பென்குவின் நிறுவனத்தின் சேட்டைகள் - சுதான்வா தேஷ்பாந்தே (தமிழில்: ச.வீரமணி) | Sudhanva Deshpande's Penguin’s Shenanigans Article in Tamil | www.bookday.in

பென்குவின் நிறுவனத்தின் சேட்டைகள் – சுதான்வா தேஷ்பாந்தே (தமிழில்: ச.வீரமணி)

பென்குவின் நிறுவனத்தின் சேட்டைகள்

– சுதான்வா தேஷ்பாந்தே (தமிழில்: ச.வீரமணி)

பென்குவின் ரேண்டம் ஹவுஸ் (Penguin Random House) உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் ஒரு பிரிவு, சோனியா காந்தியின் நினைவுக் குறிப்புகள் நூலை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. இதன் முதல் கட்டமாக 1,00,000 பிரதிகள் அச்சிடப்படவுள்ளன. எனினும், ‘பென்குவின் இந்தியா’ இந்நூலை இந்தியாவில் வெளியிட மறுத்துவிட்டது.

இது ஓர் அசாதாரணமான விஷயமாகும். இப்புத்தகத்தைச் சுற்றி எந்தவொரு சர்ச்சையும் எழுந்திருக்காவிட்டாலும் கூட, இது வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும். இதை வெளியிடுவதிலிருந்து பின்வாங்குவதற்கான பென்குவின் நிறுவனத்தின் முடிவில் எந்தவிதமான நியாயமும் இல்லை. இந்தியாவின் முக்கிய அரசியல்வாதியான சோனியா காந்தி, தனது பொது அறிக்கைகளில் கடுமையான அல்லது ஆத்திரமூட்டும் வகையில் பேசுபவர் என்று அறியப்பட்டவர் அல்ல. ‘சட்டரீதியான’ ஆலோசனையைக் காரணம் காட்டி பென்குவின் நிறுவனம் ஒதுங்கிக்கொண்டிருப்பது நேர்மையற்ற செயலாகும். திருமதி சோனியா காந்தியின் நினைவுக் குறிப்புகளைத் தணிக்கை செய்ய வெளியீட்டாளர் முயன்றதும், அதற்கு ஆசிரியர் பணிய மறுத்ததும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

பென்குவின் நிறுவனம் இவ்வாறு செயல்படுவது இது முதல் முறையல்ல. சமீபத்தில், அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோ சாக்கோவின் (Joe Sacco) ‘தி ஒன்ஸ் அண்ட் ஃப்யூச்சர் ரயட்’ (The Once and Future Riot) என்ற சித்திரக் கதையுள்ள புத்தகத்தை வெளியிடும் முடிவிலிருந்து அந்த நிறுவனம் பின்வாங்கியது. 2013இல் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரில் தூண்டிவிடப்பட்ட மதவெறிக் கலவரங்களை மையமாகக் கொண்ட நூல் இதுவாகும். 2014ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னதாக மதவெறி அடிப்படையில் மக்கள் மத்தியில் பிளவை ஆழமாக்குவதற்கு இந்தக் கலவரங்கள் பயன்படுத்தப்பட்டன. அத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கும் இவை ஒரு காரணமாக அமைந்தன. மேலும், முன்னாள் ராணுவத் தளபதி ஒருவரின் புத்தகத்தை வெளியிடுவதாக இருந்த பென்குவின் நிறுவனம், அதிலிருந்தும் பின்வாங்கிய மற்றொரு சம்பவமும் உள்ளது.

அதிர்ஷ்டவசமாக, இவற்றில் இரண்டு நிகழ்வுகளில் அந்தப் புத்தகங்கள் மாற்றுப் பதிப்பகங்களைக் கண்டடைந்துள்ளன. திருமதி காந்தியின் நினைவுக் குறிப்புகள் மற்றொரு முக்கிய பதிப்பகமான ‘ஹார்பர் காலின்ஸ்’ (Harper Collins) மூலமாகவும், ஜோ சாக்கோவின் புத்தகம் ‘லெஃப்ட்வேர்ட் புக்ஸ்’ (LeftWord Books) மூலமாகவும் வெளியிடப்படுகின்றன.

இங்கு ஒரு கவலைக்குரிய போக்கு தென்படுகிறது. அதாவது, ஆர்எஸ்எஸ்/பாஜக, தற்போதைய அரசாங்கம் மற்றும் பிரதமர் ஆகியோரை ஏதேனும் ஒரு வகையில் விமர்சிக்கும் புத்தகங்களை ‘பென்குவின்’ நிறுவனம் வெளியிடுவதில்லை. இந்தப் போக்கு, 2014 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. அந்த ஆண்டின் முற்பகுதியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் களப்பணியாளரான தீனனாத் பத்ரா (Dinanath Batra)  என்பவர் தொடர்ந்த சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டபோது, வரலாற்றாசிரியர் வெண்டி டோனிகர் (Wendy Doniger) எழுதிய புத்தகத்தை பென்குவின் நிறுவனம் திரும்பப் பெற்று, அதை அழித்துவிட்டது. (பத்ரா இறந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பென்குவின் நிறுவனம் தனது தற்போதைய நடவடிக்கைகளுக்கு அவர் மீது பழிபோடவும் முடியாது.) பின்னர், பேராசிரியர் டோனிகரின் அந்தப் புத்தகம், அதன் உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் இன்றி ‘ஸ்பீக்கிங் டைகர்’ (Speaking Tiger) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

சோனியா காந்தியின் புத்தகம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, பென்குவின் (Penguin) நிறுவனத்துடனான தங்கள் அனுபவங்களை மற்ற எழுத்தாளர்களும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரான திரேந்திர கே. ஜா (Dhirendra K Jha), பென்குவின் நிறுவனத்துடன் இரண்டு புத்தகங்களுக்கான ஒப்பந்தத்தைச் செய்திருந்தார். அவரது முதல் புத்தகமான ‘காந்தியின் கொலையாளி’ (Gandhi’s Assassin) 2022இல் வெளியானது. ஆனால், மறைந்த ஆர்எஸ்எஸ் (RSS) தலைவர் எம். எஸ். கோல்வால்கரின் வாழ்க்கை வரலாறாக அமையவிருந்த அவரது இரண்டாவது புத்தகம், வெளியீட்டாளருடன் சிக்கலைச் சந்தித்தது. கோல்வால்கர் நாஜி ஆட்சியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர் என்பது குறித்த குறிப்புகள், 1939இல் கோல்வால்கர் எழுதிய ‘நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம்’ (We or Our Nationhood Defined) என்ற புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் கருத்துகள் மற்றும் 1942இல் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் முகாம் குறித்த விவரங்கள் (இதற்கான ஆவணச் சான்றுகள் எழுத்தாளரிடம் இருந்தன) ஆகிய அனைத்தையும் நீக்க வேண்டும் என்று பென்குவின் நிறுவனம் வலியுறுத்தியது. இந்த மாற்றங்களைச் செய்ய எழுத்தாளர் மறுத்துவிட்ட நிலையில், அப்ப புத்தகம் சைமன் & ஷஸ்டர் இந்தியா (Simon & Schuster India) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இந்து வலதுசாரிகளை விமர்சிக்கும் புத்தகங்களை முடக்குவதிலும் தணிக்கை செய்வதிலும் பென்குவின் நிறுவனமே மிகப்பெரிய குற்றவாளியாக இருந்தாலும், மற்ற நிறுவனங்களும் அவ்வப்போது தயக்கம் காட்டின. உதாரணமாக, பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவந்த 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 16 அன்று, குஜராத்தில் நடந்த மதவெறி மற்றும் பாலியல் வன்முறை குறித்த ஒரு புத்தகத்தை ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் ‘ஒதுக்கி வைத்தது’. அந்த ஆண்டின் தொடக்கத்தில் வெண்டி டோனிகர் புத்தக விவகாரத்தைப் போலவே, இந்த வழக்கிலும் குற்றவாளி ஆர்எஸ்எஸ் அமைப்பின்  களப்பணியாளரான தீனனாத் பத்ராவே ஆவார். அவர் பதிப்பகத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக மிரட்டினார்.

இவற்றில் பலவற்றில், பதிப்பாளர் ‘உண்மை சரிபார்ப்பு’ மற்றும் ‘ஆசிரியர் குழுவின் உரிய கவனம்’ என்ற போர்வையில் ஒளிந்துகொண்டுள்ளார். இந்த வாதங்கள் நிலைமையைக் குழப்புவதற்கான முயற்சிகளே. தன்னைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எந்தவொரு பதிப்பாளரும், ஆசிரியர் குழுவின் உரிய கவனம் மற்றும் புனைவல்லாத நூல்களைப் பொறுத்தவரை, உண்மை சரிபார்ப்பு போன்ற உள்ளகத் தரநிலைகளைக் கடைப்பிடிக்கும். இருப்பினும், கோல்வால்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் சோனியா காந்தி நினைவுக் குறிப்புகள் போன்ற எடுத்துக்காட்டுகள் காட்டுவது போல, பென்குவின் நிறுவனம் உரிய கவனத்திற்கும் அப்பட்டமான தணிக்கைக்கும் இடையிலான எல்லையை மீண்டும் மீண்டும் கடந்துள்ளது. கோல்வால்கர் நாஜிக்களையும் யூதர்களை அழித்தொழிக்கும் அவர்களின் பிரச்சாரத்தையும் பாராட்டி எழுதியுள்ளார் என்பது பல எழுத்தாளர்களால் முன்பே மேற்கோள் காட்டப்பட்ட ஒரு நன்கு அறியப்பட்ட உண்மையாக இருக்கும்போது, கோல்வால்கரைப் பற்றிய ஒரு புத்தகத்திலிருந்து நாஜி ஆட்சி குறித்த குறிப்புகளை நீக்குமாறு ஆசிரியரிடம் கேட்பதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. பென்குவின் நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் ஒன்று அசாதாரணமான கோழையாக இருக்க வேண்டும், அல்லது ஒரு வலதுசாரி மதவெறியராக இருக்க வேண்டும், அல்லது இரண்டுமாக இருக்க வேண்டும்.

பென்குவின் போன்ற பதிப்பகங்கள் மிகப் பெரியவை என்பதால், அவை இழப்பதற்கு நிறைய இருக்கிறது என்றும், தங்கள் ஊழியர்களின் நலனையும் வேலைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அவற்றுக்கு உண்டு என்றும் சிலர் வாதிடுகின்றனர். இது ஓர் அபத்தமான வாதம். லெஃப்ட்வேர்ட் போன்ற சிறிய பதிப்பகங்களுக்குத்தான் இழப்பதற்கு அதிகம் இருக்கிறது. பெரிய பதிப்பகங்களிடம் பணபலமும் சட்ட உதவிக்கான வழிகளும் இருப்பது மட்டுமல்லாமல், சந்தையிலும் சமூகத்திலும் அவற்றுக்கு அந்தஸ்தும் மதிப்பும் உண்டு. அவர்கள் தாக்கப்பட்டால், எண்ணற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள், குடிமக்கள், கருத்து உருவாக்குபவர்கள் அவர்களின் பாதுகாப்பிற்காகக் களமிறங்குவார்கள். சிறிய பதிப்பகங்களிடம் இருப்பது மிகக் குறைவு. அரசாங்கம் ஒரு சிறிய பதிப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தால், அந்தப் பதிப்பகம் மூடப்படும் நிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.

சிறிய பதிப்பகங்கள் இழப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும், அவர்களே அதிக மன உறுதியைக் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். ‘பென்குவின்’  போன்ற ஒரு பெரிய நிறுவனம் விமர்சனக் குரல்களை ஒடுக்க முற்படும்போது, அது பல மோசமான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது தணிக்கை முறையை ஓர் இயல்பான விஷயமாகக் காட்டுகிறது. புத்தகங்கள் ‘ஆபத்தானவை’ என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. அச்சச் சூழலை அதிகரிக்கிறது. மேலும், மற்றவர்கள் துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்வதைத் தடுக்கிறது.

பதிப்புத் தொழில் என்பது மற்ற பெரும்பாலான வணிகங்களிலிருந்து மாறுபட்டது. இது வெறும் பொருட்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டுவது மட்டுமல்ல. ஒரு பதிப்பாளர் உருவாக்கும் ‘பொருட்கள்’ புத்தகங்களே. புத்தகங்களோ கருத்துகளைக் கடத்துபவை. கருத்துகள் என்பவை வெறும் ‘வணிகப் பொருட்கள்’ அல்ல. அவை சமூகத்திலான அனைத்து விதமான ஊடாடல்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன. ஓர் ஆரோக்கியமான சமூகம் செழித்து வளர, பல்வேறு வகையான கருத்துகள் அங்குப் பரிமாறப்பட வேண்டும். இதில் தற்போதைய நிலையை (status quo) கேள்விக்குள்ளாக்கும் கருத்துகளும் அடங்கும். சவாலான அல்லது மாற்றுக்கருத்துகள் சுதந்திரமாகப் பரவாமல் எந்தவொரு சமூகமும் முன்னேற முடியாது.

கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதைத் தடுக்கும் தனது சமீபத்திய நடவடிக்கைகளின் மூலம், பென்குவின் நிறுவனம் பதிப்புத் துறைச் சூழலமைப்பிற்கும், ஜனநாயகக் கோட்பாட்டிற்கேயும் கூடப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ செப்.7 – 13, 2026

***********************************************

📚 எழுதியவர் : 

சுதான்வா தேஷ்பாந்தே
தமிழில்: ச.வீரமணி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *