நூல்: சுளுந்தீ
நூலாசிரியர்: இரா.முத்துநாகு
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
பதிப்பு: எட்டாம் பதிப்பு, செப் 2023.
விலை: மாணவர் பதிப்பு ரூ 250/-
தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதைநூல்.
பெரியப்பா முத்துநாகு அவர்களுடைய ‘சுளுந்தீ’ எனும் நூல், எங்கள் வீட்டில் உருவானதைக் கண்கூடாகப் பார்த்தவள் நான். மாதக் கணக்கில் இரவு நேரங்களில் அப்பாவும் பெரியப்பாவும் நூலைக் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தவகையில், இது உருவான காலத்தில் இருந்தே எனக்கு மிகப் பரிச்சயமான நூல். அப்பொழுதிலிருந்தே ‘இதை நீ அவசியம் படிக்க வேண்டிய நூல்’ என்பார் என் அப்பா. ஆனால், அதை அவர் அன்றைய காலத்திலேயே படிக்கச் சொல்லிப் பரிந்துரைக்கவில்லை. ஏனெனில், 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதற்கான பக்குவம் எனக்கு இல்லை என்பதை உணர்ந்தார் போலும்.
நான் சித்த மருத்துவப் படிப்பில் சேர்ந்த பிறகுதான், சித்த மருத்துவம் சார்ந்த பல்வேறு நூல்களுடன் சுளுந்தீ நூலையும் படித்துவிட வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தார். தாத்தா சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ கதை நூலை வாசித்து முடித்த பிறகு, கதை நூல் வரிசையில் என் அப்பா பரிந்துரைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. என் படிப்பு சார்ந்து, அதாவது சித்த மருத்துவம் சார்ந்த நூல் என்பதற்காக இதைத் தேர்வு செய்து படிக்க ஆரம்பித்தேன்.
இதை நான் படிக்க ஆரம்பித்தபோது, இது எனக்குச் சற்று கடினமான, இறுக்கமான கதைக் கட்டமைப்பாக இருப்பதுபோல் தோன்றியது. சூல் நாவலிலும், ஜெயமோகன் எழுதிய புறப்பாட்டிலும் ஆரம்பத்தில் இதே போல் உணர்வு எனக்குத் தோன்றியது. ஆனால், சுளுந்தீயில் கதை முழுக்க அந்த உணர்வு தொடர்ந்தது.
இதுவரை நான் படித்ததில் சுளுந்தீ ஒரு வேறுபட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. சுளுந்தீயை ஒரு வரலாற்று நூலாகவோ அல்லது கதை நூலாகவோ கொள்ளும்பொழுது, அதைக் காட்சிப்படுத்திப் பார்ப்பது கொஞ்சம் சவாலானதாக இருந்தது. ஒருவேளை, அந்தக் காலகட்டத்தை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதது கூட காரணமாயிருக்கலாம். எனக்குப் புரிந்தமட்டில் சூல் நாவலின் காலகட்டமும் சுளுந்தீயின் கால கட்டமும் கிட்டத்தட்ட ஒன்றாகவோ அல்லது சுளுந்தீ சற்று முந்தையதாகவோ இருத்தல் வேண்டும். ஆங்கிலேயர் வணிகத்திற்காகவும் கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காகவும் வரத்தொடங்கிய காலமாக இருத்தல் வேண்டும். ஏனென்றால், கதையில் இரண்டு பாதிரியார்கள் மிக நெருங்கியவர்களாக வந்திருப்பார்கள். ஆனால், இந்தக் கதைக்களம் எனக்குப் பரிட்சயமானதே.
கன்னிவாடி எல்லையில் மாடனின் மல்யுத்தப் போட்டியை அறிவிக்கும் காட்சியில் இருந்து தொடங்குகிறது சுளுந்தீ கதை. மாடன் ஒரு நாவிதன் என்றும், அவனுடன் போட்டியிட்டு வென்றால், அவன் நாவிதனாக இருப்பான் என்றும், ஒருவேளை, அவர்கள் தோற்றால், மாடன் நாவிதம் செய்யமாட்டான் என்றும், தோற்றவன் நாவிதம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இக்கதையில் வரும் மாடன் யார்? அவன் ஏன் மல்யுத்தம் செய்யப் போகிறான்? எனும் கேள்விக்கான பதில்கள், நூலில் கிட்டத்தட்ட பாதிக்கும்மேல் வாசிக்கும்போதுதான் கிடைக்கின்றன.
மாடனின் மல்யுத்தப் போட்டி அறிவிப்பிலிருந்து தொடங்கும் இக்கதை, பாதியளவு முன்னிகழ்வுக் கதையாகச் சொல்லப்பட்டு, பின்பு நிகழ்பவை கூறப்படுகிறது. இந்த நாவலில் மூவரைச் சுற்றித்தான் கதை நகரும். முதலில் பன்றிமலைச் சித்தர், அவரின் சீடனான நாவிதன் இராமன், அவன் மகன் மாடன். அரண்மனை நாவிதனான இராமன்தான் மாடனின் தந்தை. இராமன் நாவிதனாக இருந்ததோடு பன்றிமலைச் சித்தருக்குப் பணிவிடைகளும் செய்துவந்தான். இதனால் ஒரு பண்டுவனாகவும் வலம் வந்தான் இராமன். இராமனின் அடக்கமும் விசுவாசமும் அவனுக்கு அரண்மனையில் ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
சித்தருக்குப் பணிவிடை செய்து வந்த இராமன், ஒரு கட்டத்தில் சித்தரின் சீடனாக மாறினான். பிறகு சித்தரின் வாரிசாகவே மாறினான். இதற்கிடையில் இராணிக்கு வந்த இராஜபிளவம் போன்ற நோய்களைக் குணப்படுத்தினான். பன்றிமலைச் சித்தர் வெறும் தேனை மட்டுமே உட்கொண்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்.
இராமனின் மனைவி வல்லத்தாரை. மருத்துவச்சியாக இருந்து பலருக்குப் பிரசவம் பார்த்தாள். என்றாலும், அவளுக்கு பத்து வருடங்களாகக் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது. இதற்காக இராமன் அவளை சித்தரிடம் அழைத்துப் போக, குழந்தையில்லை என்ற கவலையை நீ உனக்குள் அடக்கியதே இதற்குக் காரணம் என்பார் சித்தர்.
பிறகு குழந்தைப்பேறுக்கான ஒரு வழியைச் சொல்லுவார். அப்படிப் பிறந்தவன்தான் செங்குளத்து மாடன். அவனைப் படைவீரன் ஆக்கவேண்டும் என்பது இராமனின் ஆசை. ஆனால், அது நடக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும், மகனுக்கு நாவிதத் தொழிலோடு சேர்த்து, போர்க் கலையும் சொல்லிக் கொடுத்துத் தேர்ச்சி பெற வைப்பான்.
இதற்கிடையில், ஒருமுறை சித்தருக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட குதிரை ஒன்றை இராமனுக்குக் கொடுத்திருப்பார். அன்று முதல் இராமனும் அக்குதிரையை வளர்த்து வந்தான். ஊருக்கு வெளியே சென்ற பின்பு குதிரையில் ஏறிச் செல்வான். இராமனை அடியோடு வெறுத்த தளபதிக்கு இது எரிச்சலூட்டியது.
இராமனின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு, மாடன் எப்பொழுதும் எங்கும் குதிரையில் வலம் வரத் தொடங்கினான். இது பலருக்கு எரிச்சலூட்டியது. குறிப்பாகத் தளபதிக்கு. இதனால் மாடனுக்குப் பல இன்னல்கள் வரத் தொடங்கியது. இவை அனைத்தின் விளைவே மாடனுடன் நடந்த மல்யுத்தப் போட்டியாகும்.
பன்றி மலை என இந்நாவலில் குறிப்பிடப்படும் கொடைக்கானலில் ஒரு சித்தர் மகா பண்டுவராக வாழ்ந்துள்ளார் என்பது மெய்சிலிர்க்க வைத்தது. பெரும்பாலான வரலாற்று நாவல்களோ, வரலாற்றுப் புனைவுகளோ அரசனை மையப்படுத்தித்தான் இருக்கும். ஆனால், மன்னனையும் மக்களையும் ஒருசேரக் காட்சிப்படுத்தியுள்ளது சுளுந்தீ. ஒரு அரசனின் பார்வையிலிருந்தும், சாமானியரின் பார்வையிலிருந்தும் கதை மாற்றி மாற்றி நகரப்படுவதை வாசிக்கும்போது உணர முடியும்.
அண்மையில் நான் படித்த ‘படைவீடு’ என்னும் நாவல், கடைசித் தமிழர் அரசாட்சியை எப்படிப் பறைசாற்றுவதாக இருந்ததோ, அதேபோல சுளுந்தீ நாவலானது, கடைசிச் சித்தர், கடைசிக் காலகட்ட சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் பற்றிய முக்கியக் குறிப்புகளைத் தருவதாகத் தோன்றுகிறது. தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் ஒரு வரலாற்றுக் கதை நூலாகவே எனக்குத் தோன்றியது.
இந்த நூலில் எனக்குக் கிடைத்த மருத்துவக் குறிப்புகள், மருந்து செய்முறைகள் போன்றவை மிக முக்கியமானவை. அவற்றை முதலில் படித்தபோது குழம்பினேன். புடம் போடுவது, வரட்டிகள் கணக்கு, அதில் பயன்படுத்தப்படும் முப்பு என்பவை எனக்குப் புதிதானவை என்பதால், அதை என்னால் காட்சிப்படுத்தி மனதில் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால், எனது கல்லூரியில் இருந்து இம்காப்ஸ் என்னும் சித்த மருந்துகள் செய்யும் கூடாரத்திற்கு அழைத்துச் சென்றபோதுதான் புடம் போடுதலைக் கண்ணால் காண முடிந்தது. அங்கு வரட்டி செய்து அதில் புடம் போடப்பட்டது. அதற்குப் பயன்படுத்தப்படும் பானைகள், களையங்கள் என்பனவற்றைப் பார்த்தபோது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. மற்ற மாணவர்களைவிட என்னால் சிலவற்றை இனம்காண முடிந்தது. அதற்குக் காரணம், சுளுந்தீயில் அதைப் பற்றி முன்பே அறிந்திருந்ததுவே காரணம்.
ஒரு மருத்துவ நூலில் சொல்லப்படும் மருத்துவக் குறிப்புகளை, நாவலின் ஊடாக மருந்துக் குறிப்புகள் தருவது சவாலானது. அதற்கு ஒரு மருத்துவராகவும், நூல் ஆசிரியராகவும் தேர்ந்து இருத்தல் அவசியம். சுளுந்தீ நாவலில் இடைஇடையே தரப்பட்டுள்ள நோய் அறிகுறிகள், மருந்துகள் செய்யும் முறைகள், மருந்துகள் உட்கொள்ள வேண்டிய முறைகள் என எல்லாவற்றையும் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். புதிதாகப் பல நோய்கள் குறித்தும், அதற்கான மருந்துகள் குறித்தும், மருந்து செய்முறைகளும் முறையாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் பலவற்றை மருத்துவம் படிக்கும் மாணவியாக நான் தெரிந்து கொண்டேன். இந்த நூலில் அவற்றைப் படிக்கும் போதெல்லாம் அதனை ஒரு முறையேனும் செய்து பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருக்கும். இவற்றைப் பற்றி பெரியப்பாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆசையும் வந்தது.
ஒவ்வொரு முறையும் சித்தரிடமோ அல்லது அரண்மனை நாவிதனான இராமனிடமோ மக்கள் வைத்தியம் கேட்டு வரும்போது, அவர்களுக்கு மருந்து தயாரிப்பதையும், அதை உட்கொள்ளும் முறையையும், முறைப்படி நாவலில் பதிவுசெய்திருப்பதில், ஒரு எழுத்தாளராகவும் மருத்துவராகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்றே கருதுகிறேன்.
நாவிதர்களின் வாழ்வையும், அவர்களின் தொழிலையும், தொழில் நுணுக்கங்களையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். சமூகத்தில் நாவிதர்களின் ஈடு இணையற்ற மருத்துவப் பங்களிப்பை அழகாகச் சொல்லியிருக்கிறார்.
சூல் நாவலில் எப்படிப் பல அனுபவ அறிவுத் துளிகள் கொட்டிக்கிடந்ததோ, அதேபோல இங்கும் பல மருத்துவக் குறிப்புகள், நாவிதத் தொழில் நுணுக்கங்கள் கதை முழுக்கப் பரவிக் கிடக்கின்றன. இந்நூலை ஒரு மருத்துவ நூல் வரிசையில் சேர்ப்பதா? இல்லை ஒரு இடைக்கால வரலாற்றுப் புனைவாகக் கொள்வதா? இல்லை, கன்னிவாடியில் நடந்த ஒரு கதை நாவலாகக் கொள்வதா? என்ற ஐயம் எனக்கு இன்றும் உண்டு.
நாவலில் கதைக்களமும் காலமும் அடிக்கடி மாறியதாக தோன்றியது. கதையில் வரும் சில வரலாற்றுத் தரவுகளை விவரிக்க வரும் உட்கதைகள் அப்படித் தோன்ற வைத்திருக்கலாம்.
நாவலில் குறிப்பாக, சித்தர் இராமனைச் சீடனாக / மகனாக ஏற்றுக்கொள்வதும், இராமன் தன்னை அறியாமல் ஒரு சித்தனாக மாறத் தொடங்குவதும், சித்தர் விடைபெறும் காட்சியும் மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கும்.
கதையை முதலில் படிக்க ஆரம்பித்தபோது பன்றிமலைச் சித்தர்தான் நாவலின் முதன்மை மையக் கதாப்பாத்திரம் என நினைத்தேன். பிறகு இராமன் என்றும், பின்பு மாடன் என்றும் எண்ணினேன். ஒரு வகையில் பார்த்தால், மூவரும் மையக் கதாப்பாத்திரங்கள்தான். ஆனால் மூவருமே மாண்டு விடுவார்கள் என்பது யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று. மாடனைச் சுற்றி நடந்த சூழ்ச்சிகளும் சம்பவங்களும் மாடனுக்கான ஒரு தனி இடத்தைப் பிடித்து விட்டது.
இக்கதையில், எனக்கு முற்றும் புதிதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அங்கமாகவும் இருந்தது குலவிலக்கம் செய்யும் வழக்கமும் அவர்களின் வாழ்வியலும்தான். இந்த ஒரு வழக்கம் வழக்கில் இருந்திருப்பது எனக்கு ஒரு புதிய தகவல். அதுவும், குலவிலக்கு செய்ய அவர்கள் கூறும் காரணங்கள் எனக்கு மிக அசாதாரணமாகப்பட்டது. குலவிலக்கு செய்ய ஒரு சடங்கு; குலத்தில் சேர்வதற்கு ஒரு சடங்கு என்பவை விசித்திரமாக இருந்தது.
குல விலக்கானவர்களின் வாழ்வு மிக மோசமான பரிதாப நிலையில் இருந்தது மிக வருத்தமளித்தது. தீண்டத்தகாதவர்களாக, மற்றவர்கள் முகத்தில் முழிக்கக்கூட அனுமதியில்லாமல் இருந்த அவர்களின் நிலை மிகப் பரிதாபமாக இருந்தது.
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மருந்துகளை வைத்து வெடி மருந்து செய்யலாம் என்பது புதிய தகவல். அந்த வெடி மருந்தை வைத்து மருதமுத்து ஆசாரி கிணறு வெட்டி பாறை முறித்தார் என்பது மிக்க ஆச்சரியமாய் இருந்தது. உயிரைக் காக்கும் மருந்தால் எவ்வளவு உயிரையும் எடுக்க முடியும் என்பதற்கு வெடிமருந்துகளே சாட்சியாகும்.
நான் சுளுந்தீயைப் படிக்க ஆரம்பித்த காலம் மிகச் சரியானதாக அமைந்திருக்கிறது. இதை நான் முன்னரே படிக்க ஆரம்பித்திருந்தால்கூட நான் பல இடங்களில் குழம்பி நின்றிருப்பேன். சித்தர்கள் பற்றியும் சித்த மருத்துவம் பற்றியும் கூறப்பட்டிருக்கும் பல தகவல்கள், நான் படித்துக்கொண்டிருக்கும் சித்த மருத்துவப் படிப்பில் விளக்கப்பட்டுள்ளது. இதில் பல கூறுகள் சுளுந்தீயில் கதையாக எனக்குப் புரிந்திருக்கிறது. இவை இரண்டும் மிகப் பயனுள்ளதாகத் தக்க சமயத்தில் எனக்குக் கிடைத்தது சித்தர்களின அருளால்தான் என எண்ணுகிறேன்.
இராவுத்தர் படை வீரர்கள், வெடிப்படை வீரர்கள், இரு பிறவிகள் போன்றவர்களின் தகவல்கள் எனக்குப் புதிதாக இருந்தன. நூலின் கடைசிப் பகுதியில் வருகிற அனந்தவல்லியின் கதாப்பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. மாடன் இறந்த பிறகு, அவள் அவனை மணமுடிக்கவில்லை என்றாலும், காதலித்ததால் மணமாகாமலே கணவனாகவே ஏற்றுக்கொண்டாள் போலும். மாடனின் எரியும் பிணத்திற்கு முன்பு, தனது பூ பொட்டை இழந்து விதவையாக அவள் நிற்கும் காட்சி மிகவும் வருத்தியது.
அதேபோல, மாடனின் தாயான வல்லத்தாரையின் பரிதாப நிலை எந்தத் தாய்க்கும் வரக்கூடாது என்று எண்ணும் அளவுக்கு இருந்தது. தனது கணவன் இராமன் மருந்து செய்யும்போது விபத்தில் இறந்து போகிறான். அந்த விபத்தில் தனது கண் பார்வையை இழக்கிறாள் அவள். மகன் மாடனை ஊரார் யாவரும் பழித்துப் பேசுவதைக் கேட்கிறாள். பிறகு தனக்கு இருந்த ஒரே உறவான மாடனையும் மல்யுத்தப் போட்டியில் இழக்கிறாள். ஊரில் உள்ள அத்தனைக் குழந்தைகள் பிறப்புக்கும் மருத்துவச்சியாக இருந்தவள், தன் பிள்ளையை இழந்து நிற்கும் தருணம் கொடுமையானது.
சுளுந்தீ கதை முழுக்க சூழ்ச்சிகளும் இரகசியங்களும் நிறைந்ததாக இருந்தது. கடைசியாக, மலையெடுத்த கன்னிவாடி இனி தலையெடுக்காது என்ற அனந்தவல்லியின் வார்த்தைகளோடு நாவல் முடிவடைகிறது. சுளுந்தீ நாவலை என் அப்பாவும் பெரியப்பாவும் உருவாக்குவதைப் பார்த்த எனக்கு, இந்த நாவலை நானும் படித்து முடித்து அதைப்பற்றி எழுதியும் விட்டேன் என்பதில் மிக நிறைவாக உள்ளது. இந்நூலை அழகாக வடிவமைத்துப் பதிப்பித்திருக்கும் ஆதி பதிப்பகத்திற்கு மிக்க நன்றி.
கட்டுரையாளர்:
அ.ம. அங்கவை யாழிசை,
இளநிலை சித்த மருத்துவ மாணவி,
தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,
தாம்பரம், சென்னை.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sulundhi-tamil-novel-by-muthunagu/
மிகவும் அருமையாக, சிறப்பான ஒரு நூல் அறிமுக உரை தந்த வருங்கால சித்த மருத்துவர் மகளுக்கு வாழ்த்துகள். “சுளுந்தீ ” – தனது மருத்துவம் சார்ந்த பாதையில் எழுதி இருந்தாலும், பாரம்பரிய பண்டுவ மருத்துவ முறை எப்படி அழிக்க பட்டது, தமிழ் மக்கள் தாங்கள் நிலத்தை விட்டு அகற்ற பட்டது என்பதையும் நூல் ஆசிரியர் விளக்கியுள்ளது குறிப்பிட வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்…மா. தந்தை போல தானும் பல நூல்கள் படைத்து தமிழ் அன்னை பெருமை கொள்ள செய்ய.