சர்க்கரைப் பாய்ச்சலும் ஓய்ச்சலும் – இரா.இரமணன்இனிப்பான உணவுப்பொருட்களை உண்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும் எனப் பல்லாண்டுகளாக பொது நம்பிக்கை ஒன்று உள்ளது. பல தலைமுறை பெற்றோர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் உண்மை இதற்கு மாறானது. அது தொடர்பான ஆய்வுகளைப் பார்ப்பதற்கு முன் சர்க்கரை குறித்து சில அடிப்படை உண்மைகளைப் பார்க்கலாம்.

சர்க்கரை என்பது கார்போஹைடிரேட்ஸ் எனும் சத்துவகையை சேர்ந்தது. சர்க்கரையில் சுக்ரோஸ், குளுகோஸ் ,பிரக்டோஸ், மால்டோஸ் எனும் பிரிவுகளும் உள்ளன. எல்லா தாவரங்களும் ஒளிச்சேர்க்கை மூலம் சர்க்கரையைத் தயாரிக்கின்றன. ஆனால் பீட்ரூட் மற்றும் கரும்பில்தான் அதிக பட்ச சர்க்கரை இருப்பதால் அவையே சர்க்கரை தயாரிப்பதற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

பாய்ச்சலும் ஓய்ச்ச்சலும் 

சர்க்கரை நம் உடலில் எரிபொருளாகப் பயன்படுகிறது. நரம்பு மண்டலத்திற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சர்க்கரையை உட்கொள்ளும்போது டோபமைன் எனும் உற்சாகம் ஊட்டும் ஹார்மோன் சுரக்கிறது. அதனால்தான் அந்த உடனடி உற்சாகம் (sugar rush), மன நிறைவு ஆகியவற்றை அடைவதற்காக நமது உடல் ஏங்குகிறது. இது சர்க்கரை ருசிக்கு நம்மை அடிமையாக்கி தேவைக்கு மேல் அதை உட்கொள்ளும் பழக்கத்திற்கு இட்டு செல்கிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவு  அதிகமாகி நாம் அதிக சக்தியுடன் இருப்பது போல் உணர வைக்கும். ஆனால் குளுகோஸ் அளவு குறைந்த உடன் நாம் சோர்வாகவும் படபடப்பாகவும் உணர்வோம்(sugar crash). இது தீவிரமான அளவுக்குச் சென்றால் மன அழுத்தம் ஏற்படும்.  அதிக அளவு சர்க்கரையால் ஏற்படும் மூட்டு வலி, தோல் பாதிப்பு, விரைவான முதுமை, இதய நோய், சிறுநீரக பாதிப்பு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்  போன்றவை  எல்லோருக்கும் தெரிந்ததே.காலம் காலமான நம்பிக்கை 

இனிப்பு வகைகளைச் சாப்பிட்டதும் ஆற்றல் கிடைப்பதற்கு மாறாக ,சோர்வும் கவனக் குறைவும் ஏற்படுகிறதாம். 1300பேரை உள்ளடக்கிய 31ஆய்வுகளின் தரவுகளைத் தொகுத்து journal Neuroscience and Biobehavioral Reviews  என்ற இதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. எந்த அளவு இனிப்பு உண்டாலும் சரி  அதற்குப் பிறகு அதிக ஆற்றல் தேவைப்படும் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் சரி, ஒருவர்  உணர்வதிலும் செயல்படுவதிலும் இனிப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுவதில்லை என்று கண்டிருக்கிறார்கள். இனிப்பு உண்டால்  சிறப்பாக விளையாட முடிகிறது என்பதும் தவறான பொதுக்கருத்தே.

இனிப்பை எடுத்துக்கொண்ட 60 நிமிடங்களில் நமது விழிப்புணர்வு (alertness) குறைகிறது. 30 நிமிடங்களில் சோர்வு உணர்வு அதிகரிக்கிறது. ஆகவே ஒரு ஓட்டப்பந்தயத்திற்கு முன்னால் சக்தி பானத்தைக் குடிப்பதாலோ மதியம் ஏற்படும் தொய்விற்காக ஒரு சாக்லேட் சாப்பிடுவதாலோ எந்த பயனும் இல்லை.

இந்த நம்பிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. 1898இல் பிரஷிய அரசாங்கம் சிறு சிறு அளவில் கொடுக்கப்படும்  சர்க்கரை கடின உழைப்புக்கு உதவுகிறது என்ற நம்பிக்கையில் வீரர்களின் உணவில் மிட்டாய்களையும் கேக்குகளையும் சேர்த்தது. இதே காலத்தில் அமெரிக்க ராணுவமும் இதைப் பின்பற்றி வீரர்களுக்குத் தொடர்ச்சியாக இனிப்புகளைக் கொடுத்தது.

சிறுவர்களின் அதீத செயல்பாடுகள் 

இந்த புனைவு ஏன் இத்தனை காலமும் தொடர்கிறது? குழந்தைகளுக்கு இனிப்பு கொடுக்கப்படும் சூழல் அவர்கள் கிளர்ச்சியுறுவதற்கு காரணமாக இருக்கலாம். ஒரு குழந்தை அது கேட்ட ஆரஞ்சு வண்ண பஞ்சு மிட்டாய் கிடைத்தவுடன் உற்சாகமடைந்து அதை வெளிப்படுத்தலாம். அதன் கிளர்ச்சிக்கு ஒரு பரிசு கிடைத்தது என்கிற உணர்வுதான் காரணம். அந்த இனிப்பே முழுக் காரணமல்ல என்கிறார் Harvard’s Beth Israel Deaconess Hospital சேர்ந்த மருத்துவர் ஜோடி துஷே.

1994இல் ஐந்து முதல் ஏழு வயது வரை உள்ள 35 சிறுவர்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் சர்க்கரை மீது கூருணர்வு கொண்டவர்கள் என்று அவர்களின் தாயார்கள் கூறினர். ஒரு பகுதி தாயாரிடம் அவர்களது பிள்ளைகளுக்கு அதிக அளவு சர்க்கரையும் இன்னொரு பகுதியினரிடம் அவர்களது பிள்ளைகளுக்குச் சர்க்கரை கலவாத பொருளும்(placebo) கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. உண்மையில் அனைவருக்குமே சர்க்கரை இல்லாத பொருளே கொடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு தாயார்கள் தங்கள் பிள்ளைகளுடன் உரையாடுவது படம் பிடிக்கப்பட்டது. சர்க்கரை கொடுக்கப்பட்டவர்கள் என்று நம்பிய தாயார்கள் தங்கள் பிள்ளைகள் அதீதமாகச் செயல்படுவதாகக் கூறினார். இந்த தாயார்கள் அந்த நேரத்தில் பிள்ளைகளுடன் நெருக்கமாக இருப்பதும் அவர்களை விமர்சனம் செய்வதும் கண்காணிப்பதும் அவர்களுடன் பேசுவதும் இதில் தெரிய வந்தது.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இனிப்புகளும் கேக்குகளும் பண்டிகை காலங்களில் கொடுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் சிறுவர்கள் ஏற்கனவே கிளர்ச்சிக்குள்ளாகியிருப்பர். தங்கள் பெற்றோர்களை திருப்திப்படுத்த வழக்கத்தைவிட அதிகமாக ஒருவரையொருவர் இடிப்பதும் கோமாளித்தனங்கள் காட்டுவதும் செய்வர்.(do children really get sugar rush – food – the guardian- Amy Fleming)வேறுபடும் இயல்புகள் –

எப்பொழுது சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தும் இனிப்பு ஒருவரைப் பாதிக்கலாம். சிலர் இரவு வேளைகளில் இனிப்புகளை எடுத்துக் கொள்கிறார்கள். அது அவர்களுக்கு ஜீரணம் ஆகி எந்த பிரச்சனையும் தருவதில்லை. அதுவே வேறு சிலருக்குச் சங்கடங்களை உண்டாக்கும் அல்லது உடல் பருமனை ஏற்படுத்தும். இப்படி ஒருவரது இயல்பு எப்படி இருப்பினும் ஒரு சாக்காட்டைச் சாப்பிடுவதன் மூலம் உடனடி ஆற்றலைப் பெறமுடியாது என்பதே உண்மை. என்னுடைய குழந்தைப் பருவத்தில் எல்லா தாய்மார்களும் ‘இரவில் படுப்பதற்கு முன் இனிப்பைச் சாப்பிடக்கூடாது; அது உன்னை அதீத செயல்பாட்டிற்கு இட்டுச் செல்லும்’ என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பதை இப்போது நாம் அறிவோம்’ என்கிறார் மருத்துவ உளவியலாளர் மைக்கேல் பிரெஸ்.

முடிவாக 

மன்டான்ஸீஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்களும் இந்த ஆய்வு  சர்க்கரையின் ஆற்றல் தரும் மந்திர சக்தியைக் கேள்விக்குள்ளாக்கும் என்று நம்புகின்றனர். மேலும் சர்க்கரையின் உடனடி ஆற்றல் எனும் புனைவைக் குறித்து மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும்; சர்க்கரை  உட்கொள்வதைக் குறைக்கும் விதமாகச் சுகாதார கொள்கைகள் வகுப்பது; ஆரோக்கியமான மாற்றுகளை முன்னெடுப்பது போன்றவற்றிற்கு உதவும் எனவும் கருதுகின்றனர்.

கட்டுரைக்கு உதவிய உசாத்துணைகள் (references)

Sugar rush or sugar crash? A meta-analysis of carbohydrate effects on mood – ScienceDirect

The Basics – The Sugar Association

do children really get sugar rush – food – the guardian- Amy Fleming