“இலங்கையில் கால் நூற்றாண்டு வரை நீண்டிருந்த உள்நாட்டுப் போரும் கூட்டுக் கொலைகளும் மலையாளிகளை சிறிதும் பாதிக்கவே இல்லை. காரணம் நம்மிடையே ஒரு கடல் உண்டு. இலங்கை வேறொரு நாடு .அங்கே என்ன நடந்தாலும் நமக்கு ஒன்றுமில்லை . இந்த இயலாமை என்னை வேதனைப் படுத்தியது உண்டு. அந்த வேதனைதான் இந்த நாவலை எழுதத் தூண்டுதலாகும்..” என முன்னுரையில் ட்டி .டி. இராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளது முக்கியமான செய்தி.

என் புத்தகக் குவியலில் நீண்ட நாள் காத்துக்கிடந்த நாவல் இது . 2018 ல் வெளிவந்து விட்டது  ; என் கைக்கு வந்தும் கிட்டத்தட்ட 18 மாதங்கள் தீண்டப்படாமலே கிடந்தது . ஷோபா சக்தியின்  ‘ம்’ நாவலை மலையாளத்தில் கொண்டு சேர்த்தவர் ட்டி.டி  , இந்நாவலும் இலங்கைத் தமிழரின் பிரச்சனையைப் பேசுகிறது . ஒரு பக்க உண்மையை மட்டுமே பேசும் ஷோபா சக்தி மற்றும் பிறரின் அண்மை ஈழத் தமிழ் நாவல்களால் ஈழப் புனைவுகள் மீதே கொஞ்சம் அவநம்பிக்கையும் மனதில் படிந்திருந்தது .நாவலின் முன்னுரையிலும் ,இது இலங்கைத் தமிழரின் கதை எனச் தெரிந்ததால்  இந்நாவலை வாசிப்பதில் அளவுகடந்த தாமதம் செய்துவிட்டேன் . அதற்காக மன்னிப்பு கோருகிறேன் .அந்தத் தாமதம் எவ்வளவு பிழை என்பதை இந்நாவலை வாசித்த பின்னரே உணர்ந்தேன் .  நீங்களும் வாசித்தால் உணர்வீர்கள் !

   “ ஹூயூமன் பிஹைண்ட் தி பால் ஆப் டைகர் “[ HUMAN BEHIND THE FALL OF TIGER ] என்ற பெயரில்  படுகொலை செய்யப்பட்ட ரஜினி திரணகாமா குறித்த ஆவணத் திரைப்படம் தயாரிப்புக்கான தேடலூடே நாவல் நகர்கிறது .இப்படத்தை அமெரிக்க திரைப்பட நிறுவனமான  டிரான்ஸ் நேஷனல் பிச்சர்ஸ்  தயாரிக்கிறது என்பதும் – சிங்கள அரசு பண உதவி உள்ளிட்டு எல்லா உதவிகளும் செய்கிறது என்பதும் , நினைவில் நிறுத்த வேண்டிய செய்தி .

திரைக்கதை பீட்டர் ஜீவானந்தம் . இயக்குநர் மற்றும் ஒளியமைப்பாளர் ஸ்காட்லண்டைச் சார்ந்த கிறிஸ்டி ஆல்பர்ட்டோ வும் அவர் காதலி மேரி ஆனும். பீட்டர் ஜீவானந்தத்துக்கு இந்த திரைப்படம் தயாரிப்பினூடே தனக்கு மிகவும் பிடித்த காதலியான எல் டி டி இ யைச் சார்ந்த சுகந்தியைக் எப்படியாவது கண்டு பிடிப்பதே பிரதான கவனமாக உள்ளது . சுகந்தியைப் பற்றிய மர்மமும் , ரஜினி திரணகாமா மரணம் குறித்த மர்மமும் நாவலில் மைய முடிச்சு .

இந்நாவல் ஒரு புலனாய்வு படமாக மட்டுமே நகராமல் –  வரலாறும், புராணப் புனைவும் கலந்து ; கசக்கும் அரசியல் உண்மைகளோடு , அற்புதமான புனைவாகப் பரிணமித்திருக்கிறது . ஆண்டாள் தேவநாயகி என்கிற புனைவு மிக நுட்பமாய் ,அழகியலாய் , உணர்வு பூர்வமாய் செதுக்கப்பட்டுள்ளது என்பதையும் ; அது கண்ணகி படிமத்தோடுகூட சற்று நெருங்கி வருகிறது என்பதையும் காணலாம் . ஒரு மலையாளி தமிழ் இலக்கியத்தில் தோய்ந்து ஓர் அற்புத நாவல் எழுத முடியும் என மனோஜ் குரூர் எழுதிய  “நிலம் பூத்து மலர்ந்த நாள்” நிரூபித்தது . இந்நாவலில் ட்டி டி வேறொரு தளத்தில் நிரூபித்துள்ளார் . இந்நாவலை நன்கு மொழியாக்கம் செய்துள்ள குறிஞ்சிவேலனுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள் .

போரின் , அடக்குமுறையின் இரக்கமற்ற கொடுங்கரங்கள் எப்போதும் பெண்ணினத்தைத்தான் கோரமாகக் குதறி இருக்கிறது . எல்லா காலத்திலும் இதுவே உண்மை .தேவநாயகி என்கிற புனைவின் பல்வேறு கிளைக்கதைகள் மூலம் நூல் நெடுக பெண்ணின் அழுகுரலையும் கோபக்கனலையும் ஒருங்கே ஓடவிட்டுள்ளதே இந்நாவலின் வெற்றி .அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டாக இதுவே தொடர்கதை என்பதே உள்ளடக்கமாய் இறுதிவரை விரவி நிற்கிறது .

சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி | Buy ...

தேவநாயகி கதையை காந்தளூரில் இன்றைய திருவனந்தபுரத்தில் தொடங்கி குமரி மாவட்டம்  சுசீந்திரம் , தாமிரபரணி , காயல்பட்டிணம் , தஞ்சாவூர் ,திருவாரூர் ,இலங்கை அனுராதாபுரம் என வரலாறும் புனைவுமாய் இழுத்துச் செல்கிறார் கதாசிரியர்.

காந்தளூரின் தளபதியின் மகள் தேவநாயகி காந்தள மன்னன் மகேந்திரவர்மனின் எட்டாவது மனைவியாவது முதல் கதை . கிழவனுக்கு இளங்கிளி . மன்னனுக்கு குழந்தைப் பேறு இல்லை . ராஜராஜ சோழன் படை எடுக்கிறான். மகேர்ந்திரன் தோற்கிறான் .

அவனின் பிற பட்டத்து ராணிகளெல்லாம் தீக்குளித்து இறந்துவிட தேவநாயகியை சில காவலர் கடத்திக் கொண்டு போகின்றனர் . காட்டில் நகைகளை பிடுங்கிக் கொண்டுபாலியல் வன்கொடுமை செய்ய முனையும் போது தேவநாயகி கூச்சலிட ஒரு முனிவர் காப்பாற்ற வருகிறார் . அவர் பெயர் தாணுமாலையன் .அவர் தன் தவத்தை கெடுக்க வந்தவராக நினைத்து சாபம் கொடுக்க நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகின்றன .துறவி காமத்தை அடக்க முடியாமல் தன் ஆசிரமம் தூக்கிப் போய் தேவநாயகியைத் துய்க்கிறார் . பரமசிவனும் இதை ஆசீர்வதித்து சுசீந்திரத்துக்கு போக இருவருக்கும் வழிகாட்டுகின்றார் . சுசீந்திரத்தில் ஆசிரமம் அமைத்து எல்லோருக்கும் பல்வேறு கலைகளைக் கற்றுக் கொடுக்கிறார் .இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன .அவர்களே நாஞ்சில் நாட்டை ஆண்ட குரவர்கள் .பின்னர் வந்த ஆரியர் இவர்களின் கதைக்கு எப்படி பிராமண முலாம் பூசினான் என்பதும் சொல்லப்படுகிறது . சுசீந்திரத்தில் பிறந்த நான் ஆரிய ஸ்தல புராணம் மட்டுமே அறிந்திருந்தேன் ; இன்னொரு வழக்காற்றை இப்போதுதான் முதன் முதலில் அறிந்தேன்.

இன்னொரு கதை சோழ அரசன் படை வென்றதும் மகேந்திர வர்மன் முன் தேவநாயகி  வன்புணர்வுக்கு ஆளான கதை .அதில் தேவநாயகி யட்சணியாக /பேயாக மாறிய கதை .இவரே நீலி என்ற உபதகவலும் உண்டு.

இன்னொரு கதை முக்கிய கதை தேவநாயகி ராஜராஜ சோழனின் எட்டாவது மனைவியாவது ; அரசனின் வலதுகரமாய் மாறி அரசியலில் உதவுவது ; இலங்கையில் போரிட்டு வெல்வது ,  தேவநாயகியின் பெண் குழந்தையை தோற்ற இலங்கை அரசன் கடத்திக் கொல்வது – தற்செயலாய் ராஜேந்திரச் சோழனுக்கும் தன் உடலை தேவநாயகி தர நேர்வது [ அதாவது தந்தையைப் போல் மகனுக்கும் ] – தன் மகள் கொலைக்கு பழிவாங்க இலங்கை செல்வது – அங்கு புத்த சாமியாரிடம் தீட்சை பெறுவது –ஸுஸானா ஸூபினா எனும் புத்த ஜாதக் கதை போல் பழிவாங்கலும் அன்பும் கலந்த யட்சணியாய் மாறுவது.

ரஜினி திரணகாமா தமிழச்சியாய் பிறந்து சிங்களரை காதல் மணம் புரிந்து யுத்தமும் ஒடுக்குமுறையும் அற்ற சமூகத்துக்காய் கனவு கண்ட டாகடர். “எல்லா போர்களும் பெண்களுக்கு எதிரான போர்கள்தாம். போர்களில் அதிகமான இன்னல்களை பெண்கள்தான் அனுபவிக்கிறார்கள். மானசீகமாகவும் ,உடல்ரீதியாகவும் ,பலாத்காரமாகவும் பெண்களே கொடூரமாக வதைக்கப்படுகிறார்கள்.” என்பார் ரஜினி. அவரை புலிகள் கொன்றதாகவே நம்பப்படுகிறது. ஆனால் அதன் பின் ராணுவத்தின் கரமும் இருக்கலாம் எனும் திசையில் நகரும் தேடல். ரஜினியின் கணவர் திரணகாமா அங்குள்ள டிராஸ்கிய சாய்வுள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகிறார். இந்து, புத்தம், கிறுத்துவம் என எல்லா மதத்தோடும் கதை சொல்லப்படுகிறது. மதம் எதுவாயினும் அது ஆளும் வர்க்க ஒடுக்குமுறைக்கே உதவிடும்.

புலிகளும் ,ராணுவமும் ,அமைதிப் படையும் ஒன்றைப்போல் ஒன்றாக மக்களின் வாழ்வை மிதித்து துவைப்பவர்களாகவே இருந்தனர் என்கிறது இந்நாவல்.

“பீட்டர் ! இலங்கையிலுள்ள ஆக்டிவிஸ்ட்டுகளான ஏறக்குறைய எல்லா பெண்களுமே ஒரு முறையாவது கற்பழிக்கப் பட்டிருப்பார்கள்” என்று ஆக்ரோஷம் இல்லாமல்  அவள் சொன்ன போது எனக்கு அழுகை வந்தது . இலங்கையிலுள்ள பெண்கள் எப்படி மனித குண்டுகளாகிறார்கள் எனும் கேள்விக்கான பதில் அந்த வார்த்தைகளில் இருந்தது .”

இயக்கம் பலரைக் சித்தரவதை செய்து கொன்றழித்ததும் உண்மை .அதற்கென தனி சித்திரவதைக்கூடம் அவர்களிடமிருந்ததும் உண்மை .இராணுவமும் இதையேதான் செய்தது . இராணுவமும் தனி சித்திரவதைக்கூடம் வைத்திருந்தது . வேதனை என்னவெனில் இராணுவம் பலரைக் கொன்று சாமர்த்தியமாய் எல்டிடிடுஇ இயக்கக் கணக்கில் சேர்த்துக் கதைகட்டி விட்டதும் நடந்தது .நாவல் அதனை சொல்கிறது.

சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி ...

எப்படி எல்டிடிஇ இயக்கம் ஜனநாயக இல்லாமல் பாசிசப் பதையில் கேள்வி கேட்பவர்களை எல்லாம் கொன்றது என்பதும் , அரசியலாய் விமர்சனம் சுயவிமர்சனமற்ற தலைமையே ஈழப்போரின் முழுத் தோல்விக்கு காரணம் என்றொரு வாதம் ; ஸ்டாலினை ஹிட்லர் தோற்கடித்ததுதான் ஈழப்போர் என ஓர் வாதம் அதாவது இருவரையும் சமமாக்கி வாதம் ; இரு தருப்பும் பாசிசமே என்பது பொதுவாய் நூலின் சாரம்.

இயக்கத்தில் கருத்து மாறுபட்ட சுகந்தியை எல்டிடிஇ கொன்றதாகவே பொதுவாய் நம்பப்பட்டது ; ஆனால் ராணுவம் அவரைக் கொன்று பழியை எல்டிடிஇ மேல் போட முயன்றதும் ; ஆனால் தாக்குதலில் இரண்டு கையையும் இழந்து – முகத்தின் அழகை ஆசிட் தாக்குதலில் இழந்து உயிர் வாழ்ந்தார் நெஞ்சில் கனலோடு வெளிநாட்டில் வாழ்ந்தார் . தேவநாயகி கதைகள் அவள் மூலமே வெளிப்படுவதும் ; கடைசியில் சிங்கள அதிபர் மீதான தாக்குதல் முயற்சியில் விஸ்வரூபமெடுக்கும் யட்சணியாய் ஒரு மேஜிக்கல் மித்தோடு அவர் வாழ்வு சொல்லப்படுகிறது.

 “ உலகமே கண்ட மிகப்பெரிய இரத்த ஆறு அன்று இங்கு ஓடியும் கூட ; குடியுரிமைகளையும் அபிப்பிராய சுதந்திரத்தையும் சொந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்  சுதந்திரமும் முழுமையாகத் தடை செய்தும்கூட  அதிபரை ஆதரிக்கும் பெரும்பகுதி மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் . ஃபாசிசம் ஒரு தனிமனிதனை  மட்டுமல்ல ; சமூகத்திலுள்ள ஒரு பகுதியினரையும் மொத்தமாகப் பாதித்திருக்கிறது  .அதனால் மிகவும் கவனமாகத்தான் நாம் செயல்பட முடியும் அதில் நம் உயிர்கூடப் போகலாம்…” என நாவலில் விவாதிக்கும் பாசிசத்துக்கு எதிரான அமைப்பு நம்மையும் யோசிக்க வைக்கிறது.

இலங்கைப் பிரச்சனையில் தமிழர் , சிங்களர், இந்துக்கள் ,முஸ்லீம்கள், கிறுத்துவர்கள், ராணுவம் அமைதிப்படை , புலிகள் என்போர் மட்டுமல்ல ஏகாதிபத்திய அமெரிக்கா ,சீனா எல்லாமும்கூட மூக்கை நுழைப்பதை நூல் போகிற போக்கில் பதிய வைக்கிறது .

நூலின் ஓரிடத்தில் , “ …பகைவன் ஒரு தனிமனிதனோ மாநிலமோமட்டும் அல்ல ,சமூகத்திலுள்ள பெரியதொரு மக்கள் பகுதியைப் பாதித்திருக்கும் மனோநிலையாகும் .”

இந்த வரிகள் இலங்கைக்குச் சொல்லப்பட்டாலும் அது இந்தியாவுக்கும் பொருந்துகிறது .ஆம் இங்கு ஃபாசிசம் சமூக உளவியலாய் மெல்ல மாறிவருவது ஆபத்தானது .

ஜெர்மன் பாசிசமோ ,இத்தாலி பாசிசமோ , ஏன் இலன்கை பாசிசமோ  ‘நேக்கட் பாசிசம்’ அம்மணமான பாசிசம்  ;ஆனால் இங்கு பூணூல் அணிந்து , நெய்பூசி , மந்திரம் உச்சாடணம் செய்து கொண்டு  சிரித்துக் கொண்டே திரிசூலத்துடன் வருகிறது . ஆக , நாம் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையை இந்நூல் தருகிறது .

தாமதமானாலும் வாசியுங்கள் .அது உங்களை விசாலப்படுத்தும்.

சுகந்தி என்ற ஆண்டாள் தேவநாயகி ,

[ மலையாள நாவல் ]

மலையாளத்தில் : ட்டி .டி. இராமகிருஷ்ணன்,

தமிழில் : குறிஞ்சிவேலன் .

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

7, இளங்கோ சாலை ,தேனாம்பேட்டை ,

சென்னை – 600 018.

தொலை பேசி : 044- 24332424 /24332924 /24356935

பக்கங்கள் : 344 , விலை : ரூ. 295 /

One thought on “நூல் அறிமுகம்: ஈழப்போரின் குறுக்கும் நெடுக்குமாய் துடிக்கும் பெண்களின் இதயம் – சு.பொ.அகத்தியலிங்கம்.”
  1. தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் அற்புதமான நூல் அறிமுகம். பிழிந்து சாறு கொடுக்கிற நேர்த்தி. சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கெனச் சொல்லும் நுட்பம். அற்புதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *