எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘நாடார் சார்’ சிறுகதையை முன்வைத்து
நினைவு மலரில் நீங்காத மணம்
– மணி மீனாட்சிசுந்தரம்.
ஒரு மாணவனின் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு கால ஓட்டத்தில் அவன் என்னவாக இருக்கிறான் என்பது அவனது கற்றலின் வெற்றியாக இருப்பதைப் போலவே,
ஒரு ஆசிரியர் தன்னைக் கடந்து சென்ற அம்மாணவன் மனத்தில் என்னவாக இருக்கிறார் என்பது அவரது கற்பித்தலின் வெற்றியாகவும் இருக்கிறது. வருடங்கள் பல கடந்தாலும் மாணவனின் நினைவு மலரில் நீங்காத ஆசிரியரின் மணம் கற்பித்தலில்,மாணவனுடனான இணக்கத்தில் அவரது ஆளுமையை உறுதிசெய்தபடியே இருக்கிறது. அப்படி ஓர் ஆசிரியரே எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ நாடார் சார்’.
அது ஒரு புகழ்பெற்ற பெரிய பள்ளி. திருவிதாங்கூர் ராணிக்குச் சொந்தமான சேது பார்வதிபாய் பள்ளி.
கணக்கில் பின்தங்கியிருக்கும் பத்தாம் வகுப்புக்குக் கணித ஆசிரியராக வந்து சேர்கிறார் ஆசிரியர் ஏகாம்பர நாடார்.சாதி, பெயர்களின் பின்னொட்டாக இருந்த காலம் அது.மாணவர்களுக்கு நாடார் சாரின் வருகையே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.
அந்தக்கால ஆசிரியர்கள் குதிரை வண்டியில் வந்து இறங்குவார்கள். ஆனால் நாடார் சார் சைக்கிளில் வந்து இறங்குகிறார்.
அன்றைய ஆசிரியர் அடையாளங்களான/ ” குடுமி அல்லது கிராப், சந்தனப்பொட்டு அல்லது விபூதிப்பூச்சு, கோட்டும் பஞ்சகச்சமும் அல்லது இரட்டை வேட்டி, தலைப்பாகை, மணிக்கட்டின் அடிப்பக்கம் கைக்கடிகாரம் என எவையும் இல்லாமல் தெரு வழியாகப் போய்க்கொண்டிருந்த யாரோ ஒருவர் நுழைகிற இடத்தின் கௌரவம் தெரியாமல் நுழைந்துவிட்ட “/மனிதராக வந்து சேர்கிறார் அவர்.
/”குச்சி குச்சியான தலைமயிர்,முறுக்கிய மீசை,கதர் வேட்டி, கதர் ஜிப்பா, முரட்டு டயர் செருப்பு, சட்டைப்பையில் பேனாவுக்குப் பதிலாக இருபுறமும் சீவிய பென்சில். /
அவரைப் பார்த்ததுமே மாணவர்களுக்குச் சிரிப்பு அள்ளுகிறது.
/” என்னைக் கண்டாலே சிரிப்பாணி பொங்குதா உங்களுக்கு?” என்று கேட்டபடி அவரும் சிரித்தார்./
மாணவர்களிடம் மிக இயல்பாகப் பேசுகிறார்.அவரது எளிமையில், பேச்சில் வகுப்பே துள்ளுகிறது. இன்று கணக்குப் பாடம் வேண்டாம்.
விளையாட்டு பற்றிப் பேசுவோம் என்கிறார்.கால்பந்து விளையாட்டைப் பற்றி அவர் பேசப்பேச வகுப்பே உற்சாகத்தில் கரைகிறது.
சேது பார்வதி பாய் பள்ளி மாணவர்களுக்குக் கால்பந்து விளையாட்டு என்பது கவலை தரும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முந்தைய நாள் அருகில் உள்ள கார்மல் பள்ளிக்கும் இவர்களுக்கும் கால்பந்துப் போட்டி நடைபெறும்.கார்மல் பள்ளி மாணவர்கள் முறையாகக் கால்பந்துப் பயிற்சி பெற்றவர்கள். ஒவ்வொரு வருடமும் தவறாமல் அவர்களிடம் உதை வாங்கி அவமானப்படுவதே இவர்களுக்கு வழக்கம்.
சென்ற வருடம் நடந்த போட்டியில் இடைவேளைக்கு முன்னால் எட்டுக் கோல்களை கார்மல் ஸ்கூல் அடித்தது.
இடைவேளையில்/கார்மல் ஸ்கூல் மாணவர்கள் டப்டப்பென்று கலர் உடைத்துக் குடித்தார்கள் ; இவர்களோ தகர வாளியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை மொண்டு மொண்டு குடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கார்மல் ஸ்கூல் தலைவன் இவர்களிடம் வந்து,”கடைசிக் கோலை விளையாட்டு முடியதுக்கு மூணுநிமிஷம் முன்னே போடுவோம்.கீரத்தண்டுகளா, ஓடியாடி செத்துப் போயிடாதீங்க’ என்று சொல்லிவிட்டுப்போனான்./
சொன்னபடியே செய்தான். போட்டி முடிவதற்குள் சேது பார்வதி பள்ளி ஆசிரியர்கள் அவமானம் தாங்காமல் ஒடி மறைந்துவிடுகின்றனர்.
அதற்குக் காரணம் ஆறேழு கால்பந்து மைதானம் இருக்கும் பெரிய அப்பள்ளியில் விளையாட்டு சொல்லிக்கொடுக்க ஆசிரியர் இல்லாததுதான். விளையாட்டுப் பொருள்கள் குவிந்துகிடக்கும் அறை எப்போதும் பூட்டியே கிடக்கிறது.ஒரு பந்து எடுத்துக் கொடுங்கள் என்றால் சாவியைக் காணோம் என்கிறார்கள்.இந்த அழகில் மாணவர்கள் எப்படிக் கால்பந்துப் போட்டியில் வெற்றிபெறுவார்கள்.
இந்த நிலையில் நாடார் சார் கால்பந்து விளையாட்டைப் பேசியதும்/ ” கார்மல் ஸ்கூல எங்களால தோக்கடிக்க முடியுமா சார்?” என்று கேட்கிறார்கள் மாணவர்கள்.”ஏன்டேய்? அவங்களுக்குக் கொம்பு இருக்கா?” பயிற்சி வேணும்டேய். நெஞ்சுல வைராக்கியமும் வேணும்.எல்லோரும் மேலிடத்துலே உத்தரவு வாங்குங்க டேய், மொதல்ல” என்று தலைமையாசிரியரின் அறையைக் பார்த்துக் கையை நீட்டினார்./
நாடார் சார் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர்.அவர் ராணியின் பக்கத்தில் பெரிய கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவுடன் மாணவர்களுக்குத் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை.
நாடார் சார் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கால்பந்து விளையாட்டைக் கற்றுக்கொடுக்க தலைமையாசிரியரிடம் அனுமதி வாங்கி விடுகிறார்.
/ சார் சொன்னார். இரண்டு காலும் முட்டுத்தட்டாம ஒளுங்கா இருக்கணும்.
கடுமையா ஒளைக்கணும். இந்த வருஷம் தோத்துப்போனா உசிர் அந்த மைதானத்துலேயே பிரிஞ்சு போட்டு அப்படீங்கற வைராக்கியம் வேணும்.அவுங்க எல்லாம் பேரைத் தரலாம்” என்கிறார்.
அணி தயாராகிறது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிம்பசொப்பனமாய் இருக்கும் சேது பாய் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜம் அய்யர் சாரைப் பார்த்து ,
/” ஏகாம்பரம், இந்த வருஷம் சில்வர் கப்பை நாம தட்டி எடுத்துடணும்.என்ன செய்வீளோ,ஏது செய்வீளோ எனக்குத் தெரியாது.செலவப்பத்தித் துளி விசாரம் வேண்டாம்.உங்க பின்னாலே நான் நிக்கிறேன்; நின்னுண்டே இருக்கிறேன்” என்றார்./
/பயல்களைப் பார்த்து ” சார் சொல்றதெக் கேட்டு ஒழுங்கா விளையாடலைன்னா காலை ஒடிச்சுடுவேன்” என்றார்./
அதுவரை பூட்டியிருந்த விளையாட்டுப் பொருள்கள் இருக்கும் அறைக்கு முன்வந்து நிற்கிறார் ஏகாம்பர சார் ; பூட்டை இழுத்துப் பார்க்கிறார் ; இரண்டடி பின்னால் சென்று ஓடிவந்து கதவை எட்டி மிதிக்கிறார்.பூட்டுத் தெறித்து விழுகிறது. பந்தை அள்ளிக்கொண்டு மாணவர்கள் மைதானத்துக்கு ஓடுகிறார்கள்.
நாடார் சார் அதிகாலை முதலே மாணவர்களுக்குப் பயிற்சியை ஆரம்பிக்கிறார் ; கால்பந்து விளையாட்டின் நுட்பங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.மாணவர்கள் விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் விளையாடி முடித்தவுடன் அன்றைய தவறுகளையும் அவற்றைச் சரிசெய்வது பற்றியும் விளக்குகிறார்.அப்போது அவரிடமிருந்து /ஒரு வசை, ஒரு திட்டு வராது./
/”வெளையாடுறது கால்க மட்டும் இல்லேடேய். ஒடம்பு முழுக்க வெளையாடுது, கண்ணு விளையாடுது, காது வெளையாடுது.இன்னொன்னு, வர இருப்பத முன்னால காணணும்.நொடியில வியூகம் வகுக்கணும் மனசு.
நாம சொல்லுதக் கேக்கக் காத்துக்கிட்டு இருக்குடேய் பந்து. காட்டாத ஒரு பலம் கையிருப்பிலே இருந்துகிட்டே இருக்கணும்.எதிரியை இவ்வளவுதான்னு அளக்க விட்டிரப்படாது.”/
பயிற்சியும் பேச்சுமாக மாணவர்களைத் தயார் செய்கிறார் நாடார் சார். மாணவர்களுக்கும் பந்துக்குமான இணக்கம் கூடி வருகிறது.
மாலைப் பயிற்சியைப் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் வந்து பார்வையிட்டு உற்சாகப் படுத்துகிறார்கள். /” ஈர்க்குச்சிகளையெல்லாம் ராமபாணங்களா மாத்திட்டீளே ஏகாம்பரம்.செப்பிடு வித்தையான்னா இருக்கு” /என்று சமஸ்கிருத வாத்தியார் முன்ஷி, நாடார் சாரைப் புகழ்கிறார்.
போட்டி நாளும் வருகிறது.எப்போதும் வெற்றிபெறும் கார்மல் பள்ளியும் எப்போதும் வெற்றியே பெறாத சேதுபாய் பள்ளியும் மோதுகின்றன. போட்டி ஆரம்பித்த மூன்று நிமிடங்களுக்குள் சேதுபாய் பள்ளி முதல் கோலை அடித்தவிடுகிறது.
/ அந்தச் சூழலே – மரங்கள், கட்டடங்கள்,ஆட்கள் ஆகாயம் எல்லாம் – எகிறிக் குதிப்பது போல் இருந்தது. /கார்மல் பள்ளி மாணவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள் ; ஆவேசம் கொண்டு பந்தைத் துரத்துகிறார்கள். இடைவேளை வந்துவிடுகிறது. நாடார் சாரால் பேசவே முடியவில்லை. /அவர் கண்கள் நிறைந்திருந்தன.”அளகாட்டுஆடினீங்க டேய், கூட ஒன்னு கொடுத்துரணும்”/ என்று மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார்.
இடைவேளை முடிந்து போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் சேது பார்வதி பாய் பள்ளி மாணவர்களிடமிருந்து
மீண்டும் ஒரு கோல்!
/கூட்டம் பயங்கரமாக ஆர்ப்பரித்தது. எங்கள் ஆசிரியர்கள் தங்கள் கௌரவங்களை மறந்து துள்ளிக்கொண்டிருந்தார்கள். சின்னக் குழந்தைகள் மாதிரி நாற்காலிகள் மேல் ஏறி நின்று கத்தத் தொடங்கிவிட்டார்கள்.தலைமையாசிரியர் இரண்டு கைகளையும் தூக்கி வீசிக்கொண்டிருந்தார்.போட்டி முடிந்ததும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் மைதானத்துக்குள் ஓடி வந்தார்கள்.கூச்சமில்லாமல் எங்களை மாறிமாறித் தழுவிக் கொண்டார்கள்./
மகத்தான தருணம். சேதுபார்வதிபாய் பள்ளி மாணவர்களின் கனவு நிஜமான தருணம். அப்பள்ளியின் ஆசிரியர்களால் இதுவரை எட்ட முடியாத இந்த உயரம் ஏகாம்பரநாடார் சாரால் எட்டப்பட்டிருக்கிறது. மாணவர்கள் ”ஏகாம்பர சாருக்கு ஜே’ என்று கத்துகிறார்கள். இதைப் பார்த்த தலைமையாசிரியரோ, “சேது பார்வதி பாய் பள்ளிக்கு ஜே” என்று கத்துகிறார்.
அந்த வாரத்திலேயே திருவனந்தபுரத்திலிருந்து பள்ளியை ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் வருகின்றனர்.அவசரம் அவசரமாகப் பள்ளி சுத்தம் செய்யப்படுகிறது.ஆசிரியர்கள் ஆய்வை எதிர்கொள்ளப் பரபரப்பாகத் தயாராகிறார்கள்.
ஆய்வு நடக்கிறது. யாரும் எதிர்பாராத விதமாகத் தலைமையாசிரியருடன் ஆய்வாளர்கள் ஏகாம்பர சாரின் வகுப்பறைக்குள் நுழைகிறார்கள். பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களை ஆய்வு செய்ததில் கணக்கில் மட்டுமே எல்லா மாணவர்களும் குறைவாகப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் ஏகாம்பர சாரைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
/’அப்படியில்லையே சார்’ என்கிறார் ஏகாம்பர சார்./
இதற்குமுன் இந்த வகுப்பில் நூற்றுக்கு நூறு வாங்குபவர்கள் ஏழு.இப்போது ஆறு. இதற்கு முன் சராசரி 54. இப்போது 51 என்று புள்ளிவிவரத்தைக் காட்டுகிறார்கள்.
“இன்னும் நீங்கள் பொறுப்புடன் சொல்லிக்கொடுக்க வேண்டும்.இரண்டு மாத காலம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம். பழைய இடத்துக்கு மாணவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும்” என்று எச்சரிக்கிறார்கள்.
ஏகாம்பர சார் மிகுந்த அவமானத்துடன் தலைமையாசிரியரைப் பார்க்கிறார். அவர் ஏதும் சொல்லாமல் அவர்களுடன் சென்று விடுகிறார்.
/அன்று பள்ளி முழுக்க ஏகாம்பர சாரைப் பற்றித்தான் எல்லா ஆசிரியர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள்./
அன்று மாலை தலைமையாசிரியர் ஏகாம்பர சாரைக் கூப்பிட்டு /”எல்லாரைப் பற்றியும் நல்ல குறிப்பு எழுதியிருக்கிற இன்ஸ்பெக்டர்கள் உங்களைப் பற்றி மட்டும் சரியா குறிப்பு எழுதலை ” என்கிறார்./
“நீங்க என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க சார்?” என்று ஏகாம்பர சார் கேட்டதற்கு,” அவர்கள் புள்ளி விவரம் தரும்போது ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது ஏகாம்பரம்” என்கிறார் தலைமையாசிரியர்.
மாணவர்களுக்குக் கால்பந்து கற்றுக்கொடுப்பது ஏகாம்பரம் சாரின் வேலையல்ல. கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதுதான் அவருடைய வேலை.அதற்காக அப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டவர்தான் அவர். ஆனாலும், மாணவர்களின் மகிழ்ச்சிக்காகவும், விருப்பத்திற்காகவும், பள்ளியின் நலனுக்காகவும், தன்னார்வத்தாலும் கூடுதல் பணியெனக் கருதாது உளப்பூர்வமாக உழைத்துப் பள்ளிக்கு பெருமையை ஏற்படுத்தித் தந்தவர் ஏகாம்பர சார்.
அந்தக் கூடுதல் பணியில் ஏற்பட்ட சிறுதொய்வால் மாணவர்களின் மதிப்பெண்கள் சிறிது குறைத்திருக்கலாம். தலைமையாசிரியர் இதைச் சுட்டிக்காட்டி ஆய்வாளர்களிடம் பேசியிருக்கலாம்.அவர் அதைச் செய்யவில்லை. அதைக்கூட ஏகாம்பர சார் பெரிதாக எண்ணாமல் தனியே அவரிடம் ‘ நீங்க என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ‘ என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் ஏகாம்பர சாரைக் குற்றம் சுமத்துவதுபோன்றே இருந்துதான் ஒரு அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்க்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.
தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு எனச் சுயநலமாய் இருக்காமல் பள்ளி வேலை, மாணவர் நலன் எனப் பொதுவேலையைத் தன்னலமற்று ஆர்வத்துடன் செய்யும் அத்தனை ஆசிரியர்களுக்கும் ஏகாம்பர சாரின் நிலைதான். அந்த அத்தனை ஆசிரியர்களுக்கும் சாட்சியாகவே இக்கதை ஏகாம்பர சாரைக் காட்டுகிறது.
சேது பார்வதி பாய் பள்ளி விழாக்கோலம் பூண்டிருக்கிறது.அன்று பள்ளியின் வெள்ளி விழாக் கொண்டாட்டம். திருவிதாங்கூர் ராணி தலைமையில் விழா நடந்துகொண்டிருக்கிறது.இந்த விழா மேடையில் வெற்றிக் கோப்பையை வாங்குவதற்காகத்தான் ஏகாம்பர சாரும் மாணவர்களும் கடுமையாக உழைத்தார்கள்.ஆனால், ஏகாம்பர சார் அன்று பள்ளிக்கு வரவில்லை.
/ ராணி திடீரென்று தலைமையாசிரியரைப் பார்த்து ” ஸ்ரீமான் ஏகாம்பர நாடார் எங்கே?” என்று மலையாளத்தில் கேட்டார்./
தலைமையாசிரியர் ஆசிரியர்களைப் பார்த்து “இன்னும் ஒரு நிமிஷத்திலே அவர் வரணும்” என்று ஆசிரியர்களை அவசரப்படுத்துகிறார். வகுப்பாசிரியர், சீக்கிரம் ஏகாம்பர சாரைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்று மாணவர்களை ஏகாம்பர சார் வீட்டுக்கு அனுப்புகிறார். மாணவர்கள் சிட்டாகச் சைக்கிளில் ஏகாம்பர சாரின் வீட்டுக்குப் பறக்கிறார்கள்.
ஏகாம்பர சார் சட்டை கூடப் போடாமல் வீட்டுக்குள் படுத்திருக்கிறார். அவரை இழிவுபடுத்திய பள்ளியின் விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவே அவர் விழாவுக்கு வரவில்லை.
மாணவர்கள் ஏகாம்பர சார் வந்து கோப்பையை வாங்க வேண்டும் என்கிறார்கள். ” எச்.எம்.வாங்கலாம் தப்பில்லே” என்கிறார் சார்.
“நீங்க வராம எப்படி சார்?” என்று மாணவர்கள் வருத்தத்துடன் கேட்கின்றனர்.
” நல்லா படிங்கடேய் அதுதான் முக்கியம் என்கிறார் சார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அத்தனை மாணவர்களும் சார் வீட்டுக்கு வந்துவிடுகின்றனர்.ஒவ்வொருவர் முகத்திலும் ஏமாற்றம் வழிகிறது.
/சாரின் மனைவி அடுக்களையில் நின்றபடி ,” இந்தப் பிள்ளைகளுக்காகத்தானே ராப்பகலா உசிர விட்டீங்க.கூப்பிடறாங்க இல்லே” என்கிறார்.
சார் அமைதியாகப் படுத்தபடி இருந்தார்/
மாணவர்கள் “அப்படீன்னா நாங்களும் போகல” என்கிறார்கள்.சார் மாணவர்களின் முகங்களைப் பார்க்கிறார்.ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ஜிப்பாவை எடுத்து சாரிடம் கொடுக்கிறாள் அவரது மனைவி.
சார் எழுந்திருப்பதுடன் கதை நிறைவுறுகிறது.
ஏகாம்பர சாரின் கோபம் நியாயமானதுதான்.அவரது பணியை உதாசீனப்படுத்திய ஒரு பள்ளியின் கொண்டாட்டம் அப்படி ஒன்றும் முக்கியமானதல்ல. ஆனாலும், அவர் எழுந்து செல்வது மாணவர்களுக்காகத்தான்.
ஏகாம்பர சார் மட்டுமல்ல, அவரைப் போன்ற தன்னலமற்ற ஆசிரியர்கள் தங்களின் பணியை விடாமல் செய்வதற்கும் காரணம் நிர்வாகம் அல்ல. என்றும் எல்லாமுமாக ஆசிரியர்கள் கருதும் மாணவர்களுக்காகத்தான். அப்படிப்பட்ட ஆசிரியர்களே மாணவர் உணர்வில் கலந்து ஒன்றிப் போகின்றனர்.
உதவிய நூல்:
சுந்தர ராமசாமி சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) – சுந்தர ராமசாமி,
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் – 629001
*****************
கட்டுரை ஆசிரியர் குறிப்பு :
மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர். முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
என்றும் மாணவர்களுக்கான ஆசிரியராக வாழ உந்துதல் தரும் அருமையான வரிகள்👌👌👌👏👏👏👏
அருமையான கதை. அர்ப்பணிப்பு கேள்விக்குள்ளாகும்போது சுயமரியாதை தலைதூக்கும். இன்றைய சூழலில் ஏகாம்பரம் சார் போல் இருக்க ஆசைதான். அருமையான பதிவு ஐயா. வாழ்த்துகள்
இதனை வாசிக்கும் போது,
எம் பள்ளி (தேவசகாயம் அன்னதாயம்மாள் மேல்நிலைப்பள்ளி சின்னையாபுரம், விருதுநகர் மாவட்டம்) தலைமை ஆசிரியரை ஞாபகப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. இதில் இவர் ஆசிரியர்; அதில் அவர் தலைமை ஆசிரியர் அது மட்டுமே வித்தியாசம்.
இன்னும் மாணவனாய் …
மா பா அன்புசிவன்
🙌ஆசிரியர்னா, இப்படியான தோற்றத்தில்தான் இருக்க வேண்டும் என்பதை உடைத்தெரிந்த தருணம்.அருமை. நன்றி, சுந்தர ராமசாமி அவர்களுக்கு🙏