Sundara Ramaswamy (சுந்தர ராமசாமி) Short Story Porukki Varkkam Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day, Bharathi Puthakalayam



கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

கதைகள்  முழுமை பெறுவதில் படைப்பாளிகளுக்கு நிகராக பிரசுரமாகக்கூடிய பத்திரிக்கைகளுக்கும் பங்கிருக்கிறது.  இது இன்னமும் தொடர்ந்து வருகிறது என்பதை சுந்தரராமசாமியின் இக்கதை நிரூபணம் செய்கிறது. 

பொறுக்கி வர்க்கம்

சுந்தர ராமசாமி

இதுதான் ஹோட்டல்.  மாஜி மனித ஆத்மாக்கள் வம்பளந்தவாறே சுயப்ரக்ஞையின்றி,  தட்டைக் காலி செய்கிறார்கள்.  வெளியே ஓட்டல் எச்சில் தொட்டி. அதைச் சுற்றி இவர்கள்.  இவை என்ன நமது சக வர்க்கமா?  பிராணி வர்க்கத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ? சே அவை கௌரவமாக வாழ்பவை.

ஓட்டலில் ஏதாவது தின்று தொலைக்கிறோமென்றால் இலையைத் தொட்டியில் போட வேண்டாமா?  இங்கு அதற்குக்கூட சுதந்திரம் கிடையாது.  தொட்டிக்குள்ளேயே ஸ்திரவாசம்தான் இவர்களுக்கு.  உங்களைப் பார்க்கவில்லை.  உங்கள் கையை, கை இலையைப் பார்க்கிறார்கள்.

கண் தெரியாத தோஷத்தாலோ புத்தி சுவாதீனக் குறைவாலோ ஒருவர் ஒரு முழு ரசவடையை இலையில் மடக்கிக் கொண்டு, எச்சில் தொட்டியை நெருங்கி விட்டார்.  ஒருவன் வந்தவர் கையிலிருந்தே அதைத் தட்டிக் கொண்டு போய்விட்டான்.  பொறுக்கியின் கை அவரது எச்சில் கையில் பட்டுவிட்டது.  மானம் மரியாதையோடு வாழ்பவர்களால் இதைத் தாங்க முடியுமா?

கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்த முதலாளியின் மகனிடம் சொன்னார்.  பிறர் துன்பத்தில் இன்பம் காணக்கூடிய தன்மையை நன்றாக உரம் போட்டு வளர்த்திருந்தவன் அவன்.  அடுக்களையிலிருந்து நீளமான வால்கரண்டியொன்றை எடுத்துக் கொண்டு, கால் அரவமின்றி புழக்கடை வழியே  எச்சில் தொட்டியருகில் வந்தான்.  ஒரு பொறுக்கி மட்டும் வயிற்றை தொட்டியின் விளிம்பில் அழுத்தி ஒடிந்து படுத்துக் கொண்டு தொட்டிக்குள் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.  மண்ணில் கால் கட்டை விரல்களை மட்டும் அழுத்தமாக ஊன்றியிருந்தான்.

திரும்பிப் பார்த்தான்.  பின்னால் ஒருவரும் இல்லை.  அப்படியே பொறுக்கியின் இரண்டு கால்களையும் பிடித்து மேலே வாரிவிட்டான்.  தொப்பென்று தொட்டிக்குள் தலை குத்தியிடிக்கும் சப்தம் கேட்டது. “ஐயோ”வென்று அலறினான்.   தொட்டியிலிருந்து வெறியேறவும் முடியவில்லை.  சுவரில் காலைத் தூக்கி வைத்தான்.  ஒரு அசுர அடி முதுகில் விழுந்தது.  

ராக்ஷஸ பலம் அவனுக்குள்ளே புகுந்து கொண்டது.  அப்படியே முதலாளி மகன்மேல் தாவி விழுந்தான்.  அவனுக்கு நிலை தடுமாறிவிட்டது.  வெள்ளைச் சட்டையில் பொறுக்கியின் ஐநது எச்சில் கைவிரல் அடையாளங்களும் பதிந்திருந்தன.

Sundara Ramaswamy (சுந்தர ராமசாமி) Short Story Porukki Varkkam Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day, Bharathi Puthakalayam

வீதியோரத்தில் நின்று கொண்டு பரிதாபகரமாக பிலாக்கணம் தொடுத்துக் கொண்டிருந்தான் பொறுக்கி.  பொறுக்கி என்றாலும் குழந்தைதானே.  அந்தப் பேயறையை அவனால் தாங்க முடியுமா?

எதிரிலிருந்து வண்டிக்கார கிழவன் வந்தான். விசாரித்தான்.  போலீஸ்காரனிடம் புகார் தரும்படி சொன்னான்.  அருகில் தலையில் கூடையைக் கவிழ்த்துக் கொண்டிருந்த மனிதன் குப்பென்று சிரித்தான்.  “வேய் போலீஸ் படையும் இவனுக்காகவா இருக்கு,  பொறுக்கிப் பயல்களைக் கவனிக்கவா அவங்க இருக்காங்க?  பயித்தியம் புடிச்ச மனிசா”.  கிழவனுக்கு கோபம் வந்தது. இருந்தாலும் அவன் சொல்வது சரிதான் என்று பட்டது.

பொறுக்கி மண்ணில் புரண்டு அழுது கொண்டிருந்தான். கூட்டத்தினர் விசாரித்தனர், இரக்கப்பட்டனர், சென்றனர்.

திடகாத்திரமான சரீரம், இடுப்பு சுருங்கி மார்பு  நன்றாக விரிந்து கம்பீரம் கொடுத்திருந்தது.  வயிரம் பாய்ந்த புஜங்கள்.  இடுப்பில் பச்சைக் கட்டம் போட்ட கைலியைச் சுற்றி அதை உள் நிஜாரின் விளிம்பு தெரியும்படி தூக்கிக் கட்டியிருந்தான்.  தலையில் முண்டாசு,  அதில் தீய்ந்து போன கட்டைப் பீடி சொருகியிருந்தான் அந்த ஒன்றரைக் கண்ணன்.

வந்தான். புரிந்து கொண்டான்.  சிறிது நேரத்திற்கெல்லாம் ஓட்டல் முன் ஒரே கூட்டம்.  பொறுக்கிகள், பொறுக்கிகள், பொறுக்கிகள்.   ஓட்டலுக்குள் ஆள் நுழையாதபடி கூட்டம் வாசலை அடைத்து விட்டது. 

ஓட்டல் முதலாளி வந்தார்.  போலீஸ் ஜவான்களை சாடை காட்டினார்.   அவர்கள் திரும்பி வந்து அதட்டினார்கள்.  பொறுக்கி வர்க்கமும் கூட்டமும் ஒன்று சேர்ந்து கொண்டது.  பொறுக்கிக்கு அவர்கள் பயப்பட மாட்டார்கள் என்றாலும், பொறுக்கி வர்க்கத்திடம் சிறிது பயம் இருந்தது.

முதலாளி  வெளியே வந்தான். ஒன்றரைக் கண்ணன்  கேள்வி கேட்டான்.  “திருடவும் இல்லை, துட்டுத் தராமல் போகவும் இல்லை. பின்னே ஏன் வேய் இவனெ அடிச்சீரு?”

ஐந்து ரூபாயை நீட்டினான்.

ஒன்றைரைக் கண்ணன் அதை பிடுங்கி வீசினான்.

“ரூபாயைத் தந்து ஏமாத்தாதே” என்று கூறியதோடு இதே ஓட்டலில் எச்சில் பொறுக்கியதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அடிபட்டதையும் கூறினான்,

“அன்னிக்கு அளுதுகிட்டு ஓடினேன்.  இன்னக்கி அப்படியில்லெ காலம் மாறிப் போச்சு”.

முதலாளியின் மகன் மன்னிப்புக் கேக்க வேணும் என்றான்.  எங்கிருந்தோ தேடிப் பிடித்து அழைத்து வந்தார்கள்.  ஒன்றரைக் கண்ணன் சொல்லும் வாசகத்தை அதே பாஷையில் முதலாளி மகன் விக்கி விக்கித் திரும்பச் சொன்னான்.

அடிப்பட்ட பொறுக்கி சிரித்தான்.

சாந்தி, 1953

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *