த நூல் நீலமலையில் காணப்படும் தொல்லியலைப் பற்றிப் பேசுவதால், நீலமலையின் வரலாறு, புவியியல், அங்குள்ள பழக்க வழக்கங்கள் போன்றவை இந்த இயலில் விவரிக்கப்பட்டுள்ளது. நீலமலையில் காணப்படும் புவிப்பரப்பு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையில், கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் இணையும் பரப்பின் மேலுள்ள நெடிதுயர்ந்த மலைத்தொடரில் நீலமலை அமைந்துள்ளது. சமவெளிப் பரப்பும், உயர்ந்த மலை உச்சிகளும் உயிர் வாழ்வதற்குத் தேவையான வகையில் சூழ்நிலைகளைக் கொண்டதாக நீலமலை காணப்படுகிறது. தமிழகத்தில் பழங்குடிகள் இன்றும் அதிகமாக வாழ்வதற்கு இத்தகைய சூழ்நிலையே காரணமாகும்.

மூன்றாவது இயல் நீலமலைப் பாறை ஓவியக் கலைப்படைப்புகள். நீலமலையில் காணப்படும் ஓவியங்கள் கடல் மட்டத்திலிருந்து 540 மீட்டர் உயரத்திலிருந்து 2000 மீட்டர் வரையுள்ள பாறைகளில் காணப்படுகின்றது. கீறல் வகையானதும், நிறங்களைக் கொண்டதும் என இரண்டு வகைகளில் ஓவியங்கள் இருக்கின்றது. காலத்தால் பழமையான ஓவியங்கள் நேர்த்தியானதாகவும் பிற்காலத்தவையும் ஓவியத்தின் மீது வரைந்தவையும் நேர்த்தி சற்றுக் குறைவாகவும் காணப்படுகின்றது. நீலமலையில் காணப்படும் அனைத்து ஓவியங்களையும் இந்நூல் ஆவணப்படுத்தவில்லை, அவ்வாறு செய்வது பெரும் பணியாகும், அந்தப் பெரும் பணியினை அரசு தான் செய்து முடிக்க முடியும், அல்லது அரசுடன் சேர்ந்து செய்ய வேண்டும். இருந்தாலும் இந்த நூல் கரிக்கையூர், மல்லிக்கொப்பையூர், கொணவக்கரை, தாளமொக்கை, செம்மநாரை, வெள்ளரிக்கோம்பை, ஜக்கனாரை, தெங்குமரஹடா, இடுஹட்டி ஆகிய இடங்களில் கடும் முயற்சி செய்து ஓவியங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணியினைச் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கும் போது எவ்வளவு கடுமையாக உழைத்து, யாக்கைக் குழுவினர் இதனை உருவாக்கியிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாது இந்த வனப்பகுதியில் யானை, காட்டுமாடு, புலி, மான், செந்நாய் முதலிய விலங்குகள் வாழும் சூழலாகவும் இருக்கிறது. அன்றைய பழங்குடி மக்கள் பல்லுயிர் வாழும் சூழ்நிலையில் தான் தங்களது வாழ்விடத்தை அமைத்திருந்தனர், அதனால் இன்று அந்த இடங்களுக்குச் செல்லும் போது பாதுகாப்பில் கவனம் செலத்த வேண்டியுள்ளது.

கரிக்கையூர் பகுதியில், யானையின் மீது அமர்ந்து போரிடும் படமும் அதனை ஒட்டி மற்றொருவன் தரையில் நின்று போரிடும் வீரனின் படமும் வெண்சாந்தில் வரையப்பட்டுள்ளது. புலியா? சிறுத்தையா? என்பதை அறியாத வகையில் நேர்த்தி குறைந்த நிலையில் ஓர் ஓவியமும், காட்டு எருமை, மாடு, மான்கள் ஆகியவற்றுடன் ஒரு குட்டியும் கூட்டமாக இருக்கும் ஓவியமும், வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்ட ஒரு காட்டு மாட்டின் படத்தின் மீது செஞ்சாந்து நிறத்தில் மேலேயே மேற்பூச்சு செய்யப்பட்ட ஓவியமும், வெண்சாந்து நிறத்தில் கையில் போர் கருவிகளுடன் குதிரையின் மீது பயணிக்கும் குழுவையும் தரைமட்டத்தில் அதனை எதிர்கொள்ளும் குழுவையும் காட்சிப்படுத்தும் ஓவியமும், இருவர் நடனமாட, இருவர் துடி கருவிகளை இசைக்கும் நிலையில் உள்ள ஓவியமும் காணப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பல காலமாக வரைந்த ஓவியத்தின் ஊடேயும் அதன் மீதும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. கண்பார்வைக்கு இந்த ஓவியம் ஒரே அடுக்கில் வரையப்பட்டதாகத் தோன்றும், அதனைத் தொழில்நுட்ப உதவியுடன் யாக்கை குழுவினர் பிரித்துக் காட்டியுள்ளனர். அவ்வாறு பிரித்துப் பார்க்கும் போது எத்தனை அடுக்குகளாக ஓவியம் வரையப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

மல்லிக்கொப்பையூர் பகுதியில், ஆறு பேர்கள் கூட்டமாக நடனமாடுதல் அல்லது ஏதோ சடங்கு செய்தல் போன்ற ஓவியம் காணப்படுகிறது. கொணவக்கரை பகுதியில், கருவிகளைப் பிடித்தப்படியான தெளிவற்ற ஓர் ஓவியமும், ஒன்பது பேர் கொண்ட குழு நடன ஓவியமும் காணப்படுகிறது. தாளமொக்கை பகுதியில், தனியான மனித உருவமும், ஆண் பெண் இணையரின் உருவமும், மனிதனின் உடலை உடுக்கை வடிவில் அமைந்த உருவமும், விலங்கின் மீது மனிதன் அமர்ந்து செல்லும் உருவமும் கொண்ட ஓவியங்கள், மேலும் மரக்கிளைகள் கொண்ட ஓவியமும், குறியீடு கொண்ட ஓவியமும் காணப்படுகிறது. செம்மநாரை பகுதியில், குறியீட்டு ஓவியமும், ஒரு விலங்கின் மீது நிற்கும் மனித உருவமும், இரண்டு விலங்குகள் மற்றும் ஒரு மனித உருவம், விளக்கம் பெற முடியாத வகையில் தெளிவற்ற ஓவியமும் காணப்படுகிறது. செம்மநாரை பகுதியில், குறியீட்டு ஓவியமும், தாவரத்தின் தலைப்பாகம் கொண்ட ஓவியமும், வெள்ளரிக்கோம்பை பகுதியில் கோபுர வரி வடிவம் கொண்ட தலையுடன் கூடிய மனித உருவ ஓவியமும், இரண்டு பாதங்கள் நீண்ட சங்கிலியால் பிணைத்திருக்கும் ஓவியமும், குடுவைத் தலையுடனும் ‘ப’ வடிவத்திலான தலையினைக் கொண்டதுமான ஓவியமும், மானின் உள்ளுறுப்புகள் தெரியும்படியான ஓவியமும், பழங்குடியின் தெய்வம் மீயியல் தன்மையுடன் காணப்படும் ஓவியமும், மாடு, யானை ஆகியவற்றின் தனித்தனியான ஓவியம் நேர்த்தியற்றுக் காணப்படுகிறது. மாட்டு ஓவியத்தின் மீது பாறை ஓவியத்தின் அருமை தெரியாத இன்றைய காலத்தவன் எழுதியிருப்பதைக் காண முடிகிறது. இது போன்ற செயலால் அந்த ஓவியத்தின் தன்மை சிதைந்து போகிறது, அதன் காலத்தைக் கணிக்கும் முயற்சியில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற செயற்கைக் காரணங்களாலும் மழை நீர் ஓட்டம், நிலச்சரிவு போன்ற இயற்கைக் காரணங்களாலும் பாறை ஓவியங்கள் சிதைந்தோ!, அழிந்தோ! போவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற காரணங்களைப் பார்க்கும் போது இந்த நூலைப் போன்று அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டியதின் அவசியம் புலப்படுகிறது.

ஜக்கனாரை என்கிற பகுதியில், ஒரு மனித உருவமும், தழையாடை உடுத்திய மனித உருவமும் மீமியல் தன்மை கொண்டதாகவும், வில் அம்பு மற்றும் குறியீடு கொண்ட ஓவியங்களும் காணப்படுகிறது. தெங்குமரஹடா பகுதியில், இரண்டு கைகளிலும் ஆயுதம் ஏந்திய மனிதனும், யானையின் மீது இரு கைகளிலும் ஆயுதங்களைக் கொண்டு எதிரில் குதிரையின் மீது ஏறிநின்று போரிடும் ஒரு மனிதனும் கொண்ட ஓவியமும், குறியீடுகள் கொண்ட ஓவியமும், வணங்காப்பள்ளம் பாறை ஒதுங்கிடத்தில் வெண்சாந்து ஓவியம் ஒன்றும் காணப்படுகிறது. இதில் பல உருவங்கள் நெருக்கமாக வரையப்பட்டுள்ளன. அதில் மனித உருவம், யானை, குதிரை, குறியீடுகள், புள்ளிகள் ஆகியவை கொண்ட ஓவியங்கள் காணப்படுகிறது. இந்த ஓவியம் பல்லுயீர்கள் நிறைந்த ஓவியமாக இருக்கிறது, ஆனால் இதன் மீது மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளது, இதனை இந்த நிலையில் ஆவணப்படுத்தியதில் மகிழ்ச்சி, எதிர் காலத்தில் முற்றச் சிதைந்தோ! அழிந்தோ! போவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனை அரசும் தொல்லியல் துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இடுஹட்டி பகுதியில், எறும்பு போன்ற குறியீட்டைக் கொண்ட ஓவியமும், நான்கு விரல்களை மட்டும் கொண்ட ஓவியமும், புரிந்து கொள்ளமுடியாத ஓவியமும் காணப்படுகிறது.

யாக்கை குழுவினர் ஓவியத்தை ஆவணப்படுத்தியதுடன் அதனை ஆராய்ந்து விளக்கி எழுதியுள்ளனர். நீலமலையில் காணப்படும் ஓவியங்களில் வெண்சாந்தில் வரையப்பட்ட ஓவியங்கள் 73%. செஞ்சாந்தில் வரையப்பட்ட ஓவியங்கள் 22%, கீறலிட்ட ஓவியங்கள் 5% காணப்படுவதையும் குறிப்பிட்டுள்ளனர். ஓவியங்களின் உயரம், அகலம் அதன் பரப்பளவு ஆகியவற்றையும் கணக்கிட்டுள்ளனர். ஆவணப்படுத்துவதுடன் அதனை ஒப்பிட்டு ஆய்வும் செய்துள்ளனர் யாக்கை குழுவினர்.

நான்காவது இயல் திறனாய்வுப் பார்வை தொடர்புறவுகள். நீலமலைத் தொல்லியல் என்கிற இந்த நூல், பாறை ஓவியங்கள், கலைப்பொருட்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதுடன் அதனை ஆய்வு செய்து முடிவுகளைத் தொகுத்துப் பல தலைப்புகளில் தந்துள்ளது. நீலமலைப் பாறைக் கலைப்படைப்புகள் முழுதளாவிய திறனாய்வுப் பார்வை, நீலமலை ஓவியங்களில் காணலாகும் மனித, விலங்கு உருவங்கள், குறியீடுகள், நீலமலைப் பாறை ஓவியங்களின் கருப்பொருள், காட்சிப் படிமங்கள், பழங்குடி மக்கள் வழக்கில் ஆயுதங்கள், பழங்குடி மக்கள் வழக்கில் இசைக்கருவிகள் என்கிற தலைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் தொகுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட அட்டவணை, வரைபடம் ஆகியவைகளைப் பார்க்கும் போது முடிவுகளின் துல்லியம் வெளிப்படுகிறது. இந்த இயலின் இறுதிப் பிரிவான, பாறை ஓய்விடங்களும் அருகாமைப் பழங்குடிகளும் -தொடர்புறவுகள் என்பதில் பழங்குடிகளுக்கு இடையே உள்ள உறவுகள் விவரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது இயல் நீலமலை பெருங்கற்படைச் சின்னங்கள். பழங்குடிகளின் வாழ்வியலில் பொது நீரோட்டத்து மக்களின் மரபுத் தொடக்கத்தினைப் பார்க்க முடியும். அவர்களின் வாழ்வியலில் மட்டுமல்ல, அவர்களின் வழிபாட்டுத்தலங்களில் புதிய கற்காலக் கருவிகள் வழிபாட்டுக்கு வைத்திருக்கின்றனர், மேலும் பெருங்கற்படைச் சின்னங்களையும் இவர்களின் வாழ்விடத்தில் காண முடிகிறது. அதனால் பழங்குடிகள் பற்றிய ஆய்வு என்பது அவர்களைப் பற்றியதாக மட்டுமில்லாது அனைத்து மக்களின் மரபுகளை இணைத்துக் கொண்டுள்ளது. இந்த ஐந்தாவது இயல் பெருங்கற்படைச் சின்னங்களைப் பற்றிதான் பேசுகிறது. இதனைப் படிக்கும் போது பழங்குடிகளைப் பற்றிய ஆய்வென்பது தொல்லியல் தடங்களைச் சேர்த்த ஆய்வாகவும் காணப்படுகிறது,

பழைய கற்காலம், புதிய கற்காலம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலம் வருகிறது. பெருங்கற்காலத்தைப் பெருங்கற்படை என்றும் அழைப்பர். பெருங்கற்காலம் என்பது இரும்பைப் பயன்படுத்துவதன் மூலம் பல புதிய கருவிகளைப் பயன்படுத்தி நாகரிகத்தில் நுழைகிறது, அதாவது வரலாற்று காலத்துக்குள் நுழைகிறது. அதனால் இந்தப் பெருங்கற்கால வளர்ச்சியைப் படிநிலையில் அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இந்த இடத்தில் பெருங்கற்காலத்தில் இறந்தோரின் நினைவுச்சின்னத்தை மட்டும் பார்ப்போம். பெருங்கற்காலச் சின்னங்களின் வளர்ச்சி பல படிநிலைகளைக்கொண்டது. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு கிமு 1000 முதல் கிபி 200 வரையில் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீலமலையில் காணப்படும் ஓவியங்களையும் பெருங்கற்படை சின்னங்களையும் காலக் கணிப்பு செய்ய வேண்டும், ஆவணப்படுத்தலில் காலக்கணிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

கல்வட்டம், நெடுங்கல், கல்திட்டை, குடைக்கல், பதுக்கை என்பதாகப் பெருங்கற்காலம் ஒரு தொடர் வளர்ச்சி நிலையினைப் பெற்றுள்ளது. கல்வட்டம் என்பது இறந்தவரை புதைத்து அந்த இடத்தை நினைவில் கொள்ளும் வகையில் சிறுசிறு கற்களை வட்டமாக அமைத்தல் ஆகும். இடம் பெயர்ந்து வாழும் அன்றைய மக்கள், இந்தக் கல்வட்டத்தை மீண்டும் மீண்டும் காணவருவர். அவ்வாறு காண வரும் போது, அந்த இடங்களில் செடிகள் மரங்கள் வளர்ந்து காணப்படும், அப்போது அந்த இடத்தை இனம்காண முடியாது போகும் அதனால் புதைத்த இடத்தில் ஒரு பெரும் கல்லைக் குத்தாக நட்டுவைப்பர் இதுவே நெடுங்கல் என்கிற நிலையாக மாற்றம் பெற்றது. பல காலம் சென்ற பிறகு இறந்தவர்களைப் புதைத்து அந்த இடத்தில் நான்கு பக்கங்களில் செங்குத்தான கற்களை நடுவர். இந்த நான்கு கற்கள் ஓழுங்குப்படுத்தப்படாத ஆனால் தட்டையான வடிவத்தில் இருக்கும், நான்கு செங்குத்துக் கல்லை நட்டுவிட்டு அதன் மேல் ஒரு தட்டையான கல்லால் மூடிவிடுவர். மேலே மூடிடும் கற்தட்டு குடையைப் போன்று காணப்படுவதால் இதற்குக் குடைக்கல் என்று பெயரிட்டுள்ளனர். அடுத்து வருவது பதுக்கை. நிலத்திற்கு அடியில் நான்கு பக்கமும் கல் பலகைகளை வைத்துப் பெட்டி போல அமைத்து, அதன் மேல் ஒரு மூடுகல்லை வைப்பது பதுக்கை எனப்படும். அதில் துளைகள் காணப்படும் அதனை இடுதுளை என்று பெயரிட்டு அழைப்பர். இறந்தவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களை அவ்வப்போது உள்ளே வைப்பதற்கு இந்தத் துளையினைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

ஒர் ஈமக் குழியில் காணப்படும் பொருட்களைப் பட்டியலிடுகிறது இந்நூல். பானை மூடியின் மேல் திமிலுடன் கூடிய மாட்டின் உருவம், ஆடு, கொம்புகளுடைய பன்றியின் உருவம், இருதலைப் பறவையின் உருவம், ஆட்டின் தலை உருவம், உடைக்கப்பட்ட நிலையில் ஒரு விலங்கின் கால் பாகம்.

நீலமலையில் உள்ள ஆனைகட்டி, கடநாடு, வாழைத் தோட்டம், பொக்காபுரம், பனகுடிசோலை, கிளிப்பி ஆகிய இடங்களில் காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்களைப் பற்றி இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த இயலில் பெருங்கற்காலக் கலைப்பொருட்களைப் பற்றியும் படத்துடன் விளக்கமும் காணப்படுகிறது. பானை மூடியின் மேல் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஓர் ஆட்டின் உருவம், சிறுத்தை, யானை, நாய், காளை, எருமை, பன்றி ஆகிய விலங்கின் உருவம் ஆகிய கலைப் பொருட்கள் கிடைத்துள்ளன.

ஆறாவது இயல் பழங்குடி தொடர்புறவுகள் சடங்குகள், இந்தப் பகுதியில்தான் எழுத்துக்களில் அதிகத் தகவல்கள் கிடைக்கின்றன.

நீலமலையில் உள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்களை இப்போது அங்குள்ள பழங்குடிகள் வழிபாட்டு இடங்களாகக் கொண்டுள்ளனர். பெருங்கல் சின்னங்கள் அமைந்திருக்கும் இடத்தினருகில் வாழும் பழங்குடி மக்களில் சிலர் தம் முன்னோர்கள் இச்சின்னங்களை அமைத்ததாகவும், அவ்விடத்தை, தம் பழங்குடியினத்தின் குலத் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இப்போது கோவில் அமைப்பதாக இருந்தாலும் வட்டவடிவில் கற்களை அடுக்கி அதன் நடுவில் பதுக்கை போன்ற அறைகளையும் அமைக்கின்றனர், இது பெருங்கல் மரபின் படிமலர்ச்சியாகப் பார்க்க முடிகிறது.

நீலமலைப் பழங்குடிகளிடம் காணப்படும் மிகப் பெரியதும் அதிகச் செலவு ஆகக்கூடிய சடங்கு என்றால் அது கல்லெடுப்புச் சடங்காகும். மறைந்த தமது முன்னோர்களின் நினைவாகக் கல்லெடுத்து அதற்குப் பலவிதமான சடங்குகள் செய்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் மறைந்தவர் அமைதி பெறுவதுடன், தங்களுக்கு அவர்களிடமிருந்து நன்மதிப்பைப் பெற முடியும் என்றும் நம்புகின்றனர். புதிய கற்காலத்தில் இருந்தே இத்தகைய வழிபாட்டு முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய வரலாற்று காலத்தில் பொருளாதாரத்தில் மேன்மை கொண்ட மக்கள், மறைந்த தம் முன்னோரின் நினைவாகக் கல்லெடுத்து உருவம் செதுக்கி அதில் எழுத்தில் வரலாற்றைப் பொறித்து வைக்கின்றனர். தொல்காப்பியத்தில் நடுகல் அமைப்பது பற்றிக் கூறியதற்கு ஒப்ப இந்தச் சடங்கு நடைபெறுகிறது.

காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று மரபில் கல்லொடு புணர….

இதில், காட்சி என்பது நட வேண்டிய கல்லைத் தேர்ந்தெடுத்தலையும், கால்கோள் என்பது கல்லை நாட்டத் தொடங்குதலையும், நீர்ப்படை என்பது கல்லை நீராட்டி, பூசைகள் செய்து தயார் செய்தலையும், நடுதல் என்பது கல்லை மண்ணில் நிறுவுதலையும், பெரும்படை வாழ்த்தல் என்பது நட்ட கல்லைத் தெய்வமாகப் போற்றி, சிறப்பு வழிபாடுகள் செய்து வாழ்த்துதலையும் குறிக்கிறது.

நடுகல் மரபின் நீட்சியாகவே, நீலமலைப் பழங்குடி மக்கள் கல்லெடுக்கும் சடங்கைச் செய்கின்றனர் என்பதை அச்சடங்கு நடைமுறையால் அறிய முடிகிறது.

நீலமலைப் பழங்குடிகள், மறைந்தவுடன் அவர்களது உடலை அடக்கம் செய்து விடுகின்றனர், பின்னர்ச் சிலகாலம் கழித்துத் தேவையான பொருளாதார வளத்தைப் பெற்றபின் கல்லெடுக்கும் சடங்கிற்கு ஏற்பாடு செய்கின்றனர். கல்லெடுக்கும் சடங்கு செய்யும் நாள் குறித்து அனைத்துப் உறவினர் உள்ளிட்ட அருகாமையில் இருக்கும் அனைத்து பழங்குடி மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். தேர்ந்தெடுத்த நாளில் இரவு முழுதும் பழங்குடி மக்களுக்கு விருந்து பரிமாறுகின்றனர். அடுத்தநாள் பகல் வேளையில் தெரிவு செய்யப்பட்ட கல்லை நிறுவித் தம்முன்னோரின் ஆவியை அக்கல்லில் நிலைநிறுத்தும் சடங்கைச் செய்கின்றனர். இச்சடங்கில் பழங்குடிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும், வெளிநபர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இந்தக் கல்லெடுப்புச் சடங்கில் கல்லில் சிலை வடிப்பர் அல்லது நீளவுருவம் கொண்ட கல்லைப் பயன்படுத்துகின்றனர். அண்மையில் நடைபெற்ற கல்லெடுப்பு சடங்கு நடத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக இந்நூல் கூறுகிறது.

மற்ற இயல்களைவிட இந்தச் சடங்குகள் பற்றிப் பேசும் இயலில் அதிகமான எழுத்துகள் மூலம் தகவல்கள் கிடைக்கிறது. மற்ற இடங்களில் படங்கள் நிறைந்து காணப்படுகிறது, இந்த இயலில் படங்கள் நிறைந்தும், தகவல்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

“நீலமலைத் தொல்லியல்” என்கிற நூல் ஒரு ஆவணமாக இருப்பதால், இந்நூலை தொல்லியல், வரலாற்றியல், சமூகவியல், மானுடவியல் போன்ற மாணவர்கள் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் வாங்க வேண்டும். நம் நாட்டின் தொல்லியல் தடங்களை காப்பாற்றுவதும் ஆவணப்படுத்துவதும் எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதைப் படித்து, ஓவியங்களைப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். அப்போதுதான் தமிழர்களின் வரலாறு அறிவியல் தன்மையுடையதாக இருக்கும். எவராலும் மறுக்க முடியாத வகையில் அறிவியல் அடிப்படையில் துல்லியத் தன்மைக் கொண்டதாக உருவாக்க வேண்டும்.

நீலமலையில் காணப்படும் பாறை ஓவியங்கள் சிதைந்தோ! அழிந்தோ! போவதற்கு நிறைய வாய்ப்பிருப்பதை இந்நூலைப் படிக்கும் போது அறிய முடிகிறது. மனிதர்களால், விலங்குகளால், பூச்சிகளால், பாசிகளால், சூரிய ஒளியால், காட்டுத் தீயினால், மழை நீரால், நிலச்சரிவுகளால், சூழல் மாசுகளால், பாறையின் உறுதித்தன்மை இழப்புகளால் பாதிப்பு ஏற்படுவதை விரிவாக இந்நூல் விளக்கியிருக்கிறது. இதன் மூலம் இத்தகைய கலைப் படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியம் என்பதை அறிய முடிகிறது. இதனை உணர்ந்த யாக்கை குழுவினர் ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். இந்த நூலில் நீலமலையில் காணப்படும் அனைத்தையும் ஆவணப்படுத்திடவில்லை, இந்தப் பணிக்கே பெரும் செலவைச் சந்தித்திருப்பர் என்பது தெரிகிறது. முழுவதையும் ஆவணப்படுத்துவதற்கு அரசு தனியாகவோ, யாக்கை குழுவுடன் சேர்ந்தோ இந்த ஆவணப்படுத்தும் பணியினைச் செய்து முடிக்க வேண்டும். இது ஒரு அவசிய, அவசரப் பணியாகும். இதனை உணர்ந்து செயல்பட வேண்டிய தேவையினை இந்த நூல் உணர்த்துகிறது. இதற்குக் கடும் உழைப்பும் பெரும் பணமும் தேவைப்படுகிறது, அதனால் அரசு, யாக்கை போன்ற குழுவினரையும் இணைத்து, இத்தகு பணியினைச் செய்து முடிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்கிற கோரிக்கையை, அனைத்துத் தமிழ் நாட்டு மக்களின் சார்பாக வைக்கிறேன்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “நீலமலைத் தொல்லியல் (பாறை ஓவியங்கள், பெருங்கற்படைச் சின்னங்கள், பழங்குடி தொடர்புறவுகள்)”
ஆசிரியர்: சுதாகர் நல்லியப்பன் – குமரவேல் இராமசாமி
வெளியீடு:
யாக்கை / ஆகஸ்ட் 2025
விலை: ₹.1780
அறிமுகம் எழுதியவர்:  
அ.கா.ஈஸ்வரன்

பாரதி புத்தகாலயம் புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *