சுகுமாரன் எழுதிய “பெருவலி (Peruvalli)” நாவல் புத்தகம் | Sukumaran's Peruvalli Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சுகுமாரன் எழுதிய “பெருவலி (Peruvalli)” நாவல் – நூல் அறிமுகம்

“பெருவலி (Peruvalli)” – நூல் அறிமுகம்

வரலாற்றுப் பக்கங்களில் முகலாய மன்னர்களான ஷாஜகானைப் பற்றியும், அவரது மகன் ஒளரங்கசிப்பைப் பற்றியும் அறிந்த அளவுக்கு நாம் ஷாஜகானின் மகளும், ஒளரங்சிப்பின் சகோதரியுமான ஜஹானராவைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னுடைய பதினான்கு வயதிலேயே தன் தந்தை ஷாஜகானுக்கு அரசியல் தளத்தில் ஆலோசகராகத் திகழ்ந்த ஜஹானரா பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்கியவர். மட்டுமல்லாமல், பாரசிக நூல்களையும், இந்து சமய நூல்களையும், குரானையும் நன்றாக அறிந்து வைத்திருந்தார். இப்படி ஆற்றல் வாய்ந்த பெண்ணாய்த் திகழ்ந்த இவர் எல்லாவற்றையும் கைவரப் பெற்றிருந்தாலும், சுதந்திரம் இல்லாததால் கூண்டுக் கிளியாய் அடைபட்டுக் கிடந்தார்.

இவர் தன் கைப்பட எழுதிய நாள்குறிப்பானது இவர் இறந்தபின் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. கவிஞரும், எழுத்தாளருமான சுகுமாரன் ஜஹானராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய பாணியில் படைத்திருக்கும் ஒர் அழகான புதினம்தான் பெருவலி என்ற இந்நாவல்.

நாவலின் முதற்பகுதியானது ஜஹானராவின் மெய்க்காப்பாளராக இருந்த பானிபட்டின் பார்வையிலிருந்தும், இரண்டாம் பகுதியானது ஜஹானராவின் பார்வையிலிருந்தும் விரிகிறது. பானிபட் ஒரு திருநங்கை. அவர் எப்படி ஜஹானராவிற்கும் அவரது குடும்பத்திற்கும் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார் என்றும் நாவலின் முற்பகுதி பல்வேறு இரகசிய முடிச்சுகளை அவிழ்க்கின்ற வேளையில், இரண்டாம் பகுதியானது ஒரு சிலரின் அதிகாரப் பசிக்கு எளியவர்கள் எப்படிப் பலியாகின்றார்கள் என்பதைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றது.

முகலாய மன்னர்கள் நடுவில் ஓர் எழுதப்படாத சட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தின்படி, அரசியல் அதிகாரத்தில் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இடம் கிடையாது. ஜஹானரா எல்லாத் திறமைகளையும் கைவரப் பெற்றிருந்தாலும், அதிகாரத்தில் பங்கு பெற முடியவில்லையே என்ற பெருவலியானது அவரை வதைத்துக் கொண்டே இருக்கின்றது. அதைவிடவும் இன்னொரு பெருவலியும் ஜஹானராவிற்கு இருக்கின்றது. அதனை நூலாசிரியர் சுகுமாரன் பூடகமாகப் பதிவு செய்கின்றார்.

பெருவலி சுகுமாரன் Peruvali Sukumaran

ஷாஜகானின் கடைசிக் காலகட்டம் மிகவும் வேதனை நிறைந்தது. தன்னுடைய மகன் ஒளரங்கசிப்பினால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டது மிகக்கொடுமையானது. அதனையும் இந்த நாவலானது பதிவு செய்திருக்கின்றது.

பொதுவாக வரலாற்று நாவல்களை எழுதுகின்றபோது எல்லாருக்கும் தெரிந்த செய்தியை எப்படி எழுத்தில் கொணர்வது என்ற சவால் எழுத்தாளருக்கு நிச்சயம் இருக்கும். பெருவலி என்ற இந்நாவலில் நூலாசிரியர் சுகுமாரன் தன்னுடைய கவித்துவமான எழுத்துக்களாலும், கற்பனை சக்தியாலும், வாசிக்கின்ற நம்மை உள்ளே இழுத்துக்கொண்டு சென்று, வாசிப்பு என்ற பேரனுபவத்தைத் தருகின்றார். நாவலை வாசித்து முடிக்கையில் இன்னும் இந்நாவல் நீண்டிருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்நாவல் எப்போதோ நடந்ததை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும், இன்றைக்கு நடக்கின்ற அரசியல் கூத்துக்களை, அதிகார வேட்கையில் சொந்த மக்களையே பலிகொடுக்கும் தலைவர்களை நமக்கு நினைவு படுத்துகின்றது. அதே வேளையில், மக்களுக்கு எதிராக இருக்கும் எந்தவோர் அரசும் நிலைத்து நிற்பதில்லை என்பதையும் இந்நாவல் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.

இத்தாலியைச் சேர்ந்த தத்துவவியலாளர் ஆண்டோனியோ கிராம்சி சொல்வார்: “அரசின் எண்ணங்கள், நோக்கங்கள் மக்களின் மனத்தில் திரும்பத் திரும்ப பதிய வைக்கப்படுகின்றன. மக்களின் மனத்தை மயக்க முடியாதபோது அரசு வன்முறையைப் பயன்படுத்துகின்றது.”

இன்றைக்கு இருக்கின்ற அரசுகள் மக்களின் தேவைகளையும், அவர்களின் விரும்பங்களையும் கருத்தில் கொள்ளாமல், தங்களது விரும்பங்களை மக்கள் மீது திணிப்பதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது. இத்தகைய அதிகாரப் போக்கைப் பார்க்கையில் மன்னராட்சிக்கும், இப்போது பல இடங்களில் நடக்கும் ஆட்சிக்கும் எந்தவொரு வித்தியாசமில்லை என்பதையே காட்டுகின்றது. மக்களாட்சியில் மக்கள் முன்னிலைப்படுத்தப் படவேண்டும். அப்படியில்லையென்றால் மக்களாட்சித் தத்துவம் கேலிக்கூத்தாக்கப்பட்டு விடும்.

இப்படி, *பெருவலி* என்ற நாவலானது சமகால அரசியலையும், அதையொட்டி நடக்கும் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கச் செய்வதாக இருக்கின்றது.

மேலும், “பெருவலி” நாவல், அதிகார வர்க்கத்தின் பிடியையும், அதனால் ஏற்படும் வலியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குறிப்பாக, ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து இந்த நாவல் சொல்லப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு அதிகாரம், செல்வம், புகழ் இருந்தாலும், அவளால் சுதந்திரமாக வாழ முடியவில்லை, இது சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், பெண்களின் நிலையையும் குறிக்கிறது. நாவலில் வரும் வலி என்பது, ஒரு புறத்தில் அதிகாரத்தின் வலிமையாகவும், மறுபுறத்தில் நோயின் வலியாகவும் இருவேறு பொருள்களில் வெளிப்படுகிறது.

வரலாறு தொடர்பான புதினங்களை வாசிக்க விரும்புபவர்களுக்கு நிச்சயம் இந்நாவல் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

நூலின் விவரங்கள்:

நூல்: பெருவலி (Peruvalli)
நூலாசிரியர்: சுகுமாரன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 191
விலை: ரூ.240

எழுதியவர் : 

✍️ – I.A.தினேஷ்
திருநெல்வேலி.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *